மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர். மாசற்ற காற்று. குளிரும் வெயிலும் எப்பொழுதுமே பதம். எப்படிப் பிடிக்காமல் போகும்?
வி.ஏ.ஓ. வாக அவனுக்குப் பணி கிடைத்து இந்த ஊர் என்ற உத்தரவு வந்ததும் அவன் அப்பாவுக்குத்தான் கவலை ஏற்பட்டது. என்ன பெரிய கவலை. பெற்ற மனங்களுக்கேயான பிரிவுத் துயர். மறைத்துக்கொண்டார். தன் குலத்தொழிலும் தன் அவமரியாதையும் தன்னுடனும் இந்த ஊருடன் தொலையட்டும். தலையெடுத்து விட்டான் மகன். அரசாங்கப் பணியும் கிடைத்துவிட்டது. கௌரவம் சாத்தியமாகிவிட்டது. இன்னும் என்ன? தூர தேசத்திற்கா செல்கிறான்? ஓரிரவு பயணத்தில் மலை நகரின் அடிவாரத்திலுள்ள டவுனை அடைந்து விடலாம். அங்கிருந்துதான் அடிக்கடி பேருந்து இருக்கிறதே!
“போய்ட்டு வா! மவராசனா இருப்பே!”
டவுனில் பேருந்து ஏறி சில கொண்டை ஊசிகளில் வளைந்துவிட்டால் சுகச் சூழல் ஊர். மரமும் நிழலும் ஏரியும் நீர்வீழ்ச்சியும் இணைந்து வக்கனையின்றி எழில் நிறைத்திருந்தன. வீசும் காற்றில் எப்பொழுதும் அப்படியொரு தாலாட்டுச் சுகம். ஊரும் பிடித்திருந்தது. பணியும் மனம் நிறைத்திருந்தது. மாலை நேரம். ஏரியைத் தாண்டி மலை முகட்டில் நீளும் ஒற்றையடிச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அது தினசரி வழக்கமாகியிருந்தது. வாகன வரத்து அச்சாலையில் மிகக் குறைவு. மனித நடமாட்டமும் அபூர்வம். சில கிலோமீட்டர் தொலைவில் கோயில் ஒன்று இருந்தது. ஆண்டின் சில நாள்கள் பக்தர்கள் வருவார்கள். இதர நாள்களெல்லாம் ‘ஓஸ்’ என்றிருக்கும். பூசாரி ஒருவர் விளக்கேற்றி வைப்பார். அது மட்டுமே அதன் பராமரிப்பு. அக் கோயிலின் வாசல் வரை நடந்துவிட்டுத் திரும்பிவிடுவான். வாசல்வரைதான். உள்ளே அவனுக்கு அனுமதியில்லை. அவனும் அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.
காலாற நடந்த நடையில் வழக்கம்போல் கோயிலை எட்டி, திரும்பும்போது அந்தக் குரல் கேட்டது. சிறுமியின் ‘வீல்’ அழுகுரல். திகைத்து சுற்றும்முற்றும் பார்த்தான். இடைவெளி விட்டு மீண்டும் வீல் கதறல். சப்தம் கோயிலுக்குள்ளிருந்து வந்தது. அதிர்ந்துபோய் நின்றான்.
oOo
இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். தமிழகத்தின் தெற்கே அமைந்திருந்த ஊர் ஒன்று பற்றியெரிந்தது. பற்ற வைத்தது காதல் தீ. ஊரின் ஒரு பகுதியில் உயர்சாதி வர்க்கம் வாழ்ந்து வந்தது. அவர்கள்தாம் பெரும்பான்மை சமூகம். மற்றொரு பகுதியில் பிற்படுத்தப்பட்டவர்கள். கூலி வேலை; ஐயாமார் வீடுகளில் சேவகம், கால் அணிகள் செப்பனிடுபவர் இத்யாதி ஜோலியினர். மழைக்கு ஒதுங்குமளவிற்கு மட்டும் பாடசாலைகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருந்தது. இதர மதத்தினர், சமூகத்தினர் ஆங்காங்கே பரவலாகக் குடியிருந்தனர்.
ஊரில் நிலவிய அந்த ஏற்றத்தையும் தாழ்வையும் பத்திரமாகப் பாதுகாத்து வந்தது அங்கிருந்த பெரும்பான்மை ஆதிக்கச் சமூகம். தொன்றுதொட்டு வருவதைச் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது, கீழுள்ளவன் மேலெழந்து விடக்கூடாது என்று அதிலே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.
விதிவிலக்காக, பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் சிலர் படித்தனர். தேறினர். பட்டப்படிப்புக்காக டவுனுக்கு பஸ்ஸில் போய்வரத் தொடங்கினர். அப்படியான அவர்களின் யுவன் ஒருவனுக்கும் உயர்சாதி யுவதிக்கும் ஏற்பட்ட கல்லூரிப் பழக்கம் பூவாகி, காயாகி, கனிந்து காதலுமாகிவிட்டது. இளங்கன்றுகள் பயமறியாமல் இருக்கலாம். அதற்காக அப்படியே விட்டுவிடுவது ஆதிக்கச் சமூகத்திற்கு அழகா என்ன?
வழக்கமான உருட்டல், மிரட்டலில் ஆரம்பித்து, அடித்துச் சாத்தும்வரைச் சென்றும் ஜோடி மசிவதாய் இல்லை. ஆணவம் கொண்ட சமூகம் அடுத்து என்ன செய்யும்? கொலை செய்தது. கீழ்சாதி யுவன் கொல்லப்பட்டான். பற்றியது தீ. இருதரப்பும் ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்கினர். சேரிகள் எரிந்தன. கலவர பூமியானது ஊர். உடைமைகளையும் இருப்பிடத்தையும் இழந்த குடும்பங்களின் துயரமெல்லாம் குறைந்தபட்ச சோகம் என்று திருப்தியுறும் அளவிற்குச் சில குடும்பங்களில் உயிரிழப்புகள்.
செருப்பு தைத்து வாழ்க்கை நடத்தும் காளிமுத்துவுக்கு பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். கலவரத்தில் அவன் குடிசை தீக்கு இரையாக அவன் மனைவி அதற்கு விறகாகியிருந்தாள். அணைந்த பிறகு சாம்பலில் அவளது உடல்தான் கிடைத்ததே தவிரக் குழந்தையைக் காணவில்லை. கதறி, அழுது, ஓடி, தேடி பார்த்தும் குழந்தை அகப்படவே இல்லை. பித்தனானான் காளிமுத்து.
ஒருவழியாகக் கலவரம் ஒய்ந்து, காவலர்கள் அவ்வூரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, நிலைமை சீராகி ஒரு வாரமாகியிருக்கும். மேலத்தெரு ஹஸன் பாய் ஒருநாள் அவன் குடிசைக்குள் நுழைந்தார். “நம்ம வீடு வரைக்கும் வந்துட்டுப் போகணும்” என்று அழைத்தார்.
ஜடமாகப் பின் தொடர்ந்தான். அவன் உடலில் உயிர் இருந்தது. உணர்ச்சிகள் இறந்திருந்தன. அமர வைத்து, அவன் ஆசுவாசம் அடையும்வரை காத்திருந்து, உள்ளே மனைவிக்குக் குரல் கொடுத்தார். “ஹஸீனா. கொண்டு வாம்மா”
“சம்பவத்தன்னிக்கு நான் அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டேன். உன் குடிசைக்கு நெருப்பு வெச்சிட்டு ஓடற கும்பலைப் பார்த்தேன். உங்க எல்லாக் கூட்டமும் பஜார் ரோட்ல இருந்தீங்க. வூட்டுக்குள்ள அலறல் சப்தம். ஓடிப்போய் பார்த்தா, உன் மனைவி. குழந்தையை என் கைல வீசிட்டாளே தவிர நெருப்பு ஓலைகளுக்கு அடியிலிருந்த்து அவளாலே வெளில வர முடியல. கண்ணெதிரே அவள் கருகுறா. என் கைல உன் குழந்தை கதறுகிறான். ஆயுளுக்கும் என்னால மறக்க முடியும்னு தோணல.” கண்களை மூடி உடலை சிலிர்த்துக்கொண்டார்.
“குழந்தைய வீட்டுக்கு தூக்கியாந்துட்டேன். எனக்கும் ரெண்டு மாசக் குழந்தை இருக்கு காளிமுத்து. என் மனைவி ஹஸீனாதான் தன் பாலை ரெண்டுக்கும் சேர்த்தே கொடுத்து… இந்தா உன் குழந்தை, காப்பாத்திட்டோம்.“
“ஐயா சாமீ….” என்று பெரும் அலறலுடன் அப்படியே தரையில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தான் காளிமுத்து. தொடர்ந்து அவன் தொண்டையிலிருந்து வெடித்ததெல்லாம் வார்த்தைகளே அற்றே அழுகை.
சொத்தையே எழுதி வைத்தாலும் நன்றி தீர்க்க முடியாத உதவிக்கு அந்த ஏழை என்ன செய்வான்? தன் குழந்தைக்கு ஹஸன் என்று பெயரிட்டுப் பூரித்தான்.
oOo
திகைத்து நின்ற வி.ஏ.ஓ. சடுதி நேரம்தான் யோசித்தான். தீட்டாவது, மண்ணாவது! புத்தி அதட்ட, கோயிலுக்குள் பாய்ந்தான். இருட்டு பரவியிருந்த மூலையில் குப்பையாகக் கிடந்தாள் சிறுமி. எட்டு வயது இருக்குமா? கிழிந்திருந்த ஆடைகளில் ஆங்காங்கே செந்நிறக் கரைகள். “ஐயோ! ஐயோ! யார் பாப்பா நீ? இங்க எப்படி?” அவளிடம் ஓடினான். விஷயத்தைச் சட்டென அவனால் யூகிக்க முடிந்தது. ஆள் வருவதைக் கண்டதும் ஜந்து உள்ளே ஓடியது.
ஈனக் குரலில் முனகினாள் சிறுமி. “அண்ணா! காப்பாத்துண்ணா! இவன்ட்டேருந்து காப்பாத்துண்ணா! என் பேரு ஹஸீனா…” மூர்ச்சையானாள்.
பெயரைக் கேட்ட நொடி, “அண்ணாவா? ஆத்தா! என் தாயே” என்ற அவனது கதறல் கோயில் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. பித்துப் பிடித்தவனாய் ஆவேசமாக எழுந்து ஓடினான். சில நிமிடங்களில் கோயில் தரையில் கழுத்து அறுந்த ஜந்துவின் சொத சொத இரத்தம்.
அன்றிரவு அனைத்து சேனல்களிலும் பிரேக்கிங் நியூஸ் தமக்குச் சாதகமான வாசகங்களுடன் பரபரத்தது. “கோயில் கருவறையில் அர்ச்சகர் கொலை! கொலையாளி ஹஸன் பிடிபட்டான்!”
-நூருத்தீன்
புதிய விடியல் 2018 மே 16-31 இதழில் வெளியான சிறுகதை
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License