மாற்றாள் மைந்தனிடம் சுடுசொல்லடிபட்டுத் திரும்பிச் சென்ற சிற்றன்னை ஷஜருத்துர் என்ன செய்தார், தெரியுமா? நேரே தம்முடைய அந்தரங்க அறைக்குள் புகுந்து, கதவைத் தாளிட்டுக்கொண்டு, பச்சிளங் குழந்தையேபோல் விசும்பி விசும்பி அழுதார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் இழியவில்லை;

ஆனால், நூற்றுக் கணக்கில் துளைக்கப்பட்ட ஒரு ஹிருதயத்தின் புண்களிலிருந்து சொட்டும் உதிரத்தைப்போல் சொரிந்தது சோகரசம். ஸாலிஹ் நஜ்முத்தீன் உயிர் துறந்த பின்னர்க்கூட ஷஜருத்துர் இவ்வளவு அதிகமாகக் கண்கலங்கவில்லை. ஆனால், இன்று முஅல்லமிடம் பெற்ற சொல்லம்படியை நினைந்து நினைந்து உருகினார். மூடியிருக்கிற பானைக்குள் கொதிக்கிற வெந்நீர் அந்த மூடியைத் தூக்கியெறிவதைப்போல், குமுறிக்கொண்டிருந்த அவருடைய நெஞ்சம் அவரைக் குலுக்கியது. பொங்கிப் பொங்கியழுதார்; ஏங்கி ஏங்கிச் சலித்தார். மலைச் சாரலிலுள்ள பெரிய பாறையிலிருந்து பீரிட்டுப் பாயும் நீர்ச்சனையைப் போலே கடைசியில் கண்ணீர் வெள்ளம் பாய்ந்தது.

தந்தையுடன் தனியே புறப்பட்டுத் துருக்கியைத் துறந்து வந்து கடலிடைக் கப்பல் கவிழ்ந்தது முதல் இன்றுவரை மிக விரைவாக ஓடி மறைந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் நினைத்துப் பார்த்தார். வெகு சுலபமாகப் பலருக்கு வந்துவிடும் அந்த மரணம் தமக்கும் சென்ற இருபதாண்டுகளாக வந்தடுத்திருக்கக் கூடாதா என்று ஏங்கினார். தம்மை ஆண்டவன் இதுவரை சோதித்த பெரும் பெருஞ் சோதனைகளெல்லாம் போதாவென்றா இப்பொழுதும் இத்தகைய மகத்தான கொடுஞ் சோதனையை இறக்க வேண்டும் என்று மனம் வெதும்பினார். சிந்திக்கச் சிந்திக்க, ஷஜருத்துர்ருக்கு இவ்வுலகத்தின் மீதே பெரு வெறுப்பும் தம்மீது அதை விடப் பெரிய வெறுப்பும் உதயமாகத் தொடங்கிவிட்டன.

‘மூனிஸ்ஸா காலஞ் சென்றது முதல், பெற்ற பிள்ளையினும் உற்ற பிள்ளையாய் வளர்த்து வாலிபமாக்கிவிட்ட தூரான்ஷா இப்போது இப்படியெல்லாம் ஏசுவதும் பேசுவதும் இழிவு படுத்துவதும் தூஷிப்பதும் தலைவிதியென்று சொல்வதா; அல்லது பொல்லாத வேளையென்று அழைப்பதா? ஐயூபிகளின் சொத்து, ஐயூபிகளின் சொத்து என்று கனவிலும் நனவிலும் சதா மனனம் செய்து, தூரான்ஷாவின் வருகைக்காகப் பொறுமையையே கைக்கொண்டு காத்துக் காத்துக் கிடந்ததற்கு இதுதானா கைம்மாறு? ஆ, நன்றி கெட்ட உலகமே!’

ஸாலிஹ் உயிர் துறந்ததிலிருந்து, தூரான்ஷா திரும்பி வருகிறவரை தாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தார் ஷஜருத்துர். அப்போதெல்லாம் அவர் அடக்கிக்கொண்டிருந்த அவலக் கவலை அத்தனையும் இப்போது வட்டியும் முதலுமாகப் பெருகிப் பாய்ந்தன. ஸாலிஹைப் பிரிந்ததால் ஏற்பட்டதாக முன்னம் நினைந்து கதறியழுத சோகமெல்லாம் இப்போது விளைந்திருக்கிற பெருஞ் சோதனைக்கு உறைபோடக் கூடக் காணாமற் போயின. தம்மை வேசியென்றும் தாசியென்றும் அழைப்பதற்கு ஒப்பாகத் தம் மாற்றாள் மைந்தன் அடிமையென்றும் பெயர் சொல்லியும் அதட்டி அழைத்ததை எண்ணியெண்ணி உள்ளம் புண்ணாகினார். தம்மை நொந்துகொண்டார்; தம் தலைவிதியை நொந்து கொண்டார்; தாம் இன்னம் உயிருடனிருந்து என்னென்னவெல்லாம் அனுபவிக்க நேருமோ என்பதை எண்ணியெண்ணி நைந்துருகினார்.

“பன்றியின் முன்னே முத்தை யெறியாதீர்கள்!” என்று இயேசு கிறிஸ்து உபதேசித்திருப்பதாக ஒரு கிறிஸ்தவர் கூறியதை ஷஜருத்துர் சிறு வயதினராய் இருந்தபோது கேள்விப்பட்டது, இப்போது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், தூரான்ஷா நன்றி கொன்ற பன்றியாகப் பரிணமிப்பானென்பதை ஷஜருத்துர் முன்பு சற்றேனும் கருதியிருந்தாலல்லவோ இந்த ஸல்தனத்தென்னும் முத்தை அவன் முன்னே எறிந்திருக்க மாட்டார்? இப்போது அதை நினைத்து என்ன பயன்? காலம் கடந்துவிட்டதே!

ஷஜருத்துர் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார். சென்றுபோன விஷயங்களைப் பற்றி இனிச் சிந்திப்பதில் பயனில்லையென்று தெளிந்து, இனி நடக்கவேண்டியவற்றைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமென்று முடிவு கட்டினார். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையே போல, கடைசி சுல்தான் மாணமடைந்த காலத்தில் வாரிஸின்றி இருந்த இந்நாட்டின் ஆட்சியை தூரான்ஷாவின் கையிலே தூக்கிக் கொடுத்தவர் ஷஜருத்துர் அல்லவா? எனவே, அதை அவனுடைய கையிலிருந்து பிடுங்கியெடுக்க வேண்டியவரும் இவ் வம்மையே அல்லரோ?

“என்ன அரும்பாடுபட்டு இந்த ஸல்தனத்தை நான் அந்தக் கயவனுக்காகச் சம்பாதித்துக் கொடுத்தேனோ, அதைவிட அதிகமான பாடுபட்டாவது அவனிடமிருந்து இதை நான் பிய்த்துப் பிடுங்கியெறியா விட்டால், நானும் மானமுள்ள ஒரு மனுஷியாக இருக்க முடியுமோ?” என்று தமக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். அப்போழுது அவருக்குத் திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது : முன்னம் சிலுவையுத்தத்தின் போதும் கணவர் உயிர்நீத்த போதும் காத்து ரக்ஷித்த அதே அருளாளன் இன்றும் ஏன் உதவ மாட்டான்? ஷஜருத்துர் தம்மிரு கையேந்தி, பயபக்தி விசுவாசத்துடனே ஆண்டவனிடம் குறையிரந்ததைப் பாருங்கள்:-

“ஏ, இறைவா! நின் சக்தி மகத்தானது. ஆக்கவும் அழிக்கவும் சர்வ வல்லமை படைத்த நீயே நின் திருவிளையாடல்கள் அத்தனையையும் என்மீது புரிந்துவருகின்றாய். வெகு அற்பத்திலிருந்தே நீ மனிதனைப் படைக்கிறாய்; மீண்டும் அற்பத்துக்கே அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறாய். அபலையை அரசியாக்கி விடுகிறாய்; அவளைப் பல விதங்களிலும் சோதிக்கிறாய். இந்த ஸல்தனத்தைக் கீர்த்திமிக்க சுல்தான்களின் கையிலும் பொருத்தினாய்; இப்போது படு மோசமான பரம நீசன் கரத்திலும் கொடுத்துப் பார்க்கிறாய். நின் சக்தியின் மேன்மையை உணராத அடியேன் முன்னம் தெரியாத்தனமாய் உன்னைக் கோரிக்கொண்டு தூரான்ஷாவைப் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கும்படி கேட்டுக் கொண்டேன். நீ அவ் வரத்தை அப்படியே அளித்தாய். ஆனால், நான், இழைத்துவிட்ட பெருந் தவற்றுக்காகப் பச்சாத்தாபப் படுகிறேன். பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறேன்.

“நாடாள அருகதையற்றவன் தூரான்ஷா என்பதை ஞானவானாகிய நீ உணர்ந்திருந்தமையால், நெருக்கடியான வேளையில் அவன் இங்கில்லாதபடி நீ உதவி புரிந்தாய். ஆனால், சாதாரண மனுஷியாகிய யான் நின் மகத்துவத்தையுணராமல், தெரியாத்தனத்தாலும், அறிவீனத்தாலும் உன்னை அறைகூவினேன். என் மடத்தனத்துக்கு நீ போதித்த புத்திமதிகளை யான் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன். எனினும், யான் உனக்கிழைத்துவிட்ட நிந்தனையை நீ மன்னித்து, இக்கணமே எனக்கு உதவி புரியக் கடவாய்! எந்த வாயினாலும் மனத்தினாலும் அவனை நீ சுல்தானாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேனோ, அதே வாயினாலும் மனத்தினாலும் திரிகரண சுத்தியுடனே இப்போது அவனை வீழ்த்தும்படி யான் கோருகிறேன்.

“யான் லாபமடைவதற்காக இக் கோரிக்கையை உன்னிடம் சமர்ப்பிக்கவில்லை; ஆனால், யான் இழைத்துவிட்ட பெரிய அநீதியை அகற்றும்படியே உன்னை வேண்டுகிறேன். இந்த நாட்டை நசாராக்களின் பிடியினின்று விடுவிக்கும்படி நான் கோரினேன். ஆனால், இதைக் கொடுங்கோலனின் கையில் ஒப்படைப்பதற்காக உன்னை வேண்டினேனில்லையே! பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் நான் செய்த தவமெல்லாம் இந் நாட்டையும் இம் மக்களையும் காப்பாற்றவும் சத்தியத்தை நிலைநாட்டவுமே யல்லவோ? கொடுமையை அழிக்கவும் நன்மையை அமைக்கவுமேயன்றோ நின்னைக் குறையிரந்தேன்? ஆனால், பொறிக்கிற சட்டியிலிருந்து கொதிக்கிற நெருப்பில் வீழ்ந்த கதையாகவல்லவோ என் நிலைமை போய் முடிந்தது?

“என் கணவரை நீ அழைத்துக்கொண்டாலும் அவரை நிகர்த்த அவர் மைந்தனை நீ இங்கே அமர்த்துவாய் என்றல்லவோ மனப்பால் குடித்தேன்? இழந்த என் பர்த்தாவைப் போன்ற மற்றெரு சுல்தானை இங்கு நிலைபெறுத்தலாம் என்றல்லவோ யான் இறுமாந்திருந்தேன்? ஏ, ஆண்டவா! நான்பட்ட பாட்டுக்கெல்லாம் இதுதானா வெகுமதி? நான் எதிர் பார்த்த நம்பிக்கைக் கெல்லாம் இதுதானா பரிசு? நின்சக்தி மகத்தானதல்லவா? எப்படி நீ அவனை இத்தனை நாட்களாகக் காப்பாற்றினையோ, அதேவிதமாக அவனை நீ எங்கள் மத்தியிலிருந்து வெடுக்கென்று பறித்துக்கொள்ள மாட்டாயா? மலக்குகளைப் படைத்த நீ இப்லீஸையும் கூடப் படைத்ததே போல், இணையற்ற ஐயூபி சுல்தான்களைச் சிருஷ்டித்த நீ இந்தக் கேடுகெட்ட நீசனையும் படைத்தாயே! இனியும் என்னால் பொறுக்க முடியுமோ?

“ஏ, அருளாளனே! அன்புடையோனே! நீ நல்ல வழியை இறக்கி, எங்கள் சமூகத்தைக் காப்பாற்ற மாட்டாயா? படமுடியா தினி! பட்டதெல்லாம் போதும்! கருணை கூர்வாய்! காப்பாற்றுவாய், நீ காப்பாற்றுவாய்!”

மதிமருண்டுபோய் நீட்டிய கைகளை மடக்காமல் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் அப்படியே கண்ணீரும் கம்பலையுமாய் உட்காந்திருந்தாரோ, தெரியாது. மீண்டும் அவர் கண்விழித்த பொழுது, இரவு நெடுநேரங் கடந்து விட்டதை உணர்ந்து கொண்டார். ஆனால், தம்முடைய அறைக் கதவருகினில் சில மனிதர்கள் வெளியே குசுகுசுவென்று பேசுவது போல் மந்தணமாய்க் கேட்டது. உற்றுக் கவனித்தார். ஒன்றும் விளங்க வில்லை; மெதுவாக ஊர்ந்து சென்று கதவிலே காதை வைத்துக் கேட்டார். பேச்சுக் குரலிலிருந்து வெளியே புர்ஜீ மம்லூக்குகள் நிற்கிறார்கள் என்பதை ஓர்ந்துகொண்டார். தமது அறைக்கு வெளியே அவர்கள் ஏன் நிற்க வேண்டுமென்று யோசித்தார். ஒன்றும் புலப்படவில்லை. சந்தேகம் வலுத்துவிட்டபடியால், நிமிர்ந்து நின்று, “யார் அங்கே?” என்று தைரியமாக அதட்டிக் கேட்டார்.

“கதவைத் திறங்கள்!” என்று வெளியிலிருந்தோர் அதிகாரத்துடன் கட்டளையிட்டனர்.

“திறக்க முடியாது. பெண்ணொருத்தி தனியே இருக்கும் அறைக்குள்ளே இந்நேரத்தில் ஆண்களாகிய உங்களுக்கென்ன அலுவல்?”

“சுல்தான் கட்டளை! உடனே திறங்கள்!”

“சுல்தானின் கட்டளையா? எந்த சுல்தான்?”

“ஏன், நம்முடைய சுல்தானின் கட்டளை!”

“நம்முடைய சுல்தான் காலஞ்சென்று பல நாட்களாகி விட்டன. இப்போது சுல்தான் எவரிருக்கிறார்?” என்று அழுத்தந்திருத்தமாக ஷஜருத்துர் அறைந்து கூறினார்.

வெளியே நின்றவர்கள் இந்தப் பதிலை கேட்டுத் திகைப்புற்று விட்டார்கள். மீண்டும் குசுகுசுவென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

“மலிக்குல் முஸ்லிமீன், சுல்தானுல் முகர்ரம், ஸாஹிபுல் ஜலாலுல் மலிக் முஅல்லம் தூரான்ஷா, பின் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஆண்டவன் உதவியால் இன்னம் உயிருடன் இருப்பதால்தான் உம்மை இக்கணமே கைது செய்யும்படி எங்களுக்கு ஆக்ஞையிட்டு அனுப்பியிருக்கிறார். கதவைத் திறங்கள்!”

“மலிக்குல் முஅல்லம் சுல்தான் என்பதை நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையும் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி காலஞ் சென்ற பின்னர் இந்த நாட்டுக்கு வேறு சுல்தான் யாரும் கிடையாரென்பதையும் நான் கூறுவதாகப் போய், அவனிடம் தெரிவியுங்கள்! நான் கதவையும் திறக்க முடியாது; என்னைக் கைது செய்யவும் உங்களால் இயலாது.”

“மரியாதையாய்த் திறக்காவிட்டால், பலாத்காரத்தையும் நாங்கள் பிரயோகிக்கலாமென்று சுல்தானிடம் அனுமதி பெற்றிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கிறோம்.”

ஷஜருத்துர் யோசித்தார். முரட்டுப் பயல்கள் கதவைத் தகர்த்துத் தம்மைக் காலித்தனமாக நடத்தவுங்கூடும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். எனவே, மெளனமாய் நின்றார். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகப் போய் முடிந்ததே என்று திகைக்கலாயினார்.

“நான் என்ன குற்றம் செய்ததற்காக என்னைக் கைது செய்யச் சொல்லிக் கட்டளை பிறந்தது?” என்று நிதானமாய்க் கேட்டார்.

“கதவைத் திறந்து விட்டால், எல்லாம் தானே தெரியும். திறக்க முடியுமா, முடியாதா?”

“விசாரணை இல்லாமல் நான் கைது செய்யப்பட இணங்க முடியாதென்பதை உங்கள் சுல்தான் என்பவனிடம் போய்ச் சொல்லுங்கள். மீறிப் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதாயிருந்தால், அனர்த்தம்தான் விளையுமென்று நான் எச்சரிப்பதாகவும் அவனிடம் தெரிவியுங்கள். சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபியின் பட்டமகிஷியைக் கைது செய்யும் அதிகாரம் கலீபாவுக்குக்கூடக் கிடையாதென்று நான் சொல்வதாக அவனிடம் போய்க் கூறுங்கள்.”

இந்த வார்த்தைகளைக் கூறியவுடன், ஷஜருத்துர் என்ன எதிர்பார்த்தாரோ, அது நடந்தது. வெளியே நின்றவர்கள் பலாத்காரத்துடனே கதவைத் தகர்த்தார்கள். அரண்மனையின் அந்தப்புரத்திலே இருக்கிற அந்தரங்க அறைகளின் கதவுகள் என்ன இலேசு பட்டவையா? எனவே, கனமான அக்கருங்காலிக் கதவுகள் புர்ஜீ மம்லூக்குகளின் கடுந்தாக்குதலைச் சட்டைசெய்யவில்லை.

உள்ளே நின்ற ஷஜருத்துர்ரோ, எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, அசையாது நின்றுகொண்டிருந்தார். கதவு திறந்துவிட்டால், போராடி பிராணத் தியாகம் புரிந்துவிடுவது என்றுகூட உறுதிபூண்டு விட்டார். எப்படிப்பட்டவர்தாம் இந்த அநியாயங்களை இன்னமும் வாளா சகித்துக்கொண்டிருப்பார்?

கதவின் உறுதி சிறிதும் தளரவில்லையென்றாலும் முரட்டு புர்ஜீகளின் தாக்குதலால் அருகுகால் – நிலை – ஆட ஆரம்பித்துவிட்டது.

முன்றானையை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு, ஷஜருத்துர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தார். கதவும் ஈடாட்டம் கொண்டுவிட்டது; சற்று நேரத்தில் அத்தாக்குதல் திடீரென்று நின்றது. ஷஜருத்துர் அதிசயத்துடன் இடுக்கு வழியே எட்டிப் பார்த்தார். ஒருகால் அந்த புர்ஜீகள் இன்னம் பலமான மோதுங் கருவியைக் கொண்டுவரப் போயிருக்கக் கூடுமென்று நினைத்தார்.

ஆனால், வெளியே வாளுடன் வாள் மோதுகிற களபள சப்தமும், சிலர் வெட்டுண்டு வீரிட்டலறி விழுகிற சப்தமும் கேட்டன. ஒரே பரபரப்பும் போர் நடப்பது போன்ற போன்ற பேரொலியும் எழுந்தன. ஷஜருத்துர் ஒன்றும் புரியாமல் கதவில் சார்ந்து நின்றுகொண்டு, தமது முதுகினால் மோதி முட்டுக் கொடுத்துக் கொண்டு, கதவு தகர்ந்து வீழ்வதானால் தம்மீது விழுந்து, தம்மையும் குப்புறத் தள்ளட்டுமென்று, இரு கால்களால் பலமாகத் தரையில் ஊன்றி நின்றார்.

வெளியே நடந்த போரில் ஒவ்வொருவராக வெட்டுண்டு விழ விழ எழுந்த சப்தத்தை எண்ணிக் கொண்டே நின்றார் ஷஜருத்துர். பொழுது புலரப்போவதை அறிவிக்கும் தலைச் சேவலும் கூவிற்று.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment