ஹெட் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார் தமிழ் மாஸ்டர் அப்துர் ரஹ்மான். புன்னகையுடன் தலை நிமிர்ந்தவரிடம் தன் கவரை நீட்டினார். ”சார். நான் வாலண்டரி ரிடயர்மெண்ட் கேட்டு விண்ணப்பிக்கிறேன்.”

ஹெச்.எம். முகம் சடுதியில் பாவம் மாறியது. ”என்ன சார்! என்ன ஆச்சு உங்களுக்கு? என்ன சொல்றீங்க?” பள்ளிக்கே பெருமை தேடித் தந்துக் கொண்டிருக்கும் ஒரு வாத்தியார், அனைவராலும் “நல்லவர்” என்று வருணிக்கப் பெறும் தமிழ் வாத்தியார், எந்தப் பிரச்சனைக்கும் இடம் கொடாமல் இருபது வருடம் சர்வீஸ் போட்ட வாத்தியார், திடீரென்று ஹெச்.எம். அறையில் நுழைந்து வேலையிலிருந்து ஓய்வு வேண்டும் என்பதை, லீவு கேட்பது போல் சர்வ சாதாரணமாய்க் கேட்ட போது – அத்தனை அதிர்ச்சியும், கேள்வியும் முகத்தில் படர அவரைப் பார்த்தார் ஹெச்.எம்.

அப்துர் ரஹ்மான் சாரின் முகத்தில் ஓர் அழுத்தமான தீர்மானம் தெரிந்தது. ஐம்பது வயதிலும், ஏழ்மையிலும், குடும்பத்து துயரத்திலும் மீறி அவர் முகத்தில் ஒரு தீர்மானம் தெரிந்தது. ”ஆமாம் சார்! நான் ரொம்ப களைச்சுப் போயி்ட்டேன். இருபது வருஷமா பாடம் சொல்லிச் சொல்லி, வாய்மை போதிச்சு, நேர்மைய தெரிவிச்சு… ப்ச்.. இப்ப என் மகனுக்கு வேலை கிடச்சுடுச்சு. நான் ஓய்வு எடுக்கப் போறேன். அதான்.”

அவர் காரணத்திற்காக காரணம் சொல்கிறார். ஹெச்.எம்.மிற்கு புரிந்தது. தற்காலத்தில் கடமை, நேர்மை தவறாமல் வாழும் சிலரில் இவரும் ஒருவர். ஏதோ பின்னணி நிகழ்ந்திருக்கிறது. அதனால் முகத்தில் அப்பியிருந்தது. ”என்னால இதை விட நல்ல முடிவு எடுக்க முடியாது சார். நான் சாகும் போதும் என் மனசுல பாரம் இருக்கக் கூடாது. நான் இது நாள் வரைக்கும் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்தது – வாய்மை, அறம், நேர்மை யெல்லாம் பொய் ஆகிடக் கூடாது” வார்த்தைகளை உச்சரிக்காமல் உச்சரித்து அமர்ந்திருந்தார்.

நேற்றுக் காலை சுந்தர்ராஜன், தன் மாணவன், வீட்டிற்கு வந்த போது, ”சாகும் வரை நான் உபாத்தியாராகவே இருக்க வேண்டும்” என்று தான் நினைத்தார்.

ஞாயிற்றுக் கிழமை ஆதலால் காலை டிபனை முடித்து விட்டு பேப்பரை மீண்டும் மேய்ந்து கொண்டிருக்கும் போது சுந்தர ராஜன் வந்தான். ”வணக்கம் ஐயா”.

”வாப்பா சுந்தர் ராஜா. எங்கே ரொம்ப நாளாச்சு?” அவர் ஈஸிசேருக்குப் பக்கத்தில் ஸ்டூலை நகர்த்த பவ்யமாக அமர்ந்தான். ”கொஞ்சம் வேலை பளு”.

”உம் சுகம் தானே?”

”உங்க ஆசீர்வாதம்”. பையில் கொண்டு வந்திருந்த சாத்துக்குடிகளைக் கொடுத்தான்.

”ஒரு சந்தோஷமான சமாச்சாரம்.”

”என்ன கல்யாணமா? இன்னொரு முறையா?”

”பொண்டாட்டி கேட்டிருந்தா நிச்சயமா கடிச்சுடுவா. அது இல்லை ஐயா. நான் ஜெர்மனி போறேன்?”

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். ”அடி சக்கை. உங்க கம்பெனிக்கு ஜெர்மனில் பிரான்ச் இருக்கிறதா சொல்லலையே நீ?”

”கம்பெனில இல்லை. நான் இங்கே ஜெர்மன் மொழி படிச்சிருந்தேன். எக்ஸாம்ல டிஸ்டிங்ஷன். இப்போ அவங்க ஸ்காலர்ஷிப்ல இரண்டு மாசம் மேல் படிப்புக்கு அனுப்புறாங்க. அனேகமா பிறகு அவங்க எம்பஸியிலேயே வேலை கிடைச்சிடும்.”

உள்ளுக்கு அனைத்து ஸெல்களும் பூரிக்க அவனைப் பார்த்தார். எடுத்துக் கொண்ட செயலில் என்ன முழுமை, பெர்பெக்ஷன். ஹாபியாக ஆரம்பித்த படிப்பிலும் முழுக் கவனம். அதற்குக் கிடைத்த பரிசு – ஸ்காலர்ஷிப், பயணம், உத்தியோகம்.

”எல்லாம் உங்க பாடம் சார். நீங்க அடிக்கடி சொல்லுவீங்க சார். ‘வேஷம் போடா”தேன்னு. திருடனா இருந்தாலும் இல்லேன்னு ஏன் மறைக்கனும்? மறைக்க மறுத்திட்டா திருடனா வாழ எண்ணம் வராதில்லே. என் மனசுல பலமா பதிஞ்சுட்ட லாஜிக்!”

”பாராட்டறேம்பா. நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.நீ என் மாணவன் போல் இல்லே. என் போலவே ஆயிட்டே. உன்னை வச்சு என்ன நானே புகழ்ந்துக்கறேன்.”

அன்று முழுக்க மனைவியிடம் அதுபற்றியே பேசிக் கொண்டிருந்தார். எந்த வேலையையும் முழுசா மன நிறைவோட செய்யணும்டி. என் இருபது வருஷம் நான் நல்ல பேர் எடுக்க முடிஞ்சிரு்க்க ஆனால் அது எப்படியெல்லாம் என் மாணவங்க மனசுல ஆக்ரமிச்சு இருக்கு பார்த்தியா? உண்மை, நேர்மை, ஹானஸ்டி.”

”என் வேலையிலே முழுமை – நான் பொய் சொல்றத நிறுத்திட்டுத்தான் பசங்களுக்கு ‘பொய் சொல்றது தப்பு’ன்னு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ காலத்துக்கு ஏற்ப நிறம் மாறிட்டே இருக்கு எல்லாமே. ஆனா, எம் மனசுல நான் பார்த்த மகாத்மா மாறலே, படிச்ச ஏசுவும், முஹம்மது நபியும் (ஸல்) மாறலே. அவங்க பேருக்கு பின்னாடி எடடிப் பார்த்தா உண்மை இருக்கு.”

மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காலடியில் கால் பிடித்தவாறு,

”மௌத்தா போற வரைக்கும் கல்வி கத்துக் கொடுக்கணும். என் சக்திக்கு மீறின சேவைய தொடரணும். இது எனக்கு இன்னிக்கு ரொம் ஆசையாயிடுச்சு ஆயிஷா.”

அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

”ஏங்க. நம்ம பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த ஷண்முக சுந்தரத்தை இன்னிக்குப் போய் பார்க்குறென்னு சொன்னீங்க. டிபாஸிட் பணத்துக்கு அவர் ஏற்பாடு பண்ணாதான் வேலை நிச்சயமாகும்.”

சுகமாய் லயித்து காரி அப்துல் பாஸிதின் கிராஅத்தை ரசிக்கும் போது பாப் மியூஸிக் செவியைப் பிளந்தால் – அது உலகமகா எரிச்சல்.

மனைவியின் கவலை நியாயமாக, அவளைப் பார்த்தார்.

”அவர் என்னை மதிச்சு வேலைக்கு ரெக்கமென்ட் செய்துட்டார். அதுக்காக அவரிடமே கம்பெனில கட்ட சொல்ற டிபாஸிட் பணமும் ஏற்பாடு செய்ய சொல்றது…” நிறுத்தினார்.

”வேற வழியில்லைங்க. நம்ம கிட்ட மிஞ்சிப் போனா ஆயிரம் ரூபா கைமாத்தா புரட்டலாம். ஐம்பதாயிரம் ரூபாய்ன்னா நம்ம சக்திக்கு முடியாது. கேட்டுப் பாருங்க். இல்லேண்ணா இறைவன் விட்ட வழி்.”

மகனுடன் புறப்பட்டார். ஷண்முக சுந்தரத்தால் வருத்தம் மட்டும் தான் தெரிவிக்க முடிந்தது. மனம் திறந்து மிகவும் வருத்தப்பட்டார். அவரால் உதவ முடியாமற் போனது இவர்களது துரதிர்ஷ்டம்.

ஆக இந்த வேலை மகனுக்குக் கிடையாது. தன் சம்பளத்தை மட்டும் நம்பித்தான் மீண்டும் குடும்பம் ஓட்ட வேண்டும். அல்லது வேறு வேலை தேடும் முயற்சி தொடர வேண்டும்.

பேர் உண்டு, புகழ் உண்டு, பைசா பிரயோஜனம் தராமல். இதற்கு முன் உதவிக் கேட்டுப் போன நபர்களும் மதிப்பு மட்டும் வைத்திருந்தார்கள். பணத்திற்கு இல்லாதவர்களாகி விட்டார்கள்.

புகழ். மனத்திற்கு மட்டும் தான் நிறைவு. வாத்தியார்கள் நேர்மை என்றால், சினிமாவில், கதையில் வருவது போல் ஏழ்மை, இயலாமைதான் நிஜம். ஏணியும், வாத்தியாரும் ஒன்றாக கட்டிப் போடப்பட்டவர்கள். இல்லையென்றால் பழமொழி பொய்யாகி விடும்.

மன உளைச்சலுடன் வீடு திரும்பும் போது அது நடந்தது. இருட்டத் தொடங்கி விட்ட நேரத்தில் யாரும் கவனிக்காமல், தெரு ஓரத்தில் கிடந்த அந்த ஹேன்ட்பேக்கை மகன் தான் பார்த்து எடுத்தான்.

உள்ளே சில நூறு ரூபாய் நோட்டுக்கள். பார்வை முழுக்க இருவருக்கும் வியப்பும் பதட்டமும் நிறைந்தன. மாலை டி.வி. சினிமாவில் தெரு அமிழ்ந்திருந்ததால் சந்தடியில்லாமல் அமைதியாய் இருந்தது.

”என்ன்ப்பா, போலீஸ் ஸ்டேஷனா, நக்கீரனா?”

மகனைப் பார்த்தார். யார் தவற விட்ட கரன்சியோ! கைகளையும் மனத்தையும் அரித்துக் கொண்டிருந்தது.

”ஸ்டேஷன்ல வேணாம். பத்திரிக்கைகாரங்க புக்ல அறிவிப்பு தருவாங்க.”

மகன் மறித்தான். கெஞ்சலாய் ஆரம்பித்தான். ”நல்லா யோசிச்சுப் பாருங்க வாப்பா. இது இப்ப நமக்கு ரொம்ப அத்யாவசியம். யாரும் உதவ மறுத்திட்ட நேரத்துல கிடைச்சிருக்கு. இப்ப என் எதிர்காலமே இந்த பேக்கில அமுங்கியிருக்கு. இத திருப்பிட்டா நாளைக்கு ஸ்கூல்ல உங்களப் பாராட்டுவாங்க. உங்க நேர்மைக்கு மேலும் பத்து மார்க் போடுவாங்க.”

பேச ஆரம்பித்தவரைத் தடுத்தான். நடக்க ஆரம்பித்தார்கள். மேலும் இடைவெளி தராம்ல பேசினான். ”உங்க அளவுக்கு எனக்கும் இறையச்சம் இருக்கறதால சொல்றேன். நிஜ வாழ்க்கைல அல்லாஹ்வே கூட வீட்டுக்கு வந்து, கதவைத் தட்டி ‘இந்தா பணம்’னு தரப் போறதில்லே. அவன் நாம வர்ற வழியிலே இத போட்டிருக்கான். அவ்வளவு தனா. இது உரியவங்களக்குப் போய்ச் சேர்ந்தா, அம்பதோ, நூறோ கூப்பிட்டு தருவாங்க. டிபன், காபி வாங்கி சாப்பிடலாம்.”

”நீ பேசறதை நான் ஏத்துக்க மாட்டேன்.

”ஆனா…”

”இருங்க வாப்பா. நீங்க ஒரு கொள்கைய வச்சுக்கிட்டு உங்க வாழ்க்கைய வாழ்ந்திட்டீங்க. நான் எதார்த்தமா இருக்கப் பார்க்கிறேன். அவ்வளவுதான். என் கொள்கைல என் வாழ்க்கையை ஆரம்பிக்க விடுங்க வாப்பா. நாம இன்னொருத்தன் பாக்கெட்ல பிளேடு போடலை. ஒரு உண்மையை மறைக்கப் போறோம். ஒரு நல்லதுக்காக பொய் சொல்றதுல தப்பு இல்லைன்னு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கீங்க. வாப்பா, இப்போ அத தான் பண்ணப் போறோம்!”

”நான் இருபது வருஷமா சொல்லிக் கொடுத்த பாடம் தப்பு ஆயிடும்பா.”

”இல்லே வாப்பா. அது பொய்யில்லை. யதார்த்த வாழ்க்கைக்கு மாத்திக்கிறதுலே தப்பு இல்லே.”

”உனக்கு இத விட்டா வேற வேலை கிடைக்கும்.”

”தெரியாது வாப்பா. அப்புறமா காத்து இல்லேன்னா அப்பவே தூத்திககலியேன்னு தான் வருந்துவோம். இதுவும் நீங்க சொல்லிக் கொடுத்தது தான.”

”கடைசியா கேட்டுக்கறேன். வாப்பா இந்த முறை என் இஷ்டத்துக்கு விடுங்க. நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பைத்துல் மாலுக்கே திருப்பிக் கொடுத்துடறேன். ஏழை, எளியோருக்கு பயன் தரும்.”

இரவில் மனைவி கேட்டாள். ”என்னங்க இன்னும் அதுவே மனசை உறுத்திக்கிட்டு இருக்கா?”

”இல்லேம்மா. நான் கத்துக் கிட்டதே கை மண் அளவு. இதுல நான் என்னத்தை பசங்களக்கு சொல்லிக் கொடுத்தேன். நான் ஜெர்மனி போறதுக்கு நிர்பந்திக்கலே. பணத்தை உபயோகிக்க வேண்டாம்னு க்ட்டாயப்படுத்த முடியலே.”

”நம்ம மகன் சொன்னது என்னங்க தப்பு? நாம ஒன்றும் மத்தவங்க வீட்டுல புகுந்து திருடலியே.”

”இன்னும் பத்து வருஷம் கழித்து எதார்த்தத்துக்கு அது கூட சரியாப்படலாம். அதனால தான் சொல்றேன். நானே கத்துக்கணும். இன்னும் நிறையக் கத்துக்கணும்.”

”ஆனால் என் கொள்கை சரியோ, தப்போ, ஒரு கருத்துலே மட்டும் என் மனசு தெளிவா இருக்கு.”

”என்னங்க?” என்றாள்.

”எந்த வேலையிலேயும் வேஷம் போடக் கூடாது. நான் நாளையிலிருந்து பசங்க முன்னால புத்தகத்தைப் பிரிச்சு பாடம் சொல்லிக் கொடுத்தால் என் இதயமே நின்னும்.

”அதனாலே..?!” கண்களில் பயமும், கலவரமும் இல்லாளுக்கு நிறைந்தது.

”நான் வேஷம் போடப் போறதில்லே.”

தன் கவரை நீட்டினார். ”சார், நான் வாலண்டரி ரிடயர்மென்ட் கேட்டு விண்ணப்பிக்கிறேன்.”

oOo

-நூருத்தீன்

முஸ்லிம் முரசு செப்டம்பர் 1999 இதழில் வெளியான சிறுகதை.

Photo by Cytonn Photography on Unsplash

Related Articles

Leave a Comment