சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார். கனத்த இதயத்துடன் அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவருடைய நண்பர்கள் சிலரும் ஊழியர்களும் உரிய ஆவணத்துடன் சென்றனர். ஆனால் அச்சடலத்தைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று தடுத்து, ஏறக்குறைய 50 பேர் கொண்ட கும்பல் கல்லாலும் கட்டையாலும் அவர்களை அடித்துத் தாக்கியது. உடன் சென்றிருந்த சுகாதார ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு இரத்த காயம். ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் நொறுங்கின. அவரது சடலத்தைப் போட்டுவிட்டு நண்பர்கள் தப்பித்து ஓடினர்.
இந்த கொடுந்துயர் நிகழ்வு இரண்டாவது! கடந்த வாரம் சென்னையில் கொரோனாவால் மரணமடைந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் சடலத்துக்கு நேர்ந்தது முதல் அவலம். தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மக்கள் மறித்து, அச்சடலம் ஏரியா மாற்றி ஏரியா சுற்றியது. இவை எப்பேற்பட்ட குற்றங்கள்! மனிதாபிமானமுள்ளவர்கள் வெட்கும் குற்றங்கள்! அருவருப்பான குற்றங்கள்! ஆனால் அந்தப் பாமர மக்களின் இச்செயல்கள் ‘மன்னிக்கக் கூடாத குற்றமா’?
இல்லை!
மன்னிக்கக்கூடாத குற்றம் என்பது, இதோ இப்பொழுது இந்நிகழ்வை செய்தியாகவும் காணொளியாகவும் வெளியிட்டு சோகமும் துக்கமும் பகிர்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனவே பொதுஜன ஊடகங்கள் அவர்களுடையது. இந்தியாவிலும் கொரோனா என்று செய்தி தொடங்கிய நாளாய், வதந்தியைத் தீயாய்க் கொளுத்தி, தங்களது வயிறு வளர்த்த அந்த ஊடகங்கள் செய்தது. பாமர மக்களின் மனத்தில் மனிதாபிமானத்தைக் கொன்றொழித்த அவர்களது செயல்தான், மன்னிக்கக் கூடாத குற்றம்! சக மனிதரை, நோயாளிகளின் பிணி நீங்கப் போராடிய மருத்துவரை, புதைக்க விடாமல் களேபரம் புரியுமளவிற்கு பாமர மக்களின் புத்தியை மாற்றியமைத்த அந்த ஊடகங்களின் பொறுப்பற்ற பொய்ச் செய்திகள்தாம் மன்னிக்கக்கூடாத குற்றம்!
நிர்பந்தமோ, அச்சமோ, இயல்போ, இன உணர்வோ, மதத் துவேஷமோ ஏதோ ஒரு கண்றாவி – ஒளிவு மறைவின்றி இந்துத்துவ அரசின் ஊதுகுழலாக ஆகிவிட்டன இந்திய ஊடகங்கள்.
அறம் என்ற மாண்பு வழக்கொழிந்த ஒன்றாகி, அதன் மிச்சம் அகராதியில் மட்டும். அச்சாகும் காகிதம்தான் வெள்ளை நிறமே தவிர, மையும், எழுத்தும் அப்பட்ட காவி. விதி விலக்குகள் இல்லையா? இருக்கின்றன. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை வெட்ட வெளிச்சம். திணறும் மூச்சுடன் வெளிப்படும் அவர்களது ஈனக்குரல் எல்லாம் மைய நீரோட்டத்தில் கறைந்துபோன சவுக்காரம்.
உலகத்தையே சுற்றி வளைத்து, மண்டியிட வைத்துள்ளது COVID-19. முட்டி வலிக்க தோப்புக்கரணம் போட்டு மூச்சுத் திணறிக் கிடக்கின்றன வல்லரசுகளும் வளர்ச்சியில மிகைத்த நாடுகளும். தேர்தல் ரிசல்ட், கிரிக்கெட் ஸ்கோர் போல் ஒவ்வொரு மணி நேரமும் எகிறிக்கொண்டிருக்கின்றன பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை. உலகப் போரையொத்த அல்லது அதைவிட மோசமான ஒரு நிலையை இன்று உலகம் எட்டியுள்ளது. எனும்போது, எத்தகு அறவுணர்வுடன் மக்களுக்குச் சேவையாற்ற இந்த ஊடகங்கள் களமிறங்கியிருக்க வேண்டும்? இணையத் தொடர்பு உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் இக்காலத்தில் இந்நோய் குறித்த உண்மைகளைத் தேடித்தேடி எடுத்து மக்களுக்குப் பாடம் புகட்டியிருக்க வேண்டும்? உண்மையான, தேவையான தகவல்களைப் புகட்டி, தேவையற்ற அச்சத்தைப் போக்கியிருக்க வேண்டும்?
மாறாக என்ன நடந்தது?
தும்பை விட்டுவிட்டு, வாலின் உரோமத்தைப் பிடித்துக்கொண்டு, சம்பந்தமே அற்ற ஆராய்ச்சியை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். மதத் துவேஷம், சென்சேஷன் என்று தெருத் தெருவாக, நாடெங்கிலும் விஷம் தூவிக்கொண்டிருந்தார்கள். ஆளும் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நகலெடுத்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்களின் புத்தியும் பகுத்தறிவும் பட்டப்பகலில் கொள்ளை போயின. பறிகொடுத்த பாமர மக்கள் கூட்டம் சொந்த நாட்டில் அகதியாக நடை யாத்திரை மேற்கொண்டது. மற்றவர்களுக்கு?
கட்டுப்பாடு என்ற பெயரில் லத்தியடி!
கட்டமைப்பான அரசு நிர்வாகத்தை வகுத்துக்கொண்டு அதில் பெருமளவு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கும் வளர்ந்த நாடுகளே தத்தளித்து மூச்சுத் திணறும் இந்தக் கொரோனா கால கட்டத்தில், சிக்கல்கள் பின்னிப் பிணைந்த, மதத் துவேஷ நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய நிர்வாக முறையை அறிந்த ஊடகங்கள் மக்களின் நலனில் சமரசமின்றி பொறுப்புடனும் நேர்மையுடனும் அல்லவா நடந்திருக்க வேண்டும்? என்ன செய்தார்கள்? அரசாங்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாய் ஒப்பித்தார்கள். அரசை நோக்கி ஒரு கேள்வி இல்லை. மாறாக அரசின் மதவெறிச் செயல் திட்டத்திற்குக் கூச்சமின்றிப் பரப்புரை நடைபெற்றது. முஸ்லிம்கள் கொல்லையில் வைரஸைப் பயிரிட்டு, ஜமாஅத்தில் அதைப் பதப்படுத்தி, வாயில் முழுங்கி எச்சில் துப்புகிறார்கள் என்பதற்கு ஒப்பக் காட்டுத்தீயாய் வதந்தி. அரசின் கட்டளையை மீறியவர்கள், சொல் பேச்சுக் கேட்காமல் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு புரிந்தவர்கள் மதவாரியாய்ப் பிரிக்கப்பட்டு, ‘முஸ்லிம்கள்’, ‘நபர்கள்’ என்று வார்த்தைகளின் சித்து விளையாட்டு. வரிக்கு வரி மதவெறி.
படுத்துக்கொண்டு காறி உமிழ்ந்தால் அது திரும்ப வந்து முகத்தில் விழாமல் எங்குத் தொலையும்? அவர்கள் செய்யத் தவறிய கடமைகளின் பக்க விளைவுகளுள் ஒன்றுதான் சென்னையில் டாக்டர்களின் சடலங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள். அது ஒருபுறம் கிடக்க, அவர்கள் துணை நின்ற பொய்கள்? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எனும்போது கெட்டவர்களின் புளுகு? வெளிவரும் தரவுகளும் தகவல்களும் முன்னர் அவர்கள் புனைந்த புனைச் சுருட்டைக் கேவலமாக அம்பலப்படுத்தி வருகின்றன. அவற்றையெல்லாம் பார்த்து, ‘ஆஹா! அப்படிப்பட்ட தவற்றைச் செய்துவிட்டோமே. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மாபாதகம் புரிந்து விட்டோமே’ என்றா மெய்பதறி மெய்யுரைத்து தங்கள் குற்றத்திற்குப் பரிகாரம் காண்கிறார்கள்? அவையெல்லாம் சுருங்கிய பெட்டிச் செய்திகள். சில சமயங்களில் அதுவும் இல்லை.
இங்ஙனமாக, இந்திய ஊடகங்கள் நிகழ்த்தியுள்ளது, நிகழ்த்துவது வரலாற்றுப் பிழை! மட்டுமன்று. பின்வரும் காலங்களில் ஊடக அதர்மத்திற்கான உலக உதாரணம்! மன்னிக்கக் கூடாத குற்றம்!
ஊடகங்கள்தாம் இப்படியென்றால், தங்களுள் இருவரின் சடலங்களுக்கு அவமானம் நேரிட்ட பின்தான் மருத்துவர்களும் வாய் திறக்கிறார்கள். “கொரோனாவின் ‘சிங்கிள் சோர்ஸ்’ என்ன? அது பரவும் முகாந்திரம் என்ன? மதத்தின் பெயரால் குறிப்பிட்ட குழுவை நோக்கி அம்புகள் எய்யப்படுகின்றவே, அவை எத்தனை தூரம் மெய், பொய்? தப்லீக் குழுவிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்களின் உண்மையான மருத்துவ நிலைமை என்ன?” என்றெல்லாம் மருத்துவர்கள் தகவலும் விவரங்களும் பகிர்ந்து வதந்திக்குப் பூட்டு போட்டார்களா என்ன? மாறாக, “நீ முஸ்லிமாச்சே! கொரோனா ஜிஹாதியாச்சே. சிகிச்சை கிடையாது ஓடிப்போ” என்று மருத்துவர்களுள் சிலரே முஸ்லிம்களைத் தீண்டத்தகாதவர்களைப் போல் விரட்டியடித்த நிகழ்வுகள்தாம் சில பல ஊர்களில் நடைபெற்றன. அந்த மேதாவிகள் எல்லாம் முறைப்படி படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள்தாமா என்றல்லவா கேள்வி எழுகிறது. மட்டுமின்றி அவ்வினை முற்றி, மத அடிப்படையில் மருத்துமனையிலும் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் வந்து நிற்கிறது இன்றைய நிலைமை. மருத்துவத் துறையின் intellectஐயே கேலிக்குரியதாக்கும் இத்தகு செயல்களைப் பார்த்து பெரும்பான்மை மருத்துவ சமூகம் வாய் மூடிக்கிடந்தது. பாமர மக்களின் அறியாமையைக் களைய முனையவில்லை.
இப்பொழுது…?
அந்தப் பாமரர்கள் மருத்துவர்களுக்கு எதிராக உருட்டுக் கட்டைகளுடன் நிற்கின்றார்கள்!
கைத் தட்டுகின்றேன், டம்ளரைத் தட்டுகின்றேன் என்பதல்ல மருத்துவத் துறையினருக்கான ஆதரவும் பாராட்டும். அரசியல் கூத்தின் நகைச்சுவை பாகம் அது. தன் நிர்வாகத்தின் கையாலாகாத் தனத்தை மறைக்க விளக்கணைத்து புத்தியைப் புரட்டும் யுக்தியானது மக்களுக்கு மெய்யறிவைப் புகட்டாமல் மாய்மாலங்கள் நிகழ்த்தும் வஞ்சகம். மாறாக, அறிவுள்ள சமூகம் மருத்துவர்களின் சேவையைப் புரிந்துகொள்ளும்; மதிப்பு கொள்ளும். மதமாச்சர்யங்களைத் தாண்டிப் பாராட்டும்.
அமெரிக்க மருத்துவர் சஊத் அன்வர் என்பவர் கொரோனா பிரச்சினை துவங்கியதும் வெண்டிலேட்டருக்குக் கண்டுபிடித்த உபசாதனம் ஒன்று ஏழு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே வெண்டிலேட்டரைப் பொருத்தும் வகையில் வடிவமைக்க உதவியது. முஸ்லிம் என்ற மத அடிப்படையில் எல்லாம் அமெரிக்க சமூகம் அவரை வரையறுக்கவில்லை, பார்க்கவில்லை. மாறாக, அவர் வசிக்கும் வீதியில் கார் உலா நிகழ்த்தி அவரைப் பாராட்டி கௌரவப்படுத்தியது.
இலண்டனில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் இஸ்கான் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொரோனாவினால் இறந்து விட்டனர். பலருக்கு நோய் பரவியிருப்பது உறுதியானது. மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் அவர்களை இங்கிலாந்து முத்திரை குத்தவும் இல்லை. பொறுப்புணர்வுள்ள அந்நாட்டு ஊடகங்கள் அப்படியொரு தர்க்கத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
இறைவனுக்கு மட்டுமே அஞ்சுபவர்கள், இறை மறுப்பாளர்களுள் சக மனிதர்களை சமமாய்ப் பாவிப்பவர்கள், ஆட்சியாளரைக் கடவுள் என நினைக்கப் போவதுமில்லை. அவரது அநீதிக்கு அஞ்சப்போவதுமில்லை. வெகு முக்கியமாக மன்னிக்கக்கூடாத குற்றம் புரியப் போவதில்லை.
பாமர இந்திய சமூகத்தைக் கடைத்தேற்ற இந்திய ஊடகங்களுக்கு இன்னமும் வாய்ப்பு காத்திருக்கிறது. வரலாற்றில் தங்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க அவகாசம் மிச்சமிருக்கின்றது.
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் -இல் ஏப்ரல் 21, 2020 வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License