கப்ருடைய (நபி வலி) இடத்தில் சுவால் செய்வதன் இரண்டுவிதம்

by பா. தாவூத்ஷா

முதலாவது நீங்கள், கப்ருக்குள்ளிருக்கும் ஒருவர் உங்களைக் காட்டினும் ஆண்டவனிடம் அதிக சமீபமானவராய் இருக்கிறார்; மேலான பதவியடைந்தவராய் இருக்கிறார், என்றெண்ணி அவரிடம் உங்கள்

நாட்டங்களைத் தெரிவிப்பீர்களாயின், அவர் உன்னதப் பதவியில் இருக்கிறார்; ஆண்டவனுக்கும் அணித்தாயிருக்கிறார் என்பது உண்மையே. ஆனால், நீங்கள் உண்மைக்கு முரணனான கருத்தை உண்மையென்று எண்ணிக் கொண்டீர்கள். இதனைச் சிறிது ஆழ்ந்து கவனிப்பீர்களேல் நீங்கள் இதன் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

எப்படியெனின், உண்மையிலேயே கப்ருக்குள்ளிருக்கும் அவர்கள் நுங்களைவிட ஆண்டவனிடம் நெருங்கியவர்களாய் இருக்கின்றார்கள்; அல்லது மேலான பதவியை அடைந்தவர்களாய் இருக்கின்றார்கள், என்று சொல்லப்படுமாயின், அதன் தாத்பர்யமாவது, அல்லாஹ் உங்களைவிட அவர்களுக்கே அதிகமான நன்மையைச் செய்வான்; அப்படியே நுங்களைக் காண அவர்களுக்கே மேலான பதவியையும் அளிப்பான் என்பதேயாகும்.

ஆனால், நீங்கள் நேரே ஆண்டவனை விளித்து அவனிடம் நுங்களின் குறைகளைத் தெரிவித்துக் கொள்ளாது, இப்பெரியோர்களை அழைப்பதனால் உங்கள் வேண்டுதல்களும் நாட்டங்களும் நிறைவேறி விடுமென்பது இதன் தாத்பரியமன்று. உதாரணமாக, நீங்கள் கோரிக் கொள்ளும் கோரிக்கையானது ஒரு சமயம் பாபத்தின் நிமித்தமாய் இருப்பின், அஃது ஆண்டவனால் வெறுக்கப்படும்போதும் அல்லது நீங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் இழைத்த பாபிகளாயிருக்கும்போதும் அன்பியாக்களும் ஸாலிஹீன்களுமான இவர்கள் நுங்களுக்கு எந்த விதமாகவும் உதவி செய்வது முடியாது; செய்யவும் மாட்டார்கள். ஏனெனின், ஆண்டவனுக்குப் பொருத்தமற்ற விஷயத்தில் பெரியார்களான இவர்கள் தலையிடவே மாட்டார்கள் என்பது சகலருமறிந்த ஓர் உண்மையேயாகும். இல்லை, நீங்கள் கேட்கும்படியான விஷயங்கள் நன்மையானவையாய் இருப்பின், அவற்றை பைசல் செய்யும் விஷயத்தில் உங்களுக்கு ஆண்டவனைத் தவிர வேறு யாரும் அதிகமாய் எந்த நன்மையையம் செய்துவிடப்போவதில்லை. ஏனெனின், இவனே துஆக்களை ஏற்பவனாகவும், வேண்டிய தேவைகளை நிறைவேற்றித் தருபவனாகவுமிருக்கிறான்.

இரண்டாவதாக, கப்ருக்குள்ளிருக்கும் ஒருவர் உங்களுக்காக ஆண்டவனிடம் துஆ கேட்பார் என்றும் அல்லது நீங்கள் நேரே ஆண்டவனிடம் கேட்பதைவிட அவர்கள் மூலமாய் துஆ கேட்கப்படுமாயின், அதிசீக்கிரம் அங்கீகரிக்கப்படும் என்றும் எண்ணுவீர்களாயின், இது மற்றொருவிதமாகும். இதனால் உங்கள் நாட்டம் என்னவெனின், நீங்கள் ஆண்டவனிடம் ஒன்றையும் தேடுவதில்லை; தனியே அவனிடம் துஆ கேட்பதுமில்லை. ஆனால், உங்களின் நிமித்தம் அவர்கள் ஆண்டவனிடம் துஆ கேட்க வேண்டுமென்பதற்காகவே (உயிரோடு இருப்பவர்களிடம் வேண்டுதல் செய்வதேபோல்) செய்கின்றீர்கள் என்பதாகும். ஆனால், இவ்வாறு நாயகத்தின் திருச்சமுகத்தில் தங்களின் சஹாபாக்களான தோழர்களும் நாயகத்தின் ஜீவித காலத்தே துஆ கேட்டிருக்கின்றார்கள். இவ்வாறு உயிரோடு இருக்கின்ற பெரியோர்களின் வாயியலாய் ஆண்டவனிடம் துஆ கேட்பது கூடுமென்பதை மேலே உங்களுக்கு விளக்கியிருக்கின்றோம். ஆனால், மரணமடைந்து சென்ற அன்பியாக்களையும் அவ்லியாக்களையும் சாலிஹீன்களையும் நோக்கி, “எங்களுக்காக உங்கள் ரப்பினிடம் சுவால் செய்வீர்களாக” என்று கூறுவது கூடாது.

மேலும் எந்த ஸஹாபாக்களும் தாபியீன்களும் இமாம்களும் மேற்கூறியவாறு செய்ததாகவோ, கூடுமென்று சொன்னதாகவோ ஏதும் காணக் கிடைக்கவில்லை. இம்மாதிரியான முறையை ஏதேனுமோர் ஹதீதும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், புகாரீயில் ஒரு விஷயம் காணப்படுகிறது:

“உமர் பாரூக் (ரலி) அவர்களின் கிலாஃபத்தின்போது மழை பெய்யாமல் பஞ்சம் வந்தாற்போல் காணப்பட்டது. அதுசமயம் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜரத் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்நிறுத்தி மாரிக்காக துஆ கேட்பித்து, ஆண்டவனை நோக்கி, ‘ஏ ஆண்டவனே! (நாயகம் உயிரோடிருந்த காலத்தே) எப்பொழுதேனும் மழையில்லாமல் கஷ்டமேற்படுமாயின், உன்னுடைய நபியை எங்களுக்காக உன்னிடம் வஸீலாவாய்க் கொண்டு வந்திருந்தோம். இப்பொழுதோ உன் நபியின் சிறிய தந்தையை வஸீலாவாய்க் கொண்டிருக்கிறோம். எனவே, எங்கள்மீது இரக்கம் பூண்டு மழையைப் பொழியச் செய்வாயாக’ ” என்று கூறினார்கள்.

ஆனால், இவர்களெல்லாம் நாயகம் (ஸல்) அவர்களின் சமாதியினருகே சென்று, “யா ரஸூலுல்லாஹ்! எங்களுக்காகத் தாங்கள் ஆண்டவன்பால் துஆ கேட்பீர்களாக!” அல்லது “எங்களுக்காக மழையை இறக்கும்படி ஆண்டவனிடம் கேட்பீர்களாக!” அல்லது “எங்கள்மீது பஞ்சமும் கஷ்டமும் தொடுத்திருக்கின்றன; இதற்குப் பரிகாசரம் தேடவேண்டுமென்றே தங்கள் திருச்சமுகமும் வந்திருக்கின்றோம்,” என்றேனும் அல்லது இதுபோன்ற வேறு விஷயங்களையேனும் எப்பொழுதும் கேட்டதே இல்லை. இவ்வாறு மரணமடைந்தவர்களின் கப்ரினருகே சென்று தங்கள் நாட்டங்களைக் கேட்பது நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலில்லாத ஒரு நவீன பித்அத்தான காரியமேயாகும். இதற்கு எந்த விதமாகவும் குர்ஆனிலோ அல்லது ஹதீதிலோ ஆதாரமொன்றும் கிடையாதென்பது திண்ணம்.

நாயகத்தின் உத்தம நேயர்களான ஸஹாபாக்கள் நாயகத்தின் கப்ரினருகே செல்வார்களாயின், அப்பொழுது எம்பிரான்மீது சலாம் சொல்வார்கள். எதையேனும் கேட்க வேண்டுமென நாடுவார்களாயின், உடனே கப்ரின் திசையைவிட்டுத் திரும்பிக் கிப்லாவை முன்னோக்கினவர்களாய்க் கையைத் தூக்கி ஆண்டவனிடம் தங்கள் கோரிக்கைகளை வேண்டுதல் புரிவார்கள். (இப்படியேதான் இன்று மதீனாவிலுள்ள நபிகள் திலகத்தின் கல்லறையின் முன்னே நடைபெற்று வருகிறது.) இதையே முஅத்தா முதலிய ஹதீது கிரந்தங்கள் ஊர்ஜிதப்படுத்தி நிற்கின்றன:

“ஆண்டவனே! என்னுடைய கப்ரை வணக்க ஸ்தலமாகச் செய்து விடாதிருப்பாயாக. தங்கள் அன்பியாக்களுடைய கப்ருகளை வணங்கும் ஸ்தலமாகச் செய்துகொண்ட அவ் வகுப்பார்மீது ஆண்டவன் மிக்க கோபம் கொண்டவனாய் இருக்கிறான்” (சுனன்).

“என்னுடைய கப்ரை வணங்கும் பெரிய ஸ்தலமாகச் செய்துகொள்ளாதீர்கள். ஆனால், என்மீது சலவாத்து சொல்வீர்களாக.”

ஹஜரத் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: “இவ்வார்த்தை இல்லையாயின், நாயகமவர்களின் சமாதி வெளியிடத்திற்கு வந்திருக்கும் (திறந்த மைதானத்தில் பெரிய கோரி கட்டப்பட்டிருக்கும்). ஆனால், நாயகமவர்கள் மனிதர்கள் தங்கள் சமாதி முன் சிர வணக்கம் புரிவதை அனுமதித்தார்களில்லை. (இதனால்தான், நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தில் இருக்கும்போது யூத நஸாராக்களின் இவ்வாறாய செய்கையைச் சபித்துமுள்ளார்கள்)”  (புகாரீ).

முஸ்லிமில் மற்றொரு விஷயம் பின்வருமாறு காணக்கிடக்கின்றது:

“நாயகம் மரணமடைவதற்கு ஐந்துநாள் முன்னே சொன்னதாவது: ‘உங்களுக்கு முன்சென்ற நபிமார்களின் சிஷ்ய வர்க்கத்தினர் சமாதிகளை வணங்கும் ஸ்தலமாகச் செய்துகொண்டார்கள்; நீங்களும் சமாதியை வணங்கும் ஸ்தலமாகச் செய்துகொள்ளாதீர்கள்; நிச்சயமாகவே நான் அதை விட்டு உங்களை விலக்குகின்றேன்,” – (ஸஹீஹ் முஸ்லிம்).

இன்னமுமொரு நபிநாயக வாக்கியத்தைக் கவனிப்பீர்களாக:

“சமாதியினருகேதான் சென்று ஜியாரத் செய்யவேண்டும் என்பவர்களையும் அதன்மீது வணக்க ஸ்தலங்களைச் செய்பவர்களையும் அதற்கென்றே விளக்கு முதலிய பிரகாசத்தை உண்டுபண்ணுபவர்களையும் ஆண்டவன் சபிக்கின்றான்” – (சுனன் அபூதாவூத்).

இதனால்தான் நம் பெரியோர்களான உலமாக்கள், சமாதிகளை வணங்கும் ஸ்தலமாகச் செய்துகொள்வது கூடாதென்றும் சமாதிகளின் நாமங்களைக் கொண்டு நேர்ச்சை செய்வதும் அதற்கெனக் காவல் காத்துக்கொண்டிருக்கும் முஜாவிரீன்களுக்குத் திரவிய சகாயம் (பண உதவி) செய்வதும் பக்தியின் காரணமாய் ஆடு, மாடு, கோழி முதலிய உயிர்ப் பிராணிகளை அங்குக் கொண்டு விடுவதும் கூடாதெனச் செய்திருக்கின்றனர். அன்றியும், இம்மாதிரியான செயல்களனைத்தும் பாபமான காரியமென்றும் தீர்ப்புச் செய்திருக்கின்றனர்.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment