ல்லாஹுத் தஆலா என்றென்றும் சிரஞ்சீவியா யிருப்பதேபோல், அவனுடைய அருமறை யாகிய இத் திருமறையும் எக்காலத்துக்கும், முக்காலத்துக்கும் பொருத்தமான நிரந்தர இறுதி வேதமாகத் திகழ்ந்து வருகிறது. எனவே, உலகம் உள்ளளவும் இது நந்தா விளக்காகவே ஒளிச்சுடர் வீசி வரும் குன்றாப் பொக்கிஷமாக இடம்பெற் றிருக்கிறது. ஆனால், மண்ணிற் பிறந்த மாந்தரனைவரும் சில காலம் மட்டுமே உயிர்வாழும் இயல்புடையோராய் இலங்குகின்றனர். இப்படிப்பட்ட தாற்காலிக இடைக்கால ஆயுள் பெற்றோர், முக்காலும் நீடித்திருக்கும் ஜீவனுள்ள குர்ஆன் ஷரீபுக்கு நிரந்தரமான விரிவுரை நல்குவ தென்பது இயலாது. காலம் முன்னேற முன்னேற, நாகரிகம் முதிர முதிர, விஞ்ஞானம் வளர வளர இந்த நிரந்தரத் திருமறைக்கு அவ்வப்பொழுதும் புதுப்புது விளக்கங்களும் விரிவுரைகளும் தேவைப்பட்டே வருகின்றன. இந்த விரிவுரை நூல் அந்தத் தேவையை ஓரளவுக்குப் பூர்த்தி செய்கிறது என்று நாம் கருதுகிறோம்.

குர்ஆன் ஷரீபுக்கு அப்பட்டமான மொழிபெயர்ப்பையும், அழகான விளக்கங்களையும் வரைந்து அச்சிடுவ தென்னும் நுண்கலை வேலைப்பாடு, சொல்ல முடியாத சிக்கல்களையும், வருணிக்க இயலாத சங்கடங்களையும்,கற்பனைசெய்தும் பார்க்க முடியாத அல்லல்களையும் உள்ளடக்கிக்கொண் டிருக்கிறது.

எனவேதான், மற்ற மற்ற நூல்களும், களஞ்சியங்களும், நிகண்டுகளும், காப்பியங்களும் எத்தனையோ பேர்களால் போட்டியிடப்பட்டு அவ்வப்பொழுதும் அச்சாகி வெளிவந்தும், குர்ஆனுக்கு மட்டும் அப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையுடன் கூடிய விளக்கவுரைகள் வெளிவர முடிவதில்லை. ஒரு மனிதன் தன்னுடைய ஆயுளின் மிகப் பெரும் பகுதியைச் செலவிட்ட பின்னரே ஓரளவுக்கு அவனால் இந்த அருமறையைப் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு புரிந்துகொண்டதை விளக்கி வரையும் ஆற்றலும் அறிவுத்திறனும் அவனுக்கு இருக்குமானால், அதை எழுதி முடிக்க இன்னம் அநேக ஆண்டுகள் கழிந்துவிடும். அப்படியே வரைந்து முடிக்கும் கால அளவுக்கு அவன் உயிர்வாழ்வா னானால், கைப் பொருளையும் உடல் வலுவையும் இதற்கிடையிலே இத்துறையிலே முழுதும் செலவிட்டுவிட்டிருப்பா னாகையால், மேலும் பல ஆண்டுகளையும் பல்லாயிரம் ரூபாய்களையும் செலவிட்டு, கையெழுத்துப் பிரதிகளை அச்சியற்றி முடிப்பது அரிதாகிவிடுகிறது. எனவே, சுமார் 80 வயதை எட்டிய உரை நூலாசிரியர் குர்ஆனைப் பதிப்பிக்க வேண்டுமானால், அவரைவிட வயதில் பாதியளவே உள்ள, ஆனால் அவருக்குள்ள ஊக்கத்தினும் இருமடங்கு ஊக்கமும் உறுதி மனப்பான்மையும் வாய்த்த ஒரு வாலிபர் அவசியம் உடனிருந்து உதவி நல்கியே தீர வேண்டும். அப்பொழுதுதான் உரையாசிரியரின் கனவு நனவாக முடியும். இப்படிப்பட்ட இடைஞ்சல்கள் மிகுந்திருப்பதாலேயே தமிழகத்தில் குர்ஆன் மஜீதின் பொருளுரையும் விரிவுரையும் சுலபமாக, ஒன்றையடுத்து மற்றொன்று வெளிவர இயல்வதில்லை.

ஆனால், கருணைக் கடலாம் அல்லாஹ் (ஜல்) என் தந்தைக்குப் போதிய ஆயுளையும் எனக்குப் போதிய பொறுமையையும், எம்மிருவருக்கும் பொருத்தமான இயல்பையும் தந்தருளி யிருக்கின்றமையால், இந்த அருமறை விரிவுரையை அச்சிட்டு வெளியிட முடிந்தது. பலர்க்கும் கிடைக்காத வாய்ப்பை எமக்கு அவன் அளித்து, இந்தச் சிரமம் மிக்க வேலைப்பாட்டை அச்சியற்றி வெளியிடுமாறு துணைநல்கிய இந்த ஒரு ரஹ்மத்தே மிகப்பெரும் பேரருள் என்றுகொண்டு, நன்றியறிதலுடன் அவனுக்கே அடிமுடி சாய்க்கின்றோம்.

ஆற்றலையும் திறமையையும், அறிவையும் வல்லமையையும் எமக்களித்து இறைவன் செல்வத்தையும் எமக்கு ஒருங்கே அளித்திருப்பா னானால், இந்தக் குர்ஆன் மஜீதின் 30 ஜூஜுக்களையும் ஒரே மொத்தமாக அச்சிட்டு உருவாக்கி யிருப்போம். ஆனால், அவனது நாட்டம் இந்த அளவுக்கே இருப்ப தால், இவ்வாறு ஏழு வால்யூம்களாக முழுதையும் தொடர்ந்து விடாமல் அச்சிட முற்பட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய அருமறை மீதும் பக்தி மிக்க நம் நாட்டவர் விடாமல் தொடர்ந்து அனைத்து வால்யூம்களையும் அடுத்தடுத்துப் பூரணமாக வாங்கிப் பயின்று பயன் அடைவர் என்னும் தளரா நம்பிக்கை எமக்கு உண்டு.

எந்தையும் யானும் எத்துணைச் சிரமப்பட்டு இந்த ஆக்க வேலையைச் செய்து முடித்தோம் என்பதை இந்த நூலே நன்கெடுத்துக் காட்டும். ஆரம்ப முயற்சியில் எதிர்பாராத சிக்கல்களும், தேவைகளும் மிகுந்து போயினமையால், இஃது அச்சாகி வெளிவர அதிக நாட்க ளாகிவிட்டன.

மேனாடுகளில் ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்திருக்கும் குர்ஆன் மஜீத் பொருளுரைகளும் விரிவுரைகளும் எப்படிப்பட்ட தோற்றத்துடனும் வனப்புடனும் அரப் மூலத்துடன் காட்சியளிக்கின்றனவோ, அப்படிப்பட்ட கவர்ச்சி மிக்கதாகவே இந்தத் தமிழாக்கத்தையும் உருவேற்ற வேண்டும் என்னும் அவா எனக்குப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த ஆவலை இந்தப் பதிப்பு ஓரளவு பூர்த்தி செய்தது. எனினும், மேனாடுகளிலுள்ள அச்சியந்திர சாதனங்கள், நேர்த்தியான காகிதங்கள் முதலியன இந்நாட்டில் கிடையாவாகையால், இதிலுள்ள அளவுக்கே தயாரிக்க முடிந்தது. அனுபவம் ஏற்பட ஏற்பட இன்னம் கவர்ச்சி மிக்கதாகச் செய்யும் வாய்ப்பும் எமக்குக் கிட்டலாம் என்ற நம்பிக்கையுண்டு.

தமிழக அன்பர்களே! இந்த ஆக்க வேலைக்கு நீங்கள் மேலும் ஊக்கத்தை நல்கி, எமது ஆவலைப் பூர்த்தி செய்து வையுங்கள். குர்ஆனை நிரம்பப் படியுங்கள்; பிறரையும் படிக்கத் தூண்டுங்கள். தவறான முறையில் நமது திருமறையையும் நமது மார்க்கத்தையும் புரிந்திருப்பவர்களின் கருத்தை நேர்மைப்படுத்த, சதா பாடுபடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் நிச்சயம் பெருவெற்றி பெறுவீர்கள்.

N. B. அப்துல் ஜப்பார், B.A.
சென்னை-5
25-8-1964.

Related Articles

Leave a Comment