ஊரெல்லாம் ஊர் வம்பு பேசித் திரியும் இக்காலத்தில் தம் ஊரைப் பற்றி குறிப்பு நூல் ஒன்று எழுதி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பரங்கிப்பேட்டை ஹமீது மரைக்காயர். பிறந்த மண்ணின்
ஈரம் தம் நெஞ்சில் கலக்காத எவரும் உலகில் இருக்க முடியாது. உலகமெல்லாம் வலம் வந்தாலும் அவரவருக்கும் தாம் பிறந்த ஊர் தொப்புள் கொடி உறவு போல் எப்பொழுதுமே சிறப்பு. அந்த ஈரமும் பாசமும் இளைஞர் ஹமீதுக்கு ஒரு பிடி அதிகம் அமைந்து போயிருக்க வேண்டும். பிறந்த மண்ணைத் தோண்ட ஆரம்பித்து, அது ஆழமாகி, முளைத்திருக்கிறது இச் சிறு நூல்.
வரலாறு, புவியியல், சமூகம், மொழி என்று பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரும் பாடங்களின் அனைத்துப் பிரிவிலும் வகை வகையாய்ப் பரந்து விரிகிறது பரங்கிப்பேட்டை எனப்படும் மஹ்மூத் பந்தர் ஊரின் தகவல்கள். எதற்கெடுத்தாலும், ‘கூகுளப்பா, அருளப்பா’ என்றாகிவிட்ட காலத்தில் அலைந்து, திரிந்து இவர் திரட்டிச் சேகரித்துள்ள தகவல்கள் பரங்கிப்பேட்டை மக்களின் பொக்கிஷம்.
கண்ணை மூடிக்கொண்டு ஊர்ப் பெருமை பேசித் திரியாமல், இதெல்லாம் என் ஊரின் பெருமை என்று ஆவணப்படுத்தியுள்ளது இந் நூல். பெருமளவு நேரத்தையும் கடின உழைப்பையும் செலுத்தி இத்தகு ஆவணத்தை உருவாக்கியுள்ள நண்பர் ஹமீது மரைக்காயரை கண்ணை மூடிப் பாராட்டிவிடலாம். மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.
பரங்கிப்பேட்டையைப்போல் ஒவ்வோர் ஊருக்கும் அதற்குரிய கதை இருக்கத்தான் செய்யும். பேச்சுத் துணைக்கு ஆள் தேடும் முதியவரைப்போல் அவை ஒவ்வொன்றும் ஹமீதைப் போன்றவருக்காகக் காத்திருக்கின்றன. அவரைப்போல் ஊருக்கு ஒருவர் புறப்பட வேண்டும். தமிழக ஊர்க் களஞ்சியம் உருவாக வேண்டும். இது எளியவன் என் அவா.
ஊருள்ளளவும் பெயரும் நிலைக்கும்படி பணியாற்றியுள்ள ஹமீது மரைக்காயரின் உழைப்பை அங்கீகரிக்க எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.
-நூருத்தீன்
(ஹமீது மரைக்காயர் எழுதி வெளியிட்டுள்ள ‘மஹமூத் பந்தர் – பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரை)