நம்மையும் இந்த உலகத்தையும் படைத்த அல்லாஹ் அவனை வழிபடுவதற்குக் குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்வையும் நமக்கு வழிகாட்டுதலாக அமைத்துத் தந்திருக்கிறான். அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நபித் தோழர்களான சஹாபாக்களின் வாழ்க்கையில் பாடம் உள்ளது. அதைப் போலவே அவர்களைப் பின் தொடர்ந்த மார்க்க அறிஞர்களான இமாம்களின் அறிவுறுத்தலிலும் உள்ளன.
இமாம் எனும் தகுதியை அடைந்த மார்க்க மேதைகள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் பயின்று தேறியவர்கள். வெறுமே ஓதி மனனம் செய்துவிட்டதால் மட்டுமே அவர்கள் அறிஞர்கள் ஆகிவிடவில்லை. நல்லறிவு, நேர்மை, அப்பழுக்கற்ற ஒழுக்கம், மார்க்க வழிபாடு ஆகியன அவர்களிடம் அமைந்திருந்தன. அனைத்திற்கும் மேலாக ஏக இறைவனான அல்லாஹ்வின்மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் அளவற்ற அச்சமும் நிறைந்திருந்தன. அதனால் அவர்கள் தங்களது சிந்தனையையும் கருத்தையும் செயல்பாடுகளையும் அல்லாஹ்வை மட்டுமே திருப்திபடுத்துவதாக ஆக்கிக்கொண்டார்கள்.
தங்களுடைய மக்களுக்குத் தாங்கள் கூறும் இஸ்லாமிய விளக்கங்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தடன் இருந்தார்கள்; அவனுக்கு அஞ்சி நடுங்கினார்கள்; தங்களது வாழ்நாள் முழுவதும் நன்மையை ஏவியும் தீமையைத் தடுத்தும் வாழ்ந்தார்கள்; எவருக்கும் அஞ்சாமல் உண்மையை எடுத்துரைத்தார்கள். அதனால் இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளானார்கள்.
அவ்விதம் சிறந்தோங்கிய நான்கு மார்க்க மேதைகள்: இமாம் அபூஹனீஃபா (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்). மனிதர்களாகிய தாங்கள் பிசகிவிடக் கூடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தங்களது விளக்கத்திற்கு மாறாக ஆதாரப்பூர்வமான நபிமொழி இருந்தால் அதுவே எங்களது வழிமுறை என்றும் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.
மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களான அந்த இமாம்களின் வாழ்க்கையில் நாம் கற்றுப் பயனடைய, வாசித்துச் சுவைக்க ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. மார்க்க அறிவு பெருகப் பெருக, அது எந்தளவு இறை அச்சத்தையும் அதிகரிக்க வேண்டும்; அல்லாஹ்வின் நபியைப் பின்பற்ற உதவ வேண்டும் என்று அவர்களது வாழ்க்கை உணர்த்தும். என்ன செல்லங்களா? இமாம்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளத் தயாரா?
-நூருத்தீன்
இளம்பிறை, அக்டோபர் 2022 இதழில் வெளியான கட்டுரை
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்