இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 4

by admin

4. தாருல் இஸ்லாம்

தாவூத் ஷா நடத்திய “தாருல் இஸ்லாம்” ஒரு புரட்சி இதழ்!

“பள்ளிப் பருவத்தில் எனது ஒரு கையில்

‘குடி அரசு’ இதழும் மறு கையில் ‘தாருல் இஸ்லாம்’ இதழும் இருக்கும்!” என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பல மேடைகளில் பேசியிருக்கிறார். (பெரியார் நடத்திய இதழ், “குடி அரசு”.)

“தாருல் இஸ்லாம் என்ற வாரப் பத்திரிகையையும் அதன் ஆசிரியர் தாவூத்ஷாவையும் நினைக்கும் தோறும் கழிபேருவகை அடைகின்றோம். ‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகையும் அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என்பார், தந்தை பெரியார்.

சமுதாயச் சீர்திருத்தத்தில் “இஸ்லாமியப் பெரியார்” என்றே தாவூத்ஷாவைச் சொல்லலாம். பெரியாருக்கு “விடுதலை”! தாவூத் ஷாவுக்கு “தாருல் இஸ்லாம்”!!

“தத்துவ இஸ்லாம்” இதழின் பெயர்தான் “தாருல் இஸ்லாம்” என்று மாற்றப்பட்டது. 1923 ஜனவரியில் தான் லண்டனில் இருந்தபோதே இந்த மாறுதலை தாவூத்ஷா செய்தார்.

“இஸ்லாம் மார்க்கத்தின் தத்துவங்கள் அல்லாது, முஸ்லிம் உலகத்தின் விருத்தாந்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கேற்ப ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றப்பட்டது” என்பார், தாவூத்ஷா.

தாருல் இஸ்லாம் என்றால் “இஸ்லாத்தின் வீடு” என்றும் “சமாதான இல்லம்” என்றும் “முஸ்லிம் உலகம்” என்றும் பொருள்படும்.

சென்னைக்கு

பெயர் மாற்றத்துக்குப் பிறகும் தாருல் இஸ்லாம் தள்ளாடித் தள்ளாடித்தான் நடைபோட்டது. அவ்வேளையில் சென்னை கடற்கரை இரண்டாம் வீதியில் தொழில் நடத்தி வந்த அகமத் பாட்சா சாகிப், தனது அலுவலகத்தில் இடம் தருவதாகக் கூறினார். இட வாடகை மிச்சம் என்று தாருல் இஸ்லாம் சென்னைக்கு வந்தது. இரண்டு மாதத்தில் அவருக்குத் தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டதால், அவர் இடத்தைக் காலி செய்தார். இதனால் தாருல் இஸ்லாம் புதிய இடம் பார்த்துத் திருவல்லிக்கேணிக்குச் சென்றது.

தாவூத் ஷா மயிலாப்பூரில் குடியிருந்தார். அங்கும் அவரை வறுமை விரட்டிக் கொண்டு வந்தது. “பசியால் வருந்தினோம். பட்டினியால் வாடினோம். மயிலையில் குடியிருக்க முடியாது, சிக்கனமாக எளிய வாழ்க்கை நடத்த பரங்கிமலைக்குக் குடிபோனோம்” என்கிறார், தாவூத்ஷா.

பரங்கிமலையிலிருந்து நாள்தோறும் அவர் மின்சார ரெயிலில் எழும்பூருக்கு வருவார். அங்கேயிருந்து திருவல்லிக்கேணிக்கு “நடைராஜா”தான்!

வருமானத்தைப் பெருக்கத் தாருல் இஸ்லாம் புத்தகசாலை தொடங்கி, சொந்த நூற்களையும், பிற நூற்களையும் விற்பனை செய்தார்.

ரஞ்சித மஞ்சரி (1932, மாதம்) போன்ற பொழுது போக்கு இதழ்களையும் நடத்தினார்.

படிக்கத் தடை!

தாருல் இஸ்லாம் புரட்சி இதழாக இருந்ததால், அந்த இதழை யாரும் வாங்கவோ படிக்கவோ கூடாது என்று உலமாக்கள் தடை விதித்தார்கள். என்றாலும், இளைஞர்கள் இரகசியமாக வாங்கிப் படித்தார்கள்! படித்தவர்கள் பாராட்டினார்கள்.

இன்றும் கூடத் தாருல் இஸ்லாமைப் பாராட்டும் இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கிறார்கள். இதழாளரும், எழுத்தாளருமான ஜே. எம். சாலி, “பல புதிய இஸ்லாமிய இதழ்கள் தோன்றுவதற்கு ‘தாருல் இஸ்லாம்’ உந்து சக்தியாக அமைந்தது. பல பத்திரிகையாளர்களும் படைப்பாளர்களும் தோன்ற பா.தாவூத்ஷா எடுத்துக்காட்டாக அமைந்தார்” என்று சொல்லுகிறார்.

“ஒரு சிலர் தாவூத்ஷா மீது கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்கலாம், ஒதுக்கலாம். அவரும் பிரச்சினைக்கு உரியவராக இருக்கலாம். அனால், அவரது எழுத்துகளை வெள்ளை உள்ளத்துடன் ஆழ்ந்து படிப்போர் அவரது நாடி நரம்பெல்லாம் ‘இஷாஅத்தே இஸ்லாம்’ இரத்தம் ஓடக் காணலாம்” என்கிறார், பேராசிரியர் தை. கா. காதர் கனி.

ஈழத்து சோனகர் ஏ. எம். அசீசு, “இந்த மாசிகையின் வசன நடையும், ஆசிரியர் தலையங்கங்களும், சிறப்புக் கட்டுரைகளும் அந்நாட்களில் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எப்பொழுது வரும் என்று காத்திருந்து, வந்ததும், என் மாமாவிடம் இரவல் வாங்கிப் படிப்பது வழக்கம்” என்று கூறியுள்ளார். இது பாராட்டு மட்டுமல்ல; அந்நாளில் தாருல் இஸ்லாம் இதழுக்கு இளஞர்களிடம் இருந்த பெருத்த வரவேற்பையும் இது காட்டுகிறது.

தாருல் இஸ்லாம் ஒரு இஸ்லாமிய இதழ் என்றாலும், தாவூத் ஷாவின் சிந்தை அள்ளும் செந்தமிழ் நடை மற்றவர்களையும் படிக்கத் தூண்டியது.

சுதேச மித்திரன் ஆசிரியர் சி. ஆர். சீனிவாசன், தவறாமல் தாருல் இஸ்லாம் படித்தார். தாவூத் ஷாவின் நண்பராகவும் விளங்கினார்.

ஆனந்த விகடன் வாசன் தாருல் இஸ்லாம் வாசகர். தனது நூல், திரைப்பட விளம்பரங்களை இவ்விதழுக்குக் கொடுத்தார். வாரந்தோறும், ஆனந்த விகடனை தாவூத் ஷாவுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்.

புகழ் பெற்ற இதழாளரான எஸ்.ஜி. இராமானுசலு, “இஸ்லாத்தினுடைய அறிவின் வெளிச்சத்தில் உலாவும் மாண்புமிக்க அன்பின் மணியே! சகோதரச் செல்வமே!” என்று தாவூத் ஷாவைப் பாராட்டினார்.

“தாருல் இஸ்லாம் இதழ் இஸ்லாம் மார்க்க உண்மைகளை முஸ்லிம் மக்களுக்குக் கற்பித்து சமயப்பணி புரிய வேண்டும் என்னும் நோக்கத்தோடு தோன்றி பணிபுரிகிறது” என்று, “நாள் கிழமை திங்கள் இதழ் விளக்க வரிசை” என்ற நூல் குறிப்பிடுகிறது.

“இஸ்லாமித இதழ்களில் கொடிகட்டிப் பறந்த இதழ், தாருல் இஸ்லாம். இவ்விதழுக்கு முஸ்லிம்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்குக் காரணம், தெளிந்த தமிழில் எழுதியதுதான். இதன் காரணமாக மற்ற சமயத்தாரும் கூட இவ்விதழை வாங்கிப் படித்தார்கள்” என்பார், அ.மா. சாமி.

சமயங்களை சாடிய தந்தை பெரியாரும் கலைஞர் கருணாநிதியும் கூட தாருல் இஸ்லாம் வாசகர்கள்!

சொந்த அச்சகம்

சென்னையில் கார்டியன் என்ற அச்சகத்தில் தாருல் இஸ்லாம் அச்சாயிற்று. இந்த அச்சகம் ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. 1850 முதல் நடந்து வந்தது. 1927 இல் இந்த அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கிக் கொண்டார். இங்கு அரபி எழுத்துகளும் இருந்ததால், திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை அச்சிட வசதியாக இருந்தது.

சொந்த அச்சகம் வந்ததும், தாருல் இஸ்லாம் வார இதழ் ஆயிற்று. 1934 இல் வாரமிருமுறை வெளி வந்தது. பிறகு நாளிதழ் ஆயிற்று. 1941 இல் சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த போது (ஜின்னா கலந்து கொண்டார்.) காலை, மாலை இருவேளையும் தாருல் இஸ்லாம் வெளிவந்தது. காலை மாலை இருவேளையும் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் தாருல் இஸ்லாம்தான்.

தேய்பிறை

தாருல் இஸ்லாம் பிரதிகளில் பாதிக்கு மேல் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் விற்பனை ஆயின. குறிப்பாக, பர்மா, மலேசியாவில் வாசகர் கூட்டம் அதிகம்; வரவேற்பும் அதிகம். இரண்டாவது உலகப்போரில் அந்த நாடுகள் ஜப்பானியர் வசம் ஆயின. இதனால் அங்கு இதழை அனுப்ப இயலவில்லை. சிங்கப்பூர் வரை ஜப்பானியர் வந்து விட்டார்கள். ஜப்பான் போர் விமானங்கள் எந்த நேரத்திலும் சென்னையில் குண்டு வீசக் கூடும் என்ற அச்சம் இருந்தது. எனவே, 1942 இல் தாருல் இஸ்லாம் நாளிதழை நிறுத்திவிட்டுத் தாவூத்ஷா நாச்சியார்கோயிலுக்குப் போய்விட்டார். அதன்பின் தாருல் இஸ்லாம் கடனில் மூழ்கியது. கார்டியன் அச்சகமும் தாவூத் ஷாவின் கையிலிருந்து நழுவிச் சென்றது.

போர் நின்றபின், 1945 இல் தாவூத்ஷா மீண்டும் சென்னையில் குடியேறினார். 1947 இல் தாருல் இஸ்லாம் இதழை மாத இதழாக மறுபடி தொடங்கினார். காலத்துக்கு ஏற்ப மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. சினிமா விமர்சனம் வெளியிட்டார்கள். சினிமா விளம்பரமும் வெளிவந்தது.

ஷாஜகான் புத்தகசாலை தொடங்கினார்கள். “மணவாழ்க்கையின் மர்மங்கள்”, “காதல் நினைவு”, “காமக்களஞ்சியம்”, “உச்ச ஸ்தான இன்ப சுகம்” முதலான இல்லறத்துறை நூல்களையும் விற்பனை செய்தார்கள்.

இருந்தும், சாண் ஏறினால் முழம் சறுக்கியது! இதனால் 1957 இல் இதழ் நின்றது.

1956 டிசம்பர் இதழ் கோட்டக்குப்பம் நூலகத்தில் இருக்கிறது. “இதழ் நின்ற பிறகும் இரண்டு ஆண்டு காலம் ஓரிரு இதழ்கள் அவ்வப்போது வெளிவந்தன” என்கிறார், கோட்டக்குப்ப நூலகச் செயலர் காஜி ஜெய்னுல் ஆபிதீன். தாவூத்ஷா எழுதிய அவரது வாழ்க்கைக் குறிப்பு 1957 இல் தாருல் இஸ்லாம் இதழ் ஒன்றில் வெளிவந்தது.

சீர்திருத்தக் கருத்துகளை செந்தமிழில் எழுதி, சமய வேறுபாடு இல்லாமல் சகலரையும் கவர்ந்த தாருல் இஸ்லாம் வீழ்ச்சி அடைந்தது ஏன்?

ஆசிரியர் தாவூத்ஷாவை லண்டனுக்கு அழைத்துப் போன காஜா கமாலுதீன்தான் காரணம்!

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment