து அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல் USS Cole யமனின் ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக் கொள்ள இளைப்பாறி நின்றது. பகல் 11 மணி இருக்கும். ஏறக்குறைய 9000 டன் எடை கொண்ட அந்தப் பிரம்மாண்ட கப்பலை ஒரு சிறு படகு ஒன்று வந்து இடித்தது. நியாயமாய்ப் படகு தான் நசுங்கி முழுகியிருக்க வேண்டும்.

ஆனால் படகோட்டி வந்தவர்கள் 1000 பவுண்டு வெடிப்பொருளுடன் வந்து இடித்ததால் நாற்பதுக்கு அறுபது அடி ஆழமான பிளவொன்று கப்பலில் ஏற்பட்டது. பதினேழு மாலுமிகள் இறந்து போனார்கள். முப்பத்து ஒன்பது பேர் காயமுற்றனர். அனைவரும் அமெரிக்கர்கள். அல்-காயிதா அமெரிக்காவிற்கு அறிமுகமான ஆரம்பத் தருணங்கள் அவை. ஆஜானுபாகுவான அமெரிக்காவின் மீது, உரசிப் பார்ககவல்ல; அடுத்த வருடம் மோதிப் பார்க்க நிகழ்ந்த முன்னோட்டம் அது என்று அப்போது யாரும் அறியவில்லை.

அடுத்து 9/11-க்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் ஈராக்கும்தான் உலகச் செய்திகளில் வலம் வந்தன. அடுத்த எட்டு வருடங்கள் யமன் தேசம் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

பிறகு செப்டம்பர் 20008-ம் வருடம் மீண்டும் அதே யமன். அதன் தலைநகர் சன்ஆவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர ஆயுதங்களுடன் தற்கொலைப் படைப் போராளிகள் ஜீப்பில் வந்து மோதினர். வெடித்துச் சிதறியதில் 16 பேர் இறந்து போனார்கள். ஆனால் இத்தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் பலியாகவில்லை என்பதாகச் சொல்லப் பட்டது. யமன் தேசம் செய்தியில் பரபரப்பானது.

9/11 நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பதினெட்டுப்பட்டி நாடுகளுடன் யமன் தேசமும் ஏற்கெனவே அங்கம் வகித்துக் கொண்டிருந்ததுதான். ஆனாலும் மிக ஏழ்மையான அந்த அரபு நாடு பெரிதான ராணுவ வலிமை ஏதும் பெற்றிருக்கவில்லை. தவிரவும் 2004-ம் வருடத்திலிருந்து ஷியா கலகக்காரர்களுடன் வேறு அது மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் யமனில் அல்-காயிதாவின் கிளையொன்று பரவி அதன் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாய் அண்மையில் செய்திகள் பரபரப்பாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்தும் மற்ற சண்டைப் பிரதேசங்களிலிருந்தும் அல்-காயிதாவினர் அங்கு இரயிலோ, கப்பலோ பிடித்து வந்து விட்டார்களா, அல்லது சோப்ளாங்கி யமன் அரசு அமெரிக்கா ஆதரவாகிப் போன கோபத்தில் உள்ளூரிலேயே போராளிகள் உருவாகிவிட்டார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு “அரேபிய தீபகற்பத்தில் அல்-காயிதா” (Al-Qaeeda in Arabian Peninsula) எனும் பெயரில் அமைப்பு ஒன்று தோன்றியுள்ளதாகச் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

“யமன் அடுத்த ஆப்கானிஸ்தானா?” என்று அமெரிக்காவின் செய்தி நிறுவனம் CBS News பதற்றத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையொட்டியும் இதன் பின்னணியிலும் உள்ள செய்திகள் யமனை உலக வரை படம் தாண்டி அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளன.

பருமனமல்லாத, ஒல்லியும் அல்லாத உருவம். அடர்ந்த தாடி. தலைப்பாகை. கண்ணாடி அணிந்த நபர் ஒருவர். அமெரிக்காவும் ஐரோப்பாவும் கவலையடையக் காரணமாகியுள்ளார். அவர் அன்வர் அல் அவ்லாகி. 1971-ம் வருடம் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது பெற்றோர்கள் யமன் நாட்டைச் சார்ந்தவர்கள். அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவில் B.S., மற்றும் M.A., பட்டப்படிப்பு முடித்த அன்வர் அல் அவ்லாகி அதற்கு முன் 11 வருடங்கள் யமனில் மார்க்கக் கல்வி பயின்றார். அவரது தந்தை அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர். யமனில் விவசாயத்துறை அமைச்சராகவும் சன்ஆப் பல்கலைக்கழகத்தில் முதல்வராகவும் பணியாற்றினார்.

1996லிருந்து நான்கு வருடங்கள் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரிந்து வந்த அன்வர் அச்சமயம் “நபிமார்களின் வரலாறு” என்ற வரலாற்றுத் தொடர் சொற்பொழிவு பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். அதனைக் கேட்ட உள்ளூர் மக்கள் அவரை ஆச்சரியத்துடன் கவனிக்க ஆரம்பித்தனர். பிரபலமடைந்த அத்தொடர் குறுந்தகடுகளில் பதிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த கையோடு அது பலத்த வரவேற்பைப் பெற்றது. எளிய, அழகான ஆங்கிலம். சுற்றி வளைக்காமல், சரியான ஆதாரங்களுடன் மிக அழகான நேர்த்தியான பேச்சு. அமெரிக்க முஸ்லிம்கள் மத்தியில் அவரது பேச்சாற்றல் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின்னர் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றச் சென்ற அன்வர், அங்குள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையிலும் முஸ்லிம் மதபோதகராகப் பணியாற்றினார். மாணவர்கள் கவரப்பட்டனர். அவரது பிரசங்கங்கள் பதிவு செய்யப்பட்டு குறுந்தகடுகளாகவும் இணையத்திலும் பிரபலமடைய ஆரம்பித்தன. அங்குள்ள பள்ளிவாசலின் பிரதிநிதி ஜொஹரி அப்துல் மாலிக், “he was the magic bullet” என்று ஒரு பேட்டியில் அன்வரைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை அவரைக் கவனிக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு ஏதோ குறக்களி. அவர் மீது பெண்களைத் தொடர்பு படுத்தி அவதூறு வழக்குப் பதியப்பட்டது. அது எந்தவித முகாந்தரமுமில்லாமல் பிசுபிசுத்துவிட, அவர் அது பற்றி கவலைப்படாமல் தனது பணியில் கவனமாய் இருந்தார். அதன் பின்னர் வேறு சில வழக்குகள் புனைய முயன்றனர். எவ்வகையிலும் சட்டப்படி அவரைச் சிக்கவைக்கவோ, நிறுத்தி வைக்கவோ இயலவில்லை.

பிறகு லண்டனுக்குச் சென்றவர், அங்கு மறுமை வாழ்க்கைப் பற்றி தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இதுவும் குறுந்தகடுகளாக வெளிவர, அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அவருக்கு ரசிகர் வட்டம் பெருக ஆரம்பித்தது. மேலை நாட்டு மோகத்தில் தடம் புரள சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களிடம் பெருத்த தாக்கத்தை அவரது சொற்பொழிவுகள் ஏற்படுத்தின. அவர்களுக்கு இஸ்லாம் முறையான மார்க்க நெறியாக மாறியது. அங்கு ஸ்காட்லாண்ட்யார்ட் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

மேற்கத்திய அரசியலுக்கு எதிரான மனோபாவமும் அதனைத் துணிச்சலுடன் ஒளிவு மறைவின்றிப் பேசும் நேர்மையும் கொண்டிருந்த அன்வர், மேலை நாடுகளில் வாழ்கையைத் தொடருவது சிரமம் என்பதை உணர்ந்து யமனுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். வஹ்ஹாபி, இஸ்ரேலிய விரோதி, ஜிஹாத் பிரச்சாரகர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கடுமையடைய ஆரம்பித்தன. செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் அவருக்கும் சம்பந்தம் இருப்பதாய்ப் புது நெருக்கடிகள் அமெரிக்க அரசால் தொடுக்கப்பட்டன. பெரியண்ணன் ‘அன்பாக’க் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, யமன் அரசாங்கம் அவரைக் கடுங்காவல் சிறையில் அடைத்தது. இரு வருடங்களுக்குப் பிறகு எந்த வித ஆதாரமும் இல்லாததால் அன்வர் விடுவிக்கப்பட்டார்.

வெளியே வந்தவுடன் அவரது பிரசங்கங்களின் வீரியம் மேலும் அதிகமானது. மட்டுமல்லாமல் அவரது இணைய தளத்தில் அவர் பதிவு செய்த கட்டுரைகள் சர்வ நிச்சய அமெரிக்க எதிர்ப்பாளராய் அவரை அடையாளப்படுத்தின. அவரது உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்காணித்து வந்த அமெரிக்கா கவலைப்பட்டது. அதற்குக் காரணம் இருந்தது. செப்டம்பர் நிகழ்வுக்குப் பிறகு உள்நாட்டிற்குள் தீவிரவாதிகள் புகுந்து விடாதவாறு பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டு வெளியே சென்றும் தனது போரை நிகழ்த்தி வரும் அமெரிக்கா, உள்நாட்டில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்களே அல-காயிதாவிற்கோ வேறு எதுக்கோ பதிவு செய்யப்படாத உறுப்பினார்களாகி நாச வேலைகளில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்பது அதற்கு ஒரு பெரும் அச்சுறுத்தல். அதற்கு அன்வரோ அவரைப் போன்றவர்களோ உந்து சக்தியாகி விடக் கூடும் என்பது அமெரிக்காவின் கணிப்பு.

அதற்கேற்றாற்போல் சமீபத்திய சில நிகழ்வுகள் அமெரிக்காவைப் பரபரப்படைய வைத்திருக்கிறது. நிடால் மாலிக் ஹஸன். அமெரிக்க ராணுவத்தில் மனநல ஆலோசகர். அவரையும் ஒரு படையையும் ஆப்கானிஸ்தானிற்கோ, ஈராக்கிற்கோ அனுப்ப ராணுவம் தயாராகிக் கொண்டிருக்க, உள்ளே புகுந்த நிடால் சரமாரியாய்ச் சுட, 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமுற்றனர். இந்தச் சம்பவம் மிகவும் பரபரப்பைக் கிளப்ப, “அன்வருடன் நிடால் மின்னஞ்சல் தொடர்பு கொண்டிருந்தார்” என்று உளவுத்துறை சொல்லியது. தான் “அவரை இத்தகைய செயல் செய்யக் கட்டளையோ ஆலோசனையோ ஏதும் தரவில்லை” என்று மறுத்த அன்வர் அந்த சம்பவத்தை விமர்சித்துத் தனது இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிட்டார். அதில் தன் சகோதர சகோதரிகளுக்கு நிகழ்த்தப்படும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு முஸ்லிமின் உணர்வுபூர்வமான எதிர்வினை என்பதைப் போன்ற தொனியில் அவர் அச்செயலை எழுதியிருப்பார் போலும். இப்பொழுது அவரது இணைய தளம் ஏதோ காரணங்களால், “தற்காலிகமாக செயல்பாட்டில் இல்லை; விரைவில் திறக்கப்படும்” என்ற அறிவிப்புடன் முடங்கியுள்ளது.

2009-ன் டிசம்பர் மாதம். யமன் தலைநகரம் சன்ஆவிலும், மற்றும் போராளிகளின் பயிற்சிக் களங்கள் எனக் கணிக்கப்பட்ட இடங்களின் மீதும் யமன் அரசாங்கத்தின் ராணுவத் தாக்குதல்கள் முடுக்கப்பட்டன. அதில் சில மூத்த அல்-காயிதா போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டோ கடுமையான காயமடைந்தோ இருக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கடுத்து கிறிஸ்துமஸிற்கு முந்தைய தினம் யமன் ராணுவத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் அல்-காயிதாவின் சில தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பின்றித் தெரிவிக்கப்பட்டாலும், அதில் முக்கியமாய் “ஒரு மதப்பிரச்சாரகர் கொல்லப்பட்டிருக்கக் கூடும்” என்பதுதான் தலைப்புச் செய்தியாய் மிளிர்ந்தது. அது அன்வர் அல் அவ்லாகி. அவரது இருப்பிடமும் ராணுவத் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாய்ச் செய்திகள்.

அடுத்த நாள் அவர் அந்தத் தாக்குதலில் இறக்கவில்லை என்றும் அத்தகைய போராளிக் குழுவினருடன் அவர் இருக்கவில்லை என்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதே கிறிஸ்துமஸ் தினமன்று அப்துல் முத்தல்லப் எனும் சோமாலியர் ஒருவர், அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்க முயற்சித்ததாய்ப் பிடிபட்டுள்ளார். அவர் பல மாதங்கள் யமனில் பயிற்சி பெற்றதாக விசாரணையில் வெளியான செய்திகள் அறிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் அபாயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவும் பிரிட்டனும் இருநாட்கள் யமனில் தங்களது தூதரக அலுவலகங்களை மூடி, மீண்டும் திறந்துள்ளன.

யமனுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சென்ற வருடம் 70 மில்லியன் டாலர்கள் அளித்துள்ள அமெரிக்கா, அது இவ்வருடம் இரு மடங்காக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கப் போரின் அடுத்த தளம் யமன் என்றால் “யமன் அடுத்த ஆப்கானிஸ்தான் ஆகி விடுமா?” எனும் கேள்வி இப்போது வலுவடைந்துள்ளது.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 06 ஜனவரி 2010 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment