கருங்கடல் விரிகுடா!

by நூருத்தீன்

சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் முட்டிக்கொண்டதில் கடலில் எண்ணெய்க் கழிவுகள் சிதறியிருக்கின்றன. ஜஸ்ட் 20 டன் என்கிறது அரசு. ‘போனால் போகட்டும், எண்ணெய் தானே, துடைத்து வழித்துவிட்டால் போச்சு’ என்று யாரேனும் நம்பினால் அது அசட்டையின் உச்சம். கடலில் கலக்கும் எண்ணெய், அதுவும் கச்சா எண்ணெய் கடலுக்கும் நமக்கும் மாபாதகம்.

போர்க்கால அடிப்படையில், வல்லுநர்களுடன், நிபுணர்களுடன் வேட்டியை மடித்துக் கட்டி அரசு செயலில் இறங்க வேண்டிய பேரழிவு இது. கடலில் கொட்டியிருப்பது கச்சா எண்ணயெ்! பல எரிபொருள்கள் கலந்துள்ள கச்சா எண்ணெய்! தமிழக அரசிற்குப் புரியும்படி சொல்வதென்றால் எரிபொருள் ‘மிக்ஸர்’. மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு வாரம், இரண்டு வாரம் என்றில்லாமல் நீண்ட நெடுங்காலத்திற்கு அழிக்கப் போகும் பேரழிவு விபத்து இது. உயிருக்கு உலை வைக்கும் கார்பன் மோனோ ஆக்ஸைட் அதில் ஒரு முக்கிய கலவை. இவ்விபத்தில் எண்ணற்ற மீன்கள் சாகும், ஆமைகள் சாகும், நண்டு, இறால் காலியாகும் என்பது பாதிப்பின் ஒருமுகம் மட்டுமே. ‘அப்படியா! நான் சைவமாக்கும்’ என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள முடியாதவாறு அவர்களையும் பாதிக்கக்கூடிய சுற்றுச் சூழல் மாசு சம்பந்தப்பட்ட பெரும் பிரச்சினை இதில் கலந்துள்ளது.

ஏனெனில் நேரடியான பாதிப்புகள் மட்டுமல்லாமல் ஏராள மறைமுக பாதிப்புகளும் இதில் அடங்கியுள்ளன. எண்ணெய்க் கழிவுகள் தேங்கும் பகுதிகளில் அதன் நுண் துகள்கள் காற்றில் கலந்து, அதனைச் சுவாசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எண்ணெய்க் கழிவுகள் தங்கியிருக்கும் மண்ணைத் தொடுவதால் சருமத்தில் கச்சா எண்ணெய் பட்டு கொப்புளங்கள், சொரி, அரிப்பு போன்றவை ஏற்பட அத்தனைச் சாத்தியங்களும் உண்டு. அப் பகுதி நீரை அருந்துவதும் உணவுகளை உண்பதுமேகூட கேடுதான். எண்ணெயைக் குடிக்கும் மீன்கள் இறந்து போகாமல் தப்பித்தாலும்கூட, அதன் உடலில் ரசாயனங்கள் அத்தனையும் சேர்ந்து அந்த மீனையே நஞ்சாக்கிவிடும். மொத்தத்தில், ஏற்படக்கூடிய விளைவுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை.

ஆனால், ‘கடலோரம் இறங்கி எண்ணெய்யை எப்படி அள்ளுவது என்று கடலோரக் காவல்படையினர் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், பக்கெட்டுகள் சகிதம் அவர்களைச் சூழ்ந்த சில மீனவர்கள் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள்’ என்கின்றன செய்திகள். மீனவர்களும் தன்னார்வலர்களும் கடலோரக் காவற்படையும் பக்கெட்டில் அள்ளி இறைத்துச் சுத்தம் செய்ய, இதென்ன கிணறா, விழுந்திருப்பது பல்லியா? இந்த விபத்தை எதிர்கொள்ள வேண்டிய அடிப்படை பாடங்கள் எதையும் அறியாதவர்களை எவ்விதத் தற்காப்புச் சாதனங்களும் வசதிகளும் இன்றி, அப்பணியில் இறக்கிவிடுவது அவர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் எத்தகு கேடு என்பதை அனுமதிப்பவர்களும் அறியவில்லை, இறங்கியவர்களும் உணர்ந்திருக்கவில்லை. மனிதர்களை நாம் மனிதர்களாக மதித்தாலல்லவா அந்தக் கவலை?

2010 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆழ்கடல் எண்ணெய்க் கசிவு விபத்து ஏற்பட்டது. ஆனானப்பட்ட அமெரிக்காவையே கதிகலங்க வைத்த பெரும் போராட்டம் அது. அந்த விபத்தின் வீரியத்தையும் பாதிப்பையும் சற்று அறிந்து வைத்துக் கொண்டால், இவ் விபத்தின் கோரம் புரிய வரும். அந்தக் கட்டுரையை வாசிக்க: http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/147-oil-war.html

சிந்தியது 20 டன்தான். இது மற்ற நாடுகளில் நடந்த விபத்தை விட மிகமிகக் குறைவு என்று சொல்லியிருக்கிறது அரசு. ஒப்பிட்டுச் சமாதானமடைய இதென்ன துவரம் பருப்பு விலையா? அக்கறை என்பதே சிறிதும் அற்றவர்களை அரசுக் கட்டிலில் அமரவைத்து நாம் அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Disaster recovery எனப்படும் பேரிடர் மீட்புத் திட்டம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவற்றில் நம் நாட்டின் நிலை அடிமட்டம் என்பது துயரமான உண்மை. போதாததற்கு மக்கள் விரோத அரசியல்வாதிகள். கோணல் வாய் கொட்டாவி!

இப்படியான நம் அரசுதான் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கிறது, ஏகப்பட்ட வாக்குறுதிகளுடன். பிரச்சினையில்லை. பொய்த்தால் கேள்வி கேட்க யார் இருப்பார்கள் என்ற தைரியம்தான்!

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-இல் பிப்ரவரி 4, 2017 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment