நற்சான்று

by admin
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

சென்ற பல ஆண்டுகளாகத் தமிழறிஞர் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப், B.A., அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள முஸ்லிம்களின் உயர்வுக்காக அரும்பாடு பட்டு வருவதை நான் கண்டு வருவதே போல், எல்லாருமே நன்கறிந் திருக்கிறார்கள். அதிலும் சிறப்பாக, நமது அருமறையாம் திருமறை குர்ஆன் ஷரீபை இந்நாட்டு மக்களுக்கு மிக அழகாகவும், தெளிவாகவும் விளக்கி வைக்க வேண்டுமென்று முயற்சி எடுத்து, அவரும் அவர் மைந்தர் அப்துல் ஜப்பார், B A., அவர்களும் எவ்வளவு பாடுபட்டு இத் தப்சீரைத் தயாரித்து வருகிறார்கள் என்பதை நான் என் கண்ணாரக் கண்டு வருகிறேன். இதுவரை இப்படிப்பட்ட ஒரு தப்ஸீர் தமிழில் வெளிவந்ததில்லை யென்னும் பெருமையை இந்நூல் பெற்றுக்கொண் டிருக்கிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அவர்கள் அரிய பல ஆராய்ச்சிகள் செய்து, அனேக ஆங்கில, உர்தூ தப்ஸீர்களைத் துணையாகக் கொண்டு, இந்தத் திருமறைக்குப் பொருளுரையும், விரிவுரையும் வரைந் திருக்கிறார்கள். சில சமயங்களில் நெருடான கட்டங்களுக்கு விளக்கம் எழுத அவர்கள் முற்படு முன்னே, என்னிடமே பல உர்தூ தப்ஸீர்களை எடுத்துவந்து, என்மூலம் சரியான கருத்தை யறிந்து, சற்றேனும் பிசகாமல் வரைந்திருப்பதை நான் அறிவேன். உர்தூ ஞான முள்ளவர்களை யணுகிப் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென்று ஜனாப் அப்துல் ஜப்பார் எனது அலுவல் நேரத்தில் பலமுறை வந்து பேசியதை ஒரு மகிழ்ச்சியாகவே நான் கருதுகிறேன். தேனீ பல மலர்களில் புகுந்து தேனைச் சேகரிப்பதேபோல், ஜனாப் பா. தா. வும் அவர் மைந்தரும் அனேக தப்ஸீர்களையும், பல கற்றறிந்தோரின் துணையையும் வைத்துக் கொண்டு வெளியிட்டிருக்கும் இந்தத் தப்ஸீர் நீண்ட நாள் தமிழகத் தேவையைப் பூர்த்தி செய்துவிட் டிருக்கிறது.

தள்ளாமை காரணமாக நோயுற்ற ஜனாப் பா. தா. வுக்கு நான் சில சமயங்களில் சிகிச்சை செய்ய அவரது இல்லத்துக்குச் செல்லும் போதெல்லாம், அவர் தமது உடல் நலிவைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தமிழ் நாட்டில் வதிகிறவர்கள் நமது கலாம் ஷரீபைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்னும் பொறுப்புணர்ச்சியுடன் அயராது உழைப்பதைப் பாராட்டுகிறேன். இவ்வளவு மகத்தான கடமை யுணர்ச்சியுடன் அவர் தயாரித்து அளித்திருக்கும் இந்தத் தப்ஸீரை ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் பயின்று இம்மையிலும் மறுமையிலும் நற்பயன் அடையவேண்டியது அவசியமாகும்.

மவ்லவீ அல்ஹாஜ், ஹக்கீம்,
மீர் துபைல் அஹ்மத்
சென்னைக் கார்ப்பொரேஷன் ஹக்கீம்,
சென்னை-2.

Related Articles

Leave a Comment