முன்னுரை

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم

னைத்து மாந்தராலும் ஓதத்தக்க பெற்றியுடையது; எல்லாரும் ஓதுவது; ஓதுதற்கென்றே தோன்றியது என்னும் அத்தனை பொருள்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஒரே சொல்தான் “குர்ஆன்” என்பதாகும். ஏனை மதத்தினர் பலர் உரிமை கொண்டாடுவதே போல், இன்ன இனத்தவர் மட்டுமே ஒதத்தக்கது, இன்ன இனத்தினர் இதன் திருமந்திரங்களைச் செவிப்புறத்தாலும் கேட்கக் கூடாது, இன்ன தகுதிகளுடன் கூடிய ஆசாரிய புருஷர்கள் மட்டுமே பாராயணம் பண்ண வேண்டும், இன்ன அருகதையற்ற ஏனையவர் கண்ணாலுங் காணக்கூடாது, காதாலும் கேட்கத் தகாது, இன்ன தரத்திலுள்ள சாஸ்திரிகள் மட்டுமே இதன் திருவாக்கியங்களை ஒப்பிக்க வேண்டும், இன்ன கதியிலுள்ள பிறவியினர் மேற்கோளாகக்கூட ஒரு சுலோகத்தையும் எடுத்துரைப்பது தகாது என்றெல்லாம் இத்திருமறை தனக்கு இருப்புத்திரை இட்டுக்கொண்டு இருக்கவில்லை. மாறாக, “உளப் பரிசுத்தமும் வெளிப் பரிசுத்தமும் உடைய எந்த விசுவாசியும்—(மூமினும்) இதை ஓதலாம், இதன் திருவாக்கியங்களை ஒப்பிக்கலாம், பயிலலாம், பாராயணம் பண்ணலாம்!” என்னும் பரந்த கருத்துடன், “குர்ஆன்”—(ஓதத் தக்கது) என்னும் பெயரையே இத்திருமறை தனக்கெனச் சூட்டிக்கொண்டிருக்கிறது. இவ்அவனியில் வதியும் மக்களால் இன்றுங் கூட, இந்தக் குர்ஆன் எத்தனை பேர்களால் ஓதப்படுகிறதோ, அந்த அளவுக்கு அத்தனை பேர்களால் வேறெந்தப் புத்தகமும் படிக்கப் படுவதில்லை என்பது, “என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா” என்னும் புகழ் மிக்க ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தின் நற்சான்றாகும்.

எல்லாரும் ஓதலாம் என்னும் ஒரே பொருளை மட்டுமே “குர்ஆன்” என்னும் அரபுச் சொல் வழங்கவில்லை. இதற்கு மற்றொரு பொருளும் உண்டு: “விஷயங்களை ஒன்று திரட்டினான்” என்னும் அர்த்தமுள்ள :கர‘அ என்ற அரப் சொல்லின் மூலத்திலிருந்தும் “குர்ஆன்” என்னும் பெயர்ச்சொல் தோன்றியிருக்கிறது. இந்தக் கருத்தின்படி நோட்டமிட்டால், “எல்லா இறைத் திருமறைகளும் ஒன்று திரண்டு ஓருருவாய் அமைந்த உயர்நூல்” என்றே அர்த்தப்படுகிறது. எனவே, இதற்குமுன் இறைவ னிறக்கிய எல்லா வேதங்களின் சாறும் பிழியப் பெற்ற தெள்ளமுதே இத்திருமறை யென்பது சொல்லாமலே விளங்கும் (98:3). இப்படிப்பட்ட பண்புகள் ஒருங்கமைந்த இணையற்ற திருமறையின் பொருளுரையும் விரிவுரையுமே இந்தப் பதிப்பாகும்.

அரப் நாடுகளிலும், அவற்றினைச் சூழ்ந்துள்ள மாநிலங்களிலும் வதிகிற மக்கள் இந்த அருமறையைத் தங்கள் தாய்மொழியில் படிக்கும் பொழுதே இதன் பொருளை நன்கறிந்துகொள்வ ரென்றாலும், அப்பொழுதும் அவர்களுக்கு இதிலுள்ள சில நெருடான நுட்பவிஷயங்களை நன்கு விளக்கி வைப்பதற் கென்று அரப் மொழியிலேயே பற்பல வியாக்கியான நூல்கள் ஆரம்பகால முதலே வரைந்து வைக்கப்பட வேண்டி யிருந்தன. இங்ஙன மிருக்க, அந்த மூலமொழியில் ஒரு சிறிதும் பாண்டித்தியமில்லாத நம் தென்னாட்டவர் பலர், வெறுமனே அரப் சொற்களை உச்சரித்து ஆயாத்களை ஓதமட்டுமே கற்றிருக்கிற நிலையில், இவர்கள் எப்படிக் குர்ஆனின் நுண் பொருளையும் உட்கருத்தையும் முற்றிலும் நுகர முடியும்? நம் நாட்டுக் குழந்தைகளுக்கு அரப் ஓதக் கற்றுக் கொடுப்பவர்கள் எழுத்துக்கூட்டி, சொற்களை உச்சரித்து, வெறுமனே படிக்கத்தான் குர்ஆனைப் பயன்படுத்துகின்றனர். சொற்பொருளோ, இலக்கணமோ, வாக்கிய அமைப்பு முறையோ, ஆயாத்களின் அர்த்தமோ ஆசான்கள் மாணாக்கருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதன் விளைவாக, பொருளுணராமல், 30 ஜுஜுக்களையும், இதிலுள்ள 6350 ஆயாத்களையும் இயந்திரமேபோல் பெரும்பான்மையான மக்கள் ஒப்பிக்கிற கதிவந்து வாய்த்துவிட்டது. இதிலும், தற்போதைய அதியவசர உலகத்தில், மதக் கல்வியின் அவசியம் இன்னதென்று அறியாதார் மிகப் பலர் நிரம்பியிருக்கிற இவ் அவனியில், வெறுமனே அரப் ஒதக் கற்றுக்கொள்வதில் இலாபந்தான்—ஆத்மலாபம்—என்ன இருக்கிறது? என்று கருதி, தற்காலச் சிறுவர்களும் சிறுமிகளும் அனேக முஸ்லிம் இல்லங்களில் குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ளவுமேனும் ஆர்வமுறுவ தில்லை. முடிவு என்ன வென்றால்: இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை நம் தமிழகத்தில் பொருளுணராமல் முஸ்லிம்கள் குர்ஆனை ஓதிவந்தார்கள்; பிற்பகுதியிலோ, அதுவு மில்லாமல் பலர் செய்து வருகின்றனர்.

உலகின் மிகச்சிறந்த வேதத்தை அருளப்பெற்றுள்ள பாக்கியவான்களான முஸ்லிம்களுள், தமிழகத்தில் வதிகிற நண்பர்களின் கதி இவ்வளவு தாழ்ச்சியுற்றுக் கிடக்கிறதே யென்று யான் சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்னரே கவலைப்பட ஆரம்பித்தேன். அப்பொழுது சில மௌலவிமார்களை அணுகி, “தமிழ் மட்டுமே பயின்ற அனைத்து மக்களும் பொருளும் விளக்கமும் உணர்ந்து ஓதத்தக்க முறையிலே ஆயாத்களுக்குத் தமிழுரையும் விரிவுரையும் வழங்கக் கூடாதா?” என்று வினவினேன். அவர்களோ, யான் இவ்வாறு வினா விடுத்ததே பெரும்பாபம் என்று முனிந்ததுடன், “தமிழ் காபிரானவன் பாஷை; அந்த பாஷையில் மூமினானவர்களுக்குரிய அல்லாஹ்வின் அரப் ஆயாத்களுக்கு அர்த்தம் எழுதுவதும் கருத்துக் கற்பிப்பதும் பெருந்தவறான காரியம்!” என்றும் சீறினார்கள். நம் திருநபி (சல்) தோன்றுவதற்கு முன் அரப்நாட்டில் உயிர்வாழ்ந்த அத்தனை மக்களுமே (ஒரு சிலர் தவிர) மிக மூர்க்கமான வன்காபிர்களா யிலங்கினார்கள் என்பதையும், அந்தக் காபிர்களின் மொழியாகிய அரப் பாஷையிலேயே குர்ஆன் தோன்றி இணையிலாப் பெருவெற்றியை நிலைநாட்டிற்று என்பதையும் அந்த ஆத்மாக்கள் உணர்ந்தன ரில்லைபோலும்! என்று மனமுடைந்த யான் அந்த “மேதை”களிடம் மேற்கொண்டு ஏதும் வீண் வாக்குவாதம் புரியாமல், சற்றே தீரயோசித்தேன்: “மனிதப் பண்பைவிட்டு விலகி, விலங்கின் செயல்களில் மூழ்கிக்கிடந்த அரப்நாட்டுக் காபிர்களை இந்தக் குர்ஆன் வெளிப்பட்டு, வெகு சீக்கிரத்தில் மிக உச்சத்துக்குச் சத்தியசீலர்களாக உயர்த்திவிட் டிருக்க, இதே திருமறைமீது நன்னம்பிக்கை கொண்டு செயல்படும் நம் தமிழக முஸ்லிம்கள் எவ்வாறு பின்னிடைந்து செல்லக்கூடும்? இவர்களையும் உச்சத்துக்கு உயர்த்த வேண்டுமானால், இவர்களுடைய தாய்மொழியிலேயே இவ் அருமறையை உணர்த்துவிக்க வேண்டும்; வெறும் பொருளுரை மட்டும் போதாது; அங்கங்கேயும் விஞ்ஞான பூர்வமான, முழுப் பகுத்தறிவுக்குப் பொருத்தமான, சரித்திர முரணில்லாத விளக்கங்களும் இடம்பெற வேண்டும்; புராணக் கதைகளும், பொய்யான வரலாறுகளும், வீண் கற்பனையான வெற்றுக் கருத்துக்களும் அறவே களையப்பட்ட அப்பட்ட மானவையாக அந்தப் பொருளுரையும் விரிவுரையும் அமையவேண்டும்; முஸ்லிமல்லாதாரும் இதைப் பயின்று தெளிவுபெற்று, மாசு அகன்ற உள்ளத்தினராய் மிளிரவேண்டும்; மூடிக் கிடக்கிற கண்கள் நன்றாய் விழிப்புற வேண்டும்,” என்று தீர்மானித்தேன்.

அப்பொழுது யான் அரசாங்க ஊழியனாக இருந்தேன். எனவே, எனது திட்டத்தைத் தீட்ட அது பெரும் முட்டுக்கட்டையாக விளங்கிற்று. தக்க சமயத்தில் காங்கிரஸ்-கிலாபத் இயக்கத்தின் ஒத்துழையாமைப் போர் தலைதூக்கியமையால், என் உத்தியோகத்தை உதறித்தள்ளி வெளியேறினேன். குர்ஆன் மஜீதைப் பொருளுரையுடனும் விரிவுரையுடனும் பிரசுரித்துவிடுவது என்னும் சூளுறவுடன் களத்தில் குதித்தேன். எனக்கு அக்காலத்தில் இத்துறையில் போதிய அனுபவமோ, பக்க பலமோ இல்லாமையால், ஒரு சில மௌலவீகளின் துணையுடனும், அப்பொழுது வெளியாகியிருந்த லாகூர் மௌலானா முஹம்மதலீயின் ஆங்கில மொழிபெயர்ப்புக் குர்ஆன், உர்தூ “பயானுல் குர்ஆன்” முதலியவற்றின் உதவியுடனும் “ஜவாஹிருல் ‘புர்(க்):கான்” என்னும் தலைப்புடன் முதலிரண்டு ஜுஜுக்களையும், முப்பதாவது ஜுஜூவையும் வெளியிடத் துணிந்தேன். அந்த என் ஆரம்ப முயற்சிக்கு நான் பெற்ற கைம்மாறு சொல்லுந்தரமன்று. தூய்மையான நல்லெண்ணத்துடன் நான் தொடங்கிய மகத்தான இறைப்பணிக்குச் சிறந்த வரவேற்புக் கிடைப்பதற்கு மாறாக, அனேக அபிப்பிராயபேத மேதைகள் ஏசல்மாலை தொடுத்தார்கள்; இன்னம் என்னென்னவோ செய்தார்கள். அது பழைய கதை.

அந்தக் காலத்தில் தமிழ் முஸ்லிம்களுள், படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவ்வாறு படித்தவர்களுள்ளும் காசு செலவழித்து நூல்களை வாங்கிப் பயிலும் ஆர்வமிக்கவர்கள் அதனினும் சொற்பம். அப்படியே ஆர்வமிருந்தாலும், குர்ஆன் மஜீதை விரிவுரையுடன் படிக்க விழைந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக அரிது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் யானும் எனது தமிழாக்கமும் சிக்கிக் கொண்டு விட்டோம்; அன்று தொடங்கிய அரும்பணி குன்று முட்டிய குருவியின் கதியை நிகர்த்து நின்றுவிட்டது. எனவே, பொருள்—(பண)வலிமை ஒன்றன்மீதே சார்ந்து நிற்கும் இவ்வுலகத்தில் யான் ஊக்கக் குறைவு ஒன்றைத்தான் பரிசாகப் பெற்றேன். அதன் விளைவாக, “ஜவாஹிருல் புர்க்கான்” பூர்த்தியாக வெளிவராமலே போய்விட்டது.

ஆனாலும், யான் ஊக்கம் குன்றிவிட வில்லை. குர்ஆன் மஜீதை வெளியிட முடியாமற் போயினும், சிறுசிறு பிரசுரங்கள் மூலமாகவும், “தாருல் இஸ்லாம்” பத்திரிகை வாயிலாகவும், இஸ்லாத்தின் அரிய பெரிய போதனைகளை அவ்வப் பொழுது தமிழுலகுக்கு ஈந்து, என்னால் இயன்றவரை நம் சகோதர முஸ்லிம்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுமாறு செய்துவந்தேன். எனது இந்த முயற்சியாலேனும் சென்ற 40 ஆண்டுகளுக் கிடையில் நம் மக்கள் எவ்வளவோ முன்னேற்றத்தை யடைந்து விட்டனரே என்பதைக் காண அக மகிழ்கிறேன்; இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். முன்பிருந்ததைப்போல் அல்லாமல், இந்தத் தலைமுறையில் வந்தவர்கள் நிரம்பப் படித்திருக்கிறார்கள்; மேலும் மேலும் படிக்கத் துடிக்கிறார்கள்; ஏதொன்றிலும் உண்மையை உய்த்துணர அவா வுறுகிறார்கள்.

எனக்கோ, வயதாகிக் கொண்டே செல்கிறது. சென்ற 40 வருடங்களுக்கு முன்னே பக்குவமில்லா இத் தென்னகத்திலே கொடிபடர முடியாமற் போய்விட்ட நன் முயற்சி, சீர்பட்டிருக்கும் இற்றைநாளில் நிச்சயமாக வேரூன்றிப் பெருமரமாக விருத்தியடையும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே, “தாருல் இஸ்லாம்” வெளியிடுவதைத் தாற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, எனக்கு 70 வயது முடிந்த பின்னர், புதுமுறையாக ஆதிமுதல் அந்தம்வரை குர்ஆனுக்குப் பொருளுரையும் விரிவுரையும் எழுத முற்பட்டேன். அவ்வாறு 6 ஆண்டுகளைச் செலவிட்டு, விடாது வரைந்து முடித்து வெளியிடத் துணிந்ததன் விளைவே இந்த அழகிய நூலாகும்.

