தஞ்சை தாவூத்ஷா! – சரித்திரம் பேசுகிறது

by admin

கல்லூரியில் பயிலும்போது இவருக்குத் தமிழ்ப் பேராசிரியராகத் ”தமிழ்த் தாத்தா” உ.வே.சா. இருந்து வழிநடத்தினார். தத்துவத்துறைப் பேராசிரியராக, இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர், “தத்துவ மேதை” என போற்றப்படும் டாக்டர் ச.இராதாகிருஷ்ணன் இருந்தார். தாவூத் ஷா 1912ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

இந்திய விடுதலைப்போர் உச்ச கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தத காலம் அது. தாவூத் ஷாவின் உள்ளத்திலும் விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவர் உள்ளம் துடித்தது. அப்பொழுது, மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ”அன்னியப் பொருட்களை புறக்கணியுங்கள்!”, ”மாணவர்கள் கல்லூரிகளிலிருந்தும், அரசுப் பணிபுரிவோர் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறுங்கள்!”, ”செய் அல்லது செத்து மடி!” என்று அனைவரையும் முழங்கச் செய்தார். மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்ற தாவூத் ஷா, தமது சப்-மாஜிஸ்ட்ரேட் பதவியை உதறித் தள்ளினார்.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்கு வந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத் தெருவாக விற்பனை செய்தார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக “தேசகேசவன்” என்ற வார இதழை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன் வைத்தார். ஜின்னாவின் வழியைப் பின்பற்றி 1940ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் தாவூத் ஷா, முசுலிம் லீக் கட்சியில் சேர்ந்தார். தமிழ் நாட்டில் முசுலிம் லீக் கட்சியின் முதன்மையான பரப்புரையாளராக விளங்கினார்.

இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், “தமிழ்நாட்டின் ஜின்னா“ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

சென்னையில் 1941ல் நடைபெற்ற முசுலிம் லீக் கட்சியின் மாநாட்டில் முகமது அலி ஜின்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையை தாவூத் ஷா அழகு தமிழில் மொழி பெயர்த்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன. நாச்சியார்கோயிலில் 1941ல் “அறிவானந்த சபை“ என்ற பெயரில் நூலகமும், உடற் பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலபட்டார். பின்னர், அந்தச் சபையை ”முசுலிம் சங்கம்” என்று மாற்றினார். “தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞர்னத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 முதல் ”தத்துவ இஸ்லாம்” என்னும் மாத இதழை, தமது பிரச்சாரத்துக்காகக் கொண்டு வந்தார் தாவூத் ஷா!

முசுலிம பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி பசீர் அகமது சென்னையில் பெண்களுக்கென்றே தனியாக ஒரு கல்லூரியை நிறுவினார். அப்போது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது என்றும், கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும் துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத் ஷா. இப்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ.ஐ.ஈ.டி. பெண்கள் கல்லூரிதான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

(இன்று தஞ்சை தாவூத் ஷாவின் பிறந்த நாள்.)


ஜனசக்தி பத்திரிகையில் 29.3.2010 தேதியிட்ட இதழில் “சரித்திரம் பேசுகிறது” பகுதியில் பி. தயாளன் எழுதிய கட்டுரை.

நன்றி: ஜனசக்தி

Related Articles

Leave a Comment