சென்ற அத்தியாயங்களில் நாம் வருணித்த வைபவங்கள் நிகழ்ந்தபின் நான்காண்டுகள் ஓடிமறைந்தன. மிஸ்ரின் சிம்மாசனத்திலே அந்த இரண்டு சுல்தான்களான ஐபக்கும் ஐயூபியும் சேர்ந்தே அரசு செலுத்தித்தான் வந்தார்கள். ஐபக்கின் சூத்திரக் கயிற்றை

ஷஜருத்துர் வெகு ஜாக்கிரதையாகப் பற்றிக் கொண்டிருந்தமையால், அவ்வம்மையார் தாம் போட்டுக்கொண்டுவந்த திட்டங்கள் ஒவ்வொன்றையும் மிக்க வெற்றியுடனே நிறைவேற்ற முடிந்தது. இதற்கிடையில் முஈஜுத்தீனுக்கு அரசாட்சியின்மீது இருந்துவந்த மோகமும் முதிர்ந்து கொண்டே வந்தது. அதனுடன் ஷஜருத்துர் மீதும் அளவற்ற காதல் பெருகிக்கொண்டே போயிற்று.

புர்ஜிகளுக்கோ, நாளாக நாளாக, இரு சுல்தான்களின் மீதுமே அன்பு கிளைக்க ஆரம்பித்தது. அன்றியும், ஷஜருத்துர்ரின் உபதேசப்படி முஈஜுத்தீன் புர்ஜிகள்மீது அன்புகாட்டி வந்தபடியால், அந்த மம்லூக்குகளுக்கு உச்சி குளிர ஆரம்பித்தது. அன்றியும், அவர்களுடைய வெறுப்புக்கெல்லாம் ஒரே காரணமாயிருந்த ஷஜருத்துர் திரைமறையில் சென்றுவிட்டபடியாலும், அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையிலும் அவ்வம்மையார். தலையிடாமல் ஒதுங்கி நின்றுவிட்டதாக அவர்கள் கருதிக்கொண்டபடியாலும், தங்கள் பழைய மனஸ்தாபங்களைச் சிறுகச் சிறுக மறந்து வந்தார்கள். மேலும், ஷஜருத்துர் ராஜ்யம் ஆளக்கூடாதென்றுதான் அவர்கள் சூழ்ச்சி செய்தார்களன்றி, அவரை அடியுடனே தொலைக்க விரும்பினரில்லையாதலால், இதுபோது அரியாசனத்தில் இரு சுல்தான்கள் வீற்றிருப்பதைக் கண்டு திருப்தியுற்று விட்டார்கள்.

ஈதெல்லாம் அல்லாமல் வேறொரு காரணமும் இருந்தது : கலீஃபா நியமித்தனுப்பிய சுல்தான் அஷ்ரப் பதவியேற்றுச் சில நாட்களுக்குள்ளே, திமஷ்குக்கும் ஹல்புக்கும் சர்வதிகாரியாய் விளங்கிய அந் நாஸிர் யூசுப் என்ற மன்னன் மிஸ்ரை மிரட்டத் தொடங்கினான். எனவே, மிஸ்ரின் இரு சுல்தான்களும் ஷாம் தேசத்துக்குப் படையெடுத்துப்போக நேர்ந்தது. இப்படியாக, சுல்தான்களும் மம்லூக்குகளும் தங்கள் உள்ளுர்க்கஷி – பிரதிக்கஷியை முற்றும் மறந்து வெளிநாட்டு வியவகாரமாகிய நாஸிர் யூசுபின் விஷயத்திலேயே கவனம் செலுத்திக்கொண்டும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நாட்களை ஓட்டிவிட நேர்ந்தது. இறுதியாக, கலீஃபாவே தலையிட்டு அந்த யுத்தத்தைத் தடுத்தமையால், ஒருவாறு சமாதானமாகப் போயினார்கள், இருகக்ஷியினரும். இவ்வண்ணமாக வெளிநாட்டு வியவகாரங்கள் மிஸ்ரின் உள்நாட்டுக் கலத்துக்கு மூனாறாண்டுகள் மட்டும் ஓய்வு கொடுத்துவிட்டமையால், புர்ஜீகள் தங்களுடைய பழைய குரோதத்தையெல்லாம் மறந்தவிட்டார்கள். ஷஜருத்துர்ரும் வெளியே தலைகாட்டாமலும் அரசாங்க விஷயத்தில் தலையிடாமலும் அந்தப்புரத்துக்குள்ளே மறைந்திருந்தமையால், பல புர்ஜீகள் அவ்வம்மையாரை மறந்துகூடப் போய்விட்டார்கள்.

ஆனால், அந்த நீண்டகாலம் முழுவதிலும் ஷஜருத்துர் தம்முடைய அந்தரங்கத் திட்டங்களைப் பக்குவமாய் வகுத்துக் கொண்டும் தாம் கொண்டுவிட்ட குறைவை நிறைவேற்றுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டும் கைந்நழுவவிட்ட மிஸ்ரின் ஸல்தனத்தை மீண்டும் தம் கரத்திடையே தாவிப் பற்றுவதற்குத் தயாராகிக் கொண்டும் இருந்தார் என்பதை அந்த ஆண்டவனும் ஷஜருத்துர்ரு மன்றி வேறெவரே அறிவார்? மற்ற மற்றப் பெண்களாயிருந்தால், எவ்வெப்படியோ விஷயங்கள் நடந்திருக்கும். ஆனால், அகில உலக முஸ்லிம் ஆட்சிக் காலத்திலெல்லாம், மிஸ்ரின் ஸல்தனத்மீது அமர்ந்து பரிபாலனம் புரிந்த அத்தனைப் பேருள்ளும் ஷஜருத்துர் என்னும் ஒரே பெண்மணி மட்டுமே மிகமிகக் கியாதி வாய்ந்த நாரி திலகமாக விளங்கியிருக்க, அந்த அம்மையார் போட்ட திட்டப்படியேதானே எதுவும் நடக்கும்? ஷஜருத்துர் என்றால், லேசுபட்ட மாது சிரோமணியென்றா நீங்கள் நினைத்து விட்டீர்கள்? மானிட தத்துவ சாஸ்திர வித்தையைக் கரைகடந்து கற்றிந்த மேதாவிகளுங்கூட அவ்வம்மையின் கெட்டிக்காரத்தனத்துக்குக் காரணம் கற்பிக்க முடியாமல் திணறுகிறார்களென்றால், ஏன் அவ்வாறு திணறமாட்டார்க ளென்பதை நீங்களே போகப் போகக் காண்பீர்கள்.

எவ்வளவுக் கெவ்வளவு நேர்மையான பண்புகளை அவ்வம்மையார் பெற்றிருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு ஷஜருத்துர் நேர் முரணான குணவிசேஷங்களையே இப்போது முதல் பெற்றுக்கொண்டு விட்டதைத்தான் எவரும் அறிந்துணர முடியவில்லை.

புலி பதுங்குவதெல்லாம் பாய்ச்சலுக்கு அடையாளம் என்று சொல்வார்களல்லவா? அஃதேபோல், ஷஜருத்துர் நான்காண்டுகள் வரை இருக்கிற இடம் தெரியாமல் பதுங்கியிருந்த செயலெல்லாம் பின்னால் நடந்தேறப்போகிற கேடுகாலங்களுக்கு அறிகுறியாயிருந்தன. நிதானாமாகச் சிந்திப்பதற்கும் சிந்தித்தவற்றுக்குத் திட்டங்கள் வகுப்பதற்கும் வகுத்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வழிவகைகளைக் கற்பிப்பதற்கும் கற்பித்த வழிகளைச் சீர்தூக்கி யாராய்ந்து செப்பனிடுவதற்கும் செப்பனிட்டவற்றை எந்நேரத்திலும் பிரயோகிக்கத் தயார் செய்வதற்கும் போதிய அவகாசத்தை அந்நீண்ட காலத்துக்கிடையே ஷஜருத்துர்ரால் நன்கு வகுத்துக் கொள்ள முடிந்தது. வாழ்க்கையின் பலப்பல விதமான விசித்திரமிக்க அனுபவங்களைக் கடந்த சற்குணச் சிகரமான ஷஜருத்துர் இப்போது பேராசை பிடித்த பேயாகவும் நாட்டாசை பிடித்த நாரியாகவும் குரூரகுணம் படைத்த மூர்க்கியாகவும் பழிவாங்கத் தவித்துநின்ற வைராக்கிய சித்தமுடைய மாதாகவும் மாறிப்போய் விட்டாரென்றால், நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுவாகத்தா னிருந்தது. ஸீனாய் வனாந்தரத்தில் அபலையாய்த் தவித்த சிறுமியாயிருந்தது முதல், தூரான்ஷாவின் படுகொலைக்குப் பின் மாட்சிமைமிக்க மன்னர் பிராட்டியாக உயர்கிறவரை எவ்வளவுக் கெவ்வளவு நேர்மையான பண்புகளை அவ்வம்மையார் பெற்றிருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு ஷஜருத்துர் நேர் முரணான குணவிசேஷங்களையே இப்போது முதல் பெற்றுக்கொண்டு விட்டதைத்தான் எவரும் அறிந்துணர முடியவில்லை. ஆண்டவன் இப்படியு மெல்லாங்கூடச் செய்யவல்ல வனென்பதைத் தாரணியின் மக்கள் உய்த்தறிய வேண்டுமென்னும் ஒரே காரணத்துக்காகவே போலும், அவன் பிற்கால நிகழ்ச்சிகளை யெல்லாம் வேறுவிதமாய் மாற்றிவிட்டான்! என்னெனின், எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சாமார்த்தியம் மிக்க ‘அகடி தகடனா சக்தி’ வாய்ந்தவன் என்பதை எவரும் தவறாயுணரத் தேவையில்லை யல்லவா?

சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்கும் சுல்தான் மலிக்குல் அஷ்ரப் ஐயூபியும் நாஸிர் யூசுபுடனே முட்டிக்கொண்டு, திமஷ்குக்கும் மிஸ்ருக்குமாக ஆடியோடி அலைந்துகொண்டிருந்த சமயத்திலெல்லாம் அரசாங்க நடவடிக்கைகளை வஜீர்களும் அமீர்களுமே நிர்வகித்து வந்தார்கள். ஸாலிஹின் மனைவியாயிருந்தபோது ஷஜருத்துர் அரியாசனமேறி ஆட்சியை நிர்வகித்ததைப் போல், இப்போது முஈஜின் மனைவியாயிருக்கையில் அரசாங்கத்தை நேரில் நடத்த முடியவில்லை; ஆனால் ஸல்தனத்தில் என்ன நடக்கிறது, என்ன நடக்கவில்லை யென்பனவற்றை யெல்லாம் நுணுகி ஆராய்ந்து உண்மைகளைத் தெரிந்து கொள்வதில் மட்டும் ஷஜருத்துர் சற்றும் பின்னிடையவில்லை. தூண்டிற்காரனுக்கு மிதப்பின்மீதே கண் இருப்பதைப் போல், அவ்வம்மையார் சகல விஷயங்களிலுமே சர்வ ஜாக்கிரதையா யிருந்துவந்தார். இந்த இரு சுல்தான்களின் ஆட்சி இன்னம் அதிக நாட்களுக்கு நீடித்திருக்கப் போவதில்லை யென்பதை ஷஜருத்துர்ரின் சூக்ஷ்மஞானம் நன்கு விளங்கிக் கொண்டது.

கலீஃபா எவ்வளவு சக்திமிக்கவராகக் கருதப்பட்ட போதினும், தாம் நியமித்தனுப்பிய சுல்தானை மட்டுமே மிஸ்ரின் சுல்தானாக உயர்த்த முடியவில்லை யல்லவா? மலிக்குல் அஷ்ரபை மிஸ்ரின் சுல்தானாக்கிய வகையில் கலீஃபா எவ்வளவுதான் வெற்றிபெற்று விட்டதாக மனப்பால் குடித்து பெருமகிழ்ச்சியடைந்த போதினும், ஷஜருத்துர் கலீஃபாவைவிட ஒரு வகையில் பெரியவராகத்தாமே போய்விட்டார்? என்னெனின், அவ்வம்மையார் சுல்தானாக்கிவிட்ட முஈஜுத்தீனை கலீஃபாவால் வீழ்த்த முடியவில்லை யல்லவா?

கலீஃபாவைவிடத் தமக்கே சாமார்த்தியமும் சக்தியும் இருக்கிறதென்பதை நினைக்க நினைக்க, ஷஜருத்துர்ருக்கு அளவுக்கு மேற்பட்ட பூரிப்புப் பூத்துக்கொண் டிருந்தது. மிஸ்ருக்குள் காலடியெடுத்து வைத்தது முதல் இதுவரை எல்லாத் துறைகளிலும் வெற்றிக்குமேல் வெற்றிபெற்று வந்ததைப் போலவே இனியும் எதிர்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் பெருவெற்றியை யடையவேண்டு மென்றே கங்கணங் கட்டிக் கொண்டார், அம்மாதரசியார்.

அரசாங்க கஜானாவிலிருந்து அவருக்கென்று ஒரு பிரத்தியேகத் தொகை மாதாமாதம் உம்பளமாகக் கொடுக்கப்பட்டு வந்ததையெல்லாம் கடைசி திர்ஹம் வரை எப்படிச் செலவு செய்தார்? எதன்பொருட்டுச் செலவு செய்தார்? என்பனவற்றை எவருமே அறிய முடிவதில்லை. இன்னம், ஷஜருத்துர் எல்லார்மீதும் வெறுப்பும் துவேஷமுங் கொண்டு ஒவ்வொருவரையுமே சந்தேகத்துடன் நோக்கி வந்தமையால், அவ்வரண்மனையிலிருந்த எவருமே அவருடைய அந்தரங்க அபிமானம் பெற்ற அரிய நண்பராக விளங்கவில்லை. எவருடனும் வீண்வார்த்தை யாடாமலும் வாழ்விலேயே பெரு வெறுப்புக் கொண்ட வைராக்கிய சன்னியாஸினி போலவும் பொழுது போக்கிவந்த அவ்வம்மையை எல்லோரும் சேர்ந்து, “ஸூபி” யாகிவிட்டார் போலும்? என்று கருதி, ஒதுங்கி நின்றுவிட்டனர். இப்படியெல்லாம் தம்மை ஏகாந்தமாக்கிக் கொள்வதில் ஷஜருத்துர் கெட்டிக்காரத்தனமாய் நடந்து கொண்டமையால், அவரை எவரும் அண்டவுமில்லை; அல்லது அவர் என்ன செய்கிறார்? என்ன திட்டம் வகுக்கிறார்? என்பன போன்ற ஐயங்களைச் சிறிதும் கொள்ளவுமில்லை. அந்த அம்மையாருக்கு வாழ்விலே வெறுப்பேற்பட்டு விட்டதென்றே பலரும் கருதிவிட்டனர்.

அரண்மனைக்குள்ளே வசிக்கிற அத்தனை பேரையும் முதலில் ஏமாற்ற வேண்டுமென்பதே அந்த ருத்ராக்ஷ பூனையின் முதல் திட்டமாகையால், அங்குள்ளவர்கள் தம்மை ஒரு பைத்தியம், அல்லது ஸூபி, அல்லது உலக வாழ்வை வெறுத்த சன்னியாஸினி என்று எவ்வளவுக் கெவ்வளவு நினைத்துக் கொண்டாலும், அவ்வளவுக் கவ்வளவு நல்லதெனக் கண்டு, சிற்சில சமயங்களில் வேண்டுமென்றே சில அர்த்தமற்ற செயல்களைச் செய்து வருவார். முஈஜுத்தீனை மணந்து இத்தனை நாட்களாகியும் அவர் ஒரு குழந்தையையும் பெறவில்லை. என்வே, ஷஜருத்துர் ஏகாந்த வாழ்க்கை நடாத்துவதற்கு ஏதொன்றும் இடையூறாய்ப் போய்விடவில்லை.

அரண்மனையை அடுத்துள்ள பெரிய தோட்டத்தில்தான் ஷஜருத்துர் ஏகாந்தமாகப் பெரும்பாலும் பொழுதுபோக்குவது வழக்கம். அத்தோட்டத்தை யொட்டித்தான் காலஞ் சென்ற சுல்தான் ஸாலிஹின் கோரியும் அதன்மீது நிர்மாணிக்கப்பட்ட அழகிய கட்டிடமும் வனப்புடனே மிளிர்ந்துகொண்டிருந்தன. தூரான்ஷாவுக்குப் பிறகு ஷஜருத்துர் சுல்தானாவாக ஆட்சிபுரிந்த காலத்திலேயே காலஞ்சென்ற தம் கணவரின் ஞாபகார்த்தமாக அவ்வம்மையாரால் கட்டப்பட்டது அக் கட்டிடம். இன்றுகூடக் காஹிராவிலே அந்த “மாஸோலியம்” சிறிது தகர்ந்துபோய் நின்றுகொண்டிருக்கிறது. எனவே, ஷஜருத்துர் தன்னந்தனியராய் அடிக்கடி அந்த மாஸோலியத்தின் பக்கல் சென்று அமர்ந்து பொழுதுபோக்கி வந்ததைக் கண்டவர்கள், தம்முடைய முதற் கணவரின் மீதுள்ள அன்பின் காரணமாகவே “ஸூபி ஷஜருத்துர்” அடிக்கடி அங்குப்போய்ப் பொழுதுபோக்குகிறார் என்று நினைத்து விட்டார்கள்.

காலம் செல்லச் செல்ல, ஷஜருத்துர்ருக்கு ஓர் ஆசை பிறந்தது. அஃதாவது, அதே தோட்டத்தில் ஸாலிஹின் மஸோலியத்துக்குப் பக்கத்தில் ஓர் அழகிய பளிக்கறையைக் கட்டி முடிக்க வேண்டுமென்று அவர் இச்சித்தார். அரசிக்கு இந்த எண்ணம் தோன்றினால், அதை நிறைவேற்றவா முடியாது? அவ் வம்மையார் உடனே திட்டமிட்டார் அழகிய ‘பிளான்’ ஒன்று போடப்பட்டது. விலையுயர்ந்த வெண்சலவைக் கற்களும் கண்ணாடிக் கற்களும் ஏராளமாய் நொடிப்பொழுதில் வந்து குவிந்துவிட்டன. சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய கட்டிடங்களை நிருமிக்கும் சிற்பிகள் பலர் சில நாட்களுக்குள் எங்கெங்கிருந் தெல்லாமோ வந்து சேர்ந்துவிட்டார்கள். ஷஜருத்துர் மனத்துக்குப் பிடித்த விதத்தில் அப் பளிக்கறை விருவிருவென்று எழத் தொடங்கிற்று. அழகிய மண்டபமும் அம் மண்டபத்தைத் தாங்கிநிற்கும் நெடிய தூண்களும் சலவைக்கல் பதிக்கப்பட்ட சதுரமான ஆடித்தரையும் பார்க்கப் பரவசமூட்டக்கூடியவனாக எழுந்தோங்கி நின்றன. ஆறு மாத காலத்துக்குள் அப்பளிக்கறை கட்டப்பட்டு முடிந்ததென்றாலும், அதன் வனப்பும் வசீகரமும் இன்றளவுங்கூடச் சற்றும் குன்றாதிருப்பதைக் காஹிராவுக்குச் செல்வோர் இப்போதுங் கண்டுகொள்ளலாம்.

கண்டோரின் கருத்தைப் பறிக்கும் வண்ணம் பேரெழில் மிக்கவாறு நின்று ஜொலித்துக்கொண்டிருந்த அந்தப் பளிக்கறையை அரண்மனையிலிருந்தோர் அத்தனை பேரும் பார்த்துப் பார்த்துப் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள். இம்மாதிரியான பெரிய பளிங்கு மண்டபத்தை ஷஜருத்துர் ஏன் நிர்மாணித்திருக்கிறார் என்னும் அந்தரங்கம் புரியாமல் அவர்கள் திகைத்து நின்றார்கள். களங்கமற்ற நீலவானில் முழு தேஜஸுடன் ஜொலிக்கும் சந்திரபிம்பத்தின் குளிர்ந்த கிரணங்கள் அப்பளிக்கறை மண்டபத்தின்மீது வீசும்போது தோன்றிய அழகை வர்ணிக்கப் பாவலனாலும் முடியாது போலிருக்கிறதே என்று பார்த்தவர் வாய்பிளந்தனர். இவ்வண்ணமாக வெல்லாம் வனப்புமிக்க எழிலுடன் கூடிய பேரழிகிய பெருமண்டபத்தின் கீழே விரிக்கப்பட்ட காசிமீர ரத்தின ஜமக்காளத்தின்மீது ஷஜருத்துர் மௌனியாய்க் குந்திக்கொண்டு சிந்தனையில் மூழ்கிப்போய் விடுவார்.

அப்பளிக்கறை ஸாலிஹின் ஞாபகார்த்த மண்டபத்துக்குப் பக்கத்திலேயே நிருமிக்கப்பட் டிருந்தபடியால், பார்க்கிறவர்கள் பலவிதமாக நினைத்துக் கொண்டார்கள். அல்லுபகல் அனவரதமும், மழையில்லாத பருவங்களில் ஷஜருத்துர் அம்மண்டபத்திலேயே சதா வீற்றிருந்து கொண்டும் தியானம் புரிந்துக் கொண்டும் வேதகீதங்களை ஓதிக்கொண்டும் ஏதேதோ எழுதிக் கொண்டும் மற்ற நேரங்களில் மௌனமாய்ச் சிந்தித்துக்கொண்டும் பொழுது போக்கி வந்தார். ஷஜருத்துர் எவருக்கும் தெரியாமல் தம்முடைய எண்ணங்களுக்கேற்ற வண்ணமெல்லாம் திட்டம் வகுத்துக்கொள்ள அப்பளிக்கறையே உற்ற துணைவனாய் இலங்கிவந்தது. ஆனால், சுல்தான் முஈஜுத்தின் ஷாமிலிருந்து திரும்பி வந்தபிறகு ஷஜருத்துர் ஏகாந்தமாக அப் பளிக்கறையில் காலங் கழிக்கவில்லை. வழக்கப்படி அந்தப்புரத்திலேயே இருப்பார். ஆனால், அடிக்கடி அந்த சுல்தானை உடனழைத்துக்கொண்டு அப்பளிக்கறைக்குச் சென்று அதன் எழிலைக்காட்டி மகிழ்ச்சி யடைவார்.

“காதலி! நீ எல்லா வகைகளிலும் சாமார்த்திய மிக்கவளா யிருப்பதே போல் இப் பேரெழில் மிக்க பளிக்கறையையும் மிகச் சாதுரியமாகக் கட்டி முடித்திருக்கிறாயே!” என்று முஈஜ் கூறினார்.

“நானென்ன சிற்பியா, இதைச் சாதுரியமாகக் கட்டி முடிக்க?”

“இல்லை, இல்லை! நீயே கட்டினாய் என்று நான் கூற வரவில்லை. சிற்பியேதான் கட்டியிருக்கிறான்; ஆனால், இந்த மாதிரியெல்லாம் கட்டவேண்டு மென்று நீதானே கண்காணித்தாய்?”

“நாதா! அதோ பாருங்கள், இயற்கையின் வனப்பு மிக்க பேரெழில்களை! இந்தச் செயற்கை மண்டபமும் ஒரு வனப்பா? எனக்கென்னவோ பிடிக்கவில்லை. என்றாலும், எல்லாரும் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறார்களே என்பதற்காகத்தான் இதை இடிக்க நான் விரும்பவில்லை.”

“இடிப்பதா! ஏன் இடிக்க வேண்டும்? இதன் வனப்புக்கென்ன குறைவு? இடிப்பதற்காகவென்றா பல்லாயிரக்கணக்கான தீனார்களை அள்ளிக்கொட்டி இதை நீ வேலையற்றுப் போய்க் கட்டிமுடித்தாய்?”

“நாதா! நான் இடிப்பதற்காகவென்று இதைக் கட்டிமுடிக்கவில்லை யென்பது வாஸ்தவமே. ஆனால், பொய்யான இந்த துன்யாவிலே எதுதான் நிலைத்திருக்கப் போகிறது? அதோ பாருங்கள்! அந்த மாஸோலியத்தின் மண்ணுக்குள்ளே ஐயூபி சுல்தான்களுள் பாராக்கிரமம் மிக்கவர் ஓய்வெடுத்துப் படுத்துக் கிடக்கிறார். நாளையொரு காலத்தில் நீங்களும் நானும் இவ்வுலகத்தில் வாழ்ந்திருந்தோமென்று சொல்வதற்காகவாவது வழியிருக்கிறதா? நாமெல்லாரும் மண்ணிலிருந்தே தோன்றினோம்; இறுதியாக அந்த மண்ணுக்குள்ளேயே சென்று மறைகிறோம்!”

“ஏது, நீ பெரிய வேதாந்தியாகி விட்டாற்போலிருக்கிறதே? வெறும் தத்துவார்த்தமாகவே பேசுகிறாயே!”

“வேதாதந்தமு மில்லை, தத்துவார்த்தமு மில்லை. உண்மை யைத்தானே சொன்னேன்….” என்று நெடுமூச்சொன்றை யிழுத்தார் ஷஜருத்துர்.

“கண்மணி! நாம் இந்த அநித்திய உலகத்தில் வாழ்வது சொற்ப நாட்களுக்கே. அதற்குள் என்ன என்ன இன்பங்களை நம்மால் நுகர முடியுமோ, அவற்றை யெல்லாம் ஒன்றாய் நுகர்ந்து தீரவேண்டும். நீயும் இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான் இப் பளிக்கறையை இவ்வளவு வனப்புடனே கட்டச் செய்திருக்கிறாய்.”

ஷஜருத்துர் பதிலொன்றும் பேசவில்லை. அவருடைய கற்பனாசக்தி முழுவதும் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக அவர் முகம் காட்டிக்கொண்டிருந்தது. முஈஜுத்தீனுக்கோ, அவ்வம்மையாரின் தோற்றத்திலும் நடத்தையிலும் ஏன் இத்தகைய பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டனவென்று ஒன்றுந் தோன்றாமல் திகைத்தார்.

“ஷஜருத்துர்! நீ ஏன் கவலை தோய்ந்த வதனத்துடனே காணப்படுகின்றாய்? உன்னுடைய வார்த்தைகளில் பழைய இனிமையைக் காணோமே! உன் நடக்கையில் பழைய உற்சாகத்தையுங் காணோமே! நான் திமஷ்குக்குப் போயிருந்தபோது என்ன நடந்தது? ஏன் இப்படி மாறிப்போயிருக்கிறாய்?” என்று முஈஜ் அன்பொழுக வினவினார்.

“காலசக்கரம் சுழன்றுகொண்டே யிருக்கிறதல்லவா? நாட்கள் ஓடவோட நானும் கிழமாகிக்கொண்டு போகிறே னல்லவா? எனக்கு இனியும் என்ன இன்பசுகம் வேண்டி யிருக்கிறது?”

“என்ன! நீ கிழமாகிக்கொண்டு போகிறாயா? முப்பதுவயது ஒரு கிழப்பருவமோ? உன் முகம் திரைந்து விடவில்லை; கூந்தலில் நரை விழவில்லை; அங்கங்களில் சோர்வு ஏற்படவில்லை; வாயில் பல்லுதிரவில்லை. இதில் கிழப்பருவம் எங்கிருந்து வந்துவிட்டது? கால சக்கரம் என்ன வேகமாய்ச் சுழன்றபோதினும், நீ எப்படிக் கிழவியாவாய் ஏ, மதுரசமே! வீண் கவலையால் ஏன் வாடுகிறாய்? உன்னைக் கிழவியென்று எவன் சொன்னவன்? நான் – உன்னைத் தொட்டுக்கட்டிய நான் – உன்னை என் காதற் களஞ்சியமாய்க் கொண்டாடும்போது, உன்னை எவன் ‘கிழவி’ என்று சொல்கிறவன்?” என்று ஆத்திரத்துடனே அலறினார் முஈஜ்.

“என்ன இருந்தாலும், நான் உங்களுடைய முதல் தாரமல்லவே? எப்படிப்பட்ட புருஷருக்கும் தம்முடைய முதல் மனைவியின் மீதே யன்றோ தெவிட்டாத நிஜக்காதல் சுரந்துகொண்டிருக்கும்? நான் என்ன அந்தப் பாக்கியத்தையா பெற்றுக் கொண்டேன்?”

“நீ என்ன உளருகிறாய், ஷஜர்? என் முதல் மனைவியை நான் அடியோடு மறந்துவிட்ட பிறகுங்கூட நீயே அவளை எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டி ருக்கிறாயே! அவள் செத்துப்போய்விட்டதாக நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது, நீயேதான் எனக்கு நினைப்பு மூட்டிக் கோபத்தையும் கிளப்புகிறாய். என் திரிகரண சுத்தியாகச் சொல்லுகிறேன்: நான் உன்னையேதான் காதலிக்கிறேன். நீ ஒருத்தியேதான் என் மனைவியென்பதை நான் சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீ விணாகவெல்லாம் என் மனத்தைப் புண்படுத்திக்கொண்டிராதே!”

சுல்தானின் இந்தப் பதிலை எதிர்பார்த்தே இவ்வளவு சாகசங்களையும் இதுவரை புரிந்துவந்த ஷஜருத்துர் முற்றும் திருப்தியுற்று விடவில்லை.

“ஆண்களின் தந்திரங்களை ஆரே அறிவர்? ஆசை அறுபதுநாள், மோகம் முப்பதுநாள் என்பர்; ஏன் பசப்புகிறீர்கள்?” என்று பையப் பேசினார் ஷஜருத்துர்.

“பசப்புகிறேனா? – ஷஜருத்துர்! இன்னம் என்னை முற்றிலும் அறியவில்லை நீ. அந்தக் கிழட்டு மைமூனா உன் கால் தூசிக்குப் பெறுமதியுண்டா? நான் அவளாலேயா இந் நாட்டின் சுல்தானானேன்? அவளைக் கொண்டா இவ்வளவு பேரும் புகழும் கீர்த்தியும் கியாதியும் பெற்றேன்? அந் நாஸிர்கூட என்னைக் கண்டு நடுநடுங்கிக் கிடுகிடுத்துப் போனானென்றால், ஷஜருத்துர்ரின் கணவனா யிருக்கிறேனென்ற ஒரே காரணத்தாலல்லவா? நான் மட்டும் உன்னை மணக்காமற் போயிருப்பின், – இல்லை, இல்லை! நீ மட்டும் அன்று என்னை வரிக்காமற் போயிருப்பின், இன்று நான் இந்தப் பெரிய புகழைச் சம்பாதித்திருக்க முடியுமா? நான் தூக்கத்திலும் விழிப்பிலும் சதா சர்வ காலமும் உன் சிந்தனையாகவே யிருந்துகொண்டு ஆண்டவனே உனக்கு நீண்ட ஆயுளைத் தந்து உன் கண்யியத்தை நீடித்த நாட்களுக்குக் காப்பாற்றி யருள்வானாக என்று தவம் கிடக்கிற என்னை நீ ஏன் சோதிக்கிறாய்? வேண்டுமாயின், என் நெஞ்சைப் பிளந்துப் பார்! அங்கே உன்னுடைய நாமம்தான் பொறிக்கப்பட் டிருக்கும்!”

ஷஜருத்துர் சிரித்தார். “ஏன் உங்கள் நெஞ்சுக்குள்ளே இலேககன் குந்திக்கொண்டு என் பெயரை எழுதிக்கொண்டே யிருக்கிறானோ?” என்று விஷமமாய்க் கேட்டார்.

முஈஜுத்தீனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“உன்னிடம் பேசி யாரால் மீள முடியும? ஆண்டவன் வேலையற்றுப்போயா உன்னைப் படைத்தான்? ஏ, சிருங்காரவல்லியே! நன்றாய்ச் சிரி. உன் முத்துப்போன்ற வெண்பற்களின் ஒளிரேகைகளிலும் முன்னே என்னை வண்மையாய்க் கட்டிப் பிணை!” என்று நகைப்புடனும் ஆர்வத்துடனும் பேசிக்கொண்டே அவரை மீண்டும் மார்புடன் அணைத்துக் கொண்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார் 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment