பொற்கால உலா – முன்னுரை

by நூருத்தீன்

ந்திய நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்திஜி எளிய வாழ்க்கை மேற்கொள்வதைப் பற்றி காங்கிரஸாருக்கு அறிவுரை எழுதியிருந்தார். ‘ஹரிஜன்’ 27-07-1937 தேதியிட்ட இதழில் அது வெளியாகியிருந்தது.

“I cannot present before you the examples of Sri Ram Chandar and Sri Krishna as they are not personalities recognized by history. I cannot help but present to you names of Abu Bakar (ra) and Umar (ra). They were leaders of a vast empire, yet they lived a life of austerity”, Gandhi wrote.

“ஸ்ரீ ராமரையோ ஸ்ரீ கிருஷ்ணரையோ உதாரணங்களாக நான் உங்களுக்குப் பரிந்துரைக்க முடியாது. அவர்கள் வரலாற்று நாயகர்கள் அல்ல. ஆனால் அபூபக்ரு, உமர் எனும் பெயர்களை உங்களுக்குத் தெரிவிக்காமல் இருக்க முடியாது. பரந்த ராஜாங்கத்தின் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள்” என்பது அதன் தோராய மொழியாக்கம்.

‘உமர் இப்னுல் கத்தாபைப் போன்ற ஒரு மனிதர் இந்தியாவிற்குக் கிடைத்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும்’ என்று காந்திஜி கூறியதாக மற்றொரு தகவலும் உண்டு. அதில் ஆச்சரியமே இல்லை. விகல்பமின்றி, முன் முடிவுகள் இன்றி உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் எவருக்கும் வியப்பும் மலைப்பும் ஏற்படாவிட்டால்தான் ஆச்சரியம்.

எளிய வாழ்க்கையின் உதாரண நாயகரான அவருடைய வரலாறு பிரம்மாண்டம் என்பது இனிய முரண். அவர் இரண்டாம் கலீஃபாவாக ஆட்சி புரிந்தபோது அந்த ஆட்சியின் சுவையான அம்சங்களாக அமைந்திருந்த இரு அத்தியாயங்களை சிறு தொடராக சமரசத்தில் எழுதினேன். ஒன்று ஊர் உறங்கும் இரவு நேரங்களில் அவர் மதீனாவின் வீதிகளில் புரிந்த உலா. ‘இரா உலா’ என்ற தலைப்பில் அது வெளியானது. அடுத்தது அளுநர்களை அவர் தேர்வு செய்ததும் அவர்களுடனான தொடர்புகளும். அந்தத் தொடரின் தலைப்பு ‘அது ஓர் அழகிய பொற்காலம்’.

இவை இரண்டும் உள்ளடங்கிய சிறுநூலே இந்த ‘பொற்கால உலா’. மாபெரும் வரலாற்றின் சிறு பகுதியை உரசி ரசிக்க, பிறருக்குப் பகிர வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு நன்றியும் புகழும் உரித்தாவன. பெரும் உவகையுடன் கீழை பதிப்பகம் சார்பாக இதை வெளியிட்டுள்ள சகோ. முஸம்மில் அவர்களுக்கு எனது உள்ளார்ந்த நன்றி.

எனது பிழை பொறுத்து நற்செயல்களை அங்கீகரிக்க, ஏற்றுக்கொள்ள அல்லாஹ்விடம் இருகையேந்தி இறைஞ்சுகிறேன்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment