ரே நாளில் அப்படியொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என நான் நினைக்கவில்லை. கம்ப்யூட்டர் ஸ்கிரீனை மேய்ந்த கொண்டிருந்த போது இன்டர்காமில் முதலாளி அழைத்தான்.

ஏதோ ரிப்போர்ட் பற்றிக் கேட்டுக் கத்தப்போகிறான் என நினைத்துக் கொண்டே அவன் ரூமூக்குள் நுழைந்தேன். மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தவன், நாற்காலியை நோக்கிக் கையைக் காட்ட, அமர்ந்தேன்.

“நீ செவ்வாய் மாலை மெட்ராஸ் போகவேண்டும்!” என்றான்.

“ஃப்ளைட் டிக்கெட் இன்று மாலை வந்துவிடும். நான் முக்கியமான வேலையாக நாளை லண்டன் செல்கிறேன்.

மெட்ராஸில் ப்ரோகிராமர்ஸ் இன்டர்வியூ இருப்பது உனக்குத் தெரியும். மூன்று நபர்களை செலக்ட் செய்யவேண்டம். இதைச் செய்ய நீதான் சரியான ஆள் என்பதால் உன்னை அனுப்புகிறேன். உனது தேவைகளை நமது சென்னை ஏஜெண்ட் கவனித்துக் கொள்வார். மற்ற விவரங்களை நீ நிர்வாக மானேஜரைப் பார்த்துப் பெற்றுக்கொள்ளலாம்.”

கட்டளை – இனிய கட்டளை. இந்தியனான எனககு அலுவலக வேலையாக இந்தியா செல்வதே இனிதானது! அதிலும், சென்னைக்குச் செல்லவேண்டும் என்கிற செய்தி என் உடல் செல்களில் உற்சாகத்தைப் பரப்பியது!

மும்பையில் பிறந்து வளர்ந்த பச்சைத் தமிழன் நான் – எனது அப்பா முப்பை வங்கி ஒன்றில் மானேஜர். அவர் சென்னையில் வேலையில் இருக்கும்போது (பூர்வீகம் தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்வார்), பக்கத்து காலேஜி்ல் மாணவியா இருந்த எனது அம்மாவைக் காதலித்து, வழக்கம்போல் இரண்டு பக்கமும் எதிர்க்க, கோயிலில் கல்யாணம் செய்து கொண்டு, பம்பாய்க்கு மாற்றல் வாங்கி வந்து செட்டிலாகிவிட்டார். எனவே, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில்.

சென்னைப் பற்றி இருரும் சொன்ன செய்திகள் மட்டுமல்லாமல், எனது உடலுக்குள் இயற்கையாக அமைந்துவிட்டிருந்த தமிழ் உணர்வோ என்னவோ, சென்னையின் மீது என்னையுமறியாமல் ஒரு காதல். ஆனால், ஒருமுறை கூட தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

டிகிரிக்குப் பிறகு கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்து, ஒரு கன்சல்டன்ஸியில் மூன்று வருடங்கள் ப்ரோகிராமராக இருந்துவிட்டு, பிறகு இங்கு ரியாத்தில் உள்ள ஒரு கன்சல்டன்ஸியில் வேலை கிடைத்து சேர்ந்து விட்டேன். இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என் முதலாளிக்கு இந்தியர்களை ரொம்பவே பிடித்திருந்தது. கம்பெனிக்கு ஆர்டர் பெருக, மேலும் மூன்று பிரோகிராமர்கள் தேவைப்பட… சென்னையில் இன்டர்வியூ ஏற்பாடாகியிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இன்டர்வியூ நடத்தும் பொறுப்பு இப்போது என்னிடம்.

பெட்டியில் துணியைத் திணித்துக் கொண்டு, நெஞ்சில் சந்தோஷத்தை நிரப்பிக் கொண்டு செவ்வாய் நள்ளிரவு ஏர்போர்ட்டில் நின்றிருந்தேன். பள்ளி விடுமுறை சீஸன் என்பதால் சரியான கூட்டம்.

போர்டிங் கார்டு வாங்கி, மற்ற சம்பிராதயங்களை முடித்துக் கொண்டு ஃப்ளைட்டில் அமரும் வரை எனக்கு மற்றொரு இனிய அதிர்ச்சி கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

ஜன்னலுக்கு அடுத்த ஸீட், என்னுடையது. ஜன்னலோர ஸீட்டில், சர்வ லட்சணங்களும் ஒருங்கே அமைந்த மிகவும் அழகான பெண். ஒரு தேவதையுடன் ஆகாயப் பயணமா! மனம் ஹூர்ரே என்று துள்ளியது!

என் ப்ரீஃப்கேஸை மேலே வைத்து விட்டு அமர்ந்தபோது, அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அடுத்த சில நிமிடங்களில் இயல்பாக என்னிடம் உரையாடினாள். பெயர் ஸ்நேகாவாம்.

“மெட்ராஸில் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் லேப் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன். என் ஃப்ரெண்ட் ரியாத்தில் வேலைக்கு அப்ளை செஞ்சுட்டு என்னையும் வற்புறுத்தினாள். வீட்டுலேயும் ஓகேனு சொன்னாங்க. கல்யாணம் ஆயிட்டா அப்புறம் வெளிநாட்டில வேலைக்குப் போகமுடியுமோ என்னவோ ஒரு அனுபவமாக இருக்கட்டுமேன்னு வந்துட்டேன்.”

ஸ்நேகாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவல்லை என்பது என் மனதில் பெரிய எழுத்தில் பதிந்தது. மிஸ்.ஸ்நேகா… இவள் மட்டும் எனக்கு மனைவியானால்… “ஐயோ, இதுதான் காதலா?” என்று கேட்டுக்கொண்டேன்.

“இங்கே எங்கே வேலை?” என்று கேட்டேன். சொன்னாள்.

“வெகேஷன் முடிந்து எப்போது திரும்புவீர்கள்?”

“இன்னும் முடிவு பண்ணலே. ரீ என்ட்ரி விசாவில்தான் போறேன். இரண்டு மாசம் லீவு. அங்கே போன பிறகு அவங்கதான் முடிவு பண்ணணும்.”

என்னைப் பற்றிக் கேட்டாள். நான் சென்னைக்குப் புதுசு என்றதும் ஆச்சரியப்பட்டாள். ”சென்னையில் உங்க வேலை முழஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க. நான் ஊர் சுற்றிக் காட்ட ஏற்பாடு பண்றேன். நீங்க அவசியம் என் வீட்டுக்கு வரணும்.” விலாசம், போன் நம்பர் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டேன். விலாசத்தில் மயிலாப்பூர் என்றிருந்தது.

“மயிலாப்பூர் தாம்பரத்துக்குப் பக்கமா, ஸ்நேகா?”

“இல்லியே, ஏன்?”

“இல்லே, பைலட்டை தாம்பரம் மிலிட்டரி ஏர்பேஸில் லேண்ட் செய்ய சொல்லலாமேன்னுதான். வீட்டுக்குப் பக்கமா இருக்குமில்லியா?”

“யூ நாட்டி” என்று தங்க நிற ஸ்நேகா, வாயில் நளினமாகக் கைபொத்தி மிகவும் ரசித்துச் சிரித்தாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவள் தூங்கிவிட, நான் தூக்கம் வராமல் அமர்ந்திருந்தேன்.

மனதில் பலப்பல எண்ணங்கள். சென்னையிலிருந்து மும்பைக்கு போன் செய்து, அம்மா அப்பாவை வரவழைத்து இவள் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கவேண்டம். சம்மதித்தால்.. சம்மதிததால் என்ன.. நிச்சயம் சம்மதிப்பார்கள். உடனேகூட கல்யாணம் வைத்துக் கொள்ளலாம். அரபிக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி இரண்டு வாரம் லீவு வாங்கிவிடலாம். பிறகு,மதலில் நான் திரும்பிவிட்டால் கூட, பிறகு அவள் அதே விஸாவிலே வரட்டும். பிடித்திருந்தால் வேலை செய்யட்டும். ஃபேமிலியை அழைத்துக் கொள்ளும் வசதியை எனக்கு கம்பெனி தந்திருக்கிறது.

நானும் சற்றுக் கண்ணயர்ந்து, விழிப்பு வந்தபோது விடிந்திருந்தது. அவள் டிஷ்யூவில் முகம் துடைத்து, தலைமுடியை ஒழுங்கு பண்ணி லேசான மேக்கப் போட்டு, ரெடியாயிருந்தாள்.

நானும் ஃப்ரெஷ்ஷாகிக்கொள்ள, விமானம் சென்னையின் மேல் பறக்கத் தொடங்கியிருந்தது. வங்காள விரிகுடாவின் கரையைத் தொட்டு, சாய்ந்து அரை வட்டம் அடிக்க, ஜன்னலுக்கு வெளியே நீலமாகக் கடலும், சில படகுகளும், வெள்ளைக் கோடாக அலையம் தெரிந்தன. குழந்தையின் உற்சாகத்துடன் அவள் ஜன்னலில் முகம் பதித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ”ஐயோ! இரண்டு வருஷத்துக்குப் பிறகு மீண்டும் நம்ம ஊரு” என கண்களில் மகிழ்ச்சி மின்னியது.

இமிக்ரேஷன் முடித்துக்கொண்டு வெளியே வந்தோம். என்னிடம் ப்ரீஃப்கேஸைத் தவிர வேறு எதுவுமில்லை. உடனே வெளியே சென்றுவிடலாம். அவள் பேக்கேஜ் கலெக்ட் செய்யட்டும் என்று நானும் அவளுடன் தாமதித்தேன். ஆனால், முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது பேக்கேஜ் வர. அவளால் தனியாக அதைத் தூக்க முடியது என்பதால் நானே தூக்கி, அதை ட்ராலியில் வைத்துத் தள்ள ஆரம்பித்தேன். ”தாங்க்யூ வெரி மச். ரொம்ப சிரமம் வேண்டாம். நானே தள்ளிக்கிறேனே” என்று ட்ராலியைப் பிடிவாதமாகப் பிடுங்கிக்கொண்டாள். ஜோடியாக வெளியே வந்தோம்.

ரெயிலிங்கின் மறுபுறம் என் பெயரைப் பலகையில் தாங்கிப் பிடித்தபடி ஒருவன் நின்றிருப்பது தெரிந்தது. அவளை அழைத்துச் செல்ல அம்மா, அப்பா என நாலைந்து பேர் வந்திருந்தார்கள். கட்டிப்பிடித்துக்கொண்டு, நலம் விசாரித்துக் கொண்டு, சிரித்துக்கொண்டு என்று அவர்கள் பரபரப்பாகிவிட, நான் ட்ராலியின் பக்கத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு என்னை கவனித்தவள் முகம் முழுவதும் களிப்புடன், “ஓ ஐயாம் ஸாரி” என்று அவர்கள் குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினாள். ஒவ்வொருவராகக் கைகுலுக்கிக்கோண்டே வந்தேன்.

சற்று உயரமாக அர்விந்த்சுவாமி ஜாடையில் புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தவனிடம் என்னைக் காட்டிச் சென்னாள். “விக்ரம், இவர் ராஜன்… சென்னைக்குப் புதுசு.. என்கூட வந்தார். ரொம்ப உதவியா இருந்தார். வெய்ட் செஞ்சு, என் பேக்கேஜ் கலெக்ட் செய்து, ட்ராலி தள்ளி… ரொம்ப நல்லவர். ராஜன்… இவர் விக்ரம்… என் வருங்காலக் கணவர். நீங்க கேட்டீங்களே, நான் வெகேஷன் முடிஞ்சு திரும்புவேனான்னு… இவர்தான் சொல்லணும்” – அவள் பேசிக்கோண்டே செல்ல, அதற்குமேல் என் காதில் எதுவும் விழவில்லை.

சென்னையின் முதல் அனுபவம் தொண்டைக்குள் புளிப்பாக இறங்கிக் கொண்டிருந்தது.

-நூருத்தீன்

ஆனந்த விகடன் 31.5.98 இதழில் வெளியான சிறுகதை

Photo by Tim Gouw on Unsplash

Related Articles

Leave a Comment