நபி மூஸா மஸ்ஜித்

by நூருத்தீன்

பலஸ்தீனின் ஜெரிக்கோ ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது நபி மூஸா மஸ்ஜித். ஜெரிக்கோ நகரிலிருந்து 11 கி.மீ. தெற்கே, ஜெருசலத்திலிருந்து 20 கி.மீ. கிழக்கே தனியே அது நின்றுள்ள இடம் ஒரு பாலைவனம். நபி மூஸாவின் கல்லறை அங்கே உள்ளது என்பது அதன் சிறப்பு.

நபி மூஸா (அலை) அவர்களின் கல்லறை எங்கு உள்ளது என்பதை யாருமே வெகு நிச்சயமாக அறிந்திருந்தாதபோது அப்பகுதியின் உள்ளூர் முஸ்லிம் பண்பாட்டில் என்றோ எப்படியோ உருவாகிவிட்டது அது.

மூஸா(அலை) … (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்’ என்று கூறினார்கள். (புகாரி – பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3407)

என்று சஹீஹ் புஹாரி ஹதீஸில் உள்ள குறிப்பின்படி அந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்கப்பட்டிருக்கும் என்பது ஒரு சாரார் கருத்து.

ஜெருசலம்-ஜெரிக்கோ பாதை மத்தியதரைக் கடல் பகுதி அரேபியர்களின் ஹஜ் பயண வழித்தடம். தொடக்கத்தில் அது அந்தப் பயணிகளின் ஓய்விடமாக இருந்துள்ளது. சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை மீட்டெடுத்த பின் கனவொன்றில் அவ்விடம் அவருக்குக் காட்டப்பட்டதால் அங்கு அவர் அந்த மஸ்ஜிதைக் கட்டினார் என்கிறது பாரம்பரியச் செய்தி. பின்னர் ஹி. 668 (கி.பி. 1269-70) ஆண்டில் மம்லூக் சுல்தான் பைபர்ஸ் அல்-புன்துக்தாரி அந்த கல்லறைக்குச் சன்னதி கட்டியிருக்கிறார்.

மனிதர்களுள் அவ்லியா என்று நம்பப்படுபவருக்கே சமாதி என்று ஒன்று உருவானதும், ஆண்டு விழாவும் பாட்டும் கூத்தும் களை கட்டும்போது, வரலாற்றின் மிக முக்கியமான நபியான மூஸா (அலை) அவர்களுக்கான கல்லறை என்று ஒன்று உருவானால் என்னவாகும்? ‘நபி மூஸா மஸ்ஜித் புனித யாத்திரை’ என்ற பெயரில் ஆண்டு உற்சவம் தொடங்கப்பட்டு, ஊர்வலம் இன்னம் பிறவாக வளர்ந்து, பின்னர் உதுமானிய ஆட்சிக்காலம் வரை நடைபெற்றிருக்கிறது.

1948 அரபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பிறகு மேற்குக் கரை (West Bank) ஜோர்டான் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், ஆண்டு ஊர்வலத்தை நிறுத்தி விழாவுக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது ஜோர்டான். பின்னர் ஃபலஸ்தீனில் தீவிரமடைந்த ஃபலஸ்தீன்-இஸ்ரேல் மோதல்களுக்குப் பிறகு அதுவும் வீரியம் இழந்து போனது.

பழமையான அந்த மஸ்ஜிதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்து, சுற்றுலாத் தலமாக்கி மேல் தளத்திலுள்ள அறைகளை வாடகைக்குவிட ஐக்கிய நாடுகள் தரப்பில் ஏற்பாடு நடைபெற ஆரம்பித்ததும் ஃபலஸ்தீனின் ஜெரிக்கோ அதிகாரிகள் விழிப்படைந்து அதற்குத் தடை ஏற்படுத்தியுள்ளனர்.

உள்ளே நுழைந்து பார்த்தேன். சமாதி அறை அமானுஷ்யம். அங்குதான் நபி மூஸா (அலை) அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது சிலிர்ப்பிற்குரிய நொடி. இல்லையெனில் அது வெறுமே சம்பிரதாய, அநிச்சயக் கல்லறை.  உள்ளே எட்டிப்பார்த்து போது சில முஸ்லிம்கள் இறைஞ்சிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

என் உள்ளத்தைக் கவர்ந்து உவகையளித்த விஷயம் – பரந்த பாலைவனத்தின் நடுவே வலுவாக வடிவமைக்கப்பட்டிருந்த பழமையான அந்தக் கட்டடமும் வடிவமைப்பும்.

உபரியாக மஸ்ஜிதின் வெளியே ஈச்ச மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒட்டகம்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment