பா. தாவூத்ஷா மறைவையொட்டி 14.3.1969 தேதியிட்ட வீரகேசரி பத்திரிகையில், கவிஞர் ஷம்ஸ் எழுதிய கவிதை இது. கவிஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுவதற்காக பரிசீலனையில் ஈடுபட்டபோது இது கிடைத்தது என்று அண்ணன் ஜவாத் மரைக்கார் இலங்கையிலிருந்து இன்று அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
-நூருத்தீன்
மறைந்தாயா?
பாரதம் தந்த பேரறிஞ! புத்துலகம்
படைக்கப் பணிபுரிந்த தாவூத்ஷா! நாம்பதைக்க
பார்விட்டுப் பிரிந்தாய் பரிதவித்தோம்! உன்றன்
புகழுடம் பழியாதே புவியுள்ள நாள்மட்டும்!
கூரிருட் குகையுட் கதிதேடும் நிலை! வெய்யோன்
கதிராற் களிப்புறம் தன்மைபோல் வாராந்தம்
தாருவிஸ் லாத்தின் தகைசால் போதனையாற்
தட்டித் துயில்கலைத்த தொண்டனே மறைந்தாயா?
சன்மார்க்கம் சொல்லாச் சடங்குகளைப் ‘பர்ளெ’ன்று
சாந்தி மறையின் பேராற் புரிந்துவரும்
கண்மூடித் தனத்தைக் கண்டித்தே கருத்தெல்லாம்
கடமை உணர்வீந்த கலையரசே! மறைந்தாயா?
புராணப் புளுகைப் பழங்கிஸ்ஸா நாமாவைப்
பெருமார்க்கம் என்றெண்ணிப் பாழாம் குழிவீழ்ந்தோர்
அருள்வேத வாக்கை அண்ணல் நபிவழியை
அகத்தில் அணிசெய்த அரும்பாதா மறைந்தாயா?
வெளிவேடம் தரித்த வஞ்சப் பீர்மாரின்
வலையிற் சிக்கியநம் வனிதையர் குலந்தன்னை
விழித்தெழுந்து வீரச் சமர்செய்யத் தூண்டியவர்
மாண்பை எடுத்தறைந்த மேலறிஞ! மறைந்தாயா?
வேதப் புரட்டால் வயிறு வளர்த்தவரின்
வேஷம் கலைத்தே மோதும் எதிர்ப்பனைத்தும்
வாதத் திறத்தால் வென்றே மெய்வழியை
வாகாய் அறைந்திட்ட வித்தகனே மறைந்தாயா?
ஆற்றின் ஒழுக்காம் அழகுரையால் அகக்கறைகள்
அகற்றப் பணிசெய்தாய்! அமுதத் தமிழ்மொழியில்
நூற்றுக்கணக்கில் நூல்கள் படைத்துண்மை
நுகரத் துணைசெய்த நல்லறிஞ! மறைந்தாயா?
-திக்குவல்லை சம்ஸ்
வீரகேசரி, 14.3.1969