اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
நம் மானிட வர்க்கத்தாருக்குத் தன்னுடைய திருத்தூதர்களின் மூலமாய் நேர்வழியையும் சன்மார்க்கத்தையும் நன் னம்பிக்கையையும் அளித்துத் தன்னுடைய உண்மை யடியார்களாகச் செய்து கொண்ட எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவை நாம் போற்றிப் புகழ்வோமாக. அவனுடைய உண்மை நேசரும், மாந்தர்க்கு மாண்பளிக்க வந்த மாபெரும் திருநபியுமான நபிகள் நாயகத்தையும் (ஸல்) போற்றி ஆசீர்வதிப்போமாக. நமக்கு ஆண்டவன் தன் திருவேதத்தின் மூலமாயும் திருநபியின் மூலமாயும் பலவிதமான ஆசாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்பித்திருக்கின்றான். பாரமார்த்திகப் பரிபக்குவ மடைவதற்கும் சன்மார்க்க சீலராய் நாம் விளங்குவதற்கும் பல துறைகளையும் போதிக்கின்றான். இலௌகிக காரியங்களிலும் அநேக நல்ல முறைகளை மிக்க மேன்மை வாய்ந்த ஒழுங்கான முறையிலே கற்பித்துள்ளான். அல்லாஹ்வின்மீது நன்னம்பிக்கை கொண்டு, அவன்மீதே சதா பக்திபூண்டு வணங்கி, அவனது ஏவற்படியே நடப்பதனால் நம் ஆத்மார்த்தத்துக்கு எண்ணற் அனுகூலங்கள் ஏற்படுவதேபோல், ஆண்டவன் ஆணைப்படியே ஆகார விஷயத்திலும் மற்றும் ஜீவனோபாய வழிகளிலும் பரிசுத்தமான முறைகளையே நாம் அனுஷ்டித்து வருவதனால் அனந்தம் நன்மைகள் மலிந்து காணப்படுகின்றன.
பரிசுத்தமான ஆகாரத்தைப் புசித்து அகப்புறப் பரிசுத்தம் வேண்டு மென்பதைப்பற்றி ஆண்டவன் தன் குர்ஆனில் கூறியிருப்பதாவது:- “ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள்! ஆண்டவன் உங்களுக்கு அளித்துள்ள ஆகாராதிகளி னின்று நல்ல பரிசத்தமானவைகளையே புசிப்பீர்களாக: நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களா யிருப்பீர்களாயின், இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடவீர்கள். உங்களுக்காக ஆண்டவன் விலக்கி யிருப்பனவாவன: மரித்துப் போனவைகளும், உதிரமும், பன்றியின் மாம்சமும், அல்லாஹ்வின் பெயரல்லாமல் (வேறு பெயரைச் சொல்லி) அறுக்கப்பட்டவைகளான உயிர்ப் பிராணிகளுமே யாகும். இதனால் பரிசுத்தமான ஹலாலான உணவுப் பொருள்களையே புசிக்க வேண்டுமென்பதும், அசுத்தப் பிராணிகளின் ஹராமான மாம்சங்களைப் புசித்தல் கூடாதென்பதும் நன்கு புலனாகின்றன. ஆனால், இக்காலத்தில் நம்முள் பலர் ஹலால் ஹராம் என்ற பாகுபாட்டைச் சற்றுமு் கருதிப் பாராமலே எல்லாவற்றையும் சேர்த்து உட்கொண்டு விடுகின்றனர். [“எதுவரை ஒருவன் ஹலாலான ஆகாரத்தைக் கூடுமானவரை தெரிந்து புசிக்க மாட்டானோ, அதுவரை அவனது வணக்கம் பக்தி முதலியவை ஆண்டவனால் அங்கீகரிக்கப்பட மாட்டா”] வென்று நம் நபிகள் பெருமனாரும் (ஸல்) நவின்றருளி யிருக்கின்றார்கள். [“ஹராமான ஆகாரத்தை உட்கொள்பவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படமாட்டா”] தென்றும் நபீயுல்லாஹ் நவின்றருளியிருக்கின்றார்கள். இந்த ஹராம் ஹலால் என்னும் விஷயத்தைப் பற்றிக் குர்ஆனிலும் ஹதீது கிரந்தங்களிலும் அதிகம் விவரிக்கப்பட் டிருக்கின்றன. ஹலாலான ஆகாரமும் ஹராமான வழியால் வந்து சேருமாயின், அதுவும் ஹராமேயாம்.
பொதுப்படையாய்க் கூறுமிடத்து, ஹலாலான ஆகாரமென்பது யாரையும் மோசம் பண்ணாமலும், எங்கும் திருடாமலும், கொள்ளை யடிக்காமலும், வஞ்சிக்காமலும், வகை மோசம் பண்ணாமலும், சோம்பலால் யாசகம் புரியாமலும் உழைத்துக் கஷ்டப்பட்டு நியாயமான முறையில் சம்பாதித்த பொருளுக்கே சொல்லப்படும். ஒவ்வொரு மனிதனும் இப்படிப்பட்ட நீதமான முறையால்தான் தன்னா லியன்றவரை பொருள் சேமித்துத் தன் ஜீவனோபாயத்தை நடாத்திவரல் வேண்டும். பிறரை வஞ்சித்துப் பறிப்பதும், நம்பிக்கைத் துரோகம் செய்து புசிப்பதும், ஒரு சிறு பொருளேனும் அஃது அன்னியருடையதாயிருக்க, அதை மனமாரப் பிடுங்கித் தின்பதும், அன்னியர் சொத்தை அன்னவர் அனுமதியின்றி அபகரித்துக் கொள்வதும், திருடி யுண்பதும், கொள்ளை யடிப்பதும், வட்டி வாங்கி அதினின்றும் சொந்தப் பிரயோஜனமடைவதும், கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்கக் கூடாதென்ற மோசக் கருத்துடன் சுயப் பிரயோஜன மடைவதும், ஆயுள் முழுவதும் யாசகத்தையே தொழிலாய்க் கொண்டு திரிவதும், இன்னம் இவைபோன்ற இலௌகிக காரியங்க ளெல்லாம் ஹராமானவைகளே யாகம். விறகு வெட்டியேனும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துப் புசிக்கச் சக்தியிருந்தும், சோ்மபேறித் தனத்தாலோ அல்லது வேறு எக் கருத்தாலோ சதா பிச்சைத் தொழிலையே தம் கடனாகக் கொண்டு வாழ்க்கை நடத்துதலும், தம்மிடம் போதிய சொத்துக்க ளிருக்க, இன்னம் அதிகம் சேர்க்க வேண்டுமென்ற பேராசையால் பொய் பேசிக் கௌரவ யாசகம் புரிந்து ஜீவனத்தை நடத்துதலும், அல்லாஹ்வுடைய வெத வாக்கியங்களையும் மார்க்க நீதிகளையும் பொருளாசைக்காக வென்றே போதித்தோ பிரசங்கித்தோ பணம் பறித்துத் தின்பதும் முற்றம் விலக்கப்பட்ட கருமங்களே யாகம். என்னெனின், “என்னுடைய அத்தாக்ஷிகளை (ஆயாத்களை) ஒரு சிறு பொருளுக்காக வென்று அன்னார் விற்று விடுகிறார்கள்,” என்று ஆண்டவன் குர்ஆன் ஷரீபில் கண்டித் திருக்கிறான்.
இதுகாலை நம் நாட்டில் படித்த வகுப்பாருள் பலர் ஊர்கள்தோறும் சென்று, பொதுநல மில்லாமல் சுயநலத்தோடு ஏதேதோ கூறிவிட்டுக் “குமர் காரிய” மென்றும், “பெரும் ஹாஜத்” தென்றும், “கடன் தீர்க்க வெண்டு” மென்றும், “பள்ளி கட்ட வேண்டு” மென்றும் பற்பல பொய்க் காரணங்களைப் புகன்று பாமரர்களை ஏமாற்றிப் பணம் பறித்துக் காலந் தள்ளுகின்றனர். இவை யனைத்தும் நந் தீனுல் இஸ்லாத்தின் கண்ணியத்திற்கு எத்துணை இழிவைத் தருகின்றன வென்பதை அன்னார் ஒரு சிறிதும் கவனி்கின்றன ரில்லை. இத்தகைய தகாத செயல்களை நபிகளேனும் (ஸல்) சஹாபாக்களேனும் இமாம்களேனும் பெரியோர்களேனும் அவ்லியா குத்புமார்களேனும் இதற்கு முன் செய்தார்களா? இல்லையே! அவர்கள் எல்லாரும் தங்கள் ஜீவனோபாயத்தை அதிக சிரமத்தோடு எவருடைய தயை தாக்ஷிண்யத்தையும் எதிர்பாராது உத்தமமாய் நடாத்தி அதனுடன் மார்க்கப் பிரசங்கங்களும் பொதுஜன ஊழியங்களும் புரிந்துவந் திருக்கிறார்கள். பலர் குர்ஆனை எழுதி விற்றே ஜீவனம் புரிந்துள்ளனர். இவ்வாறு நாம் இருந்தால்தான் பரிசுத்த மனிதராகி அல்லாஹ்வின் பேரருளையம் நபிபெருமானின் (ஸல்) அனுக்கிரஹத்தையும் பெறுவதற்கு அருகதை யுடையவர்க ளாவோம். பிறரை மோசஞ் செய்தோ, களவாடியோ, வயிறெரிய வட்டி வாங்கியோ அக்கிரமமிழைத்து வயிறு வளர்ப்பதானது மகா கொடும் பாதகங்களே யாகம். ஹராமான வழிகளால் செல்வம் சேகரித்தால், அத்ன முடிபென்ன? பெரும்பணம் படைத்தவன் ஆத்ம சுகிர்தம் அடைந்து விடுகிறானா?
ஆதலால், என்னரும் முஸ்லிம் நேசர்காள்! இனி நீங்கள் ஹலாலான முறையிலேயே சம்பாதித்து, மார்க்கக் கட்டளைகளைச் சீராக நடாத்தக் கடவீர்கள். உங்கள் வியாபாங்களிலும் விவசாயத்திலும் கைத்தொழிலிலும் ஊழியத்திலும் உத்தியோகத்திலும் அல்லாஹ்வுக்குச் சம்மதமான நீதியான ஹலாலான ஒழுங்கான உத்தம முறையிலேயே நடந்துகொள்ளக் கடவீர்களாக. ஹராத்தைப் புசிப்பதால் ஹிருதயம் இருளடைந்து, ஆண்டவன் சாபமும் ஏற்படுகின்ற தென்பதை எண்ணி, அகமும் புறமும் பரிசுத்தத்தோடு இருக்க முயல்வீர்களாக. ஆகையால், ஆண்டவன் நம்மெல்லோரின் வாழ்க்கையையும் நல்ல பரிசுத்தத்திலேயே வைத்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License