44. ஸெங்கியின் மறுதொடக்கம்
இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் தளபதி ஆக்கி, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அழுத்தமான அடித்தளம் அமைத்துத்தந்த சுல்தான் மஹ்மூத், தமது 26ஆவது வயதிலேயே உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவரது ஆயுள் ஹி. 525 / கி.பி. 1131ஆம் ஆண்டு முடிவுற்றுவிட்டது. அந்த மரணம் பக்தாதில் ஏற்படுத்திய பின்விளைவுகள் மோஸூல் வரை பரவின. அப்படி என்ன பின்விளைவுகள்? வழக்கமான வாரிசுக் கலகமும் போர்களும்தாம்.
மஹ்மூத் உயிருடன் இருக்கும்போதே சண்டையிட்ட சகோதரர் மஸ்ஊத், அவர் தலை மறைந்ததும் அமைதியாகவா இருப்பார்? உடனே ஆட்டத்தில் இறங்கினார். அப்படியெல்லாம் எளிதில் விட்டுத்தர முடியாது என்று மற்ற சகோதரர்களான சுலைமான் ஷாவும் இரண்டாம் துக்ருலும் ஆயுதங்களுடன் தயாராகிவிட்டனர். அப்பாஸிய கிலாஃபத்தின் ஆளுமையை மீண்டும் நிலைநாட்ட முயன்று, தோல்வியுற்று அமர்ந்திருந்த அப்பாஸிய கலீஃபா அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ் மட்டும் இந்த நல்வாய்ப்பைத் தவற விடுவாரா என்ன? இதுவே சரியான தருணம் என்று சகோதரர்களின் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு துக்ருலுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார் அவர்.
இவற்றையெல்லாம் அறிந்த இமாதுத்தீன் ஸெங்கி, மஸ்ஊதுக்கு ஆதரவாகத் தமது படையைத் திரட்டிக்கொண்டு பக்தாதுக்கு விரைந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன் சுல்தான் மஹ்மூதுக்கு ஆதரவாகக் களம் கண்டு, நிலைமையைச் சரி செய்ததுபோல் இம்முறையும் செய்துவிடலாம் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் முடிவு அவர் எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது. சுல்தான் துக்ருல்+கலீஃபா அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ் கூட்டணிப் படை இமாதுத்தீன் ஸெங்கியைத் தோற்கடித்தது. அவருடைய படையினர் பலருக்கும் பலத்த காயம். விளைவாக, இமாதுத்தீன் ஸெங்கி அங்கிருந்து தப்பித்து மோஸூலுக்குத் திரும்பும்படி ஆனது. அந்த ஓட்டத்தின் ஊடே வரலாற்றின் மற்றொரு திருப்புமுனை அத்தியாயம் டிக்ரித் நகரில் நிகழ்வற்றது. அதுதான் இத்தொடரின் இரண்டாம் அத்தியாயம். சுருக்கமாக அதை மீள்பார்வை பார்த்து விடுவோம்.
பக்தாதிலிருந்து மோஸூல் செல்லும் வழியில் டைக்ரிஸ் ஆற்றை ஒட்டி அமைந்திருந்தது டிக்ரித் நகரம். அதன் ஆளுநராக இருந்தவர் நஜ்முத்தீன் ஐயூப். குர்து இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ஷாதிப்னு மர்வான், தாவீன் எனும் நகரத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். ஸெல்ஜுக் சுல்தானின் ஆளுநர்களுடனும் அதிகாரிகளுடனும் அவருக்கு நல்லுறவு ஏற்பட்டு, அதன் விளைவாக ஷாதிப்னு மர்வான் டிக்ரித்தின் ஆளுநராக ஆகியிருந்தார். அவரது மறைவிற்குப்பின் அவருடைய மூத்த மகன் நஜ்முத்தீன் ஐயூபிடம் அப்பொறுப்பு வந்து சேர்ந்திருந்தது. அவருடைய சகோதரர் அஸாதுத்தீன் ஷிர்குவும் அங்கு வசித்து வந்தார்.
கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார். தக்க சமயத்தில் அவர் செய்த இந்த உதவிக்குப் பகரமாக அடுத்த ஐந்தாண்டுகளில் இமாதுத்தீன் ஸெங்கி அச்சகோதரர்களுக்கு நேசக்கரம் நீட்டும் வாய்ப்புக் கிடைத்தது. டிக்ரித் நகரில் நஜ்முத்தீன் ஐயூபிக்கும் அவருடைய சகோதரருக்கும் கடும் சோதனை ஒன்று ஏற்பட்டு, டிக்ரித் நகரிலிருந்து தங்களின் குடும்பத்துடன் வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டபோது, செய்ந்நன்றி மறவாமல் அவர்களைத் தம்மிடம் மோஸூலுக்கு அழைத்து அரவணைத்துக்கொண்டார் இமாதுத்தீன். அதன் மிச்சக் கதை பிறகு. இப்பொழுது இந்த அரசியலைத் தொடர்வோம்.
oOo
செல்ஜுக் சுல்தான்களின் சகோதர யுத்தங்கள் அவர்களிடையே ஒற்றுமையைக் குலைத்ததும் அப்பாஸிய கலீஃபாவின் ஆளுமை ஓங்கியது. அவரது பெயர் புகழின் உச்சத்தை எட்டியது. இவற்றைக் கவனித்த செல்ஜுக் சகோதரர்கள் ஒருவழியாக மஸ்ஊதைத் தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்தனர். பக்தாத் சென்று கலீஃபாவைப் புகழ்ந்துரைத்து மரியாதை செலுத்தினார் மஸ்ஊத். பதிலுக்கு சகலவித மரியாதைகளுடன் ராஜ உபசாரம் செய்து அவரை சுல்தானாக அங்கீகரித்து கிரீடம் சூட்டினார் கலீஃபா. இவ்விதமாக கி.பி. 1133ஆம் ஆண்டு, பக்தாதில் அரசியல் களேபரம் ஒருவித சமாதான நிலையை அடைந்தது. என்ற போதிலும் கலீஃபாவின் கண்களில் நிழலாட்டம் ஆடியபடியே இருந்தது மோஸூல். அந்நகரை எப்படியும் இமாதுத்தீன் ஸெங்கியிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும்; அவரையும் அடக்கி விடவேண்டும் என்பது அவருக்குத் தீராத அவாவாகத் தொடர, நல்லதொரு நாளில், தம் படையைக் கிளப்பிக்கொண்டு சென்று மோஸூல் நகரை முற்றுகையிட்டார் கலீஃபா.
புதிய சுல்தான் மஸ்ஊத் இதைத் தடுக்காமல் அமைதியாகவே இருந்தார். இமாதுத்தீன் ஸெங்கி தங்களின் உதவிக்கு வந்தவராயிற்றே; கலீஃபாவினால் தாக்கப்பட்டு, காயப்பட்டுத் திரும்பியவர் ஆயிற்றே என்ற கரிசனம் இன்றி அச்சமயம் அவர் வெறுமே வேடிக்கை பார்த்தது ஒரு வியப்பு என்றால் அதற்கும் மேல் ஒருபடி சென்று, சிரியாவையும் இராக்கையும் ஒன்றிணைத்து, கலீஃபா அதைத் தம் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என்று வழங்கிய ஆலோசனை அடுத்த வியப்பு. இவை அனைத்திற்கும் பிறகு, கலீஃபாவின் முற்றுகையை சமாளித்து எதிர்க்க அவர் இமாதுத்தீன் ஸெங்கிக்கு அளித்த பின்வாசல் உதவி பெரும் வியப்பு. அதன் விளைவாக, மோஸூலை மூன்று மாதம் முற்றுகையிட்டும் வெற்றி பெற முடியாமல் கலீஃபா பக்தாத் திரும்பினார்.
இவ்விதம் ஸெங்கியின் கவனமெல்லாம் சிரியாவிலிருந்து விலகி இராக்கில் குவிந்திருந்த அதே காலகட்டத்தில் அங்கு டமாஸ்கஸில் இஸ்மாயீலின் ஆட்சியில் சில முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றின் இறுதியில் மோஸூலில் உள்ள இமாதுத்தீன் ஸெங்கியின் வாசற்கதவு தட்டப்பட்டு, கடிதம் ஒன்று நீட்டப்பட்டது. ‘உடனே கிளம்பி வரவும், டமாஸ்கஸை உங்கள் வசம் ஒப்படைக்கிறேன்’ என்று தகவல் அனுப்பியிருந்தார் இஸ்மாயீல்.
oOo
தாஜ் அல்-முலுக் பூரியை அடுத்து ஹி. 526 / கி.பி. 1132 ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் அபுல் ஃபத்ஹு இஸ்மாயீலின் வயது பத்தொன்பது. அவரது ஆட்சியின் தொடக்கம் சிறப்பாகத்தான் இருந்தது. மக்கள் நலனில் அக்கறை; தம் தந்தை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தியிருந்தவர்களைப் பணியில் நீடிக்கச் செய்து அவர்களுக்கு அளித்த ஆதரவு என்று சரியாகத்தான் நடை போட்டார். அவருடைய சகோதரர் முஹம்மது வாரிசுப் போரில் இறங்கப்போகிறார் என்பதை அறிந்தபோது மட்டும் வெகுண்டெழுந்த இஸ்மாயீல், சகோதரரின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பகுதிகளைக் கைப்பற்றியதும், வேறு வழியின்றி இறங்கி வந்தார் அச்சகோதரர். பாசத்துடன் அவரைக் கட்டிப்பிடித்து சமாதானமாகி இணங்கிப் போனார் இஸ்மாயீல்.
சகோதரருடன் சண்டை முடிந்து டமாஸ்கஸ் திரும்பிய இஸ்மாயீலை வர்த்தகர்கள் புகார் கடிதங்களுடன் வரவேற்றனர். முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் இடையே இருந்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி, பிரச்சினைக்கு வித்திட்டிருந்தனர் பரங்கியர்கள். பைரூத்தில் இருந்த பரங்கி ஆட்சியாளர் முஸ்லிம் வர்த்தகர்களை வழிமறித்துப் பெரும் மதிப்புமிக்க அவர்களது வர்த்தகத் துணிகளைப் பறிமுதல் செய்துவிட்டார். பொருள்களை இழந்த அவ்வர்த்தகர்கள் இஸ்மாயீலிடம் வந்து அழுது அரற்றி முறையிட்டனர்.
பரங்கியர்களுக்குக் கடிதம் எழுதினார் இஸ்மாயீல். பதில் இல்லை. மேலும் பல மடல்கள் எழுதியும் அவற்றை உதாசீனப்படுத்தியது பரங்கியர் தரப்பு. பார்த்தார் இஸ்மாயீல். இதெல்லாம் சரிவராது என்று தெரிந்தது. அதனால் தம் படையைத் திரட்டிச் சென்று பனியாஸ் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அஸாஸியர்கள் பரங்கியர்களிடம் ஒப்படைத்த அந்தக் கோட்டை பலமான பாதுகாப்பு அரணுடன் நின்றிருந்தது. அதனுள் பெரும் எண்ணிக்கையில் குதிரை வீரர்களும் காலாட் படையினரும் இருந்தனர். அவர்களும் மூர்க்கமாக எதிர்த்து நின்றனர். ஆயினும் அரண் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது. நகரினுள் நுழைந்தார் இஸ்மாயீல். பரங்கியர்கள் பலர் வகைதொகை இன்றிக் கொல்லப்பட்டனர். ஆயுள் பாக்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கொய்யப்பட்ட தலைகளுடனும் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளுடனும் கைப்பற்றப்பட்ட போர்ச் செல்வத்துடனும் டமாஸ்கஸ் திரும்பினார் இஸ்மாயீல். இத்தோல்வி, பரங்கியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது; அச்சத்தில் ஆழ்த்தியது!
ஆனால் இவ்வெற்றி அளித்த பூரிப்பால் தலைகனத்து, அடுத்தடுத்த அவரது நகர்வுகள் பெரும் அவலமாக ஆகிவிட்டன. அமைச்சர்கள், அதிகாரிகள், அறிவிலும் அனுபவத்திலும் பழுத்த மூத்தவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் புறந்தள்ள ஆரம்பித்தார் இஸ்மாயீல். மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராகவும் அவரது செயல்கள் அமைந்தன. விளைவாக, டமாஸ்கஸில் மெதுமெதுவே உருவானது அதிருப்தி. அது வளர்ந்து விருட்சமாகி அவரது கழுத்தைத் துண்டிக்கும் வாளாகப் பாய்ந்தது.
இஸ்மாயீலின் பாட்டனார் துக்தெஜினிடம் மிகவும் விசுவாசம் நிரம்பிய துருக்கிய மம்லூக் அடிமை ஒருவர் இருந்தார். அவரது பெயர் இல்பா. இஸ்மாயீல் தனியாக இருந்த நேரத்தில் அவரை நெருங்கினார் இல்பா. அவரது தலையைக் குறிவைத்துத் தமது வாளை வீசினார். ஆனால் குறி தவறிய அது பிடியும் நழுவித் தரையில் விழுந்தது. உடனே தரையில் பாய்ந்து உருண்டு அதை எடுத்த இல்பா, மீண்டும் பலமுடன் வாளை வீச அது இம்முறை இஸ்மாயீலின் குதிரைமீது பாய்ந்து அதைக் கொன்றது. இரு வீச்சிலிருந்தும் தலை தப்பிய இஸ்மாயீல் இல்பாவை மடக்கிப் பிடிக்க, விடுவித்துக்கொண்டு தப்பித்து ஓடினார் இல்பா. தேடிப்பிடித்து அவரைக் கைது செய்து கொண்டுவந்தார்கள் காவலர்கள்.
“ஏன் இந்தக் கொலை முயற்சி?” என்று இஸ்மாயீல் விசாரிக்க, இல்பா பூசி மெழுகவில்லை. உண்மையைச் சொன்னார். “எளியவர்களையும் வறியவர்களையும் உழவர்களையும் தொழிலாளர்களையும் நீ வாட்டி வதைக்கிறாய். அநியாய அளவில் வரி விதித்திருக்கிறாய். மக்களுக்கும் உன் துருப்புகளுக்கும் ஒரு சேர துரோகம் இழைக்கிறாய். ஆகையால், அல்லாஹ்வின் அருள் கடாட்சத்தை வேண்டினேன். மக்களை உன் கொடுமையிலிருந்து காப்பாற்ற நாடினேன்”
தொடர்ந்து நடந்த விசாரணையில் இஸ்மாயீலின் மீது அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் இல்பா தெரிவித்துவிட்டார். அவர் குறிப்பிட்டவர்கள் எல்லாம் நேரடியாக அக்கொலை முயற்சிக்கு உடந்தையாக இல்லாதபோதும், இல்பாவைத் தூண்டாதவர்கள் என்ற போதும், தமக்கு இனி டமாஸ்கஸில் எதிரிகளே இருக்கக்கூடாது என்று முடிவெடுத்த இஸ்மாயீல் பட்டியல் எழுதிக் கையில் வைத்துக்கொண்டு விசாரணையின்றி, ஆதாரமின்றி அவர்கள் ஒவ்வொருவரையும் கொல்ல ஆரம்பித்தார்.
இது பொதுமக்களைத் திகிலுக்கு உள்ளாக்கியது. அச்சத்தில் உறையச் செய்தது. அதையெல்லாம் அவர் சட்டை செய்யவில்லை; கொன்று குவித்த உடல்களும் அவருக்கு அமைதியைத் தந்துவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது நடவடிக்கை மோசமடைந்தது. அரண்ட அவர் கண்களுக்குக் காண்பவரெல்லாம் எதிரிகளாகவே தெரிந்தார்கள். சிலுவைப் படையினருக்கு எதிராகத் திட்டமிடுவதிலும் போர் தொடுப்பதிலும் அவருக்கு இருந்த உத்வேகம் திசை மாறி மறைந்தது. மார்க்க வரம்புகளெல்லாம் காற்றில் பறந்து போய் ஒழுக்கக்கேடு புகுந்தது. புத்தி மங்கி, அநீதி அரியணை ஏறி அமர்ந்தது. ஆளுநர்கள், அதிகாரிகளின் சொத்துகளெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள்மீது அவதூறுக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு, அவர்களுக்குச் சொல்லி மாளாத சித்திரவதை வழங்கப்பட்டது. அதன் உச்சபட்சமாகத் தம் சகோதரன் ஸாவின்ச்சையும் இருட்டறையில் தள்ளிப்பூட்டி, பட்டினி போட்டே கொன்றார் இஸ்மாயீல்
இவ்வளவுக்குப் பிறகும் இஸ்மாயீலுக்கு அச்சம் தீரவில்லை. அரண்மனையின் ஒவ்வொரு மூலையிலும் தமது எதிரிகள் தம்மைக் கொலை செய்யத் தகுந்த வாய்ப்புக்காகக் காத்திருந்து ஒளிந்து கொண்டிருப்பதாகத்தான் நம்பினார். இத்தகு மாயச் சுழலுக்குள் சிக்கித் தவித்தவருக்குக் கடைசியாகத் தென்பட்ட ஒரே வழி, இமாதுத்தீன் ஸெங்கி. ‘அவருக்கு டமாஸ்கஸைக் கைப்பற்றும் எண்ணம் இருப்பது நாடறிந்த விஷயம். எனக்கோ உயிரும் செல்வமும் மிஞ்சினால் போதும். அவரிடம் இந்நகரை ஒப்படைத்துவிட்டு நம் ஆயுளை அனுபவிப்போம்’ என்று முடிவெடுத்தவர், தெற்கே சர்காத் கோட்டைக்குத் தம் செல்வங்களை மெதுமெதுவாக நகர்த்தியபடி ஸெங்கிக்குத் தகவல் அனுப்பினார்.
“விரைந்து வாருங்கள். நானே மனமுவந்து டமாஸ்கஸை உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு எதிரான தளபதிகள், அமீர்கள், மற்றவர்களை மட்டும் என் விருப்பப்படி நான் பழிவாங்கத் தாங்கள் அனுமதித்தால் போதும். தாங்கள் இவ்விஷயத்தைப் புறக்கணித்தாலோ, தாமதித்தாலோ, அலட்சியப்படுத்தினாலோ, பரங்கியர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து விடுவேன். அதன்பின் இந்நகர மக்கள் சிந்தப்போகும் இரத்தக்கறையின் பாவம் உங்கள் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும்”
இஸ்மாயீலின் இத்திட்டம் தெரிந்ததும் அமைச்சர் பிரதானிகள் அதை முழு மூச்சுடன் தடுத்து நிறுத்த முடிவு செய்தனர். இமாதுத்தீன் ஸெங்கி படையுடன் வந்துவிட்டால், டமாஸ்கஸ் தங்கத் தாம்பாளத்தில் அவருக்குக் கைமாறி விட்டால், அதன்பின் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது? அதற்குமுன் ஏதாவது செய்ய முடிந்தால் நலம் என்ற கவலையுடன் பெருந்தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினார்கள். அவர்களுக்கு இறுதியில் புலப்பட்ட ஒரே வழி இஸ்மாயீலின் தாயார் ஸுமர்ருத். அவரைச் சந்தித்து அனைத்தையும் விவரித்தார்கள்.
அனைத்தையும் கேட்டுத் தெளிவாகப் புரிந்து கொண்டார் அவர். தம் மகனை அப்புறப்படுத்தினால் அன்றி மக்களையும் டமாஸ்கஸையும் காப்பாற்றுவது சாத்தியமே இல்லை என்பது அவருக்குத் தெரிந்தது. பாசம் ஒதுக்கி வைக்கப்பட்டு, திட்டம் தீட்டப்பட்டது. ஸுமர்ருத் தம் நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்மாயீல் பாதுகாவலர்கள் இன்றி, அறையில் அவர் தனியாக இருக்கும் நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘கருணைக்கும் இரக்கத்திற்கும் இனி இடமில்லை. கச்சிதமாகக் காரியத்தை முடித்து அவனது சடலத்தை, அரண்மனையில் மக்கள் கண்பார்வையில் படும்படி இழுத்து வந்து போடுங்கள்’ என்று உத்தரவிட்டார். பிசகின்றி நிறைவேறியது திட்டம். வெட்டித் துண்டாடப்பட்டார் இஸ்மாயீல். அரண்மனையின் முக்கிய வாயில் ஒன்றுக்கு அவரது சடலம் இழுத்துச் செல்லப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. அதே வேகத்தில் பூரியின் மற்றொரு மகனான ஷிஹாபுத்தீன் மஹ்மூது என்பவரை டமாஸ்கஸின் அதிபராக்கினார் ஸுமர்ருத். மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மூழ்கியது டமாஸ்கஸ்.
இஸ்மாயீலின் கடிதம் கிடைத்ததும் தம் படையைத் திரட்டிக்கொண்டு மோஸூலிலிருந்து டமாஸ்கஸுக்கு கிளம்பினாரே இமாதுத்தீன் ஸெங்கி, அவர் வந்து சேர்வதற்குள் விறுவிறுவென்று காட்சிகள் மாறி ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டது. இவற்றை எல்லாம் அறியாத அவர், டமாஸ்கஸ் நகருக்கு வெளியே பாடி அமைத்துவிட்டு, ‘தாங்கள் தகவல் அனுப்பியபடி நகரை ஒப்படையுங்கள்’ என்று தம் தூதுவர்களை நகருக்குள்ளே அனுப்பி வைத்தார். தூதுவர்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் வரவேற்று உபசரித்த புதிய அரசு, இமாதுத்தீன் ஸெங்கியுடன் போரில் இறங்கும் உத்தேசமோ வலிமையோ இல்லாததால் தன்மையுடன் பதில் எழுதி அனுப்பியது. “மன்னிக்கவும். நிலைமை மாறிவிட்டது. உங்களை வரவழைத்தவர் படைத்தவனிடம் போய்ச் சேர்ந்துவிட்டார். நீங்கள் திரும்பிச் செல்லலாம். அல்லாத பட்சத்தில் நாங்களும் ஒவ்வொரு குடிமகனும் டமாஸ்கஸைத் தற்காக்க தயாராக இருக்கிறோம்”
இத்திருப்பத்தை இமாதுத்தீன் ஸெங்கி சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்காக அவர் வெறுங்கையோடு திரும்பிச் செல்லவும் விரும்பவில்லை. ‘வந்தது வந்தாயிற்று, இஸ்மாயீல் இல்லாவிட்டால் என்ன? டமாஸ்கஸைத் தாக்கியாவது கைப்பற்றுவோம்’ என்று முற்றுகையிட்டார். நாள்கள் நகர்ந்தனவே தவிர, முற்றுகையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்நிலையில் வியப்புக்குரிய சில விஷயங்கள் நிகழ்ந்தன. டமாஸ்கஸை முற்றுகை இட்டிருந்த ஸெங்கியை, கலீஃபா அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ்வின் தூதுவர்கள் பக்தாதிலிருந்து வந்து சந்தித்தனர். அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அங்கியை அனுப்பி வைத்திருந்தார் கலீஃபா. கூடவே உத்தரவும் வந்திருந்தது.
‘டமாஸ்கஸ் முற்றுகையைக் கைவிடுங்கள். மோஸூல் திரும்புங்கள். அங்கு உங்கள் அரசாங்கத்தின் பரிபாலனத்தைக் கவனியுங்கள். அல்ப் அர்ஸலானை சுல்தானாக ஏற்றுக்கொள்ளுங்கள். இனி வெள்ளிக்கிழமை குத்பாவில் அவரது பெயர் உச்சரிக்கப்படட்டும்’
மரணமடைந்த சுல்தான் மஹ்மூதின் மைந்தர் அல்ப் அர்ஸலான் என்பவர் இமாதுத்தீன் ஸெங்கியுடன் மோஸூலில்தான் இருந்தார். மஹ்மூதின் சகோதரர் மஸ்ஊதை பக்தாதில் சுல்தானாக அங்கீகரித்தாலும் அவருடன் கலீஃபாவுக்கு முழு இணக்கம் இல்லாமலே இருந்தது. அதன் விளைவாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இந்த இரண்டாம் அல்ப் அர்ஸலானை சுல்தான் என்று அறிவித்தார் கலீஃபா. முடிவின்றி நீளும் டமாஸ்கஸ் முற்றுகையை இதைக் காரணமாக வைத்து முடித்துக்கொள்வது தமக்கு நல்லது என்று நினைத்திருப்பார் போலும். கலீஃபாவுடன் சண்டையும் சச்சரவுமாக இருந்த இமாதுத்தீன் ஸெங்கி, அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்படுத்தினார். டமாஸ்கஸும் தம் சார்பாகத் தூதுவர்களை இமாதுத்தீன் ஸெங்கியிடம் அனுப்பி, கைகுலுக்கி, சமாதானம் ஏற்படுத்திக்கொண்டது.
இந்த முற்றுகையின்போது டமாஸ்கஸின் தற்காப்பில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒருவர் இருந்தார். இமாதுத்தீன் ஸெங்கியின் பாதையில் பெரும் முள்ளாக உபத்திரவம் அளிக்கப் போகும் அவரது பெயர் முயீனுத்தீன் உனுர் என்பதை மட்டும் இச்சமயம் அறிந்து வைத்துக் கொள்வோம்.
அடுத்து, சில மாதங்களுக்குள் ஹி. 529 / கி.பி. 1135ஆம் ஆண்டு பக்தாதில் கலீஃபா அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொன்றது சுல்தான் மஸ்ஊத் என்றும் அஸாஸியர்கள் என்றும் இரு கருத்து நிலவுகிறது. எது எப்படியோ, கலீஃபாவின் உபத்திரவம் நீங்கிய திருப்தியில் நிம்மதி மூச்சு விட்டார் சுல்தான் மஸ்ஊத். அவருடைய ஆட்சிக்கு ஸெங்கியின் ஆதரவு தேவைப்பட்டதால், ஸெல்ஜுக் சுல்தானின் வலிமை வாய்ந்த தளபதியாக மீண்டும் உருவானார் ஸெங்கி. சிலுவைப் படையினருக்கு எதிராக அவரது அடுத்த நடவடிக்கைகள் அமைய வாசல் திறந்தது.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 30 October 2021 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License