ணி ஓய்வு பெற்ற 72 வயது ஆசிரியர் டாம் ப்ரிவெட்டைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது மியாமி நகரின் போலீஸ். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியராக இருந்தபோது, 14 வயது மாணவியைத் தம் வயப்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகள் பற்பல முறை உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். வேறு சில மாணவிகளும் அவருக்கு இரையாகி இருந்த போதும் இப்பெண் மட்டும் ஓராண்டுக்கு முன் துணிந்து புகார் அளித்து விட்டார். ஓய்வில் இருந்தவரை கைவிலங்குப் பூட்டி இழுத்து வந்துவிட்டார்கள்.

குற்றத்தை ஒப்புக்கொண்டார் டாம். இரண்டாண்டு சிறைத்தண்டனை; இரண்டு ஆண்டு வீட்டுக்காவல். அடுத்த இருபது ஆண்டுகளுக்குக் கணுக்காலில் மானிட்டர் பொருத்தப்பட்டு, சோதனை முறை விடுதலை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி சொச்ச காலத்திற்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற முத்திரையுடன், அதற்கான சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து மடிய வேண்டும் என்பது அத்தீர்ப்பின் சுருக்கம்.

மேற்குலகைப் பொறுத்தவரை ‘ஆபாசம்’ என்ற சொல்லுக்குத் தனி வரையறை உண்டு. காமத்திற்கான அடிப்படை உரிமைகளெல்லாம் அரசியல் சாசனம் நிர்ணயிப்பவை என்று ஏகபோகச் சுதந்திரம் அனுபவிப்பவர்கள் அவர்கள். திருமணம், காமம், பாலுறவு, ஆடை, நிர்வாணம், தனி மனித ஒழுக்கம் ஆகியனவற்றின் சொற்பொருள்கள் எல்லாம் அவர்களுக்கான தனி அகராதி. என்ற போதும், எந்த விளையாட்டுக்கும் விதிமுறைகள் இருப்பதுபோல், அமெரிக்காவும் காமக்களியாட்டங்களுக்குச் சட்டங்களை இயற்றி வைத்திருக்கிறது. அதைச் செயல்படுத்தியும் வருகிறது. அச்சட்டங்களும் தண்டனைகளும் அதிலுள்ள முரண்களும் வியப்புக்கும் விவாதத்திற்கும் உரியன. இங்கு பேசுபொருள் அதுவன்று.

முதலில் அந்நாட்டு ஆசிரியர்கள் தம் மாணவர்களிடம் நிகழ்த்தும் பாலியல் குற்றங்களையும் நடைமுறையில் உள்ள அவர்களது சட்டங்கள் அவற்றுக்கு எழுதியுள்ள தீர்ப்புகளையும் மட்டும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

சியாட்டிலுக்கு அண்மையில் உள்ள ரெட்மாண்ட் நகரில் தனியார் பள்ளியின் 29 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 13 வயதுடைய பெண்ணுடன் இணையவெளியில் அறிமுகமாகி, குறுஞ்செய்தி செயலியில் ஆபாச அரட்டையில் ஈடுபட்டு, நிர்வாணப் படங்கள் பகிர்ந்து, தம்முடன் உடலுறவுக்கும் தூண்டியிருக்கிறார் அந்த ஆசான். வேடிக்கை என்னவென்றால், சிறுமி என்று நினைத்து அவர் உரையாடியது, சிறுவர்களிடம் பாலியல் தொடர்பு கொள்ளும் pedophile குற்றவாளிகளைப் பிடிக்கும் இரகசிய அதிகாரி. அவர்களின் பொறியில் சிக்கிய அந்த ஆசிரியருக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது. சல்லிசான தீர்ப்புக்கு வாய்ப்பில்லை என்கின்றன பத்திரிகைகள்.

மியாமி நகரில் மற்றொரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியை ஹெய்ரி கால்வி. 41 வயதான அவருக்கு எதிராக ஸ்டேட் அட்டர்னி அலுவலகம் சென்ற மாதம் ஒரு குற்றத்தைப் பதிவு செய்தது. தம் மாணவருடன் காதல் உறவிலும் பாலியல் நடத்தையிலும் அவர் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டு. மாணவனின் வயது 15. முதலில் பாலியல் உறவு ஏதும் இல்லை என்று மறுத்த மாணவன், இருவரும் பரிமாறிக்கொண்ட காதல் குறுஞ்செய்திகள், நிர்வாணப் படங்கள் போன்றவை விசாரணையில் மாட்டிக்கொண்டதும், விஷயத்தை ஒப்புக்கொண்டான். ஆனால், ‘ஆசிரியை என்னை வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை; என் சம்மதத்துடன்தான் உறவு கொண்டார்’ என்று தெரிவித்தான். எனில் ஆசிரியை ஹெய்ரி கால்விக்கு விடுதலையா என்று புருவம் உயர்கிறதல்லவா? அப்படியெல்லாம் இல்லை.

ஆசிரியராகப்பட்டவர் பரஸ்பர ஒப்புதலுடன்கூடத் தம் மாணவ/மாணவியருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்கிறது அவர்களது சட்டம். அதனால், ஆசிரியைக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைவாசமாவது ஊர்ஜிதம் என்கிறது வழக்கின் போக்கு. பள்ளி நிர்வாகம் உடனே அவரைப் பணிநீக்கம் செய்துவிட்டது.

பள்ளிக்கூடத்தின் கழிவறைகளில் கேமராவை ஒளித்து வைத்து படமெடுத்து, ஆபாச விடியோக்கள் தயாரித்த ஆசிரியருக்கு 17 ஆண்டுகள் சிறை; 9லிருந்து 13 வயது வரை உள்ள மாணவர்களைப் பாலுறவில் ஈடுபடுத்தி, ஆபாச விடியோக்கள் தயாரித்த மற்றொரு ஆசிரியருக்கு 100 ஆண்டுகள் (ஆமாம் நூறு ஆண்டுகள்) சிறைத் தண்டனை; பதின்மப் பருவ மாணவர்களிடம் உறவு கொண்டு கர்ப்பமுற்ற ஆசிரியைகள் என்று ஆசிரியர்களின் பாலியல் குற்றப்பட்டியல் அமெரிக்காவில் வெகு நீளம்.

இவை அன்றி, மாதத்திற்கு ஒன்று, இரண்டு இத்தகு குற்றங்களின் புதுச் செய்திகள் வரத்தான் செய்கின்றன. அதுவும் அவை விஷயம் கசிந்து வெளியில் வருபவை மட்டுமே. இவை அனைத்தின் மூல காரணங்கள், முரண்கள் ஆகியனவற்றின் வாத-விவாதத்தை விட்டுவிடுவோம். கவனிக்க வேண்டியது என்னெவென்றால் சிக்கும் குற்றவாளி ஆணோ, பெண்ணோ, பாதிக்கப்பட்டவர் மாணவரோ, மாணவியோ, மிகப் பெரும்பாலும் பேதமின்றி, பாரபட்சமின்றி அவர்களது சட்டத்திற்கு உரிய நியாயத்தோடு நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள். இயன்ற அளவிற்கு அவர்களது சட்ட நூலில் உள்ள நீதியை அளித்துவிடுகிறார்கள்.

ஆனால் நாட்டையே மாதாவாக உருவகப்படுத்தும் இந்தியாவில் என்ன நிலைமை? ஐஐடி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான சுதர்சனம் பத்மநாபன், கோவை மாணவியைப் பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாகிய மிதுன் சக்கரவர்த்தி, பூசணியைச் சோற்றில் மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீரா ஜாஸ்மின், பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆகியோர் வரிசையாக நினைவுக்கு வருகின்றனர். இவையெல்லாம் அண்மைய நிகழ்வுகள். அதுவும் தமிழ்நாட்டு நிகழ்வுகள் மட்டுமே.

இந்தியா முழுவதும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் எண்ணி மாளாதவை; எழுதி முடிக்க இயலாதவை. வெறுமே அக்கிரமம், அநீதி என்ற வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதவை. சாதி, வர்ண வேற்றுமைத் திமிரில், அதிகாரம் அளிக்கும் மமதையில், அரசியல் ஆதரவு அயோக்கியத்தனத்தில் கசக்கி வீசப்படும் பெண்களின் நிலை, மலர்கள் பிணத்திற்கு வீசப்பட்டு பின்னர் காலில் மிதிபட்டு நசுங்கம் அவலத்தைப் போன்றது. இந்த அரக்கத்தனத்தின் நீட்சியாக, ‘குரு’ எனப் போற்றப்படும் ஆசிரியர்கள் மாணவிகளிடம் நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமைகளை, பெருகி வரும் அவற்றை வெறுமே தலைப்புச் செய்திகளாக, ஓரிருநாள் பரபரப்பாக எப்படிப் புறந்தள்ள முடியும்?

இந்தியாவில் பெண்களுக்குத் தெய்வச் சிறப்பு உண்டு; காதலுக்கும், தாம்பத்தியத்திற்கும் புனித அந்தஸ்து உண்டு; மலிந்து விட்டாலும் ஆபாசம் பாவம் என்ற எண்ணம் முஸ்லிம் அல்லாத மக்களுக்குமே கூட உண்டு. இங்கு காவல் துறை உண்டு; நீதிமன்றங்கள் உண்டு; இந்திய சட்ட நூல்களில் ஏற்கெனவே கடுமையான சட்டங்களும் உண்டு. இங்ஙனம் ஆயிரமிருந்தும் வரைமுறைகள் இருந்தும்… நீதி?

அது கானல் என்பது ஒருபுறமிருக்க, சிறுமியின் மான உறுப்பைத் தொட்ட கைகள் தோலுடன் தோல் உரசவில்லை; இடையில் துணி இருந்தது போன்ற விசித்திரத் தீர்ப்பு வழங்கும் நீதிபதி அதுவும் பெண் நீதிபதி நீதிமன்றங்களை அலங்கரித்தால் பாதிக்கப்படும் எந்தச் சிறுமி எந்த நம்பிக்கையில் வாய் திறப்பாள்?

விளைவு? ஆசான்கள் ஓநாய்கள் ஆகும்போது விட்டத்துச் சுருக்குக் கயிறு மாணவிகளின் கனவையும் கழுத்தையும் ஒருசேர நெறித்துவிடுகிறது. தரை தொடாத அக்கால்களுடன் சேர்ந்து தொங்குகிறது நீதி!

-நூருத்தீன்

புதிய விடியல் – டிசம்பர் 1-15 2021, இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment