திகாலை தொழுகை முடிந்ததும் தம் சிற்றப்பா மைந்தர் சொன்னதைக் கேட்டு வியந்துவிட்டார் ஃபாகிதாஹ். நம்பமுடியாத செய்தி அது. ஆனால் சொன்னவர் நம்பிக்கைக்கு உரியவர். பொய், புரட்டுக்கு வாய்ப்பே இல்லை. நம்பி ஏற்றுக்கொண்டு, ‘தாங்கள் இதைப் பிறரிடம் சொல்ல வேண்டாமே! அவர்கள் தங்களை நம்ப மாட்டார்கள்’ என்று வேண்டுகோள் மட்டும் வைத்தார்.

‘அவர்கள் நம்பாவிட்டாலும் சரி, நான் சொல்லத்தான் போகிறேன்’ என்றார். அவருடைய திட உறுதியை நன்கு அறிந்திருந்த ஃபாகிதாஹ் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றம் மட்டும் அவருக்கு இருந்தது.

இட்ட பெயர் ஃபாகிதாஹ் என்றாலும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது என்னவோ அவருடைய குன்யாப் பெயரான (சிறப்புப் பெயர்) உம்முஹானி (ரலி). அவருடைய வீட்டில்தான் முந்தையநாள் இரவு தொழுதுவிட்டு உறங்கியிருந்தார்கள் முஹம்மது நபி (ஸல்). விடிவதற்குள் நிகழ்ந்து முடிந்திருந்தது சிந்தனைக்கு வயப்படாத பேரற்புதம் ஒன்று. அதைத்தான் நபியவர்கள் உம்முஹானியிடம் தெரிவித்தார்கள்.

‘அதைத் தயக்கமின்றி தான் நம்ப முடியும். ஊர் நம்புமா? அதுவும் மக்காவில் இருக்கும் சூழலுக்கு, முஹம்மது நபியை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கச்சைக் கட்டி நிற்கும் மூர்க்க குறைஷிக் கும்பலுக்கு, இச்செய்தி மேலும் ஒரு சாக்காக மாறி பரிகாச கேலி ஆட்டத்திற்கு வழி ஏற்படுத்தி விடாதோ?’ என்ற கவலையில் மூழ்கினார் உம்முஹானி.

கஅபாவுக்கு வந்த நபியவர்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள். அங்கு வந்தான் அபூஜஹ்லு. இஸ்லாத்துடனும் முஸ்லிம்களுடனும் எத்தகு சமரசத்திற்கும் உட்பட விரும்பாத எதிரி. நபியவர்களைப் பார்த்தவன், ‘இன்று ஏதும் புதுச் செய்தி உண்டா?’ என்று கேட்டான்.

‘ஆம்! நான் நேற்று இரவு ஜெருசலம் சென்று திரும்பினேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அதிர்ந்தவன், தன் காதில் கோளாறு போலும் என்று நினைத்து உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டான், ‘என்னது, ஜெருசலமா?’

தெளிவாக ‘ஆம்’ என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

மக்காவிலிருந்து ஜெருசலம் ஏறத்தாழ 1500 கி.மீ. தொலைவு. அவர்களுக்கு அக்காலத்தில் அது மாதக் கணக்கான பயணம். அந்நகருக்கு ஓர் இரவில் சென்று வந்தேன் என்று தெரிவித்தால்? அனைவரையும் ஒன்றிணைத்து நபியவர்களையும் இஸ்லாத்தையும் இத்துடன் முடித்துக்கட்ட இதுவே சரியான தருணம் என்று திட்டமிட்ட அபூஜஹ்லு, ‘பிறரையும் அழைக்கிறேன். என்னிடம் தெரிவித்ததை அப்படியே அவர்களிடமும் தெரிவிப்பீரா?’ என்று கேட்டான்.

‘ஆம்’ என்று நபியவர்கள் பதில் அளித்தார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட செய்தி அறிந்ததுமே அதை ஏற்றுக்கொண்டவர் அவருடைய அன்பு மனைவி கதீஜா (ரலி). ஏகத்துவப் பரப்புரையின் விளைவாகத் தம் கணவர் சந்திக்க நேர்ந்த அத்தனை இன்னல்களுக்கும் சோதனைகளுக்கும் இதமாக, ஆறுதலாக, மருந்தாக, அரவணைத்து உதவிவந்த அவர் மரணமடைந்தது நபியவர்களுக்கு ஆற்ற இயலாத சோகத்தை ஏற்படுத்திய முதல் அடி. இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபியவர்களுக்குப் பாதுகாவலாக, குறைஷிகளின் மூர்க்கத்தனத்திற்குத் தடைக்கல்லாக இருந்த அவருடைய பெரியப்பா அபூதாலிப் அதையடுத்து மறைந்தது அடுத்த இடி. ஏக இறைச் செய்தியை இந்நகர குரைஷிகள்தான் ஏற்கவில்லை, தாயிஃப் நகர மக்களுக்காவது சொல்லிப் புரிய வைக்கலாம் என்று சென்றால், அங்கு நபியவர்கள் எதிர்கொண்டது குருதி பெருக வைத்த கல்லடி.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் அது துயர்மிகு ஆண்டாக மாறிப்போனது. தாங்க இயலாத சோகத்தில் அவர்கள் மூழ்கியிருந்த நேரத்தில்தான் அல்லாஹ் அந்த அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்தினான். குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் விரிவாகப் பதிவாகியுள்ள இஸ்ரா வ அல்மிஃராஜ் எனும் அந்நிகழ்வின் சுருக்கத்தை மட்டும் கவனித்துவிடுவோம்.

உறங்கிக்கொண்டிருந்த நபியவர்களை எழுப்பினார் வானவர் ஜிப்ரீல் (அலை). இரண்டு இறக்கைகள் கொண்ட புராக் எனப்படும் மிருகம் ஒன்று அவருடன் தயாராக இருந்தது. அவர்களை ஏற்றிக்கொண்டது புராக். மின்னல் வேகத்தில் ஜெருசலம் நகரை அடைந்தது. அங்கு அனைத்து நபிகளும் திரண்டிருக்க, முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இமாமாக முன்நிற்க, பூமியில் நிகழ்வுற்றது பேரற்புதத் தொழகை. அங்கிருந்து வானவர் ஜிப்ரீலுடன் ஏழாம் வானம் வரை பயணித்த நபியவர்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அங்கு உரையாடியதும், கடமையான ஐவேளைத் தொழுகையை இறைக் கட்டளையாகப் பெற்றதும், வழியில் சொர்க்கத்தின் நற்பேறுகளையும் நரகவாசிகளின் தண்டனைகளையும் கண்டறிந்ததும் பின்னர் ஹதீஸ்களில் விரிவாகப் பதிவாகியுள்ள அதிமுக்கியத் தகவல்கள்.

விண்ணிலிருந்து ஜெருசலத்திற்கு இறங்கி, அங்கிருந்து மீண்டும் மின்னல் வேகத்தில் மக்க நகரை அடைந்த நபியவர்கள், அதிகாலைத் தொழுகைக்குப் பின் தாம் உம்முஹானியிடம் தெரிவித்ததை அச்சு பிசகாமல் மற்ற குறைஷியரிடமும் தெரிவித்தார்கள்.

இன்று மனிதர்களுக்குச் சாத்தியமாகியிருக்கும் அதிவேக விமானப் பயணமோ, உள்ளங்கை சாதனத்தில் உலகின் எம்மூலையில் உள்ளவருடனும் முகம் கண்டு பேசும் தொலைத் தொடர்பு வசதியோ, கிரகங்கள் தாண்டிப் பயணிக்கும் கலங்களோ அம்மக்கள் கனவிலும் கற்பனை செய்யமுடியாத காலம் அது. நபியவர்கள் விவரித்ததைக் கேட்டு முடித்த குறைஷியர்கள் தலையில் அடித்துக்கொண்டு கேலி செய்தார்கள். இகழ்ச்சியும் எள்ளலும் பரவின. இஸ்லாத்தை ஏற்காத குறைஷிகள் இப்படி என்றால் முஸ்லிமாகியிருந்த சிலர் இதை நம்ப முடியாமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதும் நிகழ்ந்தது.

ஜெருசலம் நகருக்கு அதற்குமுன் என்றுமே சென்றிராத நபியவர்களிடம், ‘அந்நகரை விவரி பார்ப்போம்’ என்று மடக்கியவர்களுக்கு நபியவர்கள் புள்ளி பிசகாமல் அந்நகரின் புவி அமைப்பை விவரித்தும், வழியில் தாம் கண்ட குறைஷி வணிகக் கூட்டத்தின் செயல்களைத் தம் பயணத்தின் சான்றாகச் சொல்லியும்கூட அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவே இல்லை.

அல்வலீத் பின் முகைரா ஒற்றை வாக்கியத்தில் அதை நிராகரித்தான். ‘இவர் ஒரு மந்திரவாதி’. மற்றொருவர் இருந்தார். நபியவர்களின் அணுக்கத் தோழர். அவரோ ஒற்றை வாக்கியத்தில் தம் ஈமானை அசைக்க இயலாத உறுதியுடன் நிறுவினார்.

குறைஷிகள் அவரிடம் ஓடிச் சென்று, ‘உன் நண்பர் கூறியதைக் கேட்டாயா? ஓரிரவில் ஜெருசலம் சென்றாராம்; விண்ணுக்குப் போனாராம்; அல்லாஹ்விடம் பேசினாராம்; திரும்பி வந்தாராம்’ என்றவர்களிடம், ‘முஹம்மது நபியா இதைச் சொன்னார்கள்?’ என்று கேட்டார். வந்தவர்கள் ‘ஆம்’ என்றதும், ‘இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இதைச் சொன்னார்கள் என்றால் அதுதான் உண்மை; ஏற்கிறேன்’ என்று எளிதாக முடித்துவிட்டார். அவர் அபூபக்ரு (ரலி).

வியப்படைந்தவர்களிடம், ‘இதில் வியக்க என்ன இருக்கிறது? இதைவிட அற்புதமான தகவலாக, அல்லாஹ்வின் வசனங்கள் விண்ணிலிருந்து வருகின்றன என்று காலையும் மாலையும் சொல்கிறார். அதையே ஏற்கும்போது இதை ஏற்க எனக்கு என்ன தயக்கம்?’ என்றார். சித்தீக் என்ற பட்டப்பெயர் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு நிரந்தரப் பின்னிணைப்பாக ஒட்டிக்கொண்ட தருணம் அது.

முஹம்மது நபி (ஸல்) சிறுவராக இருந்த காலத்திலிருந்தே அவரை நன்கு அறிந்திருந்தவர்கள் குறைஷியர்கள். நபித்துவம் அருளப்படுவதற்கு முன்பே அவர்களுடைய ஒழுக்கமும் நேர்மையும் வாய்மையும் அம்மக்கள் மத்தியில் மிகப் பிரசித்தம். அல் அமீன் என்று போற்றப்பட்டவர் அவர். தம் வாழ்நாளில் பொய் என்பதை விளையாட்டிற்குக்கூட பேசத் துணியாதவர். அப்படிப்பட்டவர் தமக்கு நபித்துவம் அருளப்பட்டு ஏகத்துவப் பரப்புரையை ஆரம்பித்ததும், அதை நம்பி ஏற்க முடியாத குரைஷியர்கள், அவர் பொய்யர், கவிஞர், மந்திரவாதி என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தனர். அவரது பரப்புரையைத் தடுக்க விலை பேசினர்.

‘பொன் வேண்டுமா சொல்; செல்வம் தேவையா கேள். ஏராளம் தருகிறோம். பெண் வேண்டுமா எங்களது கன்னிப் பெண்களை உமக்கு மணம் முடித்துத் தருகிறோம்; உம்மை மன்னராக ஏற்கிறோம்; ஆட்சியைத் தருகிறோம்; ஆனால் நீர் உமது இப்பரப்புரையை நிறுத்த வேண்டும்’

உலக ஆதாய விஷயங்கள்தாம் குறிக்கோள் எனில் ஒருவருக்கு இதைவிட என்ன வேண்டும்? அதுவா நபி (ஸல்) அவர்களின் குறிக்கோள், இலக்கு? ஏகன் ஒருவனே வழிபாட்டுக்குரிய இறைவன் என்பதுதானே அவரது செய்தி. மனித குல ஈடேற்றம் தானே அவர் மாய்ந்து மாய்ந்து பட்ட கவலை.

முஹம்மது நபி (ஸல்) தங்களது பேரத்துக்கு ஒத்து வரவில்லை என்றதும் அறைகூவலாக மாறியது அவர்களது எதிர்ப்பு. ‘நீராதாரம் அற்ற நகரம் இது. உன் கடவுளிடம் பேசி சுற்றியுள்ள மலைகளைத் தகர்த்தெறி. அண்டை நாடுகளைப்போல் சமவெளியாக்கி ஆறுகளைப் புரண்டோடச் செய். மாண்டுபோன நமது முன்னோர்கள் சிலருக்கு உயிர் கொடுக்கச் சொல்’ என்று நீண்டது அவர்களது சவால்.

மற்றொருவனோ, ‘ஏணியைக் கொண்டுவந்து விண்ணுக்கு மேலேறிச் செல். அங்கிருந்து நான்கு வானவர்களை அழைத்து வந்து நீ சொல்வது உண்மை என்று சொல்லச் சொல். அப்பொழுதும் நான் உன்னை நம்ப மாட்டேன்’ என்று தானே ஒரு கோரிக்கையை வைத்து, அதை நிறைவேற்றினாலும் நம்ப மாட்டேன் என்று வினோதமாகப் பேசினான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தமக்கு அருளியதைத் தவிர ஏதொன்றும் கூடுதலாகவோ, குறைவாகவோ சொல்லத் துணியாத நபி (ஸல்) குறைஷியரிடம் இணக்கம் ஏற்படுத்திக்கொள்ள பொய் உரைக்கவும் இல்லை; தம்மால் மந்திர ஜாலம் நிகழ்த்த முடியும் என்று வஞ்சிக்கவும் இல்லை. நிகழாத ஒன்றை அவர்களிடம் இணக்கம் ஏற்படுத்திக்கொள்வதற்காகச் செய்யத் துணியாத அந்த உத்தமர், தமக்கு அற்புதம் நிகழ்ந்தபோது அவர்களது எதிர்ப்பை எண்ணி அஞ்சவில்லை; தயங்கவில்லை; சமரசம் செய்துகொள்ளவும் இல்லை. சொன்னார்கள். ‘விண்ணுக்கு ஏணியில் ஏறிச் சென்றுவா’ என்று அவர்களது அறைகூவலுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்த தம் விண் பயணத்தை அப்படியே தெரிவித்தார்கள்.

அல்லாஹ்வின் வசனம் ஒன்று நாம் இங்கு நினைவுகூரத்தக்கது. ‘தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.’ (குர்ஆன் 5:67)

தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிகழ்விற்குத் துணை ஆதாரமாக இதர தகவல்கள் இருந்தும், குறைஷிகள் அதை விசாரித்து உறுதி செய்துகொண்ட போதும், குருட்டாம்போக்கு எதிர்ப்பு அவர்களது கண்களை இருட்டாக்கி விட்டது. அஞ்ஞானத்தின் நிரந்தர உறுப்பினர்களாக அவர்களை நிலைநிறுத்தி விட்டது.

ஏகத்துவப் பரப்புரையில் நபியவர்களின் இந்த குணாதிசயத்தில் பொதுச் சமூகத்துடனும் அரசியல் நோக்கத்துடனும் களமாடுபவர்களுக்கு ஒரு பாடம் உள்ளது என்றால், அந்த அற்புத நிகழ்வு அறிவிக்கப்பட்டபோது பலவீன முஸ்லிம்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் ஆற்றிய பின்வினைச் செயலில் அமைந்துள்ளது முஸ்லிம்கள் அனைவருக்குமான அழுத்தந்திருத்தமான மற்றொரு முக்கியப் பாடம்.

-நூருத்தீன்

சமரசம் 1-15 அக்டோபர் 2022, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment