ரு நாள் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்த நேரம். பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவழ்ந்து அடுப்பருகே சென்று விட்டான். ஒரு கனத்தில் அடுப்பில் கைவைத்து விடுவான். யதேச்சையாய் கவனித்து விட்ட தாய், பாய்ந்தோடி வந்து, அள்ளியெடுத்து, வந்த வேகத்தில் சிறிது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தும் விட்டாள். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதுமின்றி குழந்தை தப்பித்தது. நடக்கவிருந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல், குழந்தையை உச்சி மோர்ந்த தாய்க்கு கண்களிலிருந்து தன்னையறியாமல் கண்ணீர் பொலபொலத்தது.

நெருப்பைத் தொட்டால் சுடுமென்று தெரியாத இளங்கன்றை தடுக்கும் அனைத்து பெற்றோர்க்கும் ஏறக்குறைய அதே வேகமும் பாசமும் தான் இருக்கும்.

நம் ஈமானின் ஒரு பகுதி மறுமையை நம்புவது. அதன் சொர்க்க நரக வாழ்வை நம்புவது. நரக நெருப்பின் வேதனையை நம்புவது. நரக நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒன்று. அதன் வேதனை – நீண்ட நெடிய கொடும் வேதனையாகும். இந்த மாபெரும் நெருப்பை விட்டுத் தவர்த்துக் கொள்ள நாம் பிரயாசைப்பட வேண்டும் தானே? நம்மையும் நமது குழந்தைகளையும் காக்க அனைத்து முயற்சியும் எடுக்க வேண்டும் தானே? இத்தகைய நரக நெருப்பை விட்டு காக்கும் ஒன்றாய் தொழுகை திகழ்கிறது.

குற்றவாளிகளைக் குறித்து – ”உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள் ”தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. (அல் குர்ஆன் – அத்தியாயம் 74, வசனம் 41-43)

குழந்தையை காத்திட்ட தாய் போல் தொழுகை நம்மை நெருப்பை விட்டுக் காக்கக் கூடியதாய் இருக்கிறது. அல்லாஹ் நம் அனைவருக்கும் தொழுகையை கடமையாக்கியுள்ளான். இதில் வயது, செல்வந்தர் பாகுபாடில்லை. நாம் அனைவருமே தொழுகையை நிலை நிறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கும் சிறு வயதிலிருந்தே தொழும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும் – வற்புறுத்த வேண்டும்.

தொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.

o-O-o

ஏறக்குறைய நம் அனைவருக்குமே மருந்து, மாத்திரை, டாக்டரின் பரிச்சயம் நிச்சயம் இருக்கும். நமக்கு ஏதேனும் நோய் எனில் டாக்டரை அனுகுகிறோம். அவர் அளிக்கும் மாத்திரைகளை வேளை தவறாமல் உட்கொள்கிறோம். அவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுகிறோம். ஆரோக்கியம் பெறுகிறோம். இந்த டாக்டர் என்பவர் உலக அறிவில், மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றவர். அவரை நம்புகிறோம்.

அனைத்து உலகத்தையும் படைத்து, அதை பரிபாலிக்கும் அல்லாஹ் குர்ஆனில் என்ன கூறுகின்றான்?

”நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கும். என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல் குர்ஆன் – அத்தியாயம் 20, வசனம் 14)

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் – அத்தியாயம் 51, வசனம் 56)

அல்லாஹ் நம்மையும் ஜின்களையும் அவனை வணங்குவதற்காகவே படைத்ததாகக் கூறுகின்றான். அப்படி அவனை வணங்கி தியானிப்பது தொழுகையை நிலைநிறுத்துவதன் மூலமே ஆகும் என்றும் கூறுகின்றான். ஒரேயொரு துறையில் மட்டுமே தேர்ச்சி பெற்ற டாக்டரை நம்பும் நமக்கு, சர்வலோக அதிபதியான அல்லாஹ்வை நம்புவதில் சிரமமிருக்கக் கூடாது தானே? முஸ்லிம்களாகிய நம் ஈமானின் முதல் பகுதியே அதுதானே?

அப்படியெனில் அவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட நாம், வணக்கத்திற்குரிய வேறு எவருமே அற்ற அவனை, அவன் கூறியபடி ஐவேளையும் தவறாமல் தொழ வேண்டும். இதில் வயது, செல்வந்தர் பாகுபாடில்லை.

தொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.

o-O-o

வியர்வையும் புற அழுக்கும் அதிகமாய் சேரும் போது ஒருநாளில் ஒருவேளைக்கும் அதிகமாய் குளிப்பதை நம்மில் பலர் பின்பற்றுகிறோம். வியர்வையும் அழுக்கும் அதிகமான நிலையில் நம் அருகில் ஒருவர் நெருங்கும் போது அதன் துர்நாற்றம் நம்மை முகம் சுளிக்கச் செய்யும். அதைப் போல் தொழுகையை தவிர்த்துக் கொள்ளும் எவரும் மிக மிக அழுக்கு படிந்தவரே. அல்லாஹ் அவரை விரும்புவதில்லை.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ”உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், ”இல்லை அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். ”இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும். அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக் கறைகளைப் போக்குகின்றான்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தொழுகை ஐவேளை தொழ வேண்டுமென்பதையும் அது தரக்கூடிய நிவாரணத்தையும் மிகச் சிறந்த ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை நாம் எவரும் நிராகரிக்க முடியுமா?

தொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.

o-O-o

நாம் எல்லோரும் ஏதாவதொரு வகையில் சிறிய அல்லது பெரிய, குறுகிய அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொணடிருப்போம். பிரயாணம் என்றவுடன் அதற்கு ஆதாரமான பொருட்களை சேகரம் செய்வது, பிரயாணத்தில் தேவைப்படும் பொருட்களை மூட்டை கட்டுவது, என அடிப்படையான விஷயங்களில் நம்மை தயார் செய்து கொள்வோம். வெளிநாட்டுப் பயணமெனில், பாஸ்போர்ட் விஸா, விமான டிக்கெட்டுகள் இத்தியாதிகளில் அதிகப்படியான கவனமும் கவலையும் இருக்கும். இவ்வுலகில் நிகழும் மிகச் சாதாரண ஒரு பயணத்திற்கே நம்முடைய பிரயாசை அவ்வளவு பொறுப்புள்ளதாய் இருக்கும்.

பாஸ்போர்ட், விஸா, டிக்கெட் போன்ற எதுவுமின்றி, மிக நிச்சயமான ஒரு வழிப் பயணம் ஒன்று நம்மனைவருக்கும் காத்திருக்கிறது. அந்த பிரயாணத்திற்கான ஆதாரமான விஷயத்தில் நமது கவனமும், பொறுப்பும் சிறப்பானதாய் இருக்க வேண்டும் தானே? அதற்கான கவலை நமது மனதில் சதா இருந்த வன்னம் இருக்க வேண்டும் தானே? இந்த பிரயாணத்திற்கு மிக அடிப்படையான ஏற்பாடு தொழுகையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: ”எவர் தம் தொழுகையைச் சரியான முறையில் பேணி வருகிறாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகையைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது.” (ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்)

தொழுகையை தவிர்த்துக் கொள்ள எவருக்கும் எந்தச் சலுகையும் இல்லை, இல்லவே இல்லை. இவ்வுலக வாழக்கை அநிச்சயமானது, மரணம் நிச்சயமானது. விரைந்து தொழுகையை நிலை நிறுத்துவோம்.

 -நூருத்தீன்

Related Articles

Leave a Comment