01. வஹீ அருளப்பெற்ற விவரம்

அத்தியாயம் – 1

நபிகள் திலகத்துக்கு வஹீ என்னும் வேதஞான வெளிப்பாடு அல்லாஹ்வினால் எவ்வாறு அருளப்பட்டதென்பது

  1. “இன்னம், வஹீயை – (உதிப்பை)க் கொண்டே, அல்லது திரைக்குப் பின்னிருந்தே, அல்லது தூதரொருவரை அனுப்பியும், தனது அனுமதி கொண்டு தான் நாடியதை வஹீயறிவிப்பதுங் கொண்டேயன்றி, (வேறு முறையால்) அல்லாஹ் அ(டிய)வனுடனே வார்த்தையாடக் கூடுமென்பது எந்த மனிதனுக்கும் உரித்தாயில்லை.” (குர்ஆன் 42:51).
  2. “இன்னம், நிச்சயமாகவே இஃது – (இந்தக் குர்ஆன்) பிரத்தியக்ஷமான அரபு பாஷையில், சகல லோகங்களுக்குமுரிய ரக்ஷகன்பாலிருந்து அருளப்பட்டதாயிருக்கிறது; – நீவிர் அச்சமூட்டி எச்சரிப்பவருள்ளே (ஒருவரா) யிருப்பான் வேண்டி, நம்பிக்கைக்குரிய ஆன்மா – (ஜிப்ரீல் என்னும் அமரர்) அதனுடனே உமது ஹிருதயத்தின்மீது இறங்கியிருக்கின்றார்” (குர்ஆன் 26:192-195).
  3. “இன்னம், அன்ன வண்ணமாயே உமக்கு நாம் ஓர் அரபு மொழிக் குர்ஆனை அருளியிருக்கின்றோம்” (குர்ஆன் 42:7).
  4. “பரிசுத்த ஆன்மா-(ஜிப்ரீல்) இதனை உம்முடைய ரக்ஷகன்பாலிருந்து உண்மையைக் கொண்டே இறக்கிக்கொண்டு வந்துளார்” (குர்ஆன் 16:102).
  5. “எவனொருவன் ஜிப்ரீலுக்குப் பகைவனாயிருக்கிறானோ (அவன் அல்லாஹ்வுக்கே பகைவனா யிருக்கிறான்;) என்னெனின், நிச்சயமாக அன்னவர் அல்லாஹ்வின் கட்டளை கொண்டே உம்முடைய ஹிருதயத்தின் மீது இதனை இறக்கி வைத்தார்” (குர்ஆன் 2:97).
  6. “நாம் இதனைப் பகுதி பகுதியாய் வெளிப்படுத்தி அருளியிருக்கின்றோம்” (குர்ஆன் 17:106).

குர்ஆன் ஷரீபின் பிரகாரம் வஹீ என்பது இப் பூவுலகில் எங்குங் காணப்படும் ஒரு சர்வ வியாபக சம்பவமாகவே இருந்து வருகிறது. வானம், பூமி போன்ற அசேதனப் பொருள்களுக்கும் வஹீ அனுப்பப்படுவதுண்டென்று அவ்வேதம் அறைகின்றது (41:11,12; 99:5); அப்பால் கீழ்த்தரப் பிராணிகட்கு வஹீ அறிவிக்கப்படும் விஷயம் விவரிக்கப்பட்டுள்ளது (16:68,69). ஆனால், மானிடருக்கு அறிவிக்கப்படும் வஹீ மேற்கூறிய வஹீகளினின்று முற்றிலும் வேறாயதாயே இருந்து வருகிறதென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமிருக்கக் காரணமில்லை; எனவே, இப்படிப்பட்ட வஹீயைக் குறித்தே யாம் இங்கு ஆராய்ச்சி செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

மேலே குறிக்கப்பட்டுள்ள தலையங்க ஆயாத்களுள் முதலாவது ஆயத் கூறுவதாவது: அல்லாஹ் அடியவருடனே மூன்று விதத்திலேயே சம்பாஷணம் புரிகிறான்; அஃதாவது, அடியவனுக்கு ஆண்டவன் மூன்று வகையைக் கொண்டே வஹீயை அருள்கின்றான்:-

(1) அடியானுடைய உள்ளத்தினுள்ளே ஆண்டான் ஒரு விஷயத்தை உதிப்பின் வாயிலாய் உற்பத்தியாக்குகிறான்;- இங்கு வழங்கப்பட்டுள்ள வஹீ என்பது தனது தாதுப் பொருளுக்குரிய “துரிதமாய், அல்லது சயிக்கினையாய் அறிவித்தல்” என்னும் தன்னுடைய ‘அசல்’ தாத்பர்யத்தையே சுட்டிக் காட்டுகின்றனது.

(2) ஒரு திரைக்கு அப்பாலிருந்து பேசுவதேபோல் அல்லாஹ் மறைவிலிருந்தே அறிவிக்கிறான்; இதில், ரூயா (கனா) என்பதும், இதன் உயரிய காட்சியெனப்படும் கஷ்ப் (சூக்ஷ்ம தர்சனம்) என்பதும், இன்னம் உயரிய நிலையெனப்படும் இல்ஹாம் (சுழுத்தி நிலையிலே – புலன்கள் செயலற்று உறங்கு நிலையிலே – குரல்கள் பேசக் கேட்கப்படுவது) என்பதும் அடங்கும்.

(3) வானவர் ஜிப்ரீலென்பார் (அலை) வஹீ அறிவிக்கப்படவேண்டியவர்பால் அல்லாஹ்வின் தூதுச் செய்தியுடனே பட்டவர்த்தனமான வசனங்களைக் கொண்டு அறிவித்து வைக்குமாறு அனுப்பப்படுகின்றார்.

வஹீயின் வகைகளுள்ளெல்லாம் இம் மூன்றாவது வகையே மிகவும் உயரிய வஹீயாய் இருந்துவருகிறது; அல்லாஹ்வின் இத் தூதுச் செய்தி முதல் வகையில் அனுப்பப்படுவதே போல் உதிப்பாயில்லாமலும் இரண்டாம் வகையில் அனுப்பப்படுவதேபோல் சொப்பனமாக, சுழுத்தியாக இல்லாமலும் வானவர் ஜிப்ரீல் வாயிலாய் வெளிப்படையான வார்த்தைகளாகவே அருளப்பட்டு வருகிறது. இது நபிமார்களுக்கே உரிய சொந்த வஹீயாய் இருக்கிறது. குர்ஆன்ஷரீப் அரபு பாஷைக்குரிய வசனங்களாகவே நபிகணாதருக்கு (ஸல்) அருளப்பட்டு வந்தது (தலையங்க ஆயாத் 2, 3); வானவர் ஜிப்ரீலே அதன் ஆயாத்களைச் சுமந்து கொண்டு வந்தார்; அன்னவர் “நம்பிக்கைக்குரிய ஆன்மா” வென்றும் “பரிசுத்த ஆன்மா” வென்றும் அழைக்கப்படுகிறார் (தலை. ஆயாத் 2, 4, 5); அவ் வானவர் நபிகணாயகரின் ஹிருதயத்தினமீது விஜயம் செய்துகொண்டிருந்தார் (தலை. ஆயாத் 2, 5). இறுதி ஆயத், குர்ஆன் ஷரீப் துண்டு துண்டாகவே (23 ஆண்டுகளில்) வெளியாக்கப்பட்டு வந்ததென்று கூறிக்கொண்டிருக்கிறது.

இவ்வத்யாயத்தில் வரையப்பட்டுள்ள ஹதீதுகள், குர்ஆன் ஷரீபில் மிக விளக்கமாய் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களையே செவ்விதாய் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டிருக்கின்றன. நபிமார்களுக்குரிய துரியாதீத வஹீயைப் பெறுமுன்னே நம்முடைய நபிபெருமானார் (ஸல்) சொப்பனத்திலே தான் முதல் வித வஹீகளைப் பெற்றுவந்தார்கள். நபிகள் திலகம் முதன் முதலில் உயரிய துரியாதீத – மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை (ஆத்ம அஞ்ஞான) மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்ம நிலைக்குரிய – வஹீயைப் பெற்றுக்கொண்ட அனுபூதி வானவர் ஜிப்ரீல் விஜயம் செய்வதைக் கொண்டே நிறைவேற லாயிற்று; அவர், குர்ஆன் ஷரீபின் 96-ஆவது அத்தியாயம் முதலைந்து ஆயாத்களிலுள்ள விஷயத்தை – அல்லாஹ்வின் தூதுச் செய்தியை – அரபு மொழிகளால் அறிவித்துவைத்தார். அதனை நபிபெருமானார் (ஸல்) வரக்காவிடம் அறிவித்தார்கள்; அக்கணமே அப் பெரியார் அவர்கள்மீது உறுதிகொண்டு, மூஸா நபிக்கு அல்லாஹ்வின் வஹீயைக் கொணர்ந்த அந்த வானவர் ஜிப்ரீலே இப்பொழுதும் அல்லாஹ்வின் தூதுச் செய்தியைக் கொண்டுவந்துளார் என்றுங் கூறலுற்றார் (ஹதீத் 3).

குர்ஆன் ஷரீபிற்குரிய உயரிய துரியாதீத வஹீ வானவர் ஜி்ப்ரீல் வாயிலாய் அரபு வார்த்தைகளாகவே அருளப்பட்டதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது (ஹதீத் 4, 5).

அவ்வுயரிய வஹீ வந்திறங்குங்கால், நபிகள்பிரான் கடும் பிரயாசைக்கு உள்ளானார்களென்றும் நாம் அறிந்து கொள்கிறோம்: நளிர் மிகுந்துள்ள நாட்களிலும் வஹீ வருங்கால், அப்பெருமானார் வேர்த்துப்போய் நனைந்துவிடுவார்கள்; சரீரம் கனத்தும் போய்விடும்; இன்னம், அன்னவர்கள்மீது ஒரு வெளிப்படையான மாறுதலும் வந்து தோன்றலாகும் (ஹதீத் 5-8).

இதனால் விளக்கமாவது யாதெனின்: அல்லாஹ்வின் இத்தகைய ஆன்மவுலக அனுபூதியை அடையப் பெறுதற்காக அப் பெருமானார் (ஸல்) இந்த ஸாக்ர (விழிப்பிற்குரிய) நிலையைவிட்டு, அப்பால் தொலைவிலுள்ள துரியாதீத நிலைமைக்கு மாற்றப்பட்டு விடுவது வழக்கமென நாம் நன்கறிந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம்; ஆகவே, அவர்கள் இப் பௌதிகவுலக சம்பந்தத்தை அடியுடன் அறுத்துவிட்டு, அவ் வான்மவுலகத் தொடர்புடையவர்களாய் உயர்த்தப்பட்டு விடுவது எத்துணை உண்மையுள்ள சம்பவமாய்க் காணப்பட்டதெனின், அஃது அவர்களுடைய புற உறுப்புக்களிலும் புறத் தோற்றத்திலும் முற்றிலும் மெய்யான மாற்ற மொன்றனையே கொண்டுவந்து சேர்ப்பித்ததென்க.

 

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–முகப்பு–>

Related Articles

Leave a Comment