அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி விளக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். ஏப்ரல் 2, 2020 நடைபெற்ற அந்நிகழ்வில் உலகெங்கும் மத அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை அந்தந்த நாடுகள் விடுவிக்க வேண்டும் என்பது அதன் சாரமாக இருந்தது.
தமது உரைக்குப் பிறகு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார். அதில் கேட்கப்பட்ட முக்கியமான ஒரு கேள்வி:
இந்தியாவில் #CoronaJihad என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளதை நாங்கள் கவனித்தோம். கொரோனா வைரஸ் முஸ்லிம் சமூகத்தால் பரவியுள்ளது என்று அது தெரிவிக்கிறது. இதைப்போன்ற முஸ்லீம்-விரோத நடவடிக்கையை கொரோனா வைரஸ் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் கண்காணிக்கிறீர்களா? மேலும், இந்த நேரத்தில் காஷ்மீர் தனக்குத் தேவையான உதவிகளைப் பெறுகிறதா?
அதற்கு அவர் அளித்த பதில்:
COVID வைரஸ் தொடர்பாக மத சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டப் படுவதை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதை அரசாங்கங்கள் செய்வது தவறு. அந்த அரசாங்கங்கள் உண்மையில் இந்த குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, கொரோனா வைரஸ் பரவலுக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் ஆளும் அரசுகளே முன்வந்து பெரும்பான்மைச் சமூகத்திடம் சென்று, இந்த நோய் பரவியது மதச் சிறுபான்மையினரால் அல்ல என்று எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது நமக்குத் தெரியும். இது உலகம் முழுவதையும் ஆட்படுத்தியுள்ள ஒரு தொற்றுநோய் என்பது நமக்குத் தெரியும். இது மதச் சிறுபான்மையினரிடமிருந்து பரவிய ஒன்றல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் அவ்வகையான பழி தூற்றப்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய வீண் பழி சுமத்துவோர் கண்டறியப்பட்டு, இனி அந்த நாட்டு அரசாங்கங்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
காஷ்மீர் தனக்குத் தேவையான உதவியைப் பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை. தொற்றுநோய் பரவியுள்ள இந்த நேரத்தில் அரசாங்கங்கள் தங்கள் மத சிறுபான்மையினருடன் இணைந்து பணியாற்ற, தேவையான ஆதரவை உதவிகளை அவர்கள் பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த அந்தந்த அரசாங்கங்களை நாங்கள் அழைத்துப் பேசுகிறோம்.
பல நாடுகளில் மத சிறுபான்மையினர் பொது சுகாதாரத் தேவைகளில், பொது விநியோகத் தேவைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கிறோம். இந்த தொற்றுநோய் காலத்தில், மக்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவற்றை விநியோகிக்க அனைத்து நாடுகளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் -இல் ஏப்ரல் 5, 2020 வெளியான கட்டுரை
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License