காலையில் எழுந்ததிலிருந்து ஆயிஷாவை ஒரு பரபரப்பு தொற்றியிருந்தது. பஜர் பாங்கொலி கேட்டு எழுந்து, குளித்து, தொழுது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூடவே அந்த படபடப்பு பரபரப்பு அடக்க முடியவில்லை. அது தொழுது முடித்து வந்து டீயை பருகியவுடன் சலீமிற்கு காட்டிக் கொடுத்து விட்டது. “யப்பா இனிப்பு தாங்கலியே”.

தனது டீயை பருகியவளின் தொண்டையில் களுக்கென்று அது இறங்கியது. அவளது டீயின் சக்கரையும் அவனதில். சலீமிற்கு புரிந்தது சிரித்தான். “உம்ரா நிய்யத் சொல்லிட்டியா? தல்பியா சொல்லிட்டியா” என்றதற்கு தலையாட்டினாள். பேசினால் வந்து விடுவேன் என்று கண்ணீர் தயாராய் காத்திருந்தது.

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் . . .” சலீம் தல்பியா உச்சரிக்க, அவள் வாய்விட்டு இறையாமல் சொல்லிக் கொண்டே பயணத்திற்கு தயாரானாள்.

சலீம் ஜித்தா ஸாம்ஸங் வாட்ச் கம்பெனியில் ஸீனியர் அக்கவுண்டென்ட். ஜித்தா நகரின் இருதயப் பகுதியான ‘பலத்’தில் அலுவலகம் அருகேயே வீடு. கை நிறைய வருமானம் நிறைவான வேலை – இப்பொழுது அன்பான அழகான புது மனைவி. விடுமுறையில் இந்தியா சென்ற போது திருமணம் முடித்து வந்து பேமிலி விஸா ஏற்பாடு செய்து – ஆயிஷா ஜித்தா வந்தடைந்து ஒரு வாரம் ஆகிறது. அது ஆயிஷாவிற்கு சவூதியில் முதல் வெள்ளிக்கிழமை. பிரம்மாண்ட ஏர்போர்ட்டோ அகலமான அழகான சாலைகளோ உயர்ந்து நின்று கொண்டிருந்த கட்டிடங்களோ அவளிடம் அதிகமாய் பரவசம் ஏற்படுத்தவில்லை. இந்தப் பயணம் – முதல் உம்ரா பயணம் அது தான் எல்லோருக்கும் ஏற்படுத்தும் பரபரப்பை விட அதிகமாய் மிக அதிகமாய் அவளிடம் ஏற்படுத்தியிருந்தது.

சலீம் ஹஜ் முடித்து எண்ணிலடங்கா முறை உம்ரா நிறைவேற்றியிருந்தான். இருந்தாலும் இது அவனுக்கும் முற்றிலும் ஓர் இனிய புதிய பயணம் போல் தான் தோன்றியது. மீக்காத்தின் எல்லைக்குள் வசிப்பதால் வீட்டிலிருந்தே இருவரும் இஹ்ராம் புனைந்திருந்தார்கள். குளித்து இவன் இஹ்ராம் டவல்கள் உடுத்தி அவள் தூய ஆடை உடுத்தி ஃபஜர் தொழுது உம்ரா நிய்யத் சொல்லி தயாராகி விட்டிருந்தார்கள்.

வந்த ஒரு வாரமாய் டிவியில் தினமும் கஅபாவில் நடைபெறும் மஃக்ரிப் தொழுகையின் நேரடி ஒளிபரப்பை பார்த்து பரவசப்பட்டிருந்த தனக்கு இன்று கஅபாவில் முதல் தொழுகை என்பது மேலும் ஆயிஷாவை பரவசப்படுத்த காரில் அவர்களது பயணம் துவங்கியது.

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் . . .”.

oOo

மாலை பொழுது மறையத் துவங்க எப்பொழுதாவது தூசு பறக்க வாகனம் செல்லும் அந்த சாலையில் தன் கார் அருகில் நின்று கொண்டிருந்தார் அப்துல் ரவூப். வெள்ளை முழுக்கை சட்டை வெள்ளைக் கைலி அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடி முகத்திற்கு கச்சிதமாய் கண்ணாடி படிய வாரப்பட்ட தலை சாந்தமான முகம் ஆறடிக்கு சற்று குறைவான உயரம் பார்த்துமே மதிப்பளிக்கத் தோன்றும் உருவம் – ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயதிருக்கும்.

மெக்கானிக்கை அழைத்து வர பக்கத்து டவுனிற்கு சென்ற டிரைவர் எப்பொழுது வருவான் என்று தெரியவில்லை. இருட்டுவதற்குள் வந்து விடுவானா என்பது சந்தேகமாய் இருந்தது. இருபுறமும் மரங்கள், வயல்கள். காற்றில் இலையசையும் ஒலியும் பறவைகளின் கீச்சொலியும் தவிர சாலை ஆளரவமற்றுக் கிடந்தது. மஹ்ரிப் நேரம் ஆரம்பிக்கப் போவதாய் தோன்றியது. தூரத்தே ஒருவன் மெதுவாய் நடந்து வருவது தெரிந்தது. அரை மணி நேரத்திற்குப் பின் முதன் முதலாய் தன்னைத் தவிர மற்றொரு மனித ஜீவனும் அந்தச் சாலையில் தென்படுவது அவருக்குச் சற்று ஆறுதலாய் இருந்தது.

தூரத்திலிருந்தே அவரைப் பார்த்தவனின் நடை சற்று தயங்கி தொடர்ந்தான். அருகே வர வர அவரது தோற்றம் தெரிய மடித்துக் கட்டப்பட்டிருந்த அழுக்கு வேட்டி, மெதுவாய் விடுபட்டு கீழிறங்கியது. அருகே வரும்படி கையசைத்தார். தயங்கி நின்றவன் வந்தான். அழுக்கு பணியன் மேலிருந்த துண்டு கைக்கு வந்திருந்தது. அருகே வர – பவ்யமாகியிருந்தான். கலைந்த தலையும், தூசு படிந்த உடம்பும், ஏதோ கூலி வேலை முடித்து வந்திருக்கக்கூடும். முப்பது வயதிருக்கும் போல் தோன்றியது.

“தம்பி அடுத்த பஸ் இங்க எப்ப வரும்?” டவுன் பக்கமிருந்து வரும் சாலையை நோக்கி கையை காட்டினார்.

அவரது கடிகாரத்தில் மணியை பார்த்தவன் “இன்னும் அரைமணி நேரம் ஆகுங்க”.

“ப்ச்” என்று சலித்தவரிடம், “கார்லே ஏதும் பிரச்சனைங்களா”.

தனியாகக் காத்திருந்தவருக்கு பேச்சுத் துணை ஆறுதலாயிருந்தது தேவைப்பட்டது. “ஆமாம் தம்பி. அடுத்த ஊர்லே என் சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம். மதியம் முடிஞ்சிடுச்சு. எனக்கு உடனே திரும்பனும். அதான் நானும் டிரைவரும் கிளம்பிட்டோம். வழியிலே கார் மக்கர் பண்ணி நின்னுடுச்சு. டிரைவர் மெக்கானிக்கை அழைச்சிட்டு வர்ரேன்னு பக்கத்து டவுனுக்குப் போயிருக்கான். வந்தா அடுத்த பஸ்லே வரணும் அல்லது மெக்கானிக்கிடம் ஏதாவது பைக் இருந்தா அதுலே வரணும் காத்துட்டிருக்கேன்”.

“எந்த ஊருக்குத் திரும்பனுங்க ஐயா”.

சொன்னார். அது அங்கிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அவனது முகமும் அவரது இக்கட்டிற்கு சற்று விசனப்பட்டது போல் தோன்றியது. “அரை மணி நேரமா பார்த்துட்டேன். ஒரு பஸ்ஸோ வண்டியோ காணோம். ஜன சந்தடி கூட இல்லியே”.

அவர் சகஜமாய் அவனிடம் உரையாட ஆரம்பித்தது அவனுக்கு சற்று ஆச்சரியம் அளித்தது. இவரைப் போல் தோற்றம் கொண்டவர்கள் வசதி கொண்டவர்கள், அவனிடம் அவனைச் சார்ந்தவர்களிடம் இதைப் போல் பேசியதில்லை. தம்பி என்று விளித்ததில்லை. அவர்கள் பேச்சில் எப்பொழுதுமே ஓர் அதட்டல் தொக்கி நிற்கும். இது அவனுக்குப் புதுசு. “ஆமாங்க ஐயா நீங்க பார்த்தீங்களே அந்த ஒரு பஸ் தாங்க டவுனிலிருந்து இந்தப் பக்கம் வந்துட்டுப் போவுது. உங்க ஊருக்குப் போக அந்த ஊர்லேருந்து இது மெயின் ரூட் இல்லீங்க. கொஞ்சம் தொலைவு கம்மின்னு இப்படி நீங்க வந்திருக்கனும்”

தான் அவசரமாய் திரும்ப வேண்டியது அறிந்து அவரது டிரைவர் இந்த ரோடில் வந்திருக்கலாம் என்று தோன்றியது. “இந்த ஒரு பஸ் தானா” ஆச்சரியப்பட்டார்.

“ஆமாங்க அதுவும் அது ஒரு லொட லொட டப்பாங்க. படுத்துடுச்சுன்னா அதுவும் இல்லே. அது ரிப்பேராக நாலைஞ்சு நாளாகும்”.

அவருக்குப் புரிந்தது. புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட அபாக்கியமான கிராமங்களில் ஒன்று. அவ்வப்போது பத்திரிகைகளில் படித்ததுண்டு. இப்பொழுது பார்க்கிறார். தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலுக்குப் பிறகு வந்திருக்கப் போவதில்லை. சாலைகள் பறைசாற்றின. விசனமாய் தலையாட்டினார்.

இருட்டத் துவங்கியிருக்க, மஹ்ரிபும் இஷாவும் தொழுது விடலாம் என்று தோன்றியது. கிளம்பும்போதே லுஹ்ரும் அஸரும் இரண்டிரண்டு ரக்ஆத் கஸ்ராக தொழுது கிளம்பியிருந்தார். “தம்பி இங்க பக்கத்துலே தண்ணி கிடைக்குமா? கை கால் கழுவனும்”. ஒளு செய்யனும் என்றால் அவனுக்குப் புரியாது என்று தோன்றியது.

அவரை ஆச்சரியமாகப் பார்த்தான். “இருக்கு எங்கத் தெருவுக்குப் போய் எடுத்துட்டு வரனும்” என்று பக்கத்தில் பிரிந்த மண் ரஸ்தாவை நோக்கிக் கையை காட்டினான் “பத்து நிமிஷமாகும்”.

“பரவாயில்லை” கார் டிக்கியிலிருந்து சின்ன பக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். ஆச்சரியம் விலகாமல் சென்று தண்ணீர் எடுத்து வந்தான். அவர் ஒளு முடித்து காரின் பக்கத்தில் முஸல்லா விரித்து தொழுது முடிக்க வியப்பு அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இதுவும் புதுசு. அவன் அவனைச் சார்ந்தவர்கள் தாகம் தீர்க்க தேநீர் பருக அவர்களுக்கென்று தனியாய் டம்ளர் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கடவுள் இல்லத்தில் அவர்களுக்கு அனுமதியில்லை என்று இருக்க இவர் அவனிடம் அவர்களுடைய தெருவிலிருந்து தண்ணீர் பெற்று முகம் கழுவி தனது கடவுளை தொழுவது ஆச்சரியமாக இருந்தது. பயம் வந்தது ‘தீட்டு பட்டிருக்காதா? ஒரு வேளை நம்மைப் பற்றித் தெரியவில்லையோ?’.

“ஐயா, இப்ப உங்க கடவுளை கும்பிட்டீங்களா?”

“ஆமாம்”.

“நான் எங்கத் தெருவிலேருந்து எடுத்துட்டு வந்த தண்ணீ” திக்கியது எப்படி சொல்வது என்று தெரியவில்லை “நாங்க யாருன்னு –“.

கையமர்த்தினார். “தெரியும்பா. எங்களுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாது”.

அவன் நெஞ்சில் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தன. எதைக் கேட்பது எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. அவன் மன ஓட்டம் புரிய அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்துல் ரவூப்.

பிறகு அவன் கேட்கக் கேட்க தெளிவாய் பதில் சொன்னார். ஒவ்வொரு பதிலும் அவனை ஆச்சரியப்பட வைக்க இறுதியில் அவனுக்குப் புரிந்தது. அனைவரும் சமம் என்று புரிந்தது. அதை அவரது மதம் வலியுறுத்துவது தெரிந்தது. சர்வ வல்லமை பெற்ற ஏக இறைவன் அனைவரையும் படைத்தாள்வது புரிந்தது. நிற இன பாகுபாடு இன்றி தோளோடு தோள் உரசி இறைவனைத் தொழ முடியும் என்பது சில்லென்ற நீரை பளீரென்று முகத்தில் இறைத்தாற் போல் சிலிர்த்தது.

அவர் நகரின் விலாசம் பெற்றுக் கொண்டான். அவன் தனது ஆவலை வெளிப்படுத்த புன்சிரிப்புடன் “அவசரப்படாதே இது என்னன்னு முழுசா தெரிஞ்சுக்க. நான் ஊருக்குப் போய் சில புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன். ஓரளவு படிக்கத் தெரிஞ்சவங்க இருக்கீங்க இல்லியா? படிச்சுப் பாருங்க, யோசியுங்க. இதுலே வற்புறுத்தல் கூடாது. சரின்னு பட்டுச்சுன்னா என்னை வந்து பாருங்க”.

இரு மாதங்களுக்குப் பின் அவரது வீட்டிற்கு அவனும் அவனைச் சார்ந்த பத்து பேரும் வந்தடைய, மறுநாள் பத்திரிகைகளில் அவன் கிராமத்தைச் சேர்ந்த பதினொரு பேர் “முஸ்லிமாக மதம் மாறியதாக” பரபரப்பான செய்தி வெளியானது.

oOo

ஹரம் ஷரிபை நெருங்கி விட உயர்ந்த மினாராக்களின் கம்பீரத் தோற்றம் ஆயிஷாவினுள் சிலிர்ப்பலையை படரவிட்டது. தல்பியா உச்சரிப்பதை நிறுத்திக் கொண்டு பார்க்கிங் தேட அருகாமை தெருவில் ஒரு ஹோட்டல் அருகில் எளிதாய் கிடைத்தது. ரஜப் மாதமாதலால் அதிகமாய் கூட்டம் இருக்கவில்லை.

காலை எட்டு மணி தான் ஆகியிருந்தாலும் வீதிகள் சுறுசுறுப்படைந்திருந்தன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த யாத்ரிகர்கள் கூட்டம் ரியாத் போன்ற உள்நாட்டு நகரங்களிலிருந்து இரு நாள் உம்ரா டூரில் வந்திருந்த மக்கள் காலையாகாரம் அருந்திக் கொண்டு தேநீர் பருகிக் கொண்டு – கடைகளில் சில்லறை வியாபாரம் மும்முரமாகி தெருக்கள் கலகலப்பாகியிருந்தன.

இவையெல்லாம் பரக்கப் பரக்கப் பார்த்தாலும் ஆயிஷாவின் கண்கள் ஹரம் ஷரிபின் பள்ளிவாசலை நோக்கியே திரும்பிக் கொண்டிருந்தன. நடந்து பள்ளியை அடைந்து உலகத்தின் மையமாய் அமைந்திருக்கும் கஅபாவை நோக்கி நகர தூண்களுக்கிடையே இருந்து அந்தக் கருங்கல் கட்டிடம் அவள் கண்களில் பட்ட அந்த நொடி அவள் கட்டுப்பாடின்றி பிரவாகமாய் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. கஅபாவை முதலில் பார்த்தவுடன் கேட்கும் முதல் துஆ கபூலாகும் என்று தெரிந்து கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததெல்லாம் மறந்து போய்விட்டது. நானா? இந்தப் புனித இடத்தில் நிற்பது நானா? என்று அவள் மனம் கேள்வி எழுப்பியது.

கூட்ட நெரிசல் இல்லாததினால் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிட நினைத்து முத்தமிட்டுவிட்டு தவாஃப் துவங்கினர். “இப் புனித ஸ்தலத்தில் என் கால் பதிய அருள் புரிந்த ரஹ்மானே” என்று தேம்பியழுதவாறு துவங்கியது அவளது துஆ. தவாஃப் சுற்றுபவர்களின் காலடி ஓசை, அவர்களின் வாய் முணுமுணுக்கும் துஆ, சிலர் ஓதிக் கொண்டே நடந்த குர்ஆன் ஓசை, சிறு பறவைகளின் ‘கீச் கீச்’ இவற்றை பின்னனி இசையாக்கிக் கொண்டு அலாதியான ஓர் அமைதியை அங்குள்ள நெஞ்சங்களில் செலுத்திக் கொண்டு நின்றது கஅபா.

ஆச்சரியம், அதிசயம், அழுகை, விசனம், உற்சாகம் என்று மனதில் மாறி மாறி அலை அடித்து சுற்றி சுற்றி நடந்து கேட்ட துஆவில் மனதின் பாரம் ஒட்டுமொத்தமாய் விடுபட்டுவிட்டதை பரிபூரணமாய் உணர்ந்து தவாஃப் முடித்த போது அளவிலாத ஒரு பேரமைதி அவள் மனதில் குடிகொண்டது.

oOo

அந்தக் கிராமத்தின் பெயர் தமிழகம் முழுவதும் பிரபலமானது. பல பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி குழுவினர் படையெடுக்கும் ஸ்தலமானது. பல பேட்டிகள், தொடர்ந்து செய்திகள், கட்டுரைகள். அவர்கள் நசுங்கிக் கிடந்ததை, மட்டம் தட்டப்பட்டதை, தங்களது அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் கிடந்த அவலத்தை அனைத்தும் சொல்லின. ஆனால் அந்த மனிதர்கள் தாங்கள் நாயினும் கீழாய் மதிக்கப்படுவதை விட்டு சமத்துவம் சர்வ நிச்சயமாய் அளிக்கும் “தீனை” நோக்கிப் பயணப்பட்டதைத் தான் தகவல் சாதனங்கள் அனைத்தும் சாதகமாய் மறைத்தன அல்லது சொல்ல அஞ்சின.

ஆனால் இதை பொருட்படுத்தாமல், அந்த விழிப்புணர்வு அலை அந்தக் கிராமத்தில் பரவிக் கொண்டிருந்தது. அந்த ஊர் மேட்டுக்குடி பெரிய தலை வந்தார். அனைவரையும் மரத்தடிக்கு வரச் சொல்லி கூட்டம் கூட்டினார்.

“எலேய், காலங் காலமா நடந்துட்டு இருக்கிறது மாறினா அந்த ஆண்டவனுக்கு அடுக்காது. காசு, பணம் பாத்திட்டீங்களா? தர்ரேன்னாங்களா?”

கூட்டத்தில் கோப இறைச்சல் பெருக, சிலர் அடக்கினர். “பணம் வேணும்னா சொல்லுங்க, தர்ரோம். அவனுங்களை விட அதிகமா இருக்கு?”

தொடர்ந்து பலதும் பேசினார். பலருக்கு ஆவேசம் தோன்ற ஆரம்பிக்க, சிலர் அடக்கிக் கொண்டிருந்தனர். அவர் பேசி முடிக்கக் காத்திருந்து, அவர்களிலிருந்து ஒருவன் எழுந்தான். “ஐயா, நாங்க உங்க மேலே மதிப்பு வெச்சிருக்கோம். ஆனா எங்கள்லே சில பேர் இப்படிப் போனதும் அவங்க முடிவு, நாங்க பலப் பேர் போகப் போறதும் எங்க முடிவு. இது எங்க பிரச்சனை. தயவுசெஞ்சு இதை அரசியலாக்காதீங்க. உங்க யாராலேயும் எங்க பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல முடியல்லே. இதோ இப்ப வந்திருக்க நீங்க கூட பணம் காசுன்னு எங்களை கொச்சைப்படுத்தி தான் பேசறீங்களே தவிர, நான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வெச்சிருக்கேன்னு சொல்ல வரலே. வெளிச்சத்தை வரவிடாம இருட்டிலே அடச்சி வெச்சிட்டீங்க. வெளிச்சம் தெரிஞ்சிடுச்சி, பயணப்பட்டுட்டோம்”.

அவரது ஆத்திரம் தலைக்கேறியது. ‘தலை நிமிர்ந்து பேச பயப்படறவனெல்லாம், நெஞ்சை நிமிர்த்தி பேசற அளவுக்கு ஆயிடுச்சு’. கொதித்தது – பிரயோஜனமில்லை, அடக்கிக் கொண்டார். அவனைத் தீர்க்கமாய் பார்த்தார்.

“நான் சொல்றேன் ஞாபகம் வெச்சுக்க. ஏட்டுச் சுரைக்காய புடிச்சுகிட்டு தொங்கறீங்க. சமத்துவம் கிடைக்கும்னு சொல்றியே? மாறிட்டிங்க இல்லே,போய் அவனுங்க கிட்டே பொண்ணு எடுங்க, பொண்ணு கொடுங்க பார்ப்போம். அப்புறம் பேசிக்கலாம்”.

விருட்டென்று கிளம்பி அவரும் உடன் வந்தவர்களும் கிளம்பிச் சென்றனர். ஆனால் அந்த நெருப்பு துண்டு அவர்கள் மத்தியில் பற்றியது. “அதானே – நடக்குமா?” புகைந்தது.

ஒரு வாரத்திற்குப் பின் அந்தக் கிராமத்தினுள் அப்துல் ரவூஃபின் கார் நுழைந்து முதல் வித்திட்டவனின் குடிசையின் முன் நின்றது. அவரும் உடன் ஆண் பெண் சிலருமாய், “அஸ்ஸலாமு அலைக்கும், உள்ளே வரலாமா?” என்று குரல் கொடுக்க, உள்ளிருந்து அவன் ஓடி வந்தான்.

“வஅலைக்கும் ஸலாம். வாங்க, வாங்க” கைவேலையை போட்டு விட்டு அவனும் குடும்பத்தினரும் ஓடி வந்து வரவேற்றனர்.

பரஸ்பர குசலத்திற்குப் பின் ரவூஃப் சொன்னார், “இங்கே நடக்கிறதை தினமும் படிச்சுகிட்டு, சொல்லக் கேட்டுகிட்டு தான் இருக்கேன். உங்க நிய்யத்தை அவமானப்படுத்தறாப் போல சிலர் பேசச் செய்யறாங்க. புது வாழ்க்கையை நோக்கி நகர்ந்திருக்கிற உங்களுடைய அத்தனைப் பிரச்சனையும் எனக்குப் புரியுது”.

“கடைசியா ஒருத்தர் வந்து பேசிட்டுப் போனாருங்க. அது .. “

“நானும் கேள்விப்பட்டேன். கேட்டவர் நடக்காதுன்னு நெனச்சு கேட்டாரோ அல்லது உங்க மனசிலே சந்தேகத்தை கிளப்பக் கேட்டாரோ தெரியாது. ஆனா அவர் கேட்டதிலே தப்பில்லே. நானும் யோசிச்சுப் பார்த்தேன். அதனாலே ஒரு முடிவோட வந்திருக்கேன்”.

“புரியலீங்க”.

“நம்ம மார்க்கத்திலே கல்யாணம் முடிக்க பணப் பொருத்தம், சாதிப் பொருத்தம் பார்க்கத் தேவையே இல்லே, அதுக்கெல்லாம் அனுமதியும் இல்லே. பார்க்க வேண்டியதெல்லாம் ஜோடிப் பொருத்தம், மனப் பொருத்தம் தான். இதோ இருக்கானே என் தம்பி மகன் அவனுக்குப் பொண்ணு பார்த்திட்டு இருக்கோம். என் தம்பியும் தம்பி மனைவியும் அவன் சின்னவனா இருக்கறப்பவே தவறிட்டாங்க. எனக்குப் பிள்ளைங்க இல்லே. நான் தான் அவனை வளர்த்தேன். அதனாலே அவன் கல்யாணப் பொறுப்பும் என்னது தான். நீங்க எல்லாம் முத முதலா என் வீட்டுக்கு வந்தப்போ உன் தங்கச்சிய பார்த்திருக்கேன். அவனுக்குப் பொருத்தமா இருப்பான்னு தோணுது. அதான் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்”.

ஒரு கனவாய் அந்த காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் யாராலும் அதை நம்ப முடியவில்லை. பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்தார். “பொண்ணு, மாப்பிள்ளையோட சம்மதம் தான் திருமணத்திற்கு முக்கியம். இவனைக் கேட்டுட்டேன், பூரண சம்மதம்னு சொல்லிட்டான். நீங்களும் உங்க தங்கச்சியும் தான் சம்மதம் சொல்லனும்”.

என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதைப் பேசுவது. திருக் கலிமா சொல்லி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகிலேயே இத்தகைய அங்கீகாரமா? வாயடைத்து நின்று, “உங்க அந்தஸ்து என்ன ..” என்று ஆரம்பிக்க, மீண்டும் இடைமறித்தார்.

“வீணா குழப்பப்படாதே. பொண்ணு பத்தாவது வரைக்கும் படிக்க வச்சதா நீ சொல்லியிருக்கே. அதிகம் படிக்க வெக்கனும்னு ஆசைப்படறான். அது அவன் பொறுப்பு. மத்தபடி என்ன? அவன் கை நிறைய சம்பாதிக்கிறான், ஜித்தாலே அக்கவுண்டன்ட் வேலை. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பொண்ணையும் கூட்டிட்டுப் போயிடுவான்”.

“கொடுக்கல் வாங்கல்னு எங்ககிட்டே வசதி இல்லையே”.

பெரிதாய் சிரித்தார். “நீ கொடுக்க வேணாம். மாப்பிள்ளை தான் கொடுக்கனும். ஸலீம் சொல்லுபா எவ்வளவு மஹ்ர் கொடுக்கப் போறே”.

“ஐம்பதாயிரம் மஹ்ர் கொடுத்து நிக்காஹ் முடிக்கனும். உங்களுக்கு சம்மதம்னா பொண்ணு பேரைத் தெரிஞ்சுக்கலாமா?”

அவனது தங்கை உள்ளிருந்து நாணமாய், கண்ணீராய் தலையாட்ட, “ஆயிஷான்னு பேரு வெச்சிருக்கோம்”.

அதற்கடுத்த வாரம் இனிதாய் நிக்காஹ் நடைபெற்று முடிந்தது. தனக்குக் கிடைத்த மஹ்ர் பணத்தை ஆயிஷா அந்த ஊருக்கே செலவிடக் கொடுக்க, அதில் மனை வாங்கி பள்ளிவாசல் கட்டும் வேலை மும்முரமடைய ஆரம்பித்தது.

oOo

மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்ஆத் நாஃபில் தொழுது விட்டு, ஜம்ஜம் தண்ணீர் பருகி, சயீ நடந்து முடித்து, உம்ரா நிறைவேற்றியானதும் ஆயிஷாவின் முகத்தில் தெரிந்த அலாதியான பூரிப்பு சலீமிற்குள்ளும் ஒரு பெரும் மாற்றத்தை தோற்றுவித்தது. இவளை இந்தப் பேரொளியின் பால் இட்டு வந்த பயணத்தில், தனது பங்கிற்கு ஏதேனும் நன்மை இருக்குமா, மறுமையில் கிடைக்குமா என்று தனக்குள் வினவிக் கொண்டான்.

நிறமின்றி, மொழியின்றி, இனமின்றி, செல்வன் ஏழையின்றி, ஏக இறைவன் ஒருவனை மட்டுமே இறைவனாய் கருதும் மனித வளையமொன்று கஅபாவை வலம் வந்து கொண்டிருக்க, அந்த மைதானத்தில் அமர்ந்து இருவரும் இருகையேந்தி துஆ கேட்கலானார்கள்.

– நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் 01-15 மார்ச், 2001 இதழில் வெளியான சிறுகதை

Image courtesy: unsplash.com

Related Articles

Leave a Comment