ஷிர்க் செய்வதும், கராமத் துண்டாவதும்

ஒருவன், “நான் இந்தப் பெரியாரை அழைத்தேன்; ஆகையால், என்னுடைய கூப்பிட்டுக்கொப்ப என் நாட்டங்களெல்லாம் நிறைவேறிவிட்டன. யான் என்னுடைய ஷைகை யழைத்தேன்; உடனே என் முன் ஆஜராய் விட்டார்கள்,”

என்று சொல்வானாயின், நீங்கள் சொல்ல வேண்டியதென்ன வெனின், “நக்ஷத்திரத்தை வணங்குபவர்களுக்கும், விக்கிரக வணக்கம் செய்பவர்களுக்கும் இவ்வாறே விஷயங்கள் நடந்தேறி வருகின்றன என்று கூறுகின்றார்கள்” என்பதே யாகும். (ஏன்! இவ்வுலகிலுள்ள எத்தனையோ நிசீசுவர வாதிகளும் தாங்கள் கோரிய காரியங்களி லெல்லாம் இணையில்லா வெற்றி பெற்று, புத்திர சம்பத்திலும் மற்றுமுள்ள ஐசுவரிய சம்பத்திலும் வெறெவரும் நிகரில்லாது பெருஞ் செயம் பெற்று வாழ்ந்து வருவதை நாம் கண்கூடாய்க் காணவில்லையா? தா. இ. ப-ர்.) இதற்கு வேண்டிய எத்தனையோ ஆதாரங்கள் நின்றிலங்குகின்றன. இவ்வித ஆச்சரியங்கள் ஏதேனும் இவ்விரு வகுப்பார்களுக்கும் உண்டாக வில்லையாயின், இன்னவர்கள் நக்ஷத்திரத்தையும் விக்கிரஹத்தையும் வணங்க மாட்டார்க ளென்பது திண்ணம். இதனால்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், “என்னையும், என்னுடைய மக்களையும் விக்ரஹத் தொழும்பினின்று காப்பாற்றி வைப்பாயாக. என்னுடைய ஆண்டவனே! இவ்விக்கிரஹங்கள் மனிதர்களுள் அதிகம் பெயரை வழிக்கேட்டி லாக்கியிருக்கின்றன”-(14:35,36) என்று கூறி, இவ்விக்கிரஹங்களின் பொய்யான அதிசயங்களைக் கண்டு தாங்கள் ஏமாந்து போகாமல் நேரான மார்க்கத்திலேயே நடந்து செல்ல வேண்டுமென்று உதவி கோரியதாய் ஆண்டவனே தன் திருமறையில் திருவுளமா யுள்ளான்.

இஃது ஒரு புறமிருக்க, ஹஜரத் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பின் மக்காவில் மறு முறையும் விக்கிரஹ வணக்கத்தை உண்டு பண்ணியவன் அம்ருப்னு லஹ்யில் குஜாயீ என்னும் பெயர் வாய்ந்தவன் என்று சொல்லப்படுகிறான். இவனோ முதன் முதலாய்ப் பசுமாட்டின் மீதேறிச் சவாரி செய்பவனா யிருந்தான். பிறகு நாள் செல்லச் செல்ல இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மாற்ற வேண்டுமென்று எண்ணி, அவ்வாறே இவன் செய்துகொண்டும் வந்தான். ஒரு சமயம் இவன் ஷாம் (பலஸ்தீன்) தேசம் சென்று பார்த்தபோது, அங்குள்ள பல்கா வென்னும் நகரத்தில் ஒரு விக்கிரஹத்தை வைத்துக்கொண்டு மனிதர்கள், ‘இந்த விக்ரஹம்தான் நமக்கு நன்மைகளை யெல்லாம் செய்கிறது; தீமைகளை யெல்லாம் விலக்கிக் கொண்டிருக்கிறது’, என்றெண்ணித் தங்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் அந்த விக்கிரஹத்தினிடமே கேட்டு மண்டியிட்டுக்கொண் டிருந்தார்கள். இதைக்கண்ட இந்த அம்ர் அஃதேபோல் ஒரு விக்ரஹத்தை மக்காவுக்குக் கொணர்ந்தான். இதை அங்குக் கஃபாவில் கொண்டு வந்து வைத்துவிட்டு, அல்லா(ஹ்)வும் அவனுடைய ரசூல்மார்களும் போதித்துச் சென்ற நேரான பாதைக்கு முற்றும் விரோதமாய் விக்கிரஹவணக்கம் செய்யும்படி மனிதர்களைத் தூண்டியதுமன்றி, ஆண்டவனுக்கு இணை வைப்பதும், சூன்யம் செய்வதும், அக்கிரமமாகக் கொலை செய்வதும், பொய்ச் சாக்ஷி சொல்வதுமான அனேக இச்சைக்குரிய காரியங்களைனைத்தையும் மனம்போனவாறெல்லாம் செய்யும்படியும் தூண்டிக்கொண் டிருந்தான். ஆகவே, அங்குள்ள மனிதர்களும் சன்னம் சன்னமாய் அவ்விக்கிரஹத் தொழும்பில் ஈடுபட்டுக் கொண்டு வந்தார்கள். எனவே, மக்காவிலுள்ளவர்களும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்பட்ட மஹா ஜனங்களும் அவனது வார்த்தையை நம்பி விக்ரஹ வணக்கம் செய்து கொண்டுவரத் தலைப்பட்டார்கள். இவர்கள் அம்ரின் வார்த்தைப்படி இவ்விக்கிரஹ வணக்கத்தில் தங்கள் மனப்போக்குக் கொத்தவாறான விஷயங்கள் நிறைவேறுவதாய்க் கண்டு கொள்ள வில்லையாயின் நிச்சயமாக அவர்கள் இம் மாதிரி அனாசார விக்கிரஹத் தொழும்பில் ஈடுபட்டிருக்க மாட்டார்க ளென்பது திண்ணம். எனவே, ஒவ்வொருவரும் தத்தம் மனம்போனபடியெல்லாம் நடந்து கொண்டு, தாங்கள் நடந்து செல்வது தான் உண்மையான மார்க்கமென்று கூறிக்கொண்டும் வருகின்றனர்.

Image courtesy of jscreationzs at FreeDigitalPhotos.net

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment