சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 33

by நூருத்தீன்
33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான் முஹம்மதுவைப் பற்றி இங்கு சற்று நினைவூட்டிக் கொள்வோம்.

இராக்கில் சுல்தான் மாலிக்-ஷாவின் (ஹி. 485 / கி.பி. 1092) மறைவுக்குப்பின் அவருடைய மகன்களான ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது எனும் இருவருக்கும் இடையே பன்னிரெண்டு ஆண்டுக் காலம் போரும் சண்டையுமாகவே கழிந்தது. ஒரு மாமாங்கத்திற்குப்பின் ஒரு வழியாக சகோதரர்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு, அவர்கள் தங்களுக்குள் நிலங்களை பாகம் பிரித்து ஓய்ந்த அடுத்த சிறு காலத்திற்குள் (ஹி. 499 / கி.பி. 1105) சகோதரர் ருக்னுத்தீன் பர்க்யாருக் மரணமடைந்து விட்டார். அத்துடன் தமக்கிருந்த போட்டி முற்றிலும் முடிவுக்கு வந்ததும் முஹம்மது இப்னு மாலிக்‌ஷா அப்பாஸிய கலீஃபாவின் ஒப்புதல் பெற்ற ஏகபோக சுல்தான் ஆனார்.

அதன் பிறகுதான் ஒருவாறாகச் சிலுவைப் படையினர் மீதும் பறிபோன ஜெருஸலத்தின்மீதும் அவரது கவனம் திரும்பியது. அதை மீட்கவும் காலூன்றிவிட்ட இலத்தீன் கிறிஸ்தவர்களை வெல்லவும் முஸ்லிம்களிடையே முக்கியமான ஒருங்கிணைப்பு அவசியப்பட்டது. அலெப்போ, டமாஸ்கஸ், மோஸூல் எனத் தனித்தனியே கோலோச்சிக் கொண்டிருந்த அந்த ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய, சிலுவைப் படையை எதிர்த்துப் பெரும் வெற்றியை ஈட்ட முடியாத சிக்கலை ஏற்படுத்தியிருந்தது அவர்களுக்குள் நிலவிய அரசியல்.

தாஜுத் தவ்லா துதுஷ் கொல்லப்பட்டதும் அவருடைய மகன்கள் சிரியாவைத் துண்டாக்கி, ரித்வான் அலெப்போவையும் அவருடைய சகோதரர் துகக் டமாஸ்கஸையும் கைப்பற்றி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தனர் என்றும் பார்த்தோம். தணியாத வாரிசுச் சண்டை அவர்களை ஒன்றிணைய விடாமலேயே பிரித்து வைத்திருந்தது. டமாஸ்கஸின் ஆட்சித் தலைவர் துகக் என்றாலும் அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் அதாபெக் ஸஹீருத்தீன் துக்தெகின். அவர் அதாபெக் ஆக மட்டும் இன்றி, விதவையாகிப்போன துகக்கின் தாயாரை மறுமணமும் செய்துகொண்டு துகக்கின் மாற்றாந் தகப்பனாகவும் ஆகியிருந்தார். மிகவும் இளவயதினரான துகக் சிலுவைப் படையை எதிர்த்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணக்கம் ஏற்படுத்திக்கொண்டு, அடங்கி, தமது ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார். எகிப்திலுள்ள ஃபாத்திமீக்களால் டமாஸ்கஸுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது எனில் ஃபலஸ்தீனத்தில் பரங்கியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதுதான் நல்லது, தமக்குப் பாதுகாப்பு என்பது அவரது எண்ணம். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஓர் எதிரியிடமிருந்து தப்ப மற்றொரு எதிரியிடம் இணக்கத்திற்கும் கூட்டணிக்கும் தயாராக இருந்த அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், சொந்த சகோதரனே என்றாலும் கூட, சமரசத்திற்கு தயாராக இல்லாமல் சந்தேகமும் சண்டையுமாகவே இருந்திருக்கிறார்கள். அதே அரசியல், இன்றுவரை இங்கும் தொடர்வது பெருஞ் சோகம்!

துகக் தம் 21 ஆம் வயதை நெருங்கியபோது (ஹி. 497 / கி.பி. 1104) அகால மரணமடைந்தார். என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ‘துக்தெகின்தாம் காரணம். அவர்தாம் விஷம் வைத்து, துகக்கைக் கொன்றார்’ என்பது பலமான வதந்தி. மனைவியின் மகன் எப்பொழுது சாவான், அரியணை எப்பொழுது காலியாகும் என்று அவர் காத்துக் கொண்டிருந்தது அப்படியொன்றும் பெரிய இரகசியமாகவும் இல்லை. ஆனால் அந்த முணுமுணுப்பை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், கண்ணைக் கசக்கி வருந்திவிட்டு, துகக்கை நல்லடக்கம் செய்துவிட்டு, அதாபெக் துக்தெகின் டமாஸ்கஸ் நகரின் ஆட்சியாளர் ஆனார்.

அதற்கு அடுத்த ஆண்டே அவர் எகிப்திய ஃபாத்திமீ அரசுடன் இராணுவ உடன்படிக்கை ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டார். ஃபாத்திமீக்களுக்கு அஞ்சித் தங்களுடன் இணக்கமாக இருந்த துகக் மறைந்ததும் அடுத்து வந்த துக்தெகின் அந்த ஃபாத்திமீக்களுடன் கைகுலுக்கி ஸன்னி-ஷிஆ கூட்டணியை உருவாக்கிக் கொண்டது ஃபலஸ்தீனில் இருந்த சிலுவைப் படையை அதிர்ச்சி அடையச் செய்தது! அது அவர்கள் எதிர்பாராத திருப்பம். ஆனால், அந்தக் கூட்டணி சிலுவைப் படைக்குப் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமலயே நீர்த்துப் போனது. காரணம், துக்தெகின் ஃபாத்திமீக்கள் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை. என்னதான் இராணுவ உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூட்டாளியாக ஆன போதும் அந்த ஃபாத்திமீக்களை நம்பி, பலஸ்தீனிலுள்ள சிலுவைப் படையைத் தாக்க அவருக்கு எக்கச்சக்கத் தயக்கம். இருந்த போதும் ஜெருஸல ராஜா பால்ட்வினை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த எகிப்தியர்களுக்கு, தமது ஒப்பந்த அடிப்படையில் 1500 வில் வீரர்களை மட்டும் உதவிப் படையாக அனுப்பி வைத்துத் தமது கடமையை முடித்துக் கொண்டார்.

கி.பி. 1105 ஆம் ஆண்டு ரமல்லாவில் ஜெருஸல ராஜா பால்ட்வினுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையே யுத்தம் நிகழ்ந்தது. ஃபாத்திமீ படையினரிடம் தவறிப்போன ஒருங்கிணைப்பைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களை அந்த யுத்தத்தில் பால்ட்வின் முறியடித்து வென்றார். ஜஃபா துறைமுகத்தில் எகிப்தியக் கப்பல் படை வந்திறங்கியிருந்தது. அவர்களை மிரட்டி விரட்டியடிக்க பால்ட்வின் ஒரு வேலை செய்தார். ரமல்லா போரின் வெற்றிச் சின்னமாக அஸ்கலான் நகர ஆட்சியாளரின் தலையைக் கொய்து, அதை எடுத்துச் சென்று ஜஃபா துறைமுகத்தில் இருந்த எகிப்தியக் கப்பல் படையினர் மத்தியில் தூக்கிப் போட்டதும் அது அவர்களை நிலைகுலையச் செய்தது; பின்வாங்கச் செய்தது. ஃபாத்திமீக்களின் மனோதிடம் அத்துடன் மிகவும் நிலைகுலைந்துபோய் அதன்பின் அவர்கள் சிலுவைப் படையை எதிர்த்துப் பெரிய அளவிலான தாக்குதல் எதிலும் இறங்கவில்லை.

ஃபாத்திமீக்கள் அங்கு அவ்விதம் பலவீனமடைந்த பின் டமாஸ்கஸ்-ஜெருஸலம் உறவிலும் மாற்றம் ஏற்பட்டது. டமாஸ்கஸைப் பாதுகாக்க அண்டைப் பகுதிகளில் இருந்த பரங்கியர்களுடன் துக்தெகின் சிறுசிறு யுத்தத்தில் ஈடுபட்டபோதும் ஜெருஸல ராஜா பால்ட்வினை எதிர்க்காமல் குறுகிய கால ஒப்பந்தங்களை அவருடன் ஏற்படுத்திக் கொண்டார். சிரியாவுக்கும் ஃபலஸ்தீனுக்கும் இடையேயான வர்த்தகத்திற்கு அனுகூலமான பாதையை ஏற்படுத்துவது அதன் முதன்மை நோக்கம்.

அடுத்த கட்டமாக துக்தெகினும் பால்ட்வினும் முக்கியமான ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். டமாஸ்கஸ் நகருக்கும் ஜெருஸலத்திற்கும் இடையே கலீலி கடல் உள்ளது. அதன் கிழக்கிலுள்ள நிலப்பகுதியானது, வளமான விவசாய பூமி. இருவரும் அதை யுத்தமற்ற பகுதியாக அறிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு அதை எழுதியும் வைத்துக்கொண்டனர். அதன் அடிப்படையில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து விவசாயம் செய்வர். அதன் விளைச்சல் மூன்றாகப் பிரிக்கப்படும். ஒன்று அந்த விவசாயிகளுக்கு. மற்ற இரண்டும் டமாஸ்கஸுக்கும் ஜெருஸலத்திற்கும். அன்று அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட அந்த உடன்படிக்கை, நீண்ட நெடுங்காலம் தொடர்ந்தது.

oOo

மோஸூல் நகரம் தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தமது அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கினார் மவ்தூத் பின் அத்-தூந்தகீன். செல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷாவும், ‘சிலுவைப் படையினரை எதிர்த்து உங்களது போரைத் தொடங்குங்கள்’ என்று தகவல் அனுப்பியிருந்தார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் கூட்டணிப் படையை உருவாக்கினார் மவ்தூத். மர்தின் பகுதியின் அமீர் இல்காஸி அல்-அர்துகி, அர்மீனியர்களின் ஷா என்று அழைக்கப்பட்ட சுக்மான் அல்-குத்பி, ஏராளமான தன்னார்வ வீரர்கள் என்று பெரிய அளவில் படையொன்று திரண்டது. ஹி. 503/கி.பி. 1109 ஆம் ஆண்டு அப்படையினருடன் மவ்தூத் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டார்.

இப்படியொரு படை மவ்தூதின் தலைமையில் திரள்கிறது என்ற தகவல் தெரிய வந்ததுமே எடிஸ்ஸாவிலிருந்த இரண்டாம் பால்ட்வின் தம் உறவினரான ஜெருஸல ராஜா பால்ட்வினுக்கு உடனே தகவல் அனுப்பினார். பக்கத்தில் அந்தாக்கியாவிலிருந்த டான்க்ரெட் மீது அவருக்கு அவநம்பிக்கை. முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் பார்த்தோமே அந்த விரிசலின் தொடர்ச்சி. தவிர, ஒருவேளை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு எடிஸ்ஸாவைக் கைப்பற்ற டான்க்ரெட்டேகூடத் திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும் அவருக்கு ஒரு சந்தேகம்.

எடிஸ்ஸாவிலிருந்து தகவல் வந்தபோது, பெய்ரூட் நகரை முற்றுகையிட்டிருந்தார் முதலாம் பால்ட்வின். அதைக் கைவிட இயலாத நிலை. இதை முடித்துவிட்டுப் போவோம் என்று ஒருவழியாக அந்நகரைக் கைப்பற்றிவிட்டு, திரிப்போலியின் ஆட்சியாளராகியிருந்த பெர்ட்ராண்ட்டையும் தம்முடன் இணைத்துக் கொண்டு எடிஸ்ஸாவை வந்தடைந்தார் முதலாம் பால்ட்வின்.

அதற்குள் இரண்டு மாதம் கழிந்திருந்தது. அத்தனை நாளும் முஸ்லிம்களின் முற்றுகையை எடிஸ்ஸா தாக்குப்பிடித்து வந்தது. ஜெருஸல ராஜா பால்ட்வினின் தலைமையில் உதவிப் படை வருகிறது என்ற தகவல் அறிந்ததும் மவ்தூத் தமது முற்றுகையைத் தளர்த்திவிட்டுத் தமது படையினருடன் ஹர்ரான் பகுதிக்கு நகர்ந்தார். அங்கு வந்து அவருடன் இணைந்து கொண்டது துக்தெகின் தலைமையிலான டமாஸ்கஸ் படை.

எடிஸ்ஸா வந்தடைந்த முதலாம் பால்ட்வின், முஸ்லிம் படையினரைப் பின் தொடர்வதற்கு முன் சிலுவைப் படையினருக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது முக்கியம் என்று கருதினார். டான்க்ரெட்டை அழைத்து அவருக்கும் இரண்டாம் பால்ட்வினுக்கும் இடையே சமாதானம் பேசி, அவர்களை ஒருங்கிணைத்தார். அதற்குப் பிறகுதான் ஹர்ரானிலுள்ள முஸ்லிம் படைகளை நோக்கி அணிவகுத்தது சிலுவைப் படை. கிறிஸ்தவர்களை அவர்களுடைய பகுதியிலிருந்து அவ்விதம் வெகு தூரம் இழுத்து வர வேண்டும்; பின் தொடரும் அவர்கள் மீது சட்டென்று திரும்பிப் பாய்ந்து தாக்க வேண்டும் என்பதே மவ்தூதின் திட்டம்.

ஆனால், பின் தொடர்ந்த சிலுவைப் படை திடீரெனச் சிதறியது; பின்வாங்கியது. அதற்குச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. மவ்தூதின் திட்டத்தைக் குறித்து ராஜா பால்ட்வினுக்குத் தகவல் வந்து, அவர் எச்சரிக்கை அடைந்துவிட்டார் என்பது ஒன்று. தாம் கைப்பற்றி விட்டுவந்த பெய்ரூட்டை நோக்கி ஃபாத்திமீக்கள் படையெடுத்து வருகின்றனர் என்றொரு செய்தி அவருக்கு வந்தது என்பது மற்றொன்று. அதே போல், அந்தாக்கியாவில் டான்க்ரெட் இல்லாததைப் பயன்படுத்தி அதைத் தாக்க அலெப்போவின் ரித்வான் தயாராகின்றார் என்றொரு வதந்தியும் சிலுவைப் படை மத்தியில் பரவியது. அதனால் முதலாம் பால்ட்வினும் டான்க்ரெட்டும் தெற்கும் வடக்குமாகத் தங்களது படையினருடன் பிரிந்தனர்.

எஞ்சிய சிலுவைப் படையினரை மட்டும் தாக்கி, கொன்று, வென்றுவிட்டு, மவ்தூத் மோஸூல் திரும்பினார்.

oOo

அலெப்போவை ஆட்சி புரிந்து கொண்டிருந்த ரித்வானை இப்பொழுது எட்டிப் பார்ப்போம். சிலுவைப் படையினர் ஆட்சி அமைத்துவிட்ட அந்தாக்கியா, எடிஸ்ஸா மாநிலங்களால் சூழப்பட்டுவிட்ட அலெப்போவின் ரித்வானுக்குப் பரங்கியர்களைவிடப் பெரிய கவலை மோஸூல். அதன் அரசியல் நிகழ்வுகளைத்தான் அவர் அதிக எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் சிலுவைப் படையினருக்கு எதிரான முயற்சிகளில் இறங்காதது ஒருபுறமிருக்க அலெப்போவில் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளப் பரங்கியர்களுக்கு அடிபணிந்து போகவும் அவர் தயங்கவில்லை. அந்தாக்கியாவிலிருந்து டான்க்ரெட் அண்டைப் பகுதிகளைக் கைப்பற்றித் தமது வலிமையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க, ரித்வானும் ஷைஸார் நிலப்பரப்பின் ஆட்சியாளரும் டான்க்ரெட்டுக்கு அடிபணிந்து, தாங்கள் இருவரும் 30,000 தீனார்கள் கப்பம் கட்டுவதாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

அங்கு அவர்கள் சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து, நிலைமையின் தீவிரத்தை முறையிட்டு, விளக்கி, பரப்புரை செய்ததும் அதன் வீரியம் எந்தளவிற்கு இருந்ததென்றால், பாக்தாதில் இருந்த மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் பெருவாரியாகத் திரண்டெழுந்து விட்டனர். சிலுவைப் படையினருக்கு எதிராக ஜிஹாதை அறிவிக்கும்படி கலீஃபாவை வற்புறுத்தி பாக்தாதில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் ஏற்பட்டுவிட்டது.

சுதாரித்து எழுந்த கலீஃபா அவசர அவசரமாக செல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷாவுக்குத் தகவல் அனுப்பினார். அதையடுத்து சுல்தான் முஹம்மது தம் மகன் மசூதை அழைத்து, “தளபதி மவ்தூதை படை திரட்டி நடவடிக்கை எடுக்கச் சொல்” என்று கட்டளையிட்டு அவரை மோஸூலுக்கு அனுப்பி வைத்தார். உடனே நடவடிக்கையில் இறங்கினார் மவ்தூத்.

சுற்றுப்புற செல்ஜுக் ஆட்சியாளர்கள், அமீர்களை ஒன்றிணைத்துப் பெருமளவில் படை திரட்டினார். முந்தைய கூட்டணியைவிட இந்தக் கூட்டணியில் இணைந்தவர் எண்ணிக்கை அதிகம். படை பலமும் சிறப்பானதாக இருந்தது. இந்தப் படையில் இடம் பெற்ற முக்கியமான படை வீரர் ஒருவர் இரண்டாம் அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமான இமாதுத்தீன் ஸெங்கி.

ஹி. 505/கி.பி. 1011. தமது இரண்டாவது படையெடுப்புக்குத் தலைமை ஏற்று அணிவகுத்தார் மவ்தூத். சிலுவைப் படையினரிடமிருந்து சில பகுதிகளை வெற்றிகரமாக மீட்டெடுத்தது அவரது படை. அப்படியே தொடர்ந்து முன்னேறி மீண்டும் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டது. பலமான தற்காப்புடன் திகழ்ந்த எடிஸ்ஸா இந்த முற்றுகையையும் தாக்குப் பிடித்து எதிர்த்து நின்றது. முற்றுகை நீடித்துக் கொண்டே இருந்தது. கூட்டணியாக வந்து இணைந்தவர்களோ பொறுமை இழந்து போனார்கள், வந்தோம், வென்றோம், போர் வெகுமானங்களைப் பெற்றோம் என்றில்லாமல் என்ன இது இழுபறி என்று அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் கவனித்த மவ்தூத் எதிரியைத் தூண்டி வெளியே வரவழைப்போம் என்ற மாற்றுத் திட்டத்துடன் யூப்ரட்டீஸ் நதியைக் கடந்து டெல் பஷிர் மீது தாக்குதல் தொடுக்க நகர்ந்தார்.

டெல் பஷிரின் பிரபுவாக வீற்றிருந்தவர் ஜோஸ்லின். அவர்தாம் எடிஸ்ஸாவின் இரண்டாம் பால்ட்வினின் விடுதலைக்கு உதவியவர். இப்பொழுது ஜோஸ்லினுக்கு ஆபத்து என்றதும் எடிஸ்ஸாவிலிருந்து பால்ட்வினின் படை நதியைக் கடந்து வரும், அவர்களைத் தாக்கி வெற்றி பெறலாம் என்பது மவ்தூதின் திட்டம். ஆனால், முஸ்லிம்களின் முற்றுகை தளர்ந்ததும் அம்முற்றுகையினால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுப் பலவீனம் அடைந்திருந்த எடிஸ்ஸா மளமளவென்று தனக்குத் தேவையான உணவுப் பொருள்கள், ஆயுதங்கள் ஆகியனவற்றைச் சேகரித்துக் கொண்டு இழந்த பலத்தை மீட்டுக் கொண்டது.

முஸ்லிம்களின் பெரும் கூட்டணிப் படை டெல் பஷிரைச் சுற்றி வளைத்ததும் அவர்களைத் தம்மால் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த ஜோஸ்லின் தந்திரம் செய்தார். என்ன தந்திரம்? கூட்டணி பலத்தைக் குறைப்பது. ஏற்கெனவே குறைபட்டுக் கிடந்த அவர்களிடம் அதை நிகழ்த்துவது அவருக்கு எளிதாக இருந்தது. குர்து தளபதி அஹ்மதீல் என்பவரைத் தொடர்பு கொண்டு ஏராள இலஞ்சம் கொடுத்து மடக்கி அவரை விலைக்கு வாங்கியதும் அத்தளபதி தம் படைகளை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அதைப் பார்த்து அதிர்ந்து, கோபப்பட்டு அடங்குவதற்குள், அடுத்தச் சில நாள்களிலேயே அலெப்போவிலிருந்த ரத்வானிடமிருந்து மவ்தூதுக்கு அவசரமாய் அழைப்பு வந்தது.

‘எனக்கு உங்களது உதவி தேவை. உடனே உங்களது படையினருடன் அலெப்போவுக்கு வாருங்கள்’

அங்கு முஸ்லிம் நகருக்கு ஆபத்து என்றதும் டெல் பஷிரைப் பிறகு கவனிப்போம் என்று விட்டுவிட்டுத் தம் படையை அலெப்போ நோக்கித் திருப்பினார் மவ்தூத். முஸ்லிம் படைகள் திரும்பி விட்டன என்பதைப் பார்த்த ஜோஸ்லின், அவசரமாகத் தம் படையைத் திரட்டி, விரைந்து சென்று, முஸ்லிம்களின் படைப் பிரிவின் பிற்பகுதியை வேகமாகத் தாக்கி, ஏறத்தாழ ஆயிரம் வீரரக்ளைக் கொன்றார்.

எதிர்பாராத இந்த இழப்பையும் சகித்துக்கொண்டு மவ்தூத் அலெப்போ நகரின் வாசலை அடைந்த போது, அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 21 நவம்பர் 2020 வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment