தாருல் இஸ்லாம் வாரப்பத்திரிகை!

1-10-27 ஞாயிற்றுக்கிழமை முதல் நுங்களுடைய தா.இ. வாரப்பதிப்பு வெளிவரப்போகின்றதை அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள். ஆழிய பத்திரிகை;

ஆழமான விஷயங்கள். இதுகாறும் நீங்கள் இப்படிப்பட்ட முஸ்லிம் வாரப்பத்திரிகையொன்றைப் பார்த்திருக்க மாட்டீர்கள். இஸ்லாத்தின் தற்காப்புக்காகவும் ஒற்றுமை முன்னேற்றத்துக்காகவும் தமிழில் வெளிவரப்போவது இதுதான் முதல் முஸ்லிம் தேசிய வாரப்பத்திரிகையாகும்.

இதை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆதரிப்பார் என்றே ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எல்லோருக்கும் இப்பத்திரிகையானது இதமாகவே நடந்துகொள்ளுமென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. இப்பத்திரிகையைப் படிப்பதால், ஏன் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாயிருக்கவேண்டும் என்பதையும் எதிரிகளின் வலையில் சிக்கிக்கொள்ளாமல் நாம் எவ்வாறு தப்பிக்கொள்ள வேண்டும் என்பதையும் நன்குணர்ந்து கொள்வீர்கள். ஆரிய சமாஜிகளையும் அன்னவரின் விஷமப் பிரசாரங்களையும் முஸ்லிம் இல்லங்களிலிருந்து தடுத்துவைக்கப் போவது இந்த ஒரே பத்திரிகைதான்.

நம்முடைய பழைய நண்பர்களெல்லாம் இவவாரப்பதிப்பை முற்றிலும் ஆதரிப்பதோடு மற்றும் பல சந்தாதாரர்களையும் இன்றே சேர்த்துக்கொடுப்பார்கள் என்றே அதிவிநயமாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம். பழைய நண்பர்கள் இம்மாதப் பத்திரிகைக்காகக் கட்டியிருக்கும் சந்தாத் தொகையில் சென்ற மாதங்களுக்குரியது போக மகுதியிருக்கும் பணமானது விகிதாசாரப்படி இனிவரும் வாரப்பத்திரிகைக்கு எத்தனை மாதங்களுக்கு வருமோ அத்தனை மாதங்களுக்கு வரவு வைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதலின் அவரவருடைய வாரப்பத்திரிகையின் சந்தா முடியுங்காலத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிக்கை கார்டு அனுப்பப்படும்; அதன்பின் வி.பி.யில் பத்திரிகையும் அனுப்பப்படும். தயைகூர்ந்து அவரவரும் அந்த வி.பி.யைத் திருப்பியனுப்பிவிடாது அன்புடன் பெற்றுக்கொள்வார்கள் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஏற்கனவே வாக்களித்திருக்கும் நண்பர்களும் இன்று முதலே தங்களால் சேர்த்துக்கொடுக்கப்படும் மற்ற சந்தா நண்பர்களின் விலாசங்களையெல்லாம் எமக்கு எழுதியனுப்புவார்களாக. வருஷ சந்தா ரூ.6, ஆறு மாதத்துக்கு ரூ.3, மூன்று மாதத்துக்கு ரூ.1-8; வெளிநாட்டுக்கு வருஷ சந்தா ரூ.7-8-0, ஆறு மாதத்துக்கு ரூ.4.

(மாத வெளியீடான தாருல் இஸ்லாம் 1.10.1927 முதல், வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதற்குப் பெரிய அளவில் செய்யப்பட்ட விளம்பரம்.)


தாருல் இஸ்லாம் வாரப் பதிப்பு

நாம் சொந்தத்தில் அச்சாபீஸ் வைத்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஏன் தா.இ. வாரப் பதிப்பாகவில்லையென்று பற்பல நண்பர்களும் அடிக்கடி வினவி வருகிறார்கள். இவவிஷயத்தில் நாங்கள் குற்றவாளிகள் என்றே முழுவதும் ஒப்புக் கொள்ளுகிறோம்.

ஆனால், இப்பொழுது இம்மாதப் பத்திரிகையே வருடங்கூடி அதிகமான நஷ்டத்திற்கே நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறே இன்னும் அதிகமான நஷ்டத்திற்கே வாரப்பதிப்பை ஆரம்பிப்பதென்பது எம்மால் ஒரு கூடாத காரியமாய்க் காணப்படுகின்றது.

தா.இ. வாரப்பத்திரிகை யாக்கப்படின், இப்பொழுதுள்ள மாதப்பத்திரிகையை நிறுத்திவிட்டு வாரப்பதிப்பை மட்டுமேதான் பிரசுரிக்கும் படியாய்த் தற்கால நிலைமை தூண்டக்கூடியதாயிருக்கிறது. அந்த வாரப் பதிப்பானது 16 முதல் 20 வரையுள்ள பக்கங்களுடன் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் வெளியிடப்படும். அதன் வருட சந்தா உள் நாட்டுக்கு ரூ.6ம், வெளிநாடுகளுக்கு ரூ.7-8-0மாய் வைக்கப்படும்.

இந்தச் சந்தாத் தொகைக்கு இப்பொழுதுள்ள நம் நண்பர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதுடன் ஒவ்வொரு நண்பரும் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு சந்தாதாரர்களையேனும் சேர்த்துக் கொடுப்பதாய் வாக்குறுதியளிக்கவேண்டும். இவ்வாறு நம் நண்பர்கள் கட்டுப்படுவதாய் ஒப்புக் கொண்டால் அல்லது வாரப்பத்திரிகையை எதிர்பார்ப்பது இப்பொழுது சிரம சாத்தியமாகத்தான் முடியும். நம்பாலுள்ள நண்பர்களெல்லோரும் ஊக்கத்துடன் முன்வந்து நமக்கு வேண்டிய உற்சாகத்தையும் ஊட்டுவார்களாயின், இன்ஷா அல்லா(ஹ்) அதிசீக்கிரம் வாரப்பதிப்பை ஆரம்பித்துவிடக் கடவோம். இதுதான் தக்க சமயம். ஆரிய சமாஜிகளும் மற்றுமுள்ள இந்து சபாக்காரர்களும் இஸ்லாத்தை ஒழிக்கக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கும் இச்சமயந்தான் நமது வாரப்பதிப்புக்கு உரிய காலமாய்க் காணப்படுகின்றது. இதுவே தக்க தருணம். எல்லோரும் இடுப்புக்கட்டி எழுந்திருப்பீர்களாக.

வாரப்பதிப்பில் நமது கொள்கை

இப்பொழுது தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இருந்துவரும் நிலமையை உற்று நோக்குங்கால் “தாருல் இஸ்லாம்” வாரப்பதிப்புடன் மாதப் பதிப்பையும் வைத்துக் கொள்வது முடியாமையாய்க் காணப்படுகின்றது. ஆதலின் தற்போதுள்ள மாதப்பதிப்பை மாற்றித்தான் வாரப்பதிப்பை ஆரம்பித்தல் வேண்டும்.

அந்தப் புதிய வாரப்பதிப்பில், இப்பொழுது மாதப்பதிப்பிலுள்ள எல்லாவிதமான உயரிய வியாசங்களும், தத்துவ ஆராய்ச்சிகளும், விஞ்ஞான விமர்சனங்களும், மற்றும் பல முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமான தேசிய ராச்சிய விஷயங்களும், ஆசார சீர்திருத்தங்களும், மற்றுமுள்ள முஸ்லிம் உலக வர்த்தமானங்களும், கல்வி முறைகளும் நிரம்பிக் காணப்படும்.

இப்படிப்பட்ட தா.இ. வாரப்பதிப்பை ஆதரிக்கத் தயாராயிருக்கும் நண்பர்கள் அனைவரும் இதைப் பார்த்தவுடன் இச்சஞ்சிகையில் வைக்கப்பட்டிருக்கும் போஸ்ட் கார்டில் தாங்கள் மேற்கூரிய வாரப்பதிப்பை ஒப்புக்கொண்ட விஷயத்தையும், தங்களால் அதற்கு எத்தனை சந்தா சேர்த்துக்கொடுக்க முடியுமென்பதையும் எழுதித் தெரிவிப்பார்கள் என்று அதிவிநயமாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம். எல்லோரிட மிருந்தும் திருப்திகரமான பதில் கிடைத்தவுடன் வாரப்பதிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை நிறைவேற்றி வைக்கக் கடவோம்.”

(1927 ஆகஸ்டு இதழில் இந்த வாரப்பதிப்புப் பற்றி “ஆசிரியர் குறிப்பு”ப் பகுதியில் எழுதப்பட்டது.)

 

Related Articles

Leave a Comment