வீட்டினுள் நுழைந்ததும் கரீமின் குரல் அதட்டலாய் வெளிப்பட்டது. “அஷ்ரப், அஷ்ரப்.” அப்பொழுது தான் நண்பனின் வீட்டிலிருந்து திரும்பியவன் குடித்துக் கொண்டிருந்த காபியோடு ஹாலுக்கு வ்ந்தான் அஷ்ரப். “என்ன டாடி?” தந்தையின் கடுமையான முகம் அவனைச் சற்று திகைப்படைய வைத்தது.

“இன்னிக்குக் காலைலே காலேஜுக்கு எப்படிப் போனே?”

“எப்பவும் போல பஸ்லே தான்.”

“நான் அதக் கேக்கலே. பஸ்லே எப்படிப் போனே? புட்போர்ட்ல தொங்கிட்டுப் போறியாமே?” பாசமும் அதனால் கோமுமாய் நின்றிருந்தார் கரீம்.

அடுக்கைளில் வேலையாய் இருந்த கரீமின் தாயார், அஷ்ரபின் இரண்டு வயது தம்பியை இடுப்பில் சுமந்து கொண்டு ஹால் வாசற்படியில் வந்து நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.

அஷ்ரபிற்கு இப்பொழுது தந்தையின் கேள்வி புரிந்தது. அவன் இப்பொழுது தான் காலேஜில் முதல் வருடம் சேர்ந்துள்ளான். மண்ணடியிலிருந்து இராயப்பேட்டையிலுள்ள காலேஜிற்கு தினமும் பஸ்ஸில் தான் பயணம். பள்ளி வாழ்க்கையும் அதன் கட்டுப்பாடுகளும் இவன் கல்லூரி மாணவனானதும் தளர, வாழ்க்கையில் புது உற்சாகம் கிடைத்தது.

யூனிபார்மிற்கு விடை கொடுத்து விட்டு, கலர் கலராய் டிரஸ் செய்து கொண்டு, தினமும் சுமந்த புத்தக மூட்டைக்குப் பதிலாய் ஒரே ஒரு நோட்புக் எடுத்துக் கொண்டு தினமும் பஸ்ஸில் புட்போர்டு பிரயாணம் தான். பஸ்ஸில் ஒற்றைக் கையில் தொத்திக் கொண்டு, எதிர்க் காற்றில தலை முடி பறக்க, நண்பர்களின் கடி ஜோக்கிற்கு அதிகமாய் சிரித்துக் கொண்டு, மனதிற்குள் ஒரு ஹீரோத்தனம் உருவாகியிருந்தது.

யாரோ இன்று பார்த்து விட்டு கரீமிடம் சொல்லியிருக்க வேண்டும். அது தான் இந்தக் கோபம். கரீம் தனது பிள்ளைகளின் மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கிறார். அஷ்ரபும், பதினைந்து வருட இடைவெளிக்குப் பின் நயீமும், அவரது இரு கண்கள். ஆனால் அதே அளவு கண்டிப்பானவர்.

“பர்ஸ்ட் இயர் காலேஜில் சேர்ந்ததும் பெரிய மனுஷனாயிட்டதா நெனப்பா? புட்போர்ட்ல தொங்கறது முதல்ல சட்டப்படி குற்றம். அடுத்தது அது எவ்வளவு அபாயம்னு தெரியுமா? ஒரு வாரம் தொடர்ந்து பத்திரிகை படி. எத்தனைப் பேர் புட்போர்ட்லேருந்து தவறி விழுந்து இறந்துடறாங்கன்னு தெரியும்.”

“இல்லே டாடி. பஸ்ல கூட்டம் ஜாஸ்தி.”

“டொன்ட் டெல் மி லேம் எக்ஸ்கியூஸஸ். அடுத்த பஸ்ல போகனும். லேட்டாயிடும்னா சீக்கிரம் கிளம்பிப் போகனும். தெரியுதா?” தொடர்ந்து அறிவுரை. அஷ்ரபின் முகம் சுண்டி விட்டது. கரீம், இவ்வளவு கோபப்பட்டு அஷ்ரபை பேசியதில்லை. அவன் அம்மாவிற்கே என்னமோ போல் ஆகிவிட்டது.

பேச்சை மாற்றும் விதமாக, “இன்னிக்குத் தான் பிளம்பர் வந்தான். பாத்ரூம் பைப் பிட்டிங்கை செக் பண்ணிடுங்க. அவன் குடுத்த பில் உங்க மேஜை மேலே வெச்சிருக்கேன்.” அஷ்ரபிற்கு கண் ஜாடை செய்ய, அவன் உள்ளே சென்று விட்டான்.

அடுக்களையில் அம்மாவிடம் புலம்ப ஆரம்பித்தான். “என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்னு வந்ததும் வராததுமா குதிக்கிறாங்க? சொல்றதை அட்லீஸ்ட் அப்புறமா மெதுவா சொன்னா என்னவாம்? எனக்கு பயமாயிருந்தா அப்படி செய்வேனா? நான் மட்டுமா, என் பிரெண்ட்ஸ் எல்லோரும் அப்படித்தான் வர்ராங்க.”

அம்மா இடை மறித்தாள். “டாடி ஏன் கோபப்படறாங்கத் தெரியுமா? பாசம். அக்கறை. அது உனக்கு இப்பப் புரியாது.”

“ஆமா நீ டாடிக்குத் தான் சப்போர்ட் பண்ணுவே” என்றவன், நயீமைத் தூக்கிக் கொண்டு தன் ரூமிற்குச் சென்றான். அவனுடன் விளையாடிக் கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறிது நேரம் அவனுடன் விளையாடிவிட்டு, அவனை பொம்மைகளுடன் விட்டு விட்டு தனது பாடத்தில் மூழ்கினான்.

நயீம், குழந்தைகளின் அனைத்து வால் தனங்களும் ஒன்றாய் கொண்டிருந்தான். பொம்மைகளை உடைத்து, பெட்டில் குதித்து, எதையாவது தள்ளி – ஒரே ரகளை தான்.நடுவில் அவனைக் கவனித்த அஷ்ரப் அவன் கையில் கயிறு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதட்டினான். “ராஜா அதப் போட்டுடு. அந்தக் காரை வெச்சு விளையாடு.”

குழந்தை சிரித்துக் கொண்டு கயிறை மறைத்துக் கொண்டு சோபாவில் ஏறிப்படுத்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்துத் திரும்பினால், குழந்தை நயீம் கயிற்றைக் கழுத்தில் கோணல் மாணலாய்ச் சுற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அதிர்ந்து போன அஷ்ரப், “டேய் இங்கே வா” எனக் கூப்பிட குழந்தை ஒட ஆரம்பித்தான்.

துரத்திப் பிடித்து, “மம்மி இங்கே பார் இவனை” எனக் கத்திக் கொண்டே குழந்தை முதுகில் லேசாய் தட்டி, கயிறைப் பிரிக்க குழந்தை சந்தர்ப்பமாய் ஓவென்று அழ, அம்மா ஓடி வந்தாள்.

பார்த்தவுடன் விஷயம் புரிந்தது. “அஷ்ரப், இது தான் பாசம், அக்கறை. நீ காட்டும் இந்த அக்கறை தான், உன் டாடி உன் மீது காட்டும் அக்கறை. புரியுதா?”

அஷ்ரப் நிமிரிந்து பார்க்க அம்மாவின் உதட்டில் லேசாய்ப் புன்னகை.

oOo

-நூருத்தீன்

முஸ்லிம் முரசு – நவம்பர் 98 இதழில் வெளியானது

Photo by Liane Metzler on Unsplash

Related Articles

Leave a Comment