தனக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிர்வீட்டுக்காரரை “இங்கே வா” என்று அழைத்தார் அவர். அழைத்தவர் மனநிலை சரியில்லாதவர். வயது அறுபதுக்குமேல் இருக்கும். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு அவர் ‘மென்ட்டல்’ மாமா. ஆனால் அவரிடம் நேரில் பேசும்போது மட்டும் மாமா என்று சுருக்கிவிடுவார்கள்.
ஆச்சரியமுடன் அவரைப் பார்த்தார் அழைக்கப்பட்டவர். அவருக்கும் ஏறத்தாழ அதே வயதுதான். இவரிடமும் ஒரு குறை இருந்தது. அந்தக் குறைபாடினாலேயே அவருக்கு இவரைப் பிடிக்காது.
“எதற்கு?” என்றார்.
“சமையல் செஞ்சிருக்கேன். சாப்பிட வா.”
அது இன்னும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. ‘மென்ட்டல் மாமாவுக்கு முத்திடுச்சுா இல்லை தெளிஞ்சுடுச்சா?’ என்று சந்தேகம் அதிகமானது இவருக்கு. யோசித்தார். போகலாமா, வேண்டாமா என்று யோசித்தார். பிறகு,
“சரி வர்ரேன்” என்று தன் வீட்டுத் திண்ணையிலிருந்து எழுந்தார்.
சிறு நகரம் போன்ற ஊர் அது. பெரிய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், சில தியேட்டர்கள், அரசு கல்லூரி, ஜெயிலு, கோர்ட்டு, ஊருக்கு வெளியே பரந்த நிலத்திற்கு நடுவே தனியார் பொறியியர் கல்லூரி, எல்லாம் இருந்தன. மெயின் பஜாரில் ஜவுளி, நகைக் கடைகள். இங்கு மட்டும் இனிப்பை மொய்க்கும் ஈ போல எப்பொழுதும் சிறு கூட்டம்.
அந்த ஊரில் காலனி போன்ற தெரு ஒன்றில்தான் மாமாவின் வீடு. நேரில் இல்லாவிட்டாலும் நாமும் மரியாதைக்காக ‘மென்ட்டலை’ நீக்கிவிடுவோம். அவரது வீட்டுடன் தெரு ‘திடும்’என்று ஓர் உயரிய மதில் சுவருடன் முடிந்துவிடும். சுவருக்கு மறுபுறம் அரசாங்க தரிசு நிலம்; மண்டி கிடக்கும் புதர்.
மாமாவின் வீட்டிற்கு வலதுபுறம் இருந்த வீட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தம் மனைவியுடன் வசித்து வந்தார். இன்ஸ்பெக்டர் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். அது என்னவோ வந்ததிலிருந்தே அவருக்கு அந்த ஊரைப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஓட்டிக் கொண்டிருந்தார்.
”பெரிய நகரத்துக்கு மாற்றல் கேட்டுப் பாருங்களேன்” என்று மனைவி தொணதொணக்கும் போதெல்லாம், ‘அது முடிந்தால் நான் ஏன் இங்கே குப்பைக் கொட்டப்போறேன்’ எனும்படியான வெறுப்புப் பார்வை பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுவார்.
“காரியம் ஆகிற மாதிரி எந்த மேலதிகாரியையாவது புடிச்சால் என்ன? விசாரிச்சுப் பாருங்களேன்,” என்று உறங்கும்முன் மனைவி அளிக்கும் ஆலோசனைக்கு, “பார்ப்போம்” என்று வழக்கமான பதில் வரும்.
வீட்டிற்கு குடிவந்த புதிதில் பக்கத்துவீட்டு மாமாவையும் அவருக்கு எதிர்வீட்டுக்காரரையும் பார்த்துவிட்டு நிறைய பயந்துவிட்டார் இன்ஸ்பெக்டரின் மனைவி. மாமாவுக்கு புத்தி சுவாதீனமில்லை என்பது தெரியவந்தாலும் ஆள் பார்ப்பதற்கு இயல்பாகவே இருப்பார்; இயல்பாகத்தான் பேசுவார். திடீரென்று தெருவில் தமக்குத்தாமே பேசிக்கொண்டு அவர் வேகவேகமாய் நடந்துவருவதைக் காணும்போதுதான் பார்க்க பயமாயிருக்கும். அந்த நேரத்தில் யாரேனும் அவரிடம் குறுக்கிட்டால் தீர்ந்தது விஷயம்.
அது மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவரது வீட்டு வாசலிலேயே படுத்துக் கிடக்கும் நாய்க்குட்டி ஒன்று. எப்பொழுதும் மாமா அதற்கு சோறு வைக்கத் தவறுவதில்லை. அதனால் நன்றி மறவா நாய். ஆனால் நாய்க்கு மாமாவின் முழு குணம் என்ன தெரியும்? ஒருநாள் இயல்பற்று உரத்துப் பேசியவராய் வேகுவேகு என்று அவர் வீட்டிற்கு வரும்பொழுது பாசத்துடன் ஓடிவந்த அந்த நாய் அவரது வேட்டியைக் கவ்வ, விட்டார் ஓர் உதை. ஈனக்குரலில் “உவ்“ என்று கத்திக்கொண்டு தெருவோரம் சுருண்டு விழுந்தது நாய். அத்துடனாவது விட்டிருக்கலாம். இங்குமங்கும் அரக்கப் பரக்கத் தேடியவருக்கு பெரியதொரு கல் தென்பட்டது. அதை எடுத்துவந்து அந்த நாயின் தலையில் “நச்“.
வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு அதுதான் மாமாவின் முதல் அறிமுகம். உள்ளே பாத்ரூமிற்குள் ஓடிவந்து, குமட்டிக் குமட்டி கொட்டி, கழுவித் தள்ளினார்.
மாமாவின் இந்த வினோதத்தைப் பார்த்துக் கொண்டு தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார் எதிர்வீட்டுக்காரர். ‘ஏற்கெனவே அந்த ஆளுக்கு என்னைப் பிடிக்காது. இந்த நேரத்தில் அவர் எதிரே என் முகம் எதற்கு?’ என்று அவருக்கு தோன்றியது. நீண்ட பெருமூச்சுடன் தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். தனி ஆளாய் அந்த வீட்டில் வசித்து வந்தார் அவர். மகன், மகள் இருக்கிறார்கள் – திருமணமாகி வெவ்வேறு ஊரில் தத்தம் குடும்பத்துடன். அப்பாவின் மேல் அவர்களுக்கு நிறைய பாசம் உண்டு. “எதற்குத் தனியாய்? எங்களுடன் வந்துவிடுங்களேன்” என்று அழைத்துப் பார்த்தார்கள்; கெஞ்சிப் பார்த்தார்கள். நிராகரித்துவிட்டார். பேரப் பிள்ளைகளுடன் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு தங்கியிருந்துச் செல்வார்கள்.
அவருக்குப் பிரச்சினை முகம். கட்டிடத் தொழிலில் மேற்பார்வையாளராக நல்ல வருமானத்துடன் பணி. ஒருநாள் அந்த விபத்து நிகழ்ந்தது. பெயர்ந்து விழுந்த கான்க்ரீட் தளம் தடுமாறி மல்லாந்து விழுந்த அவரது முகத்தை அலங்கோலப்படுத்திவிட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சை, ப்ளாஸ்டிக் சர்ஜரி என்று எல்லாம் முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து கண்ணாடியைப் பார்க்கும்போதுதான் அவரை அவராலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியே முடங்கிப்போனார்.
தேற்றி ஆதரவளித்த மனைவி சில காலத்தில் இதய நோயால் இறந்துவிட தனிமை அவரை மிகவும் வாட்டியது. குடியிருந்த வீட்டை விற்றுவிட்டு நகருக்கு ஒதுக்குபுறமாய் தெருகோடியில் கிடைத்த இந்த வீட்டை வாங்கிக்கொண்டு வந்து தான் உண்டு, தன் வீடு உண்டு என்று பழகிக்கொண்டார். அவசரத் தேவைக்காக வெளியில் செல்லவேண்டும் என்றால், முகத்தை பாதி மறைக்கும் கூலிங் க்ளாஸ், மீதப் பகுதியின் மீது தோளில் உள்ள துண்டை துக்கத்துக்கு வாயை மறைப்பதுபோல் மறைத்துக்கொள்வார்.
இந்த இவரது முகமே மாமாவுக்குப் பெரும் தொந்தரவாய் இருந்தது. இயல்பான நிலையில் இருக்கும் நேரத்தில்கூட இவர் தென்பட்டுவிட்டால் கண்கள் சுருங்கி, முகம் கோணலாகி தனக்குத்தானே பேச்சு ஆரம்பமாகிவிடும். இதையெல்லாம் புரிந்துகொண்ட சூபர்வைசர், மாமா எதிரில் தென்படுவதையே தடுத்துக்கொள்வார்.
மாமா குடியிருந்தது மிகப்பெரிய வீடு. மனைவி, மகன்கள், மகள்கள் என்று வசித்துவந்தவர். இள வயதிலிருந்தே அவருக்கு இலேசான மனப் பிறழ்வு இருந்திருக்கிறது. குடும்பம் சகிதம் வாழ்ந்தபோது அது அவருக்குப் பெரிதாய்ப் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. மனைவியின் மரணம் ஏற்படுத்திய வெறுமை, படித்து வளர்ந்து ஆளான மகளும் பிள்ளைகளும் டாக்டர், என்ஜினியர், தொழில் என்று ஆளுக்கொரு பக்கமாய் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதும் வந்து சூழ்ந்த தனிமை வயதான காலத்தில் அவருக்கு அந்தப் பிரச்சினையை அதிகப்படுத்திவிட்டது.
வசதி வாய்ப்புடன் இருந்த பிள்ளைகள் வீட்டை நவீனப்படுத்தித் தந்தார்கள், சமையலுக்கும், துப்புரவுக்கும் பணியாள் அமர்த்தினார்கள். மாதா மாதம் பணம் தவறாமல் அனுப்பிவைப்பார்கள். விடுப்பின்போது வந்து ஒன்றிரண்டு நாள் இருந்துவிட்டு, “ஸே ஹாய் ட்டூ யூர் கிராண்ட்பா” என்று தம் பிள்ளைகளுக்கு தாத்தாவை அறிமுகப்படுத்திவிட்டு அடுத்தடுத்தநாள் டாட்டா காட்டிச் சென்றுவிடுவார்கள். அதற்கடுத்து இரண்டு நாள் அவர் வீட்டிலேயே தனக்குத்தானே பேசிக்கொண்டு நடப்பார்.
அன்று காலை எப்பொழுதும்போல் ஸ்டேஷனுக்குச் சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய நாள் திருட்டு வழக்கு ஒன்றில் மாட்டிய கைதியை லாக்அப்பில் அடைத்திருந்தார். வெயிலில் அலைந்து சிரமப்பட்டு தொழில் நடத்துவதைவிட அரசாங்க உபசரிப்பில் சிறிது காலம் இருந்துவிட்டு வரலாம் என்று தோன்றியதோ என்னவோ, இரண்டே தட்டில் அனைத்தையும் ஒத்துக்கொண்டான். அவனை அன்று கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. உள்ளே நுழைந்தவர் பெருநகரத்திலிருந்து மெனக்கெட்டு வந்திருந்த எஸ்.பி, அந்தக் கைதியை விசாரிப்பதைக் கண்டு பெரும் ஆச்சரியம். இந்தச் சில்லறைத் திருடனுக்காக இவர் இங்கு எதற்கு?
“சரி, சரி. இவனை லாக்அப்பில் வை” என்று ஏட்டுடன் அவனை அனுப்பிவிட்டு, “வாங்க ஷங்கர்” என்று புன்னகையுடன் அவரை வெளியே அழைத்துக் கொண்டு வந்தார். சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அடுத்து அவர் சொன்ன செய்தி ஷங்கருக்கு தூக்கிவாரிப் போட்டது.
“ஸார். இவன் வெறும் சில்லறைத் திருடன் ஸார். இவனை எப்படி…?”
“மேலேருந்து பிரஷர் ஷங்கர். சொன்னா நீங்க புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு இதுல மேலிடம் இன்வால்வ்டு. நிறைய அரசியல் இருக்கு. அவங்களுக்குத் தேவை பலி கடா. சொன்னபடி ஒத்துழைங்க. உங்களுக்கு நல்லது நடக்கும். இன்ஸ்பெக்டர்கூட உங்களுக்கு இந்த ஊர் போஸ்டிங்ல சுவாரஸ்யம் இல்லைன்னு சொன்னாரே. கோயம்புத்தூர் ஓக்கேயா?”
“அது வாஸ்தவந்தான் ஸார். இருந்தாலும் இது… மனசில என்னவோ உதைக்குது” என்று தடுமாறினார். “உண்மை தெரிஞ்சுடாதா?”
“மறைச்சுடலாம் ஷங்கர். ஆரம்பத்துல மீடியா பரபரக்கும். ஆனால் வேறு சென்ஷேனுக்கு அவங்களே மாறிடுவாங்க. மக்களுக்கு ஒரே நியூஸின் மேல் ஆர்வம் ரொம்ப நாள் நீடிப்பதில்லை.”
பேசினார். எஸ்.பி அதட்டலும் அதிகாரமும் குழைத்துப் பேசினார். ஷங்கருக்கு அந்த ஊரை விட்டு இடமாற்றம் தேவையாய் இருந்தது. தவிர வேறு வழி இருப்பதாகவும் படவில்லை.
ஜீப்பில் அந்தக் கைதியை ஏற்றிக்கொண்டு ஷங்கரும் சில அதிகாரிகளும் கோர்ட்டுக்குக் கிளம்பினர். ஆனால், கைதி கோர்ட்டை அடையவில்லை. ஓர் ஏட்டு மட்டும் துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரவு வீடு வந்த ஷங்கரை, டிவியில் செய்தி கேட்டிருந்த மனைவி பதட்டத்துடன் நிறைய கேள்வி கேட்டார். பத்திரிகைகளுக்குச் சொன்னதை கிளிப்பிள்ளையாய் மனைவிக்கும் சொன்னார். பசிக்கவில்லை; பால் குடித்துவிட்டு படுத்துவிட்டார். “என்ன ஸார்? இதை விட்டுட்டுப் போறீங்களே?” என்று நெஞ்சிலிருந்து தோட்டாவை பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு வழியும் ரத்தத்துடன் கைதி கனவில் துரத்தினான்.
விடிந்ததும் ஷங்கரின் மனைவி, “ஏங்க நேத்து மதியம் பக்கத்து வீட்டுல என்னவோ பெருசா சத்தம் கேட்டதைப் போல் இருந்துச்சு. ஒரு எட்டு எட்டி அந்த மாமாவை விசாரிச்சுடுங்களேன்.”
டிவியில் எந்தச் சேனலைத் திருப்பினாலும் செய்திகளில் அந்த ஊர் செய்தி தலைப்புச் செய்தியாய் ஓடிக்கொண்டிருந்தது. அதை அணைத்துவிட்டு டியூட்டிக்குக் கிளம்பியவர் மாமா வீட்டுக் கதவைத் தட்டினார்.
மாமாதான் கதவைத் திறந்தார். “வாங்க உள்ளே வாங்க.”
நல்லவேளை, மனைவி பயந்ததுபோல் மனுசனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்று நினைத்துக்கொண்டு, “இல்லே நான் டியூட்டிக்குப் போகணும்.”
“உள்ளே வாங்கன்னு சொன்னேனே. வந்துட்டுப் போகணும். காஃபி தருவேன்.” கோபமும் படபடப்பும் இருந்தன மாமாவிடம்.
அவரைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் சரி போகட்டும் என்று உள்ளே சென்றார். “உட்காருங்க” என்று ஹாலில் இருந்த சோபாவை காட்டிவிட்டு அடுக்களைக்குச் சென்றார் மாமா.
அவர் அங்கு தனக்குத்தானே பேசுவது கேட்டது. “லப்பு டப்பு… கேக்குது. எனக்குக் கேக்குது. மேசை சத்தமா? இல்லே இல்லே. மேசையில தட்டுனா டப்பு… டப்பு… மட்டுந்தான் வரும். இது லப்பு டப்பு.. ஹார்ட்டு பீட்டு இது… அதுதான் லப்பு டப்பு சொல்லும். எனக்குக் கேக்குது.”
எப்பொழுதையும் விட மாமா சற்று அதிகம் பேசுவதாகப்பட்டது ஷங்கருக்கு.
“நான் அப்புறமா வர்ரேனே” என்றார் ஷங்கர் ஹாலிலிருந்து.
”இல்லே. இதோ வர்ரேன்.“ வந்தார்.
“அந்த கதவைப் பார்த்தியா?”
அவர் காட்டிய திசையில் பார்த்தார் ஷங்கர். பாத்ரூம் கதவு சாத்தியிருந்தது.
“அங்கேதான் வெச்சிருக்கேன்.”
“என்ன அங்கே?”
“போட்டுத் தள்ளிட்டேன். அந்த ஆள் மூஞ்சியே எனக்குப் பிடிக்கலே அதான். இன்னிக்கு புதைக்க நெனச்சேன். ஆனா உண்மையை மறைக்கப் பிடிக்கல.”
அழுதார் மாமா.
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 08 மார்ச் 2012 அன்று வெளியான சிறுகதை