இஸ்லாத்தின் பண்டைச் சரிதையைப் புரட்டிப் பார்க்கின், அக்காலப் பெண்களின் அரிய செயல்களை அதிகம் நாம் காணலாம் : அவர்கள் போர்க்களம் புக்குப் பெரிய பெரிய அரிய காரியங்களை யெல்லாம் சாதித்துப் புகழ் மாலை பெற்று விளங்கினார்கள்.
அப்பெண்மணிகள் தங்கள் கணவர்களுடனே சரிசமமாய் நின்று வில்லேந்திச் சண்டை செய்வார்கள்; நபிபெருமானின் அத்தையான – ஜுபைரின் மாதா – ஸபிய்யா அம்மாள் அகழ் யுத்தத்தின் போழ்து ஒரு கூடார முளையைக் கொண்டு, பெண்களரணில் வேவு பார்க்க வந்த யூதனொருவனது மண்டையை ஒரே அடியால் பிளந்து எமலோகமனுப்பிய சம்பவம் உங்களுக்கு நன்கு தெரியும். இரண்டாவது கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ஷாம், இராக், எகிப்து ஆகிய தேசத்துப் போர்களில் கவ்லா, கன்ஸா, அஸ்மா ஆகிய மாது சிரோமணிகள் செய்து காண்பித்த வீரதீரச் செயல்களெல்லாம் இஸ்லாமியர் சரித்திர ஏடுகளை என்றென்றும் பொன்னெழுத்தால் அலங்கரிக்கச் செய்யக்கூடியனவாகவே இருந்து வருகின்றன. யர்மூக் யுத்தத்தின் பொழுது, 40 ஆயிர முஸ்லிம்கள் இரண்டிலக்ஷம் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போா் புரிய வேண்டியவர்களாய் இருந்துவந்தார்கள். அந்தச் சண்டையில் முஸ்லிம் வீரமாதர்கள் செய்துவந்த பேருதவியைக் கொண்டு அந்த ஆண் சிங்கங்கள் தங்களினும் ஐந்து மடங்கு அதிகமாய் இருந்து வந்த உரோமப் படைகளை நன்றாக முதுகொடிய முறியடித்துச் சின்னாபின்னப்படுத்திச் சிதறடித்து விட்டார்கள் ; முஸ்லிம் நாரிமணிகள் பாடி வீடு செய்துகொண்டிருந்த பாசறையுள் உரோமச் சேனாசமுத்திரம் புகுந்த பொழுது, அங்கிருந்த அணங்கியர் அனைவரும் ஆத்திரம் பூண்டு ஆடவருடனே சேர்ந்து நின்று வீரப்போர் புரிந்து, அந்த ரோமராஜ்ய சைன்யத்தை அடியுடன் முறியடித்து வெற்றிமாலை சூடினார்கள்.
இந்நாட்டின் சரிதையிலும் முஸ்லிம் மாதர்கள் வீரப் பிரதாபமும் பெற்றே விளங்கி நிற்கிறார்கள். தக்ஷிணத்திலுள்ள அஹ்மத் நகரில் அரசாண்ட நிஜாம் ஷாஹீ வம்சத்துச் சாந்த் சுல்தானா என்னும் வீராங்கனை முகலாயர் சேனைகளை எதிர்த்து நின்று செய்த வீரப்போரினால் என்றும் அழியாப் புகழைப் பெற்று இன்றும் விளங்கி வருகின்றார். ஒருமுறை அக்பர் சக்ரவர்த்தி இளவரசர் முராதின் கீழே அஹ்மத் நகரை வெற்றிகொள்ள ஒரு வன்மை மிக்க படையை அனுப்பி வைத்தார்; முராத் தம்வயமிருந்த படைப்பலத்தைக் கொண்டு அஹ்மத் நகர்க் கோட்டை மதிலை ஒருபுறத்தில் இடித்துத் தகர்த்து விட்டார்; அவ்வளவுடனே அந்நகரின் தலைவிதி அஸ்தமித்துவிட்டதாகவே எல்லா அறிகுறிகளும் காணப்படலாயின. ஆனால், வீராங்கனை சாந்த்பீ ஒரு போர்வீரனே போல் வேடந்தாங்கி, முழு ஆயுத பாணியாய்த் தமக்குரிய வாம்பரிமீது ஏறிக் குந்தினார்; போர்க்களம் புக்கு, அந்த ஸுல்தானா தாமே அச்சண்டையைத் தலைமை வகித்து நடத்தத் துவங்கினார். ஓர் அனுபவமிக்க தளபதியே போல் நின்று எதிரிப் படையால் விளையவிருந்த பேராபத்தைத் தடுத்து நிறுத்தியதோடு நில்லாது, அன்றிராப் பொழுது விடியுமுன்னே, தகர்க்கப்பட்டுப் போயிருந்த அரண் மதிலையும் பழுது பார்த்து நன்கு நிருமித்து முடித்தார். முராத் பெருந் திகில் கொண்டவராய்த் தமது முற்றுகையைக் கிளப்பிக்கொண்டு டில்லிக்குத் தோல்வியுற்றவராய்த் திரும்பிவிட்டார்.
எனவே, எம் முஸ்லிம் சோதரிகள் வெறும் பிள்ளை பெறவும், வேடிக்கையாய்ச் சமையல் செய்யவும், கல்லறைக்குள் பிள்ளையார்போலே சோம்பிக் கிடக்கவுந்தான் சிருஷ்டி செய்யப் பட்டுள்ளார்களென்று தவறாக எண்ணாதிருக்கட்டும். ஆடவர் பெண்டிரைப் பொறாமைக் குணத்தாலேதான் சிறைப்படுத்தி வைக்கின்றனர். கற்கோட்டைச் சிறைவாசந்தான் பெண் மணிகளின் கற்பைக் காக்கும் என்றெண்ணுவது தவறேயாகும். என்னெனின், ” சிறை காக்கும் காப்(பு) எவன் செய்யும்? மகளிர் நிறைகாக் கும் காப்பே தலை” யென்னட் படுதலினால் என்க. ஏனென்றால், ” கண் ணொடு கண்ணிணை நோக்(கு) ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” என்றாங்கு, கற்கோட்டைச் சிறை வாசந்தான் கற்பைக் காக்க வல்ல தென்று கருதற்க.
முற்கால முஸ்லிம் வனிதாமணிகள் வில்வித்தை, குதிரையேற்றம், துப்பாக்கிப் பயிற்சி, போர்ப்பழக்கம், பிரதம சிகிச்சை முதலியற்றில் ஆண்களுடன் தோளோடு தோளுறழ நின்று தொழில் புரிந்து வந்தார்கள். இக்கால நஞ்சோதரிகள் சமைக்கிறார்கள்; பிள்ளை பெறுகிறார்கள் ; அழகிய ஆடையாபரணங்களை அணிகிறார்கள். “சினிமா ஸ்டார்” போல மினுக்கிக் கொண்டு அலைகிறார்கள். இவர்கட்கெல்லாம் வீரமில்லை, தீரமில்லை; வெறுங் கோழைகளாய், வீணான காற்றின் சிறு சலசலப்பைக் கேட்டதும், “அம்மாடீ !” என்று அலறுகிறார்கள்; இருட்டைக் கண்டால், பேயென்றும் பிசாசென்றும் கதறுகிறார்கள். வீரதீர சூரபராக்ரமத்தில் முன்னணியில் வந்து நிற்கவேண்டிய முஸ்லிம் வனிதாமணிகள் இதுகாலைப் பின்னணியிலே, வீட்டின் புழைக்கடைகளிலே வெறும் அடுப்பங்கரைச் சாம்பலாய் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். அந்தோ! அந்தோ!! அந்தோ!!!
எழுதியவர்: ஜுனைரா
தாருல் இஸ்லாம், மார்ச் 1948, பக்கம் 29, 30
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்