ல பூகம்ப நிகழ்வுகளை நமது வாழ்நாளில் நாம் படித்திருந்தாலும், அறிந்திருந்தாலும், இந்தியர்களாகிய நாம், நமக்கு அருகாமையில் மிகப் பெரிய அழிவினை பார்த்ததில்லை. ஆனால் இவ்வருட (2001) ஆரம்பத்தில் குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் மிகப் பெரும் சேதம் விளைவித்து சில கிராமங்களை முற்றிலுமாய் அழித்து விட்டதை கண்ட போது அனைவர் மனதிலும் ஓர் அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வடக்கே ஆயிரம் கி.மீ. தாண்டி பிளந்த பூமி தெற்கே திருவையாறு வரை நிலத்தை அசைத்திருக்கிறது. அதைத் தவிர இப்பொழுது பாதுகாப்பான பகுதி என நம்பிக் கொண்டிருந்த சென்னையிலும் ஓர் ஐந்து விநாடி பூமி அசைவு.

திருக் குர்ஆனின் ஏழாவது அத்தியாயம் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) கூறும் செய்திகளை படித்த போது அதனை தங்களுடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அவர்கள் நல்வழியில் திரும்பும் பொருட்டு அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். அந்த நபிமார்களும் அந்த மக்களுக்கு நற்போதனைகளை எடுத்துச் சொல்லி தான் வந்தனர். ஆயினும் அந்த மக்கள் அதனை நம்பி நேர்வழியில் திரும்பவில்லை. ஆணவத்தோடும் அகந்தையோடும் தீச் செயலை தொடர்ந்து கொண்டிருந்தனர். நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த இறைவனின் செய்திகளையும் தொடர்ந்து புறக்கணித்து வந்த போது அல்லாஹ் அந்தக் கூட்டத்தினருக்கு தனது தண்டனையை செலுத்தி அவர்களை அழித்த வரலாற்றை சூரத்துல் அஃராஃப்-ல் காண முடிகிறது.

இதில் குறிப்பாய், ஸமூது கூட்டத்தார் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஸாலிஹ் நபியினை (அலை) புறக்கணித்த போதும், மத்யன் நகரவாசிகள் அவர்களது நபி ஷூஐப் (அலை) அவர்களின் போதனையை நிராகரித்து தீச்செயலில் நீடித்த போதும், அல்லாஹ் அந்த இரு கூட்டத்தாரையும் பூகம்பத்தைக் கொண்டு அழித்திருக்கிறான்.

எனவே (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 78)

ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 91)

ஷூஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் – ஷூஐபை பொய்ப்பித்தவர்கள் – (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 92)

92வது வசனத்தை ஓதும் போது – குஜராத் பூகம்பத்தில் சில கிராமங்கள் முற்றிலுமாய் அழிந்து, அந்த ஊர் மக்கள் தமது வீடுகளில் ஒரு பொழுதும் வாழ்ந்திராதவர்களைப் போல் தானே ஆகிவிட்டனர்! என்ற உண்மை பளீரென உறைக்கிறது.

நபிமார்கள் தூது செய்தி கொண்டு வந்தும், அதனை நம்பாமல். பின்பற்றாமல் அல்லாஹ்விடத்தில் பாராமுகமாய் அவனது தண்டனைகளைப் பற்றி பயமில்லாம்ல திரிந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்லாஹ் வினவுகிறான் –

அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண.டிருக்கு்ம் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (சூரத்துல் அஃராஃப், வசனம்: 97, 98)

இரவோ, பகலோ, நித்திரை நேரமோ, விளையாட்டு நேரமோ – ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அல்லாஹ் ஒரு கெடு நிர்ணயித்தே இருக்கின்றான். அந்த – கெடு நேரம் வந்து விட்டால், நிகழ்வுகளில் தாமதமேதும் இருக்காது.

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு. அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 34)

கடந்த காலத்தை அல்லாஹ் விவரித்ததிலிருந்து சிலவற்றைப் பார்த்தோம். நமது கால கட்டம்?

நபிமார்களின் வரிசையில், அரபு கூட்டத்தாருக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமே இறுதி நபியாய் வந்தவர்கள் முஹம்மத் நபி (ஸல்) என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான். இந்த நபி மூலம் நமக்கு வந்த செய்தி என்ன?

(நபியே!) நீர் கூறுவீராக. ”மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான் அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (சூரத்துல் அஃராஃப், வசனம்: 158)

இந்த நபி முஹம்மத் (ஸல்) நமக்கு அறிவித்த செய்தியில் நாம் முழுவதும் ஈமான் கொண்டாக வேண்டும். அவ்விதம் ஈமான் கொண்ட பின், அடுத்து?

குர்ஆன் நம்மை அச்சமூட்டி எச்சரிக்கும் அதே வேளையில், நாம் நமது பணியினை (தொழுகை, நோன்பு, ஜகாத்) ஒழுங்காய் செய்வோமாயின், நாம் பெறப்போகும் நற்பேறுகளையும் விவரிக்கத் தவறவில்லை.

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 35)

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (சூரத்துல் அஃராஃப், வசனம்: 55)

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 170)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ – எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம் அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் – அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள். (சூரத்துல் அஃராஃப், வசனம்: 42)

இவையாவற்றிலும் நமக்கு அறிவுரை இருக்கிறது.


26-1-2001-ல் மிகப் பெரிய அளவில குஜராத்தில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டு பெருத்த சேதம் விளைவித்தது. அப்பொழுது எழுதியது இது.

Related Articles

Leave a Comment