பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும். இதோ உங்கள் கரத்திடை மிளிர்வது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுடம்பு! இதைக் கண்ணியமாய்க் காப்பாற்றுங்கள்; இதிலுள்ள திருவசனங்கட்குப் பணியுங்கள்; பிறருக்கு எடுத்துக் கூறுங்கள்; நம்மிடையுள்ள மாசை அகற்றுங்கள்; இதிலுள்ள மாட்சியைப் புகுத்துங்கள்.

ஆண்டவனளித்த வேதவாக்குத் திருக் குர்ஆன். அவன் திரு நபி திருவாய் மலர்ந்தருளியது இந்த ஹதீது ஹரீபு. நாமெல்லாரும் ஆண்டவனுக்குப் பயந்து, அவன் வேதத்தையும் பெருமைப்படுத்தக் கட்டுப்பட்டிருப்பதேபோல், அவனனுப்பிய இறுதி நபி அளித்துச் சென்றிருக்கும் இந்த ஹதீதைக் கௌரவப்படுத்துவதன் மூலம் நம் ரசூல் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தும் பெருமையைப் பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆசிரியரின் அல்லு பகல் அயராத பேரூழியத்தின் உருவந்தான் இந்தப் புஸ்தகம். பல மாதங்களின் உழைப்பால் பிறந்த இதை ஊட்டி வளர்ப்பது உங்கள் கடமை. இதன் விலை கண்ணுக்கு அதிகமாய்த் தோன்றினாலும், தற்போதுள்ள கால நிலைமையில் (ரூபாய் ஒன்றுக்கு இரண்டரையணாக்கூட மதிப்பில்லாத இச்சமயத்தில்) இதன் கிரயம் மிகக் குறைவே. எனினும். இந்த ரூ.7-8-0 கூடக் கொடுத்து வாங்க இயலாத பல முஸ்லிம்கள் இதுகாலை உங்களுள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்களேதாம் வாங்கிக் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்.

உங்கள் உற்றார், பெற்றார், உறவினர் அனைவரினும் மேலாக ரசூலுல்லாஹ்வை உவக்கக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள் – (பக்கம் 43 நோக்க). ஆண்டவனின் திரு நபிக்கு நீங்கள் உண்மையாகவே செவி பணிகின்றீர்களா என்பதற்கு இந்நூல் ஒரு சோதனையேயாகும். எங்களுக்கிருக்கும் ஒரு பேருணர்ச்சியின் அறிகுறியாக இதைப் பெரும் பாடுபட்டு, இக் காகிதப் பஞ்சகாலத்தில் கிடைக்கவே முடியாத காகிதத்தில், கூடியவரை பிழையின்றி, இதோ இங்குச் சமர்ப்பித்துவிட்டோம். இத்துடன் எங்கள் கடமை, ரசூலுல்லாஹ்வை நாங்கள் எல்லோரினும் மேன்மையாக உவக்கின்றோம் என்னும் அத்தாக்ஷி முற்றுப்பெறுகிறது.

எங்கே, உங்கள் அத்தாக்ஷிகளை நிரூபியுங்கள்! 

இஸ்லாத்தின் ஊழியன், 

N.B. அப்துல் ஜப்பார்.

சென்னை,
30-4-1947. 

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–புத்தக முகப்பு–>



This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment