அத்தியாயம் 1. அல் ‘பா(த்)தி’ஹா – திறப்பு
(சூறா மக்கீ : திருவாக்கியம் 7)

தோற்றுவாய் :

திருநபி பெருமானார் (சல்) மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்படுதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே, ஏழு திருவாக்கியங்களும் ஒருங்கமைந்த ஒரே அத்தியாயமாக இந்த சூற(த்)துல் ‘பா(த்)தி’ஹா வேதஞான வெளிப்பாடாக வஹீ யறிவிக்கப்பட்டது. முழுக் :குர்ஆனின் அனைத்துக் கருத்துக்களையும் ஒருங்கு அடக்கிக்கொண்டு, வட்டுருக்கமாகவும், இரத்தினச் சுருக்கமாகவும், கவின்பெற அழகான பிரார்த்தனையாக அமைந்துவிட்டிருக்கும் இது, இவ் வேதத்தின் தோற்றுவாயாகவும், தலைப்பாகவும் இலங்கி வருகிறது. பாத்திஹா என்றால், ஆரம்பித்தல் அல்லது தொடங்குதல் என்பது பொருள். குர்ஆனின் ஆரம்பத்தில் இந்த அத்தி. அமைந்திருப்பதால், சாதாரணமாக அனைத்து மக்களாலும் அல்’பாத்தி’ஹா என்றே அழைக்கப்பட்டு வருகிற தென்றாலும், “பா(த்)திஹ(த்)துல் கி(த்)தாப்”–(இத்திருவேதத்தின் திறப்புரை), “சூறத்துஸ் ஸலாத்”–(தொழுகையின் அத்தியாயம்), “சூறத்துத்’ து’ஆ'”–(பிரார்த்தனையின் அத்தியாயம்), “உம்முல் கி(த்)தாப்”–(இத் திருவேதத்தின் மூலாதாரம்) என்றெல்லாங்கூட இது வெவ்வேறு பெயர்களிடப்பட்டு அழைக்கப்பட்ட தென்று நாம் பல மேற்கோள்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம். இந்தத் திருவேதத்தின் ஏனை 113 அத்தியாயங்களும் பெயரிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஒவ்வோர் அத்தி. யிலும் காணப்படும் வியப்பூட்டுகிற விசேஷமிக்க ஒரு சொல்லே அதன் தலைப்பாக நாம மிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முதல் சூறாவில் உள்ள ஏழு ஆயாத்களில் காணப்படும் எந்த ஒரு சொல்லும் இதற்குத் தலைப்பாக இடப்பட்டில்லை. எனவே, பல விற்பன்னர்கள் இதைப் ‘புகழ்ச்சி’, ‘நன்றி செலுத்தல்’, ‘அஸ்திபாரம்’, ‘பொக்கிஷம்’, ‘சம்பூர்ணம்’, ‘நிரப்பமானது’, ‘(அக) நோய் துடைப்பது’, என்ற பெயர்களாலும் அழைப்பதைக் காணலாம்.

மானிட இனம் உய்வதற்கு வழிகாட்டியாகவும் உபதேசமாகவும் அமைந்துள்ள குர்ஆன் மஜீதின் எல்லாத் திருவாக்கியங்களுமே “கலா முல்லாஹ்”–(அல்லாஹ்வின் திருவசனம்) என்று அழைக்கப் படுகின்றன. ஆனால், இந்தத் திறப்பு அத்தி. யில் அமைந்துள்ள ஏழு ஆயாத்களும் “கலாமெ அ’ப்’து”–(அடியானின் வசனங்)களாகத் தோற்றமளிக்கின்றனவே என்று ஒருசிலர் மருள்வதுண்டு. இவ்வாறு மருட்சியுறவே தேவையில்லை. இவ் வேதத்துக்குரிய ஒரு தனிச் சிறப்பு என்ன வென்றால், இறைவன் நல்லதை உபதேசித்து, அல்லதைக் களைய வேண்டு மென்று கடுங்கட்டளை யிடுவதைக் கூறுவதுடன், நல்லடியான் ஒவ்வொருவனும் எப்படித் தன்னைப் பிரார்த்தித்து வழிபடவேண்டு மென்று கற்றும்கொடுக்கிறா னென்பதை இது நெடுகவே போதித்துக் கொடுப்பதாகும். இத் திருமறையின் தொடக்கமே, அடியான்மீது அல்லாஹ் கொண்டிருக்கும் கரிசனத்தை உறுதிப் படுத்துகிறதாய் அமைந்திருப்பதைக் கவனியுங்கள். அந்த ஏகன், பெரிய ஆசான் என்னும் முறையில், சிறிய சீடர்களுக்குக் கற்பித்துக் கொடுக்கும் முதற்பாடந்தான் இந்தத் திறப்பு சூறா. இதன் தொடக்கத்தில் “:குல்”–(கூறுக) என்னுஞ் சொல் தொக்கு நிற்கிறது.

மக்காவில் அருளப்பட்ட 15-ஆவது அத்தி.யின் 87-ஆவது ஆயத் (அ. கு. 1389) இதனை “ஸப்’ அ’ம் மினல் ம:தானீ”– “மீட்டும் மீட்டும் ஓதப்பட்டுவரும் ஏழு (ஆயாத்கள்)” என்று சிறப்புடன் வருணிக்கிறது. ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக்அ’த்திலும் இது தவறாமல் ஓதப்படுவதாலும், இதை ஓதாமல் விட்டுவிட்டால் ஒரு தொழுகையுமே பூர்த்தியாகாது என்று நபிபெருமானார் (சல்) நவின்றருளி யிருப்பதாலும், ஹிஜ்ரத்துக்கு முன்பே மக்காவாழ் முஸ்லிம்கள் தொழுகை நடாத்தி வந்தார்கள் என்பதாலும் இந்த அத்தி. மிகவும் தொன்மையானதாகவும், அதி முக்கியத்துவமிக்க தாகவும் இலங்குகிறது. பெருமானாருக்கு நபிப்பட்டம் வந்தபின் 4 ஆண்டு கழியுமுன்னே (அஃதாவது, ஹிஜ்ரத்துக்கு 10 ஆண்டுகட்கு முன்) இந்த 7 ஆயாத்களும் அருளப்பட்டன என்று ஆங்கிலமுஸ்லிம் மார்மடியூக் பிக்தால் ஆராய்ச்சி பூர்வமாக அறைகிறார்.

ஏக இறைவன் மீது அசையா உறுதிபூண்டு, அவனையே சரணடைந்து, அவனிடும் சகலவித ஏவல்களுக்கும் முற்ற முற்ற அடிமுடி பணிந்து பரம தாசனாகிவிடுபவனே முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறான் (அ.கு.178). திருநபி போதித்த மார்க்கம் இஸ்லாம். ஏனை எல்லா நபிமார்களும் போதித்ததும் இதுவே. எனவே, ‘முஸ்லிம்’ என்பது காரணப் பெயரன்றி, இடுகுறிப் பெயரன்று. ஒவ்வொரு முஸ்லிமும் ஏக இறைவனுக்கே வழிபடுகிறான் என்பதைச் சொல்லளவிலும் செயலளவிலும் நிரூபித்துக் காட்டுவது இங்குள்ள திறப்பு அத்தி. யாகும். அதிலும், இந்த ஏழு திருவாக்கியங்களின் முழுச் சாராம்சத்தையும், காப்புவாசகமாக அமைந்திருக்கும் பி’ஸ்மில்லா ஹிர்ற்‘ஹ்மா னிர்ற‘ஹீம் என்னும் ஒரு வாக்கியமே உள்ளடக்கிக்கொண் டிருக்கிறது. இக்காரணம் பற்றியே இந்தக் காப்புவாசகம் இனிவரும் ஒவ்வோர் அத்தி.யின் தலைப்பிலும்–(9-ஆவது சூறா நீங்கலாக) அமைக்கப்பட் டிருக்கிறது. இந்தக் காப்புவாசகத்தை ஒருவன் உச்சரித்த மாத்திரத்தில், ஒரே தேவன்தான் உண்டு என்னும் அசையா உறுதி அவனது உள்ளத்தினுள்ளே அதியாழமாய் வேரூன்றி விடுகிறது. எனவேதான், எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுதும், கருணாகரக் கடவுள் என்னப்படும் ஏக பராபரனாகிய இறைவனது துணையைக் கோரி, ஒவ்வொருவனும் பிஸ்மில்லாஹ் சொல்லக் கட்டுப்பட்டிருக்கிறான். இவ்வாறு இக் காப்புவாசகத்தை உச்சரித்து ஆரம்பிக்கிற எந்த நற்காரியமும் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிற தென்று நபிபெருமான் ஹதீதொன்று நவில்கிறது. சிறுகுழந்தைக்கும் முஸ்லிம்களின் இல்லத்தில் இந்தக் காப்புவாசகமே முதன் முதலாக அறிவித்துக் கொடுக்கப்படுகிறது.

முஸ்லிமல்லாதாரும் தங்கள் “தெய்வ வழிபாட்”டில், அல்லது “பிரார்த்தனை”யில், அல்லது “ஜபத்”தில் தத்தம் தெய்வங்களை வழுத்துவ துண்டு. ஆனால், ஒவ்வொரு பிரார்த்தனையின் பொழுதும், ஒவ்வொரு வேளையின் பொழுதும் இன்ன குறிப்பிட்ட சுலோகத்தையேதான் அவர்கள் அத்தியாவசியமாக ஒப்பித்தாக வேண்டும் என்னும் நியதியோ, கட்டுப்பாடோ அவர்களுக்குக் கிடையாது. எவரும், எப்படியும், எந்த வருணனையைக் கொண்டும், உருவம் கற்பித்தும் வழிபட்டுக் கொள்ளலாம் என்பது அவர்களது சித்தாந்தம். “கடவுளை அணுகும் வழி வேறுபடினும், எல்லா மதங்களும் ஒன்றே!” என்கிறார் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். ஆனால், இஸ்லாத்தின் கடுமையான கட்டளை என்னவென்றால், தனித்துத் தொழுதாலும் கூட்டமாகக் கூடித் தொழுதாலும், ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ரக்அ’த்திலும் ஏக தெய்வக் கோட்பாட்டைக் கற்பிக்கும் இந்த பாத்திஹா சூறாவை அவசியம் ஓதியே தீரவேண்டும் என்பதாகும். பரந்த பராபரனைக் குறுக்கி உருவமைத்துப் பூஜை செய்யும் சத்திய நிராகரிப்பாளர்களின் கடவுள் வாழ்த்துக்களைப் போன்றில்லாமல், இறைவன் எவ்வளவு விசாலமானவனோ, அவ்வளவு விஸ்தீரணத்தையும் உள்ளடக்கிக் காட்டும் பெற்றிமிக்க இந்தச் சுருக்கமான, அழகான அத்தி. மீது அயல்மத விரோதிகளுங் கூட யாதொரு சுடுகணையும் தொடுக்கமுடியாமல் திணறுகின்றனர். ஏன் தெரியுமா? கீழ்க்காணும் ஏழு ஆயாக்களின் தன்மையையும் கருத்தையும் ஊன்றிக் கவனியுங்கள்: முதன் மூன்று ஆயாத்களும் ஓர் உருவமோ அன்றி இணையோ கற்பிக்காமல், ஏக இறைவனின் பெற்றியை முற்றிலும் விளக்கமாய் எடுத்தியம்புகின்றன; இறுதி மூன்று ஆயாத்களும் ஏழை மதியாளனாகிய அடியான் தான் அறிந்தோ அறியாமலோ நேர் வழியை விட்டுக் கோடிய பாதையில் வழிவிலகிச் சென்றுவிடாமல் காப்பாற்றுமாறு அபயக் குரல் எழுப்பும் வேண்டுதலா யிலங்குகின்றன; நடு ஆயத்தோ, “நினையலால் வேறு கதியே இல்லை!” என்று முற்ற முற்றச் சரணடையும் ஏக தெய்வப் பெரும் பிரார்த்தனையா யிருக்கிறது. இவ்வாறாய் ஆழிய கருத்தை இந்த ஏழு ஆயாத்களும் தம்மகத்தே அடக்கிக்கொண் டிருக்கின்றமையால்தான், இஸ்லாத்தின் பரம விரோதிகளுங் கூட இவற்றைப் பாராட்டியே தீரவேண்டியதா யிருக்கிறது.

நபிகள் பெருமானாருக்கு (சல்) வஹீ வெளியாகத் தொடங்கியதி லிருந்து, சில காலம் வரையில், இந்தத் திருமறையிலுள்ள எந்த ஓர் அத்தியாயமும் முழுமையாய் இறைவனால் அருளப்படவில்லை. சில சில திருவாக்கியங்களே வஹீ யறிவிக்கப்படும். பின்னரே அவை கோவை செய்யப்படும். ஆனால், ஒரு மொத்தமாக, ஏக காலத்தில் பூரணமாக வஹீ யறிவிக்கப்பட்ட முதல் சூறா இந்தத் திறப்பு அத்தி. யாகும். அஃதாவது, இதிலுள்ள ஏழு ஆயாக்களும், ஒரே அறிவிப்பில், முழு அத்தி. யாக எம்பிரானுக்கு அருளப்பட்டது. இந்தக் கருத்திலேதான், பைஹ(க்)கீ என்னும் வியாக்கியான நூலில் அதன் ஆசிரியர், இது “குர்ஆனில் முதன் முதலாக வெளியாக்கப்பட்ட (அத்தியாயமா யிருக்கிற)து,” என்று விவரித்திருக்கிறார். இத் திருமறையில் ஏழு ஆயாக்கள் அடங்கிய அத்தியாயங்கள் இரண்டே தாம் உண்டு. மற்ற சூறாக்களில் ஏழைவிட அதிகமான, அல்லது குறைவான திருவாக்கியங்களே அமைந்துள்ளன. இவ்வாறு 7 ஆயாத்கள் அடங்கிய மற்றொரு சூறா 107-ஆவது அத்தி. யாகிய “அல் மாஊன்” ஆகும். எனினும், வேளை தவறாமல் ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் யாவராலும் கட்டாயமாக ஓதியே ஆகவேண்டிய அத்தி. இந்தத் திறப்பு சூறாவே யன்றி, மாஊன் அன்று என்பதையும் நினைவிலிருத்துவது அவசியமாகும்.

இமாம்-ஜமாஅத் தொழுகையில், இமாம் இந்த சூறத்துல் பாத்திஹாவை ஓதிவிட்டு மறு சூறாவைத் தொடங்குமுன், பின்னே நிற்கும் முக்ததீகளுள் ஷாபீகளா யிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாம் தாமும் வாய்க்குள்ளே இந்த ஏழு ஆயாத்களையும் ஓதிக் கொள்கிறார்கள். ஷாபி இமாம் இந்த அளவுக்கு இந்த அத்தி.க்குக் கண்ணியமும் முக்கியத்துவமும் அளித்துள்ளார். எனினும், குர்ஆன் ஓதப்படும்பொழுது மௌனமாய்ச் செவிமடுத்தல் கடன் (7:204) என்னும் கட்டளைக்கு ஏற்ப, ஹனபீகள் இமாமைப் பின்தொடரும்பொழுது இந்த சூறாவை வாய்க்குள் முணுமுணுப்ப தில்லை. நபிகள் திலகம் (சல்) காலத்திலேயே சஹாபாக்கள் இரண்டு விதமாகவும் ஒழுகிக்கொண்டிருந்ததாகத் தெரியவருவதால், ஷாபீ இமாம் சொன்னவாறு நடப்பதிலோ, அல்லது ஹனபி இமாம் ஏவியவாறு ஒழுகுவதிலோ குற்றமில்லை. ஆனால், தொழுகையில் இமாமாக நிற்பவர் இந்த சூறாவை ஒப்பித்தேதான் தீரவேண்டும் என்பது தவிர்க்க முடியாத கடனாம்.

புரிகிற பாவத்தை யெல்லாம் புரிந்துவிட்டு, மிகப் பொல்லாதவனாக, புல்லனாக, போக்கிரியாக வெல்லாம் வாழ்நாளை வீணாக்கிவிட்டு, சாவப்போகிற தருவாயில் தெய்வத்தை நினைவுகூர்ந்து விட்டால், அதுவே சாலச் சிறந்த பக்தியாக மாறிவிடும் என்று இஸ்லாமல்லாத மற்ற மதங்கள் உபதேசிப்பதை நாம் காண்கிறோம். இது கேலிக் கூத்தாகவும், இறை நிந்தனையாகவும், போலி பக்தியாகவும் போய்முடியும். ஏனென்றால், மனிதன் உயிர் வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் இறைவனுக்குரிய காலமா யிருக்கிறது. எனவே, அந்த எல்லாக் காலத்திலும் அந்த ஏகனை நினைவுகூர்வதும், அவனிடம் மன்றாடிக் குறையிரப்பதும் பக்தனின் கடனாகும். இவன் உயிர் துறக்கும் இறுதிவேளை மட்டுமே இறைவனுக்குரியது என்று நம்புவது அறியாமை யன்றோ?–(4:18). கடலில் மூழ்கி மூச்சுத்திணறும் வேளையில் ‘பிர்அவன் என்னும் கொடுங்கோலன் இறைவனைப் பிரார்த்தித்தான். ஆனால், அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வில்லை யென்பதை (அ.கு.1200) நாம் காண்கிறோம். எனவே, உத்தமனாக உயிர்வாழக் கடமைப்பட்டிருக்கும் அடியான் எந் நாளும், எவ் வேளையும் தீவிர பக்தனா யிருக்க வழிவகை செய்து கொடுக்கும் இலேசான ஏவல்தான் இந்த சூறாவாகும்.

பாக்கிஸ்தானில் வாழ்ந்த ரஹ்பர் என்னும் பெயருடைய ஒருவர் முஸ்லிமாய்ப் பிறந்தார். அவர் அறியாமையால் இம் மதத்தின்மீது வெறுப்புற்றுக் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். அவர் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, இஸ்லாத்தை இப்பால் மிக வன்மையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் கற்பிக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால்: இஸ்லாத்தின் இறைவன் மிக மூர்க்கனாம்; கொஞ்சமும் மன்னிக்கும் இயல்பு அற்றவனாம்; குற்றவாளிகளை இரக்கமின்றியே தண்டிக்கும் கொடியனாம்; அவனைச் சதா துதிபாடிக் கொண்டே யிருந்தால்தான் முக்தி கிடைக்குமாம்; சிறிதே தவறினாலும் பற்றிப் பிடித்துத் தண்டிப்பானாம்… இவ்வாறெல்லாம் சுடச்சுட அடுக்கிக் கொண்டே செல்கிறார் அவர். இந்த மாதிரியான பித்துக்கொள்ளித்தன முள்ள பிதற்றல்களுக்கு அடிப்படைக் காரணம் இதுதான்: அடியான் என்ன பிழைகளையும், குற்றங்களையும், பாவங்களையும் தாராளமாய்ப் புரியலாம்; கிருபாநிதியாகிய கடவுள் எல்லாவற்றையும் அடியுடன் மன்னித்து விடுவார்–அவன் மட்டும் ஒரே ஒரு முறை விண்ணப்பித்து விடுவானானால், என்பதாகும். ஹிந்து மதம், கிறிஸ்து மதம், மற்றும் வேறு மதங்கள் யாவும் இப்படியே போதிக்கின்றன. யூதர்களோ, தாங்கள் அந்த ஜாதியில் பிறந்துவிட்ட தாலேயே சுவர்க்கவாசிகளாகி விடுவதாக நம்புகின்றனர். ஆனால், இஸ்லாம் என்ன போதிக்கிற தென்றால், அடியான் இறைவன் மீது சதா உறுதி பூணவேண்டும்; அவ்வாறு பூண்டதற்கு அறிகுறியாக எப்பொழுதும் நற்கருமங்களைச் செயலாற்ற வேண்டும் என்பதுதான். குர்ஆன் நெடுகவே ஈமானைக் குறிப்பிடும் ஒவ்வோர் ஆயத்தும் தொடர்ந்து அமலையும் இணைத்துப் போதிப்பதைக் காணலாம். ஈமானும் அமலும் ஒன்றுடனொன்று பிணைந்து நிற்க வேண்டுமன்றி, வேற்று மதக்காரர் கூறுவதுபோல் வெற்று ஈமான் மட்டும் ஒருவனைக் கடைத்தேற்றப் பயன்படாது. எனவே, ஒருவன் ஈமான் கொண்டதாகப் பசப்பிவிட்டு முரணான செயலில் ஈடுபடுவானானால், அவன் தன்னையும் கெடுத்துக் கொள்கிறான்; தன் ஆத்மாவையும் கறைபடுத்தி விடுகிறான்; இதன் இயற்கை விளைவாக இறைவன் வகுத்திருக்கும் தண்டனைக்குள்ளே தன்னை வலியப் புகுத்துக் கொண்டு விடுகிறான். இவ்வாறெல்லாம் நேரிடாவாறு தடுப்பதற்காக, ஈமானையும் அமலையும் ஏக காலத்தில் அல்லாஹ் இந்த ஏழு ஆயாத்கள் மூலமாக அடியார்க்கு அறிவித்துக் கொடுக்கிறான். இந்த ஆயாத்களின் உட்பொருளை யுணர்ந்து ஒழுங்காய் நடந்துகொள்ளும் உத்தம நல்லடியார்கள் துயருறமாட்டார்கள். இதை ஓதுவதால் உள்ளம் தெளிவுறும்; செயல் சீர்பெறும்.

இறைவனுக் குரிய நான்குவித சிரேஷ்டம் மிக்க உன்னத குணவிசேஷப் பண்புகள் முதல் மூன்று ஆயாத்களில் மிளிர்கின்றன. அவனே இப் பிரபஞ்ச முழுமையையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை இவை நன்கு நிரூபிக்கின்றன. இறைவனென்னும் மஹா சமுத்திரத்தை இந்த சூறா உள்ளங் கையில் அடக்கிக்காட்டும் நேர்த்தியே நேர்த்தி! அவனுடைய காருண்யப் பெருமழை அடியார்கள் மீதும், மற்றுமுள்ள உயிரினப் பொருள்கள் அனைத்தின் மீதும் எப்படிப் பெரும் பிரவாகமாகப் பொழிகிற தென்பதையும் இந்த ஆயாத்கள் தெளிவுற விளக்குகின்றன. எனவே, மனிதன் இந்த மகத்துவ மிக்க அத்தி.யை ஒப்பிப்பதன்மூலம் மிக உயர்ந்த சித்தியைத் தன் சத்துவத்தின் மூலமும் ஆத்துமாவின் மூலமும் அடைய விழைகிறன். அத் தன்மைத்தாய இலட்சியமிக்க சித்தியேதான், “சிரா(த்)துல் முஸ்த:கீம்” என்று அழைக்கப்படும் நேர்வழியான சீரிய சன்மார்க்கமாகும். இதுவே நிரந்தர சாந்தியைச் சென்றடைய நல்வழியாகவும் இலங்குகின்றது. அந்த நேரான, சீரான, நல்வழி என்னும் ஒழுங்கான பாதையை விட்டு அடிபிறழ்ந்து, சற்றேனும் அப்பாலிப்பால் வழுக்கிச் சறுகிவிடாவாறு, அகத் தடுமாற்றம் புறத் தடுமாற்றம் இல்லாத முறையில் நடுமத்தியில் செப்பமாக ஒழுகிச் செல்லவேண்டும் என்பதுதான் ஆறாவதறிவு படைக்கப் பெற்ற ஒவ்வொரு மனிதனின் உயரிய லட்சியமாகவும் குறிக்கோளாகவும் இருந்து வருகிறது. கொஞ்சமும் வேற்றுமை பாராட்டாது, அனைத்துப் படைப்பினங்களுக்குமே சரிசமமான சௌபாக்கியத்தை இறைவன் வழங்குகிறான் என்பதை இதன் முதல் திருவாக்கியமே மிக நயம்பட எடுத்தியம்புகிறது. ஏக இறைவனாகிய பராபரன் தங்கள் ஜாதி மக்களுக்கு மட்டுமே தெய்வமாக நின்றிலங்குகின்றான் என்று வேறுசில சமயவாதிகள் வாதிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், குர்ஆனின் முதல் திருவாக்கியமே, அவனை “றப்’பு’ல் ஆ’லமீன்” என்று வருணித்து, அந்த எங்கும் நிறைந்த சர்வவல்லமை மிக்க ஏக இறைவன் எந்த ஒரு தனிப்பட்ட ஜாதியார்க்கு மட்டுமோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டினர்க்கு மட்டுமோ, அல்லது இன்ன பிரத்தியேகமான வருணத்தார்க்கு மட்டுமோ உரித்தானவனல்லன்; ஆயின், அனைத்து மக்களுக்கும் ஏனை ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒரே ரக்ஷகன் என்பதை உறுதிப்படுத்தி யிருக்கிறது. அத்தனை உயிர்களுக்கும், படைப்பினங்களுக்கும் அவனே தன் சம்ரக்ஷணத்தை – காப்பாற்றுகையை நல்குகிறான் என்றும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது. நான்கு உத்தம வகுப்பினர்களாகிய நபிமார்கள், சித்’தீ’க்:குகள், ஷுஹதாக்கள், சாலிஹீ’ன்கள் பற்றிப் பின்னேவரும் 4:69 குறிப்பிடுகிறது. அந்த நால்வகை இனத்தினரின் கூட்டத்துடன் கலந்து ஐக்கியபாவமாக–(ஒற்றுமையாக)க் கூடிய அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் ஆத்ம பரிபக்குவத்தை ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்பதே இஸ்லாத்தின் முக்கிய குறிக்கோளா யிருக்கிறது. அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முதற்படியா யமைந்திருப்பது இந்தத் திறப்பு அத்தி. யாகும். கம்பீரம் தொனிக்கிற, பூரணத்துவம் பொலிகிற, கௌரவம்மிக்க, சர்வ வியாபகமுள்ள இந்த அபூர்வமான பிரார்த்தனையின் முன்னே வேறெம் மதத்து ஜபத்தை, துதிப்பாடலை, மந்திரோச்சாரணத்தை, கடவுள் வாழ்த்தை வைத்து ஒப்பிட்டு நோக்கியபோதினும், அவையெல்லாம் வெற்றெனத் தொடுக்கப்பட்ட சொற்களாக, அல்லது “ஏனை மோனை” நயம் நிரம்பிய மந்திரங்களாக, அல்லது குறுமதியா ளனாகிய மனிதனால் இட்டுக்கட்டப்பட்ட மட்டரகக் குறும்பாக, அல்லது இணைகற்பிக்கும், உருவத்தை வருணிக்கும் கற்பனாலங்காரமாக, பல தெய்வக் கோட்பாட்டைச் சுற்றிவளைத்துச் சொற்கோட்டை யாக்கிக் காண்பிக்கும் அருவருப் பூட்டும் வெற்றுக் கோவையாக விளங்குவதையே நாம் பார்க்கிறோம். ஏகனே இறைவனென்றும், அவனுடைய ஈடிணையற்ற இலட்சணங்கள் இன்னவை என்றும் இது வருணித்திருப்பதைப் போன்று வேறெம்மத வேதநூலின் திறப்புரையும் வருணிக்கவே யில்லையே!

முழுக் குர்ஆனின் சாராம்சமாக இந்த பாத்திஹா சூறா விளங்கிவருகிறது என்பதன் தாற்பரியம் என்னவென்றால்: இறைவன் மாட்சிமிக்க மகாபெரியவன்; அடியானோ, தாழ்ச்சி மிக்க மிகச் சிறு அற்பன். இச் சிறியோன் அப்பெரிய எஜமானனிடம் கையேந்தித் தனக்கு ஒரு நல்வழி காட்டுமாறு பணிவுடனே யாசிக்கிறான். அந்த நேர்வழியைப் புலப்படுத்தும் சரியான வழிகாட்டிதான் குர்ஆன் என்று அடுத்த அத்தி.யின் ஆரம்ப ஆயாத்களே விளக்குகின்றன. பின்னே வரும் அனைத்து சூறாக்களுமே இறைவன் எப்படிப்பட்டவன், நேர்வழி காட்டியாகத் திகழ்ந்திடும் இத்திருமறை எத்தன்மைத்து, என்பனவற்றைத்தாமே இந்தத் திருக்குர்ஆன் வாயிலாக நமக்கு விளக்குகின்றன! அந்த விளக்கத்தின் முன்னோடியே இந்த அத்தி. யாகும். இறைவனுக்கும் மானிடனுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பைச் சுருக்கமாக எடுத்தியம்பி விளங்கவைக்கிற இந்த “உம்முல் குர்ஆன்” ஆரம்ப வாக்கியத்திலேயே றப்’ என்னும் ஆழமுடைத்தாய அழகிய சொல்லால் அல்லாஹ்வை அலங்கரிக்கிறது. றப் என்பான், “படைத்துப் பரிபாலித்துப் பராமரித்துப் பரிபக்குவ மடையச் செய்கிறவன்” என்று கருத்துக் கொள்ளும். இறைவனது மகா விசாலமான சர்வலோக சர்வாதிகார ஏக நாயகமகிமையின் முழுப் பொருளையும் அந்த ஈரெழுத்தாலாய அரப் சொல் தன்னகத்தே பிதுங்கப் பிதுங்க அடக்கிக் கொண் டிருக்கின்றமையால், அதன் முழுத் தாற்பரியத்தையும் வேறு மொழியில் ஒரு சொற் கொண்டோ, பல சொல் பொருத்தியோ எடுத்து விவரிக்க இயலாது. எனவே, ஒருவாறு மத்தியஸ்தமாக நெடுக இனி றப் என்னும் சொல்லை “ரக்ஷகன்” என்றே நாம் குறிப்பிடுவோம். அப்படிப்பட்ட ரக்ஷகன் ஏகன் – (ஒருவனே தேவன்); அவனுடைய பிடைப்பினங்களுள் ஒன்றாகிய அனைத்து மானிடர்களும் சமத்துவம் வாய்ந்தவர்கள் – (ஒன்றே குலம்) என்னும் சிறந்த உண்மை இங்கே மெய்ப்பிக்கப் படுவதைக் கவனிக்க. மானிட இனம் மட்டுமின்றி, மற்ற எல்லா இனங்களுமேயுங் கூட ஒரேவிதமான சிருஷ்டி சட்டத்தையே – (நியாய பிரமாணத்தையே) பின்பற்றி நடக்கின்றன என்பதையும் “றப்’புல் ஆ’லமீன்” என்னும் சொற்றொடர் நமக்குத் தெளிவூட்டுகிறது. அனைத்துப் படைப்பினங்களின் ஏகத்துவமயமான நிலையை நினைவிலிருத்தி, அவற்றைப் படைத்தவனும் பரிபாலிப்பவனும், போஷித்து ரக்ஷிப்பவனும் அதே ஏகனாகத்தான் இலங்கிடல் வேண்டும் என்கிற உண்மையை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஐயமின்றி அறிவிக்கும் மார்க்கந்தான் “இஸ்லாம்”; அந்த இஸ்லாத்தை விளக்குவதுதான் குர்ஆன்; அந்தக் குர்ஆனின் முழுக் கருத்தையும் தனது தோற்றுவாயிலேயே தெளிவுபடுத்தி வைப்பதுதான் இந்த சூறத்துல் பாத்திஹா. இத்துணை மகத்துவமும் மகிமையும் வாய்ந்த இம் முதல் அத்தி. திறப்புரையாகச் சிறப்புற அமைந்திருப்பதை நுண்ணறிவுடன் கூர்ந்து நோக்கி உட்பொருள் தெளிவீர்களாக! இந்தத் திருமறையின் மற்றெல்லாத் திருவாக்கியங்களையும் நீங்கள் முற்றிலும் ஒருமுறை கவனமாகப் படித்து ஞானத்தைக் கூர்மையாய்த் தீட்டிக் கொண்டு, அப்பால் இறுதியாக மறுமுறையும் இந்த அத்தியாயத்தையும் இதன் வியாக்கியான விளக்கங்களையும் ஊன்றிப் பயில்வீர்களேல், அப்பொழுது இதன் முழுக் கருத்தையும் நேர்த்தியையும் நன்கு நுகர்வீர்கள்!

Related Articles

Leave a Comment