இற்றைய இளைஞர் சமுதாயத்தில் இருவகைப்பட்ட குழுவினரை யான் காண்கின்றேன். ஒன்று, இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் ஒன்றுமே தெரியாத நிலையில் நாத்திகர்களாக, அல்லது கம்யூனிஸ்ட்களாக, அல்லது தென்னாட்டு அரசியற் குழப்பச் சகதியில் சிக்கி அவதியுறும் ஏமாளிகளாக, அல்லது இவ்வுலக வாழ் வொன்றே சதம் என்று நம்பிக் கிடக்கும் கூட்டம்; மற்றொன்று, கேளிக்கைக் கதைகளை, பொழுது போக்கான வெற்று நவீனங்களை, குறுமதி நூல்களை, உள்ளத்தை உசுப்பிவிடும் அடுக்குத் தொடர் அமைந்த அரசியல் கட்டுரைகளை, சினிமா வசனங்களை, சிங்கார வருணனைகளை, சிற்றின்பச் சுவடிகளை, சில சமயங்களில் மட்டும் அறிவுதுலக்கும் ஆக்க நூல் முதலியவற்றைப் படித்து மகிழும் கூட்டம். மதச் சார்பான—அதிலும் பழுதற்ற இஸ்லாம் சார்பாயுள்ள—தத்துவங்களை உய்த்துணர வேண்டு மென்னும் அவா இவ்விரு திறத்தாருக்குமே இல்லை. இப்படிப்பட்ட சமூகத்துக்கு இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட விளக்கவுரைகளை வழங்கலாம் என்று கவலுறும் பொழுது, என் மைந்தர் அப்துல் ஜப்பார் இந் நூற்றாண்டின் முற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும் இடைநடுப் பேர்வழியா யிலங்குகின்றமையால், அவர் தம்மாலியன்ற ஒத்தாசைகளை நல்குவதாக முன்வந்தார். எனவே, தந்தையும் தனையருமாகிய நாங்களிருவரும் சேர்ந்து பற்பல மாதங்களை இரவுபகலாய்ச் செலவிட்டு, செல்வத்தை அள்ளிக்கொட்டி, இறைவனின் அரும்பெருந் துணைகொண்டு இந்த ஆக்கவேலையைச் செய்துமுடித்தோம்.

“செய்து முடித்தோம்!” என்று இரு சொல்லில் நான் சுருக்கமாக அடக்கிச் சொல்லி விட்டேன். ஆனால், எப்படிப்பட்ட வியப்பூட்டும் சூழ்நிலையில், எத்தனைவிதமான கடுஞ்சோதனைகட் கிடையில், கையில் போதிய முதலில்லாத கதியில் இதை எவ்வாறு இயற்றினோம் என்பதை அந்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே நன்கறிவான். அவனுடைய நற்காரியத்தைச் செய்வதற்கு எல்லாவிதமான எதிர்ப்புக்களும், இடுக்கண்களும், இன்னல்களும், இடையூறுகளும், துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும், சிரமங்களும் வாய்ப்பது இயற்கையே. எனினும், இந்தத் தமிழாக்கத்தை உருவாக்க நாங்கள் பட்டிருக்கும் பாட்டின் கதையை ஏட்டிலெழுதி முடிக்க எவராலாகும்? எவ்வாறோ, இத்தனை சோதனைகளுக்கு இடைநடுவே ஏதோ ஒருவிதமாக இந்தத் தமிழாக்கத்தை நல்லமுறையில் உருப்படுத்தி முடித்துவிட்டோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

பின்வரும் விளக்கவுரைகளில், தொன்றுதொட்டு நிலவிவரும் தவறான எண்ணங்கள், வெற்றுப் புராணக் கதைகள், உண்மைக்குப் புறம்பான வருணனைகள் முதலிய எதுவுமே இடம்பெறவில்லை. அல்லது காதியானீ, அஹ்மதி, வஹ்ஹாபி போன்ற எந்த ஒரு பிரிவினரின், குழுவினரின், கொள்கையினரின் பிரத்தியேகப் பிரசாரத்துக்கும் எமது இந்த விரிவுரை துணைநல்க முற்படவில்லை. சென்ற 40 ஆண்டு அனுபவபூர்வமாக இவ் அருமறையை யாங்கள் எந்த நன்முறையில் புரிந்துகொண்டிருக்கிறோமோ, அந்த நன்முறையிலேயே விளக்கப் புகுந்துள்ளோம். இதன் காரணமாக, முன் தோன்றிய வியாக்கியானிகள் பலரின் கூற்றுக்களை ஒவ்வோரிடத்தில் அப்படியே ஏற்று மிருக்கிறோம்; வெவ்வேறிடத்தில் ஒதுக்கியும் இருக்கிறோம். எந்த ஒரு குறிப்பிட்ட விரிவுரையாளர் மீதும் வெறுப்போ விருப்போ கொண்டு, அப்படிப்பட்ட கறுப்புவர்ணக் கண்ணாடி மாட்டிய கண்களுடன் குறுகலாக நாம் எதையும் அணுக வில்லை. பல துறைகளில் எமக்கே பிடித்தமில்லாத முறையில் கருத்துக்களை வழங்கும் ஒரு விளக்கவுரைகாரர், முரண்பாடின்றிச் சரியாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தால், அவர்மீதுள்ள கருத்து வேற்றுமை காரணமாக அதை ஒதுக்கிய தில்லை. அல்லது எமக்குப் பிடித்தமுள்ள ஒருவர் கவனப் பிசகாக ஏதொன்றையும் முரண்பட வரைந்திருந்தால், அவர் மீதுள்ள பற்றுதல் காரணமாக அதை அப்படியே ஏற்றதுமில்லை. எம்மாலியன்றவரை முற்றிலும் நடுநிலை வகித்தே, மக்கள் குர்ஆனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஒரே கருத்துடனேயே, அன்னாரின் விளக்கங்களை இதில் இடம் பெறச் செய்துள்ளோம். சற்றே விளக்கமாகச் சொல்லவேண்டு மென்றால், இன்றைய விஞ்ஞானமும் பொது அறிவும் எந்த அளவுக்கு முன்னேற்றத்தைப் பெற்றுக்கொண் டுள்ளனவோ, அந்த அளவுக்கு ஒருவாறு ஒத்துநிற்கத் தக்கதாக இந்தப் ‘பொருளுரையையும் விரிவுரையையும்’ யாம் தீட்டியிருக்கிறோம் என்னலாம்.

முழுக் குர்ஆனையும் அச்சிட்டு, யாவற்றையும் ஓரே வால்யூமாக—ஜில்தாக—பைண்டு செய்து, ஏககாலத்தில் வெளியிட்டுவிட வேண்டுமென்றுதான் சென்ற 1961 வரைகூட நாங்கள் தீர்மானித்திருந்தோம். ஆனால், அவ்வருடமுடிவில் என் அருமைப் பேரர் பஷாரத் அஹ்மத்—(அப்துல் ஜப்பாரின் மூத்த மைந்தர், பி.யூ.சி. வகுப்பில் படித்து வந்த 18 பிராயத்தினர்) ஆயுள்வியோக மாகிவிட்டார். அந்த ஏக்க இடியால் முந்தைய திட்டம் நிறைவேற இயலாமற் போயிற்று. இனியும் நீண்ட நாள் சென்று முழு நூலையும் வெளியிடுவதைவிட, வாங்கிப் படிக்கிறவர்களுக்கும் எளிதா யிருக்கத் தக்க விதத்தில் சிறுகச் சிறுகச் சுமார் 200 பக்கங்கள் அடங்கிய தொகுதிகளாக, தொடர்ந்து இதைப் பிரசுரிப்ப தென்று முற்பட்டு, ஹி.1381, ரமலான் மாத லைலத்துல் கத்ர் அன்று அச்சுக்கு எடுத்துக்கொண்டேன்.

அவ்வாறு அச்சிட்டவற்றினின்று இரண்டு மன்ஜில்களை மட்டும்—அஃதாவது, “அத்தவ்பா”— “கழிவிரக்கம்” (சூறா 9) முடிய—எடுத்து ஒரு தனி ஜில்தாகக் கட்டியுள்ளோம். இவ்வாறே 3 ஜில்துகளில் இத்திருமறையை முடிக்க நாடியுள்ளோம் (இன்ஷாஅல்லாஹ்), என் மைந்தர் ஈராண்டு காலமாக அரும்பாடுபட்டு உருவாக்கித் தந்த இப்பதிப்பிலுள்ள ஆயாத்களைப் பற்றியும், இவற்றின் பொருட்டாக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை விளக்கியும் இங்கு விவரிக்க இயலாது. எனினும், மானிடன் பலஹீனன். அவன் தவறிழைப்பது இயற்கை. இந்தப் பொறுப்பு மிக்க மாபெருங் காரியத்தில் எம்மையும் அறியாமல் ஏதும் எழுத்துப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை, கருத்துப்பிழை, அச்சுப்பிழை புகுந்துவிட் டிருப்பின், அன்பர்கள் அவற்றைத் திருத்திக்கொள்வதுடன், எமக்கும் அறிவிக்கலாம். யாம் அதற்கு நன்றியுள்ளவர்களா யிருப்போம். செல்வச் சீமான்கள் இக் கைங்கரியத்தைக் கைதூக்கிவிட முற்படுவதுடன், எல்லா மஸ்ஜித்களிலும் இதை வாங்கி நிரப்புவார்களாக. விலைவாசிகள் தாறுமாறாய் ஏறிவருகிற நிலையிலும், எல்லாரும் சுலபமாக வாங்கி வாசிக்கத் தக்கதாகவும், அரப்மூலஆயாத் பொதிந்ததாகவும், தற்கால மக்கள் யாவரும் நன்றாய்க் குர்ஆனைப் புரிந்துகொள்ளத்தக்க விரிவுரைகள் அடங்கியதாகவுமுள்ள இந்த விருத்தியுரை நூலை அனைவரும் ஆளுக்கொரு பிரதியாக வாங்கிக் கொள்வார்களாக. ஒவ்வொரு புதிய அத்தியாயம் தொடங்கும் பொழுதும், அதிலடங்கியுள்ள விஷயமும் கருத்தும், அது வெளியான காலம் முதலியனவும் “தோற்றுவாய்” என்னும் தலைப்பின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன. பிறகு ஒரு பக்கத்தை இரு பத்திகளாகப் பிரித்து, வலது பத்தியில் அரப் ஆயாக்களையும் இடது பத்தியில் அவற்றின் பொருளுரையையும் எதிரெதிராக அச்சியற்றியுள்ளோம். பொருளுரைப் பகுதியிலுள்ள எந்தச் சொல்லுக்கு அல்லது தொடருக்கு விளக்கம் தேவையோ, அதற்குப் பக்கத்தில் சற்றே தலைப்புறமாக உயர்த்தி விரிசைக்கிரமமாக எண்களையிட்டு, அவ்வப் பக்கத்தின் அடியிலே விரிவுரை வழங்கி யிருக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு பக்கத்தையும் பொருத்தமாக அச்சில் அமைப்பதற்கு யாம் மிகவும் அரும்பாடு பட்டு அவதியுற்ற துண்டு. எனினும், இதுவரை இத் தென்னகத்தில் இப்படிப்பட்ட வேலைப் பாட்டுடன் எந்தக் குர்ஆன் தமிழாக்கமும் அமையவில்லை என்பதை நினைத்து, இதற்காகச் செலவிடப்பட்ட நேரத்தையும் பொருளையும் யாம் பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனாலும், இந்த நுட்பமான அருங்கலை வேலைப்பாடு மிக்க அரிய காரியத்தை மிகவும் திறம்படச் செய்து முடித்துள்ள அச்சகத்தாருக்கும், அதன் உறுப்பினர் யாவர்க்கும் எமது பாராட்டுதல்களை உளக்களிப்புடன் வழங்காதிருக்க முடியவில்லை. பொறுமையைச் சோதிக்கும் இந்நெருடான வேலையைச் செய்கையில் சில சமயங்களில் எங்களுக்கு மனச் சோர்வு ஏற்பட்ட துண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் எமக்கு உற்சாகமும் ஊக்கமும் ஊட்டிவிட்ட நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக!

இந்தக் குர்ஆன் ஜில்தில், எமது தப்ஸீரைப் பார்வையிட்டுப் பாராட்டிய மௌலவீ சாஹிப் – அல்ஹாஜ், பி. எஸ். கே. முஹம்மத் இப்றாஹீம் சாஹிப் பாக்கவீ அவர்கள் அளித்துள்ள விமர்சனமும் சேர்க்கப்பட்டுள்ளது. யாம் இத்திருமறை வியாக்கியானத்தில் எம்மதத்தினரையும் எம்மதத்தையும் அனாவசியமாய்த் தாக்கவில்லை.ஒப்பிட்டுக் காண்ட லென்னும் முறைப்படி அவரவர் வேத நூல்களிலிருந்தே ஆதாரம் காண்பித்துள்ளோம். கிறிஸ்து மதத்துக்கு பைபிளும், ஹிந்து மதத்துக்கு “ஹிந்து மதமும் அதன் பகுத்தறிவுத் திறனும்” என்னும் ஆங்கில (HINDUISM and its RATIONALISM by M. HARIHARAN) நூலும் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன.

குர்ஆன் எல்லாக் காலத்துக்கும் உரியது. அதன் விளக்கங்கள் அப்படியல்ல. குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதை உங்களுக்குத் தெரியும். அவனவன் தொட்ட உறுப்பை மட்டும் உணர்ந்து, யானை இப்படிப்பட்ட தென்பதை அவனவனும் மிகக் குறுகலாகக் கற்பித்துக் கொண்டான். அதே உதாரணந்தான் எமக்கும் பொருந்தும். யாம், கரைகடந்த குர்ஆன் ஞானத்தின் ஒரு கரையோரத்தின் அடிவிளிம்பை மட்டுமே அறிந்துள்ளோம். அந்த அறிவை மட்டுமே இங்கே எழுத்துருவில் பொறித்துள்ளோம். எனவே, நிலையான தென்றோ, சாசுவதமான தென்றோ,முற்றிலும் பூர்த்தியான தென்றோ இந்த ஆக்கத்தை யாம் பெருமைப்பட உயர்வுபடுத்தி மகிழமாட்டோம்.எனினும், இற்றைத் தமிழுலகத் தேவையை இந்த உரைநூல் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யலாம் என்றே யாம் நம்புகிறோம்.

இந்த ஆக்க நூலைப் படித்து அறிவு பெறும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கெல்லாம் அருளியிருக்கிறானே என்னும் பெருமையுடன், அவனுக்கே மிக்க அடக்கத்துடன் அடிமுடி சாய்க்கின்றோம். அவனே இம்மையிலும் மறுமையிலும் நம்மையெல்லாம் காத்து ரக்ஷித்து மேன்மையடையத் துணை நல்குவானாக; ஆமீன்! ஆமீன்!! யாறப்பல் ஆலமீன்!!!

இஸ்லாத்தின் ஊழியன்,

பா. தாவூத்ஷா, B.A.
சென்னை-2
25-8-1964.

Related Articles

Leave a Comment