மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், முதுகலைப் படிப்புகள் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பலரும் அவரவர் துறை சார்ந்த படிப்புகளில்
நல்ல திறமையும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமியக் கல்வியிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் அவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கு பிறந்தார், அவருடைய பெற்றோர்கள் யார், நபிகளார் மக்களுக்கு எதைப் போதித்தார்கள் எனும் அடிப்படை விவரங்கள்கூட அறியாமல் இருக்கின்றனர்.
இந்த வாய்ப்புக்கேடான நிலைமைக்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்லர். சிறு வயதில் அவர்களுக்கு வீடுகளிலோ பள்ளிக்கூடங்களிலோ நபி வரலாறு, இஸ்லாமிய வரலாறு ஆகியவை கற்பிக்கப்படவில்லை. கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது.
“பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் நபி வரலாற்றைக் கற்பிக்க நாங்கள் தயார்தான்; ஆனால் அதற்கேற்ற தகுதியான நூல்கள் இல்லையே” என்பது பள்ளி நிர்வாகிகளின் குறையாக இருந்தது.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் இதோ, ‘நபி வரலாறு நம் பிள்ளைகளுக்கு’ எனும் தலைப்பில், மிக மிக எளிய நடையில், கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், இறைத்தூதரின் இனிய வரலாறு வெளிவந்துள்ளது. குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதற்காக அழகிய ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பாட நூலாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன.
நூலாசிரியர் அதிரை அஹ்மத் அவர்கள் நல்ல எழுத்தாளர். பன்னூலாசிரியர், மரபு வழுவாமல் கவிதை இயற்றும் ஆற்றலாளர், பன்மொழி அறிஞரும்கூட. தமிழைப் போலவே ஆங்கிலத்தையும் அரபியையும் ஆளத்தெரிந்தவர். அவருடைய கடும் உழைப்பில் இந்த நூல் அழகாக உருவாகியுள்ளது.
அதுமட்டுமல்ல, குழந்தை இலக்கியம் என்பதே தமிழில் மிகக் குறைவு. அதுவும் இஸ்லாமியக் குழந்தை இலக்கியம் மிக மிகக் குறைவு. குழந்தைகளுக்கான இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
தமிழறிந்த ஒவ்வொருவரும், குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பிள்ளைகள் அனைவர் கைகளிலும் இந்த இனிய நூல் சென்றுசேர வேண்டும்; அந்த தளிர்களுக்கு இளம் வயதிலேயே இறைத்தூதரின் அழகிய வரலாறு அறிமுகமாக வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் இந்த நூலை வாங்கி தங்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.
– தங்கம்
நன்றி: சமரசம், 1-15 பிப்ரவரி 2014
புத்தக விபரங்களுக்கு இங்கே க்ளிக்கவும்