அது ஓர் அழகிய பொற்காலம் – 7

கடுங்குற்றங்களுக்கு இஸ்லாம் நிர்ணயித்துள்ள தண்டனைகள் கடுமையானவை. அதை நிறைவேற்றுவது மக்களை ஆளும் தலைவரின் பொறுப்பு. எந்தளவு

மக்களிடம் ‘அன்பும் அறனும்’ உடையவராய் கலீஃபா உமர் (ரலி) விளங்கினாரோ அதேயளவு குற்றங்களுக்கு அளிக்கப்படும் நீதி அவரது ஆட்சியில் ‘பண்பும் பயனுமாய்த்’ திகழ்ந்தன. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி, அவருக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் சுய வெறுப்பு விருப்போ, எல்லை மீறலோ அறவே கூடாது என்பதில் உமரின் கண்டிப்பு உச்சக்கட்ட ‘கறார்’தனம்.

ஏனெனில் தண்டனை வழங்குவதென்பதை, ‘இறைவனின் நீதியை நிலைநாட்டல்; சமூக அவலங்களைக் களைந்து ஒழுங்கை ஏற்படுத்துதல்’ என்பதாகத்தான் உமர் கருதினாரே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்கான பழிவாங்கல்; அதிகார துஷ்பிரயோகம்; கொடுங்கோல் போன்றவற்றின் நிழல்கூட நீதியின்மேல் விழுவது தகாது என்பது அவரது கண்டிப்பான நிலைப்பாடு.

உமர் (ரலி) மக்களிடம் திரும்பி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக. நான் உங்களிடம் ஆளுநர்களை அனுப்புவது உங்களை அடித்துத் துன்புறுத்துவதற்கோ, உங்களது செல்வங்களைப் பிடுங்குவதற்கோ அல்ல. அவர்கள் உங்களுக்கு இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கவும், நபியவர்களின் வழியைக் கற்றுத் தருவதற்காகவும்தான்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு,

மறுபுறம் ஆளுநர்களிடம் திரும்பி, “நான் உங்களுக்குப் பதவி அளித்துள்ளது மக்களின் முடியை மழிப்பதற்காகவும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவதற்காகவும் அல்ல. தொழுகையை நிலைநிறுத்தி, அவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுத்தருவதே உங்களின் தலையாய பணி” என்று அறிவுறுத்துவார்.

இதெல்லாம் படித்துப் பார்க்க நன்றாக இருக்கிறது; நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தோன்றுமல்லவா? அதுதான் கலீஃபா உமர் ஆட்சியின் சிறப்பு. ஆளுநர்கள்மீது புகார்கள் கூறப்பட்டால் உடனே கவனிக்கப்படும்; நியாயம் வழங்கப்படும். குப்பைக்கூடைகள் குப்பைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம்.

எகிப்து வசப்பட்டதும் அம்மக்களுக்கு அம்ரு இப்னுல் ஆஸை ஆளுநராக நியமித்தார் உமர். ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருநாள் மதீனாவுக்கு ஓடிவந்தார் எகிப்தியர் ஒருவர். ‘புஸ்.. புஸ்..’ என்று மூச்சு. முகத்தில் ஆத்திரம். கலீஃபா உமரிடம் புகார் கூறினார்.

‘உம் ஆளுநரின் மகன் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்.’

“நான் உமக்கு அபயம் அளிக்கிறேன். என்ன நிகழ்ந்தது?”

“நானும் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸின் மகனும் ஓட்டப்பந்தயத்தில் ஓடினோம். நான் அவரைத் தோல்வியுறச்செய்து விட்டேன். அதைப் பொறுக்க இயலாத அவர், ‘நான் உயர்குடியைச் சேர்ந்த மகன்’ என்று சொல்லிக்கொண்டே என்னைச் சாட்டையால் அடித்தார்.”

‘உடனே நீர் உம் மகனை அழைத்துக்கொண்டு மதீனா வரவும்’ என்று ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸுக்குத் தகவல் சென்றது. கிளம்பி வந்தனர் தந்தையும் மகனும்.

விசாரனையில் ஆளுநரின் மகன் அநீதியான முறையில் நடந்துகொண்டது நிரூபணமானது. எகிப்தியரிடம் சாட்டையை அளித்து,

“ம்… உயர்குடியைச் சேர்ந்தவரின் மகனைப் பதிலுக்குப் பதில் பழி தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று தீர்ப்பு வழங்கிய உமர், அம்ரு இப்னுல் ஆஸிடம் கூறிய வாக்கியம் புகழ்பெற்று நிலைத்துப்போனது.

“தாய் தம் மக்களை சுதந்திரமானவர்களாக ஈன்றிருக்க, என்றிலிருந்து நீர் அவர்களை அடிமைப்படுத்தத் தொடங்கினீர்?”

“அமீருல் மூஃமினீன் அவர்களே. இந்த நிகழ்வைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் வந்து முறையிடவேயில்லை.”

இங்கு கலீஃபா வழங்கிய நீதி ஒருபுறமிருக்க மற்றொன்று மிக முக்கியம். பரந்து விரிந்த அரசாங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பொதுமக்களில் ஒருவர், இஸ்லாமிய ஆட்சியின் ஆக உயர்ந்த தலைவரான கலீஃபாவை எவ்விதச் சம்பிரதாயமும் இன்றி எளிதில் சந்திக்கிறார்; புகார் அளிக்கிறார். அதை அந்தத் தலைவரும் செவிமடுக்கிறார்; விசாரணை புரிந்து நீதி வழங்குகிறார். சமகாலத்திலுள்ள எந்த அரசாங்கத்தில் இது சாத்தியம்?

ஆளுநரின் மகன் என்றில்லை. ஆளுநராகவே இருந்தாலும் சரி, சலுகை கிடையாது. படைவீரர் ஒருவர் உமரிடம் வந்து முறையிட்டார். “என்னை முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று திட்டிவிட்டார் உங்கள் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸ்.”

ஆளுநருக்கு உடனே கடிதம் வந்தது. ‘அம்ரு இப்னுல் ஆஸ் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும். படைவீரர் அளித்த புகார் மெய் எனில், அவர் ஆளுநருக்கு கசையடி அளித்து பழி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கட்டளையிடப்பட்டிருந்தது.

விசாரணை புகாரை உறுதி செய்தது. மக்களுள் சிலர் அந்தப் படைவீரரிடம் சமாதானம் பேசிப்பார்த்தனர். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சாட்டையுடன் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸை நெருங்கினார் அந்தப் படைவீரர்.

“நான் இப்பொழுது உமக்கு தண்டனை அளிக்கப்போகிறேன். தடுத்து நிறுத்த யாரேனும் உள்ளனரா?”

“இல்லை. உனக்கு இடப்பட்டுள்ள கட்டளையை நிறைவேற்று” என்றுார் அம்ரு இப்னுல் ஆஸ்.

“நான் உம்மை மன்னித்தேன்” என்றார் அந்தப் படைவீரர்.

அவருக்குத் தேவை நீதி. அது கிடைத்துவிட்டது. மற்றபடி ஆளுநரைத் தாக்கவேண்டும், பழிவாங்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். அது அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை.

இன்று முஸ்லிம்கள் சிறிதும் தயக்கமின்றி நம்முள் ஒருவரைத் தூற்ற மிக இலகுவாய் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்தச் சொல் எத்தகைய அவச்சொல்லாக இருந்திருந்தால், ஆதாரமின்றி அதை உரைத்தவர் ஆளுநராகவே இருந்தாலும் அவருக்கு அத்தகு கடுந்தண்டனையை அளிக்க உமர் கட்டளையிட்டிருப்பார்?

‘யாகவராயினும் நா காக்க’ என்பது வழக்கொழிந்து போன அவலம். நம் புத்தியில் நீர் தெளித்து, சுதாரித்து, அதை மீள்விக்க வேண்டியது மிக அவசரம்.

நீதி வழங்கும் விஷயத்தில் உமருக்கு எத்தகைய பாரபட்சமும் இருந்ததில்லை; புகாருக்கு உரியவர் தம்முடைய மகனாகவே இருந்தாலும்கூட.

எகிப்தில் வாழ்ந்துகொண்டிருந்தார் உமரின் மைந்தர்களுள் ஒருவரான அப்துர் ரஹ்மான். ஒருமுறை அவரும் மற்றொருவரும் போதையளிக்கும் பானம் ஒன்றை அறிந்தோ அறியாமலோ பருகிவிட்டனர். போதை தலைக்கேறியதும்தான் ‘அட இது கஷாயமெல்லாம் இல்லை போலிருக்கு’ என்று புரிந்திருக்கிறது அவர்களுக்கு. ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸிடம் வந்தார்கள்.

‘ஆளுநரே பானமொன்று அருந்தி நாங்கள் போதையுற்றுவிட்டோம். தயவுசெய்து குடிகாரர்களுக்கு அளிக்கும் ‘ஹத்’ தண்டனையை எங்களுக்கு அளித்து நீதி செலுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

‘தெரியாமல் செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது. இனிமேல் இவ்விதம் செய்யாதீர்கள்’ என்பதுபோல் ஏதோ சொல்லி அவர்களை வெளியேற்ற முனைந்தார் ஆளுநர்.

அதற்கு அப்துர் ரஹ்மான், “இதோ பாருங்கள். தாங்கள் மட்டும் எங்களுக்குத் தண்டனை அளிக்காவிட்டால், நான் என் தந்தையிடம் அதை முறையிடும்படி இருக்கும்” என்று மிரட்ட அதன் பின்விளைவு அம்ருவுக்கு நன்கு புரிந்தது.

எனவே அவர்களைத் தம் வீட்டிற்குள் அழைத்து வைத்து கசையடித் தண்டனையை நிறைவேற்றினார் ஆளுநர். குடிகாரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையான கசையடியும் முடியை மழித்தலும் பொதுமக்களின் முன்னிலையில் நடைபெறுவதே வழக்கம். மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும் என்பது அடிப்படை. கலீஃபாவின் மகன் என்பதால் அவருக்குத் தம் வீட்டினுள் வைத்து தண்டனை வழங்கி தனிச் சலுகை புரிந்துவிட்டார் அம்ரு இப்னுல் ஆஸ். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலீஃபாவின் மகன் என்பதால் தண்டனையை ரத்து செய்யவில்லை. சற்றே சலுகை. அவ்வளவே. இச்செய்தி மதீனாவில் உமருக்குத் தெரிய வந்து, ஆளுநருக்கு உடனே ஓலை வந்தது.

“அப்துர் ரஹ்மானுக்கு உமது வீட்டினுள் வைத்து முடியை மழித்தீராமே! எனது விருப்பத்திற்கு முற்றிலும் மாறானது இது. என் மகன் அப்துர் ரஹ்மான் உமது ஆளுகைக்கு உட்பட்ட பொது மக்களுள் ஒருவர். இதர முஸ்லிம்களை நீர் எவ்விதம் நடத்துகிறீரோ அவ்விதமே அவரையும் நடத்த வேண்டும். அவர் கலீஃபாவின் மகன் என்பதற்காகத்தான் சலுகை அளித்துள்ளீர். அல்லாஹ்வுக்கான கடமைகளில் நான் எத்தகைய சமரசமும் செய்துகொள்வதில்லை என்பது உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீர் எப்படி இவ்விதம் நடந்துகொள்ளலாம்” என்று ஆளுநரை அதட்டித் தீர்த்திருந்தது கடிதம்.

அத்துடன் விடவில்லை. தம் மகன் அப்துர் ரஹ்மானை மதீனாவிற்கு வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றினார் உமர்.

அது ஓர் அழகிய பொற்காலம்.

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-28, பிப்ரவரி 2013

<<பகுதி 6>>  <<பகுதி 8>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment