அல்லாஹ்வின் சாபம் பாபிகளின்மீது உண்டாகுக.
“நியோக் பஹுகாயெ நமஹா.”
அறிவிற் சிறந்த அன்பர்காள்! மஹரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி
தமது “சத்தியார்த்த பிரகாசம்” இரண்டாம் பாக இறுதியில் “எனது கொள்கை” என்னும் தலைப்பின் கீழ் 47-ஆவது நிபந்தனையில் இவ்வாறு இயம்பியுள்ளார்:
“பெண்கள் விவாகமானபின் புருஷனை இழந்து தனித்துவிட்ட போதும் அல்லது அப்புருஷன் ஆண்மைத்தனத்தை இழந்தோ சதா வியாதியால் பீடிக்கப்பட்டோ இருந்துவரும் போதும் அல்லது ஆடவன் ஆற்றமாட்டாத் தனத்தால் அவஸ்தைப் படும்போதும் அப்பெண்மணிகள் தங்கள் வர்ணத்தில், அல்லது தங்களினும் மேம்பட்ட வர்ணத்திலுள்ள (அன்னிய) புருஷர்களுடன் கலந்து மக்கள்களைப் பெற்றெடுத்துக்கொள்வது நியோகமாகும்.”
பேஷ்! பிள்ளைகளைப் பெறுவதுதான் நியோகத்தின் பிரயோஜனம் என்பீர்களாயின், அது வீண்வாதமேயாகும்; ஏனெனின், ஹிந்துக்களின் மற்றொரு நல்ல வழக்கமேபோல் வேறு பிள்ளைகளையெடுத்து ஸ்வீகாரம் செய்துகொள்வதால் அத்தகைய குறை நிவர்த்தியாய் விடாதா? மேலும் மானக்கேடான நியோகமென்னும் ஈனத்தொழலினின்றும் அன்னவர் நிவர்த்தியாய்விடலாம். அல்லது இஸ்லாத்தில் கூறுவதே போல் புருஷர்கள் ஒழுங்கான மறுவிவாகம் செய்து கொள்வதனாலும் நல்ல சந்தானங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
“ஸ்திரீ புருஷருக்குள் பேருக்குமட்டும் விவாகம் முடிந்து, தேக சம்பந்தம் ஆகாமலிருக்கும் பக்ஷத்தில் புனர்விவாகம் செய்துகொள்ளலாம். பிரம்ம க்ஷத்திரிய வைசியர்கள் கல்யாணம் செய்துகொண்டு தேக சம்பந்தமான பிறகு மனைவி இறந்துபோன போதிலுங்கூட மறுவிவாகம் செய்து கொள்வது கூடாது,” என்று மஹரிஷி தயானந்த்ஜீ எழுதுகிறார்.
வாஸ்தவந்தான்! தேசம்பந்தம் ஆய்விட்டால் பிறகு தோஷம் பட்டுப்போகிறதே; தோஷம் பட்டவரை இவ்வுலகில் வேறு எவரே மணந்துகொள்வார்! இக்காரணத்தினால் விதவைகளும் புனர்விவாகம் செய்துகொள்ளக்கூடாதாம்: இவ்வாறே மனைவியை இழந்தவரும் மறுதாரம் செய்துகொள்ளக்கூடாது. ஆனால், இருவரும் நியோகம் செய்துகொள்ளலாம்.
ஷாபாஷ்! இது மிக மிக நன்றாய் இருக்கிறது!
பிறகு, “சத்தியார்த்த பிரகாசத்தில்” இவ்வாறும் காணப்படுகிறது:
“வினா:- வம்சபரம்பரையில்லாது மூல புருஷன் இறந்துவிடுவானாயின், அக்குடும்பம் நாசமாய்ப் போய்விடும்; மேலும் ஆண் பெண் இரு பாலாரும் வியபிசாரத்தில் ஈடுபட்டுச் சிசுஹத்தி பிள்ளை முறித்தல் முதலிய தீமைகளுள் இறங்கிவிடுதல் கூடும். ஆதலின், மறுவிவாகம் செய்து கொள்வதே நலமாகும்.
விடை:- இல்லை; இல்லை. ஆணும் பெண்ணும் தனித்திருக்க நாடுவார்களாயின், யாதொரு தீங்கும் ஏற்படமாட்டாது. (இது தயானந்தரது இயற்கையின் அறிவின்மையையே காட்டுகின்றது.) ஆனால், தங்கள் குடும்பம் நடந்தேறி வரவேண்டுமென்று நாடுவார்களாயின், சுஜாதிக் குழந்தை எவரையேனும் ஸ்வீகாரம் செய்து கொள்ளலாம்; (பிறகு ஏன் நியோகம் செய்தல் வேண்டும்? கபீர்.) இதனால் குடும்பமும் தொடர்ந்து வருவதுடன் வியபிசாரத்தனமும் ஏற்பட ஹேதுவில்லை. (வார்த்தையளவில் இது சரிதான்; ஆனால், ஆண் பெண் கூட்டுறவால் உண்டாகும் ஆனந்தம் இவர்களுக்கு எங்ஙனம் கிட்டும்? கபீர்.) அல்லது கற்பழிந்துபோம் என்னும் பயமிருந்தால் அப்பொழுது நியோகம் செய்துகொள்ளலாம்.”
பலே பேஷ்! இதிலிருந்து, தனிமையாயிருக்க முடியாதவர்களுக்கும் இச்சையை அடக்க இயலாதவர்களுக்கும் உபயோகமாயிருக்கும் பொருட்டே இந் நவீனமுறை (நியோகம்) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது செவ்வனே தெரிந்துகொண்டோம். இன்றேல் மேற்கூறிய வண்ணம் ஸ்வீகாரம் செய்துகொள்ளலாமன்றோ? ஆனால், யோக்கியமான முறையில் மறுவிவாகம் செய்துகொண்டால் குடும்பமும் நடைபெறும்; வியபிசாரத்துக்கும் இடமேற்பட மாட்டாது. ஆனால், மறுவிவாகம் செய்துகொள்வதால் பத்துப் பன்னிரண்டு பேர்வரை நியோகம் செய்துகொண்டு இன்பம் அனுபவிப்பது போன்ற சிற்றின்பத்தை அனுபவிப்பது முடியாதுதான். ஆதலின், மறுவிவாகத்தினும் “நியோகம்” தயானந்தரின் அபிப்பிராயத்தில் சிறந்ததாகவே காணப்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இன்னமும் தயானந்தரின் சத்தியார்த்த பிரகாசத்தில் இவ்வாறு காணப்படுகின்றனது:
“வினா:- புனர்விவாகத்துக்கும் நியோகத்துக்கும் வித்தியாசம் யாது?
விடை:- (1) கல்யாணமானவுடன் மணப்பெண் தன் தந்தையை விட்டு மணவாளனுடைய இல்லத்தில் வசிக்கிறாள்; பிதாவின் சம்பந்தம் குறைந்துபோகிறது. ஆனால், நியோகத்தில் விதவை தன் இறந்த புருஷன் வீட்டில் வசிக்கிறாள். (சாதாரண வியபிசாரிகளும் இப்படித்தானே செய்கிறார்கள்?)
(2) விவாகத்தினால் பிறக்கும் குழந்தைகள் தாயின் புருஷனுடைய சொத்துக்களுக்குப் பாத்தியதையை அடைகின்றன. ஆனால், நியோகத்தினால் உண்டான விதவைகளின் சந்தானம் பிள்ளையைக் கொடுத்தவனுடைய குழந்தையாகக் கருதப்படுவதில்லை; அந்த அப்பனுடைய சொத்தின்மீது இக் குழந்தைக்குப் பாத்தியமில்லை; அவனது அதிகாரமும் இப் பிள்ளைகளின்மீது செல்லாது. இக் குழந்தைகள் தம் தாயின் இறந்துபோன கணவனுடைய பிள்ளைகளாகவே கருதப்பட்டு, அவனது கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகவே அவனுடைய சொத்துக்களுக்குப் பாத்தியஸ்தர்களென்று கொள்ளப்பட்டு, அவனுடைய வீட்டிலேயே வசிக்கிறார்கள். [ஒவ்வொரு வியபிசாரியின் பிள்ளைகளும் அவளுடைய மரித்துப்போன அல்லது உயிருடனிருக்கும் புருஷனுடைய பிள்ளைகளாகவே கருதப்பட்டு, அவனுடைய சொத்துக்கே வாரிஸ்களாகின்றன; அவனுடைய வீட்டிலேயே வளர்ந்து வருகின்றன. (எனவேதான் கொங்குநாட்டில், “ஆண்டிக்குப் பிறந்தது அரசாள்கிறது; கவுண்டருக்குப் பிறந்தது கைத்தாளம் போடுகிறது,” என்று ஒரு பழமொழி வழங்குகிறது.) ஆதலின், நியோகத்துக்கும் சாதாரண வியபிசாரத்துக்கும் இடையில் வித்தியாசமொன்றும் காணக் கிடைக்கவில்லை. எனவே, இருவகுப்பினரும் கேவலம் ஒரு சாதாரணமான சிற்றின்ப இச்சையையே நிறைவேற்றிக்கொள்ளும் தீய எண்ணத்துடனேதான் இவ்வாறு செய்துவருகிறார்களென்று நாம் செவ்வனே தெரிந்துகொள்ளுகிறோம். இன்றேல் ஒழுங்கான மறுவிவாகம் கூடாதென்று கூறியிருக்கமாட்டார்.]
(3) விவாகத்தினால் புருஷனும் மனைவியும் பரஸ்பர மேதை மரியாதைகளுக்கும் பாதுகாப்புக்கும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நியோகத்தில் இத்தகைய கட்டுப்பாடு ஒன்றுமில்லை; அஃதாவது (ஒப்பந்த காலம் கழிந்தபிறகு) நியோக உறவுகளை உதறிவிடலாம். (ஆனால், வியபிசாரம் புரியும் ஆடவரும் பெண்டிரும் இப்படித்தானே ‘நீரைத் தொட்டையோ? மோரைத் தொட்டையோ?’ என்னப்படுவதே போலத் தனித்தனியே இருந்துவருகிறார்கள்!)
(4) விவாகமான தம்பதிகளுடைய சம்பந்தம் மரணபரியந்தம் நிலைத்திருக்கிறது; ஆனால், நியோகத்தின் சம்பந்தம் வேலை முடிந்தவுடன் நீங்கிவிடுகின்றது. (இவ்விதமாகத்தான் வியபிசாரம் புரியும் ஆணும் பெண்ணும் நடந்துவருகிறார்கள். சிற்றின்ப இச்சை அதிகரிக்கும்போது இருவரும் ஒன்று கூடுகின்றனர்; பிறகு அவரவரும் தத்தம் விடுதிகளில் வசித்துவருகின்றனர்; இருவருக்கிடையில் வேறு தொடர்பு கிடையாது. இத்தகைய வியபிசாரத்தால் குழந்தை உண்டாய்விடுமாயின், அந்தக் குமாரனும் தன் தாயின் புருஷன்மீது வாரிஸாய்ச் சவாரிசெய்ய ஆரம்பித்துவிடுகிறான். கபீர்.)
(5) விவாகமான தம்பதிகள் ஒன்று சேர்ந்து குடும்பத்தினுடைய பொது நன்மைக்காகவே உழைக்கிறார்கள். (இவ்வாறாகத்தானே வியபிசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆடவரும் பெண்டிரும் செய்துவருகின்றனர்? எனவே, அந்த நியோகத்துக்கும் இந்த வியபிசாரத்துக்கும் என்ன வேறுபாடு காணப்படாநின்றது? கபீர்.)
-பா. தாவூத்ஷா
<<நூல் முகப்பு>>