நூன்முகம்

மெய்யன்பீர்!

இன்றே இத் தமிழ்நாட்டிற்கு ஒரு நன்னிமித்த நாளாய் இருக்கிறது; இன்றே நந்தமிழ்நாட்டு முஸ்லிம்களும் முஸ்லிம்களல்லாதாரும் பெருங்கொண்டாட்டங் கொண்டாட வேண்டிய ஒரு திருநாளாய் இருக்கிறது.

இன்றொரு மகிமை வாய்ந்த நாள்; மாஹாத்மியம் மிக்க நாள். ஏனெனின், இன்றுதான் 940 நாட் பிரயாசைக்குப் பின்னே லாஹுர் மௌலானா முஹம்மதலீயின் ஆங்கிலக் குர்ஆன் இனிய தமிழில் நனி மொழிபெயர்க்கப்பட்டு முடிவுற்ற நன்னாளாய் இருக்கிறது என்பதனால் என்க.1 குர்ஆன் ஷரீபைப் பைந்தமிழில் மொழிபெயர்த்தற்கென்றே யான் முன்னம் வகித்திருந்த சர்க்கார் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, வோக்கிங் (Woking) இங்கிலாந்துக்குக் காலஞ்சென்ற, கீர்த்திமிக்க காஜா கமாலுத்தீனுடனே யாத்திரை சென்றேன் என்பது எல்லார்க்கும் இந் நாட்டிலே இனிது அறியக் கிடக்கின்றது.

இதற்கு முன்னே எனக்குப் பிராயம் 14 ஆகியக்கால், யான் கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்திலே வாசித்துக்கொண்டிருந்தபொழுது, என்னுடைய இனிய இயற்றமிழாசிரியராய் விளங்கிவந்த மணலூர் வீ. இராமானுஜாசாரியரவர்கள் (பிற்காலத்தில் மஹாபாரத மொழிபெயர்ப் பாசிரியராய் விளங்கியுயர்ந்து மஹாமஹோபாத்யாயவாய் இலங்கி, இப்பால் மரணமடைந்து போய்விட்டிருக்கும் பேராசிரியர்) என்னைப் பார்த்து, “ஏ சாஹிப் ஜீ! உமக்குத் தமிழில் நல்ல பயிற்சி ஏற்படும்.2 இனியொரு பொழுது நீர் பீ.ஏ., பரீக்ஷையில் தேறி, சர்க்கார் உத்தியோகமும் பார்த்துவிட்டு, அப்பாலே உங்கள் திருவேதமாகிய குர்ஆனையும் ஏனைய ஆகமங்களையும் செந்தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மக்கட்குத் தந்துதவி புரிதல் வேண்டும்,” என்று கூறி ஆசீர்வதித்தார்கள்.

ஆசிரியப் பெரியாரது ஆசீர்வாதத்துடனே, அல்லாஹ்வின் நன்னாட்டமும் இருந்தவாறே, யான் எனது உத்தியோகத்தை உதறித் தள்ளினேன்; உலகமெல்லாம் – மேற்கே பர்லின் முதல் கிழக்கே சிங்கப்பூர் வரை, வடமேற்கில் டல்ஹவ்ஸீ முதல் தென் திசையில் சிலோன் வரை – சுற்றிவந்தேன்; துண்டுப் பிரசுரத்தினின்று தழைத்தெழுந்த “தாருல் இஸ்லாம்” மாசிகையை வாரப் பதிப்பு, வாரமிருமுறைப் பதிப்பு, மும்முறைப் பதிப்பு, தினமுறைப் பதிப்பு, தினம் இருமுறைப்பதிப்பு ஆகவெல்லாம் நடாத்திப் பார்த்தேன்; பத்திரிகைகளில் பல்லாயிரக் கணக்கான பக்கங்களையெல்லாம் வரைந்து தள்ளியதுடன், புத்தகங்களாகமட்டும் 1919 முதல் இன்றுகாறும் யான் 12,100 பக்கங்கள் வரை எழுதி அச்சிட்டுள்ளேன்; மார்க்க கிரந்தங்கள் வரைந்தேன்; மண வாழ்க்கை வரைந்தேன்; அரசியல் நூல்கள் எழுதினேன்; அல்புலைலா எழுதினேன்; மெஸ்மெரிஸம் பதிப்பித்தேன்; மேலான கட்டுக்கதைகள் – நவீனங்கள் – பதிப்பித்தேன். அச்சகமும் நிறுவினேன்; அழகிய பல நூல்களும் வெளியிட்டேன். அவஸ்தைகளும் பல பட்டேன்; சிற்சில சிவில், கிரிமினல் கேஸ்களில் சிக்கிச் சுழல விடப்பட்டேன்.3 ஏசப்பெற்றேன்; பேசப் பேற்றேன்; இனியில்லா இழிவுகளெல்லாம் எய்தப் பெற்றேன்.

இப்பால் சுருக்கி முடிக்க வேண்டுமாயின், 1923-இல் (பிப்ரவரி மாதத்திலே) துவக்கப்பெற்ற குர்ஆன் ஷரீபின் தமிழ் மொழிபெயர்ப்பு – ஜவாஹிருல் புர்ஃகான் – 1942, பிப்ரவரி மாதம், 21-ஆம் தேதி சனியன்று தாருல் இஸ்லாம் தினசரி நின்றுவிட்ட காலம் வரை மூன்று பாகங்களையே – அலிஃப் லாம் மீம், ஸயஃகூல், அம்மயத் – முற்றுறப்பெற்று விளக்கிவைக்கலாயினேன்.

எனது ஊழியத்தையும் தமிழ் வளத்தையும் இம் மொழிபெயர்ப்புக்கு எனப் பயன்படுத்திக்கொண்டு, “ஜவாஹிருல் புர்ஃகானை” முடிவுற மொழிபெயர்த்து உதவுமாறு தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ‘நல்லதுதான்’ என்று சொல்லிச் செவிசாய்க்காது வெறுமனே இருந்து விட்டார்கள்.

எனினும், இறையருள் இருந்தவாறே, இறுதியிலே இத் தமிழ்நாட்டு மக்கள் மீது எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா வைத்துள்ள கிருபாகடாக்ஷ வீக்ஷண்யத்தின் காரணத்தால் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள பாஞ்சால நாட்டு லாஹூரிலுள்ள அஞ்சுமன்காரர்கள் தயை கூர்ந்து தமிழில் மௌலானா முஹம்மதலீயின் ஆங்கிலக் குர்ஆனை மொழிபெயர்த்து முடித்துவிடுவது என்னும் தீர்மானத்துடனே முன்வரத் துணிந்து, அதற்கு வேண்டிய நிதிகளையும் சேகரம் செய்துவந்து, இவ்வடியேனைக்கொண்டு அதனைப் பைந்தமிழில் பெயர்த்து முடித்துக்கொண்டு விட்டார்கள். 3-8-1944 வியாழன் மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட்ட இம்மொழி பெயர்ப்பு வேலை இன்றுகாறும் இறைவனருளால் இடையறாது நடைபெற்று வந்து, இன்று 28-2-1947 வெள்ளிக்கிழமையன்று பகல் 12-10 மணிக்கு எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. எல்லாப் புகழும் அவ் ஏக வல்லவனுக்கே!

இத் தமிழ் மொழிபெயர்ப்பு வேலை ஆதியிலே 1923-இல் எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, இம் மஹா கிரந்த வேலையைத் துவக்கம் செய்த ஆலீ ஜனாப் மலங்கு அஹ்மத் பாக்ஷா சாஹிப், பீ.ஏ., இத்தமியேன், தாருல் இஸ்லாம் மானேஜர் ஜனாப் இ. அப்துர் ரஹ்மான் சாஹிப் ஆகிய யாங்கள் மூவருமே இருந்து இன்றுகாறும் இக் காரியத்தை எழுதி முடித்து வைக்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலித்திருக்கிறான். என்னே, இறையருள் இருந்தவாறு!

இச் சிறப்பேறப்பெற்ற மாபெருங் காரியத்தை யெடுத்து முடித்து வைக்கச் சற்றேறக்குறைய 23 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.4 இதற்கென்று இதுபொழுது வரையப்பெற்றுள்ள கையெழுத்துத் தாள்களின் எண்ணிக்கை 5,800; இவையெல்லாம் ஈராயிரம் பக்கங்களுள்ளே இறைவனருளால் இவ்வாண்டில் அச்சிடப் பெறலாம். இத்தனை ஏடுகளையும் சென்ற 31 மாதங்களாக இடையறாது எழுதி முடித்துக்கொடுத்த இ. அப்துர் ரஹ்மான் சாஹிபைத் தமிழுலகம் என்றென்றும் மறக்கற்பாலதன்று. என் மைந்தர் அப்துல் ஜப்பாரும் இடையிடையே எழுதியுள்ளார்.5

சஹீஹ் புகாரீயைக் குறித்து நூன்முகம் வரையத் துணிந்த யான் இதுகாறும் ஏன் குர்ஆன் ஷரீபின் மொழிபெயர்ப்பைப்பற்றி இத்துணை நீளமாய் எழுதிவந்தேன் என்று நீங்கள் திகைப்புற்று வியப்புறுவீர்கள் என்பதை யான் அறியாது போய்விடவில்லை. ஏன் அவ்வாறு எழுதினேன்? எனின், யான் ஆதி முதற்கொண்டே கொண்டிருந்த குர்ஆன்ஷரீப் முதலிய பல கிரந்த மொழிபெயர்ப்பில் முக்கிய முதற் கிரந்தமாகிய அல்லாஹ்வின் திருவேதம் அதிக சிரமத்துடனே அருந்தமிழில் ஆக்கப்பெற்று முடிவடைந்து விட்டதென்னும் சுபச் செய்தியை இத்தமிழ் நாட்டினர்க்கெல்லாம் செவ்விதிற் புலப்படுத்தற்கே யாம் என்க.

இதில் இனியொரு கருத்தும் அடங்கியிராது போய்விடவில்லை: இத்தமிழ் நாட்டு முஸ்லிம்கள் எத்துணை மட்டும் இஸ்லாத்தின் மதகிரந்தங்கள் செந்தமிழில் வெளிவர வேண்டிய விஷயத்தில் அலக்ஷியமாகவும் அசிரத்தையுடனும் இருந்து வந்த போதினும்,6 அல்லாஹுத் தஆலா மட்டும் இவர்கட்கு அனுக்கிரஹம் புரியாது அலக்ஷியமாகவும் அசிரத்தையுடனும் இருந்து விடவில்லை.

ஆதியிலே யான், குர்ஆன்ஷரீப், ஹதீது ஷரீப் நபிகட்டிலகத்தின் உண்மைச் சரிதை ஆகியவை செந்தமிழில் வெளிவர வேண்டுமென்று விழைந்து நின்றேன். நபிகட்டிலகத்தின் மெய்யான, சரியான சரிதை – “நபிகள் நாயக மான்மியம்” – 1932-இல் எழுதி முடிந்து, முதல் வால்யூம் அச்சில் வெளிவந்தும், இதுவரை நந்தமிழ் முஸ்லிம்களின் உபேக்ஷையால் எஞ்சியுள்ள இரு வால்யூம்களும் அச்சாகாமலே உறங்கிக் கிடக்கின்றன. இதுபொழுதுதான் ஒரு சில முஸ்லிம் கனவான்களின் சொந்த முயற்சியால் ஒரு தொகை நிதி வசூல் செய்யப்பட்டு, சேமத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அச்சக வசதியும் காகிதப் பஞ்ச நிவர்த்தியும் ஏற்பட்டவுடனே அந்தக் கிரந்தம் முழுவதுமே அச்சுக்கு எடுத்துக்கொள்ளப்படும், இன்ஷா அல்லாஹ். இவ்வளவே போதும் இதுபொழுது நபிகள் நாயக மான்மியம் குறித்து.

அடுத்தபடியில், யான் நபிபெருமானுடைய (ஸல்) சொல் செயல்களடங்கியுள்ள, சரியான, நம்பத்தக்க, மெய்யான – சஹீஹான – ஹதீது ஷரீபைக் குறித்து எடுத்துப் பேசக் கடவேன். ஹதீது சம்பந்தமாயுள்ள கிரந்தங்கள் அநேகமுள. அவற்றுள்ளெல்லாம் சிஹாஹ் சித்தா – “ஆறு நம்பத்தக்க கிரந்தங்கள்” – என்னும் நாமம் பூண்டுள்ள தொகுதிகளே மகா முக்கியமானவைகளாம். இவற்றுள்ளும் புகாரீ – இதனை முழுமையாய்ச் சொல்ல வேண்டுமாயின், ”முஹம்மத் இஸ்மாயீல் அல் புகாரீ சேகரித்துள்ள ஜாமிஃ” என்று அழைக்கப்படுவதாகிய – கிரந்தமே முதன்மையான உச்சஸ்தானத்தை வகித்துக்கொண்டிருக்கிறது; இத்தகைய முக்கியத்துவத்துடனேயும் இதுதான் முதன்முதலில் தொகுக்கப்பட்ட ஹதீது சம்பந்தமாயுள்ள ஆதிகிரந்தமாய் இருந்து வருகிறது. இத்தொகுப்பு நூலுள்ளே உத்தேசம், 9,082 சஹீஹான ஹதீதுகள் உண்டென்ப. இந்த இமாம் அறிந்திருந்தவை ஆறிலக்ஷம் ஹதீதுகள்; இவற்றுள்ளே இரண்டிலக்ஷம் வரை மனப்பாடம் பண்ணியிருந்தார். – என்னே ஆச்சரியம்! என்னே அன்னாரின் ஞாபகசக்தி!!

இவ்வாறே ஏனைய சஹீஹான ஐந்து கிரந்தங்களிலும், இவையல்லாத வேறு நம்பத்தக்க கிரந்தங்களிலும் இன்னம் எத்தனை எத்தனை மெய்யான ஹதீதுகள் இருந்திடுதல் கூடும்? இவற்றுள்ளெல்லாமிருந்து, இஸ்லாம் குறித்து எம் பெருமானார் (ஸல்) எவ்வாறு தங்கள் சொந்தத் திருவாக்கால் போதித்துச் சென்றுளார்களென்றும், எம் முஸ்லிம்கள் அப்பெருமானாரின் அடியொற்றி நடந்து – (ஸுன்னத்தைக் கடைப்பிடித்து) எவ்வாறு மிக்க நல்ல முறையிலே இத்தரணியில் ஒழுகிவர வேண்டுமென்றும் அறிந்துணர்தற்குரிய ஹதீதுகளைப் பொறுக்கியெடுப்பது என்பது ஒரு கஷ்ட சாத்தியமான காரியமாயிருந்து, பல்லாண்டுகளாகவே என் மூளையைக் கலக்கி வந்துகொண்டிருந்தது.

இவ்வாறாக யான் 1933 முதலே தத்தளித்து வந்தக்கால், நல்வாய்ப்பாக 1944-இல் ஆங்கிலத்தில் வெளியான ஹதீது கைக்கிரந்தம் – A Manual of Hadith என்றொரு சுருக்கத் தொகுப்பு நூல் – என் கைக்குக் கிட்டிற்று; இதுவும், அந்த லாஹூர் மௌலானா முஹம்மதலீ சாஹிபவர்களாலே 31 அத்யாயங்களாகத் தொகுக்கப்பட்டு, 690 ஹதீதுகளை உள்ளடக்கியதாய், அன்னாரின் ஆங்கிலக் குர்ஆன் மாதிரிகை போலே, ஒவ்வொரு பக்கத்தின் வலப் பாதியிலே அரப் ஹதீதும் – [ம(த்)தன், அஃதாவது, ஹதீதின் “அயன் பகுதி”] இடப் பாதியிலே ஆங்கில மொழிபெயர்ப்பும், அடியிலே வழக்கம்போலே அப்பெரியாரின் அரிய ஆராய்ச்சி விரிவுரையும் கூடியுள்ளதாய் வெளிவந்துள்ளது. இச்சிறந்த நூலில் சரித்திர சம்பந்தமாயுள்ள, அல்லது தீர்க்கதரிசன சம்பந்தமாயுள்ள ஹதீதொன்றும் காணப்படாது, அனைத்தும் நம் முஸ்லிம்களின் அனுஷ்டான வாழ்க்கைக்குரிய அத்தியாவசிய விஷயங்களாகவே இருந்து வருகின்றன. இதில் காணப்படும் 690 ஹதீதில் சற்றேறக்குறைய 513 புகாரீ ஷரீபிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன; ஏனையவெல்லாம் ஏனைக் கிரந்தங்களிலிருந்து – முக்கியமாக அந்தக் கீர்த்தி வாய்ந்துள்ள “மிஷ்காத்”திலிருந்து – பொறுக்கியெடுக்கப்பட்டுள்ளன. மௌலானாவின் அத்யாயங்களெல்லாமும்கூட, புகாரீயின் அடுக்கினையே அநேகமாய்ப் பின்பற்றி நிற்கின்றன.

யான் எனது நோக்கத்திற்கு இதுவே தகுதி வாய்ந்த கிரந்தமெனத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே, இச்சிறு நூலில் அந்த லாஹூர் மௌலானாவின் மொழிபெயர்ப்பும் வியாக்கியானக் கருத்துமே நந் தமிழில் மிகவழகாய் வெளிவந்துள்ளன என்று தாரளமாகவும் தைரியமாகவும் யான் கூறத் துணிகின்றேன்.7 இத் தமிழ்நாட்டிலே காணப்பட்டுவரும் சிற்சில அனாசாரங்கள் சம்பந்தப்பட்ட மட்டிலே மட்டும் என்னாற் சிறிது சேர்க்கப்பட்டிருப்பதன்றி, ஏனையவெல்லாம் அந்த மௌலானாவின் சொந்த விஷயங்களேயாம். எனவே, இக் கைக்கிரந்தத்தில், பிற்கால வியாக்கியானங்களுக்கு முன்னே, ஆதியிலிருந்து வந்த இஸ்லாத்தின் கலாசாரமும் ஒழுக்காசாரமும் எவ்வாறு “அப்பட்டமாக” இருந்து வந்தன என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளலாம்; அஃதாவது, நபிகள் பெருமானார் (ஸல்) என்ன சொல்லி வந்தார்கள்? எவ்வாறு நடந்து காட்டினார்கள்? அப்பெருமானாரின் தோழர்களெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்? என்பனவற்றையெல்லாம் செவ்விதாய் அறிந்துகொள்ளலாம் என்பதேயாம்.

இந்த ஹதீது கிரந்தத்தில் இரு விஷயங்கள் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டுவனவாய் இருக்கின்றன: முதலாவதாக, இந்நூலின் ஒவ்வோர் அத்யாயத்தின் ஆரம்பத்திலும் அந்த அந்த அத்யாயத்திற்கு ஏற்றவாறாயுள்ள குர்ஆன் ஷரீபின் ஆயாத்கள் பொறிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். புகாரீ ஷரீபிலும் முக்கியமான அத்தியாயங்களுக்கெல்லாம் குர்ஆன் ஷரீபின் ஆயாத்கள் ஒன்றிரண்டு வரையப்பட்டே இருக்கின்றன. இதனால் விளக்கமாவது யாதெனின்: ஹதீது ஷரீபென்பது குர்ஆன் ஷரீபின் வியாக்கியானமாகவே இருந்துவருகிறதென்பதும் இஸ்லாத்தின் போதனைக்குரிய மூலாதாரங்களில் குர்ஆன் ஷரீபுக்கு அடுத்தபடியில் இரண்டாவதாக நிற்பது இந்த ஹதீது ஷரீபே என்பதும் நன்கு விளக்கமாகின்றன என்பதேதானாகும்.

இன்னம், இந்நூலில் காணப்படும் இரண்டாவது விஷயம் வேறெந்த ஹதீது கிரந்தங்களிலும் காணப்படாத ஒரு நூதன விசேஷமாய் இருந்து வருகிறது; அஃதாவது, ஒவ்வோர் அத்யாயத்தின் ஆரம்பத்திலும் குர்ஆன் ஷரீபின் ஆயாத்கள் வரையப்பெற்றிருப்பதன் பின்னே ஒருவகைத் தலைப்புக் குறிப்புப் பொறிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம்; அக்குறிப்பிலே அவ்வத்யாய விஷய சம்பந்தமாகக் குர்ஆன் ஷரீபிலும் ஹதீது ஷரீபிலும் கூறப்பெற்றுள்ள விஷயங்களின் சுருக்கமொன்றாய் இருந்து வருகிறது அங்குள்ள விஷயம்.அவ்வவ் அத்யாயத்திலுள்ள ஒவ்வொரு ஹதீதின் சுருக்கமும் அத்தலைப்புக் குறிப்பிலே வரையப்பெற்றிருக்கின்றமையால், இக்கிரந்தத்தைப் படிப்பவர் நற்பயனைப் பெற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டிருக்கிறது: அவரவரும் தத்தமக்கு வேண்டிய ஹதீதைக் கண்டு பிடித்தற்கு அஃதோர் அட்டவணையேபோல் அமைந்திருக்கின்றது. ஆகையால், ஓரத்யாயத்திலுள்ள எல்லா ஹதீதுகளையும் புரட்டிக்கொண்டிராமல் அத் தலைப்புக் குறிப்பை மட்டும் பார்ப்பதைக் கொண்டே தத்தமக்கு வேண்டிய ஹதீதினைக் கண்டு பிடித்துவிடலாம். இதனால், இக்காலத்தில் மக்களெல்லாம் ஆகாய விமான வேகத்திலே இவ்வுலக காரியங்களில் பறந்துகொண்டிருக்கிறபடியால், அதிகமான அவகாசத்தை ஆத்மார்த்தத்துக்கென்று அடையப் பெறாதவரெல்லாம் எளிதிலே இந்நூலிலுள்ள குறிப்பிட்ட ஹதீதைச் சட்டெனக் கண்டுபிடித்துத் தமக்கு வேண்டிய விஷயத்தை விளங்கிக் கொள்வார்களாக. “ஆடுந்திரிகை அரைச்சுற்று வருமுன்னே ஓடுங் கவலை ஒரு கோடி” என்னுமாறே உலகாயத வாழ்க்கையென்பது ஒவ்வொருவரையும் இதுகாலைப் பீடித்தலைத்துக்கொண்டிருக்கிறது.

எனக்கு இதுபொழுது வயது 62 ஆய்விட்டதென்று யான் முன்னமே தெரிவித்துளேன். எனவே, எனக்குரிய எஞ்சிய ஆயுட்காலத்தை இஸ்லாத்தின் பிரசாரத்திற்காகவும், இதன் உயர்விற்காகவுமே அர்ப்பணம் செய்துவிட்டிருக்கின்றேன். இதற்கு முன்னே குலபாயெ ராஷிதீன் வரிசையில் ஐந்து நூல்களை வெளியிட்டிருக்கின்றேன். இனிக் குர்ஆன் ஷரீபின் சுருக்கமொன்று இந்த ஹதீது (புகாரீ) சுருக்கம்போன்ற மாதிரிகையில் வெளிவரல் வேண்டும்; குர்ஆன் ஷரீபுக்கொரு முன்னோட்டம், இஸ்லாத்தின் மூலாதாரங்கள்,8 இஸ்லாத்தின் சிந்தாந்தங்கள்,9 இஸ்லாத்தின் ஏனை விஷயங்கள் என்பனவெல்லாம் எழுதி அச்சிட்டு வெளிவரல் வேண்டும். இவை எல்லாவற்றினோடும் “மோன்த்தே கிறிஸ்தோவின் முடிசூடா மன்னன்” – The Count of Monte Cristo10என்னும் நவீனம் அச்சிடப்படல் வேண்டும்; – (இஃதொரு சிறந்த, இனிய அறிவூட்டும், நல்ல நவீனம்).

இத்தனை நூல்களுள் எத்தனையை இத்தமியேனால் வெளியிடப்பட வேண்டியவையென்று எல்லாம் வல்ல இறைவன் தனது திருவுளச் சித்தத்திலே எண்ணியிருக்கிறானோ யானறிகிலேன். யான் இத் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கென்று எனது ஆயுளைத் தத்தம் செய்து விட்டேன். என்னை இனிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுவது இங்குள்ள எம் முஸ்லிம்களின் கடமையேயாம். இது நிற்க.

இதுபொழுது இந்த ஹதீது கிரந்த நிதிக்கென்று பண உதவி புரிந்துள்ள பிரமுகர்களின் பெயரும், அவரவர் உதவியுள்ள தொகையும் வருமாறு:-

  1. சென்னை, அங்கப்ப நாய்க்கன் தெரு, ஆலீ ஜனாப் அல்ஹாஜ் எஸ். முஹம்மத் ஜான் சாஹிபும் குடந்தையை அடுத்துள்ள சோழபுரம், ஆலி ஜனாப் அல்ஹாஜ் சி. அ. முஹம்மத் இஸ்மாயீல் சாஹிபும் ரூ.1,500. – (இது கடனாக உதவப்பட்டது).
  2. யாழ்ப்பாணம், ஹாஜீ வீ. எம். எம். எஸ். அப்துல் காதிறு தம்பதிகள் ரூ.250.
  3. சிலோன், பதுளை, மஹ்பூப் சொஸைட்டி ரூ.100.
  4. சிலோன், பண்டாரவளை, முஸ்லிம் லீக் ரூ.100.
  5. திருநெல்வேலி ஜில்லா, கடையனல்லூர், ஆலீ ஜனாப் அ. செ. மு. ஷாஹுல் ஹமீத் அவர்கள் ரூ.75.
  6. திருநெல்வேலி ஜில்லா, புளியங்குடி முஸ்லிம் ஜமாஅத் ரூ.50.

இந்தக் கிரந்தத்தில் காணப்படும் ( ) இம் மாதிரியான பிறை வளைவுகளுள்ளும் [ ] இம் மாதிரியான ப வளைவுகளுள்ளும் (ஸல்) என்பது ஒன்று நீங்கலாக ஏனை வளைவுகளெல்லாம் என்னுடைய சொந்த வளைவுகளேயாம்; (ஸல்) என்பது மட்டும், அவ்வவ்விடத்திலே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று மூலகிரந்தத்திலே காணக்கிடக்கும் வாக்கியத்தின் சுருக்கமாயிருக்கிறது. (ரலி) என்பது மூல ஹதீதுகளில் எங்குமே காணப்படவில்லை; எனினும், ஒரு சில முக்கியமான பெயர்களுடனே யானே இந்த (ரலி) என்பதை இணைத்திருக்கிறேன்.

குர்ஆன் சம்பந்தப்பட்டவரை 2:177 போல வரும் இடங்களிலெல்லாம் முதல் இலக்கம் ஸூராவையும் இரண்டாமிலக்கம் ஆயத்தையும் குறித்துக் காட்டும்; (ஹதீ.10) என்றாற் போன்ற இலக்கங்கள் அந்த அந்த அத்யாயத்தின் ஹதீதுக்குரிய இலக்கத்தைக் குறிக்கும். இந்நூலிலுள்ள, நபிபெருமான் கூறியுள்ள திருவசனங்களெல்லாம் இவ்வாறு “…..” இரணட்டை அடையாளங்களுக்குள்ளே நுழைக்கப்பட்டிருக்கின்றன. ஹதீதுகளின் இறுதியில் காணப்படும் (புகா.2:20) போன்ற இலக்கங்களில் புகா. என்பது புகாரீ ஷரீபையும், 2:20 என்பன இரண்டாம் புத்தகம், இருபதாம் அத்யாயம் என்பவற்றையும் குறித்துக் காட்டும். அஹ்மதிப்னு ஹன்பலின் (ரஹ்) மஸ்னதில் மட்டும் முதல் இலக்கம் வால்யூமையும், இரண்டாமிலக்கம் பக்கத்தையும் குறித்துக் காட்டும். மிஷ்காத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஹதீதுகளுக்கெல்லாம் அந்த “மிஷ்காத்” எந்தக் கிரந்தத்திலிருந்து அந்த ஹதீதை எடுத்திருக்கிறதோ, அந்தக் கிரந்தத்தின் நாமமும் உடன் பொறிக்கப்பட்டே இருக்கின்றது.

அபூதா. அபூதாவூதைக் குறிக்கும்.
இப்னுமா. இப்னுமாஜாவைக் குறிக்கும்.
தார். தார குத்னீயைக் குறிக்கும்.
திர்மி. திர்மிதீயைக் குறிக்கும்.
நஸா. நஸாயீயைக் குறிக்கும்.
நிஹா. நிஹாயாவைக் குறிக்கும்.
பரா. பராயிதுத் துர்ரிய்யாவைக் குறிக்கும்.
புகா. புகாரீ ஷரீபைக் குறிக்கும்.
பைஹக். பைஹக்கீயைக் குறிக்கும்.
மஸ். அஹ்மதின் மஸ்னதைக் குறிக்கும்.
மிஷ். மிஷ்காத்தைக் குறிக்கும்.
மு. ரா. முப்ரதாத் ராகிபைக் குறிக்கும்.
முவத். முவத்தாவைக் குறிக்கும்.
முஸ். முஸ்லிமைக் குறிக்கும்.

இந்தக் கிரந்த முழுதையும் யானே அநேகமாய் மொழிபெயர்த்து வரைந்துளேன்; சிற்சில சந்தர்ப்பங்களில் ஜனாப்களான இ. அப்துர் ரஹ்மான், என். பீ. அப்துல் ஜப்பார் பீ. ஏ., இருவரும் இலேகர்களாக உதவி புரிந்துள்ளார்கள். என் மைந்தர் அப்துல் ஜப்பார் இதன் கையெழுத்துப் பிரதியை முழுமையாய்ப் பரிசீலனை செய்து உதவினார்; பற்பல திருத்தங்களும் கூறினார். மீக் கூறியவர் இதன் அச்சுப்பிரதியைப் பிழையறப் பரிசோதித்ததிலும் எனக்குப் பேருதவி புரிந்துள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி, “கபீர் பிரிண்ட்டிங் வொர்க்ஸ்” சொந்தக்காரர் சிரமம் பாராட்டாது இதனை அதி சீக்கிரத்திலே அச்சியற்றித் தந்துளார். சென்னை “நூருல் இஸ்லாம்” ஆசிரியர் ஆலீ ஜனாப், ஏ. என். ஹாபிஸ் முஹம்மது யூசுப் (பாஜில் பாகவீ) அவர்கள் எனக்கு ஏற்பட்டுவந்த ஐயங்களையெல்லாம் அப்போதைக்கப்போது சிறிதும் சிரமம் பாராது களைந்து வந்துளார்கள். இவர்கட்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

எனது வயது முதிர்ச்சியாலேனும் வேறு அயர்ச்சி மறதி போன்ற காரணத்தாலேனும் இந்நூலில் பிழை ஏதும் காணப்படின், அதனை அன்புடன் வரைந்தனுப்பும் நண்பருக்கு நன்றி கூறி, அத்திருத்தத்தினை அடுத்த பதிப்பிலே செப்பஞ் செய்துவிடக் கடவேன். இத்துணை மட்டும் இத்தமியேனைத் தனதூழியத்திலே நற்பயன்படுத்திவரும் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவை யான் அனவரதமும் சிந்தித்து வந்திக்கின்றேன். எனவே, இத் தமிழ்நாட்டு முஸ்லிம்களை இந்நூல் நபிபெருமானது அடியொற்றி நடக்குமாறு ஒருவாறே செய்துவிடினும், யான் இதனை மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டுள்ள பாக்கியத்தை நிரம்பப் பெற்றதாயெண்ணி இறுமாந்து விடக்கடவேன்.

அரப் மூலம் சேர்ப்பது அப்பாலே கவனிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

கவியால் உரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி
அடைவார் கலக்கம் அறவே
செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு
செயல்கே(டு) அகற்றி விடுவார்
புவியார மொய்த்தநெறி மறைநாலி னுக்குமொரு
பொறியாய் உதித்த வடிவார்
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை
நடுநாவில் வைத்த வர்களே – சீறா.

இன்னணம்:
இஸ்லாமிய ஊழியன்,
பா. தாவூத்ஷா

“தாருல் இஸ்லாம்”
30, சாந்தோம், சென்னை 4.
28-2-1947.

 


அடிக்குறிப்பு

1. மௌலானாவின் வியாக்கியான மகிமை அஃது அச்சாகி வெளிவருங்காலே செவ்விதற் புலனாகும். “சப்” பென்றும் “வழவழா” வென்றும் தமிழல்லாத ஒரு தமிழெனப்படு மொழியிலே வியாக்கியானம் வரைவதால் இதுபொழுது யாதும் பயன் விளையமாட்டாது. இந்த இருபதாம் நூற்றாண்டில், ஒரு குர்ஆன் ஷரீபின் மொழிபெயர்ப்பையும் அதன் வியாக்கியானத்தையும் படித்தால், தீனுல் இஸ்லாமே ஏனைச் சமயங்கள் எல்லாவற்றினும் மிகமிகச் சிறப்பு வாய்ந்த மதமென்று வாசிப்பவர்கள் பெருமையடைந்து, ஏனையவர்க்கெல்லாம் இவ்விறைவனது சத்திய சன்மார்க்கத்தை எடுத்துப் போதித்துணர்த்திப் பிரசாரம் புரிதற்கு வேண்டிய சர்வ சக்தியும் வாய்க்கப் பெறுதல் வேண்டும். இத்தகைய உத்வேகமும் உணர்ச்சியுமேதாம் இக்காலத்திற்கு வேண்டப்படுவன. இவற்றினையே அளிக்கவல்லது லாஹூர் மௌலானாவின் மொழிபெயர்ப்பு வியாக்கியானம்.

2. ‘செந்தமிழின் சுவை முன்னே தீந்தேனும் வேண்டேனே!’ என்னுமா போன்று, யான் அவ் விளம்பிராயத்தே தமிழில் முதற் பரிசு பெற்று விளங்கி வந்தேன்.

3. சிங்கை மாநகர் முஸ்லிம் மானநஷ்ட தஃவா உலகப் பிரசித்தியாயதும் அதில் எதிரி ஜே. முஹம்மதிஸ்மாயீல் மரிக்கான் 5,000 டாலர் மான நஷ்டஈடும், உயர்தரக் கோர்ட் செலவும் கட்டியதும் அனைவரும அறிந்தனவே. யான் என் காரியத்தையும் செய்து வருகிறேன்; எதிரிகள் தங்கள் வேலையிலே தலையிட்டுக்கொண்டு திரிகிறார்கள். 

4. எனக்கும் இதுபொழுது 62-ஆவது வயது பூர்த்தியாகின்றது. நபிகள் திலகம் (ஸல்) தங்கள் 40-ஆம் பிராயத்திலே நபிப்பட்டம் பெற்று, தங்கள் 63-ஆம் பிராயத்தில் ஆண்டவனது திருவடி நீழலை யடையுமுன்னே இருபத்து மூன்று ஆண்டுகளுக்குள்ளே குர்ஆன்ஷரீப் முழுதையுமே அல்லாஹ்வின்பாலிருந்து வஹீயின் வாயிலாய் வருவித்துத் தந்ததோடு நின்றுவிடாது, அநேகவித இன்னல்களுக்கும் இடையூறுகளுக்குமெல்லாம் உட்பட்டு வந்து, பலப்பல தற்காப்புப் போர்களையெல்லாம் புரிந்து மாபெரும் வெற்றி பெற்று, இறுதியிலே இவ்வுலகினுக்கு எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டிற்கும் எல்லா ஜாதி மக்களுக்கும் என்றென்றும் சிகரமாய் நின்று விளங்கக்கூடிய இவ்வுயரிய “இஸ்லாம்” என்னும் இனிய மார்க்கத்தையும் என்றென்றும் அழிவுறா முறையிலே நிலைநிறுத்திவிட்டுச் சென்றார்கள். என்னே அன்னவர்கள் செய்து முடித்த செயற்கரிய மாபெரும் காரியம்!

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” – என்பது குறள். 

5. அல்லாஹ்வின் வேத வாக்கியங்களை எழுதும் இலேகர்களைக் குறித்து இறைவனும், “நேர்த்தியாக்கப்பட்டவை, பரிசுத்தமாக்கப்பட்டவை, இலேககர்களின் கரங்களிலே; (அவர்கள்) சங்கையானவர்கள், நல்லொழுக்கமுள்ளவர்கள்,” என்று இயம்பியுள்ளான் (குர். 80: 14-16). 

6. நந் தமிழ்நாட்டு முஸ்லிம் பெருமக்கள் இஸ்லாத்திற்காகவும் இதன் திருநபிக்காகவும் புராதன வழக்கப்படி மிகச் செல்வமே செலவிட்டு வருகின்றனர். ஆனால், செந்தமிழ் நூல்கள் வாயிலாய்ப் பிரசாரம் புரிவதன் பெருமையை இன்னம் இவர்கள் நன்குணரவில்லை. கிறிஸ்தவர்கள், ஆரியசமாஜிகள், ஹிந்துமஹா சபாக்காரர்களெல்லாம் நூல்கள், பிரசுரங்கள் ஆகியவற்றால் பிரசாரம் புரிந்து நற்பயன் பெறுகின்றார்கள். முஸ்லிம்கள் இத்துறையில் ஈடுபடுவதன் நற்பயனை இன்னம் அறியவில்லை; அறிந்தால் விடமாட்டார்கள். 

7. இக் கிரந்தத்தில் அரபு மூலம் இல்லை; எனினும், அரபுக்குப் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பே செய்யப்பட்டுள்ளதென்று செப்பலாம். 

8. இந்நூல் எழுதி முடிக்கப்பெற்றுள்ளது. இனி அச்சாக வேண்டும். 

9. இஸ்லாத்தின் அனுஷ்டானங்கள் என்பனவே எமது இஸ்லாம் என்னும் நூல். 

10. அலெக்ஸாந்தர் துமாவென்னும் ஆசிரியப் பெரியாரால் 6 வால்யூமில் பிரெஞ்ச் மொழியில் வரையப்பட்டு உலகப் பிரசித்திபெற்றுள்ள ல கோ(ன்)த் த மோ(ன்)த்தே கிறிஸ்தோ வென்னும் நாவல் 1885 கையெழுத்துத் தாளில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 2-6-1940 முதல் அச்சு வாகனமேறக் காத்து நிற்கின்றது. இந் நவீனத்தின் அருமையும் அழகிய பெருமையும் அறிந்தவர்களே முன்வந்து இதனை அச்சியற்ற உதவிபுரிதல் வேண்டும், எந்தப் பிரமுகர் இதற்கென்று காத்துக்கொண்டிருக்கிறாரோ, யானறிகிலேன். 


 

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–முகப்பு–>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment