உமர் (ரலி) அவர்களிடம் ஆளுநர்களாகப் பணியாற்றிய நபித்தோழர்களின் பணிவடக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. அது சொல்லி மாளாத
பணிவடக்கம். ஆளுநர் என்ற சொல்லைக் கேட்டதுமே, வாகனம், சேவகர்கள், பாதுகாப்பாளர்கள், பகட்டு, பந்தா என்று நமக்கெல்லாம் மனத்தளவில் ஒரு பிம்பம் ஏற்பட்டுவிடுமில்லையா? அதன் அரிச்சுவடிகூட அறியாமல் வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். பொதுமக்களுக்கும் ஆளுநருக்கும் இடையே வேற்றுமையோ, ‘குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம்’ என்றோ எதுவுமே இல்லாத வாழ்க்கை.
பைஸாந்தியர்களுடன் முஸ்லிம்கள் போரில் ஈடுபட்டிருந்த காலம். தங்களின் பிரதிநிதி ஒருவரை ஆளுநர் அபூ உபைதாவிடம் (ரலி) பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தனர் பைஸாந்தியர். அவர் முஸ்லிம்களை நெருங்கிவந்தார். அங்கு ஆளுநர் இவர், பொதுமக்கள் மற்றவர் என்று எந்த வித்தியாசமும் இன்றி முஸ்லிம்களின் குழு. இன்னும் சொல்லப்போனால், அந்த இடத்தில் ஓர் ஆளுநர் இருக்கிறார் என்பதற்கான அடையாளம்கூட இல்லை.
குழப்பத்துடன், “ஓ அராபியர்களே! எங்கே உங்களின் தலைவர்?” என்றார்.
“இதோ” என்று கைகாட்டினா்கள் அவர்கள். சுட்டிய இடத்தைப் பார்த்தால் அங்கு தரையில் அமர்ந்திருந்தார் அபூ உபைதா. தோளில் வில். கையில் ஓர் அம்பு. அதைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தார் அவர்.
அவரைப் பார்த்து, “நீர் தான் இவர்களின் தலைவரா?”
“ஆம்”
“பிறகு ஏன் தரையில் அமர்ந்திருக்கிறீர்? மெத்தை, திண்டு, இருக்கை ஏதுமில்லையா?” என்ன தலைவர் இவர்? ‘நாற்காலி’கூட இல்லை எனில் அது என்ன பதவி?
பிரதிநிதியின் திகைப்பை உணர்ந்த அபூ உபைதா, “உண்மையை உரைப்பதில் அல்லாஹ் நாணமுறுவதில்லை. எனவே நான் உண்மையை உரைக்கிறேன். என்னிடம் ஏதும் சொத்து கிடையாது. உடைமை என்று உள்ளதெல்லாம் குதிரை, ஆயுதம், வாள் மட்டுமே. நேற்று எனக்குச் சிறிது பணம் தேவைப்பட்டது. எனவே இதோ இவரிடம் கடன் வாங்கியுள்ளேன்” என்று முஆதைக் காட்டினார். பிறகு,
“இவை ஒருபுறம் இருக்க, என்னிடம் பஞ்சனை, சமுக்காளம் என்று இருந்திருந்தாலும்கூட, இதோ இங்கிருக்கும் என் சகோதரர்களை ஒதுக்கிவிட்டு, நான் அதில் அமர்ந்துகொள்ள மாட்டேன். சொல்லப்போனால் என் சகோதரனைத்தான் அதில் அமரச் செய்வேன். ஏனெனில் அல்லாஹ்வின் பார்வையில் அவன் என்னைவிட உயர்ந்தவனாய் இருக்கலாம். நாங்கள் எல்லாம் அல்லாஹ்வின் அடிமைகள். நாங்கள் பூமியில் நடக்கிறோம். தரையில் அமர்கிறோம். தரையில் அமர்ந்து உண்கிறோம். தரையில் படுத்து உறங்குகிறோம். அவை அல்லாஹ்வினிடத்தில் எங்களது தகுதியைக் குறைத்துவிடுவதில்லை. மாறாக அல்லாஹ் எங்களது வெகுமதியை அதிகரிக்கிறான். எங்களது தகுதியை உயர்த்துகிறான். நாங்கள் எங்கள் இறைவனிடம் பணிவுடையவர்களாய்க் கிடக்கிறோம்.”
அந்த முதல் தலைமுறை முஸ்லிம் சமூகத்து வரலாற்றைப் படித்தால், அவர்களது ஒவ்வொரு நிகழ்வும் செயலும் இறையச்சம், இறை உவப்பு என்றே இருந்திருக்கிறது. சதா சர்வகாலமும் அவர்களது அகத்தையும் புறத்தையும் அது மட்டுமே ஆக்கிரமித்து இருந்திருக்கிறது. பட்டம், பதவி என்பன அவர்களைப் பொறுத்தவரை பெருமை, வாய்ப்பு, வசதி என்பதல்ல. மாறாக தாங்கவியலாத சுமை. அப்படித்தான் அதைக் கருதினார்கள். மறுத்து, வெறுத்து ஓடினார்கள்.
ஒருகாலத்தில் இஸ்லாத்தை ஏற்கும்முன் ஒரு கோத்திரத்திற்கே தலைவராக இருந்தவர் நுஃமான் பின் முகர்ரின் (ரலி). தம் மக்களை ஆண்டவர். தலைமைக்குரிய பெருமிதங்களை அனுபவித்தவர். பின்னர் இஸ்லாத்தைப்பற்றி அறிந்தார்; வந்தார்; ஏற்றார். அதற்குப் பின்? பெருமிதங்களையும் சொகுசையும் இறக்கி வைத்துவிட்டு, இஸ்லாத்திற்காக ஓய்வு ஒழிச்சலற்ற ஓட்டம், இடைவிடாத போராட்டம் என்றாகிப்போனது அவரது வாழ்க்கை. உமர் (ரலி) அவரை கஸ்கருக்கு ஆளுநராக்க விரும்பினார்.
போர், போர் என்று ஓடிக்கொண்டே இருந்தவருக்கு அவை எத்தகைய களைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? இந்நிலையில் அதிகாரமும் பதவியும் கிடைத்தால் அதைப் பெற்றுக்கொண்டு, இறுமாப்பெல்லாம் இல்லாது போகட்டும், ‘உஸ்… அப்பாடா..’ என்று சாய்ந்து அமர்ந்து கொண்டு சேவகர்களை ஏவல் புரிந்து நிர்வாகம் பார்த்துவிட்டு, சொகுசை அனுபவித்திருக்க வேண்டுமல்லவா? இதென்ன பதவி, அந்தஸ்து, வசதி என்று அதெல்லாம் நுஃமானுக்குக் கொஞ்சம்கூட சரிப்பட்டு வரவில்லை. தம் மன உளைச்சலை உமருக்குக் கடிதமாக எழுதினார்:
‘எனக்கும் கஸ்கருக்குமான உவமை என்ன தெரியுமா? இளைஞன் ஒருவன், அலங்காரமும் நறுமணமும் பூசிக் கொண்டு மினுமினுக்கும் ஓர் அழகிய பரத்தையின் பக்கத்தில் இருப்பதைப் போன்றுள்ளது என் நிலை. உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்வுக்காக என்னை எனது இந்தப் பதவியிலிருந்து விடுவித்து முஸ்லிம் படைகளிடம் அனுப்பிவையுங்கள்”
அவரின் இறையச்சத்தை, அவரின் இந்த மனோபாவத்தை இதைவிடச் சிறப்பாய் வேறெந்த வரிகள் விவரித்துவிட முடியும்? ஆனால் உமருக்கோ அத்தகையவர்கள்தான் அதிகமதிகம் தேவைப்பட்டார்கள்.
ஸுபைர் இப்னுல் அவ்வாமை (ரலி) அழைத்து, “அபூ அப்துல்லாஹ்வே. எகிப்தின் ஆளுநராகச் செல்வீரா?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு உதவும் அறப் போராளியாகச் செல்வதே என் விருப்பம்” என்று சொல்லிவிட்டார் அவர். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸும் ஹும்ஸ் பகுதியின் ஆளுநருக்கான பதவி தேடிவந்த போது இதைப்போலவே சொல்லிவிட்டார்.
மற்றும் சிலரோ, தயவுசெய்து என்னை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று உமரிடம் மன்றாடுவார்கள்.
உத்பா பின் கஸ்வான் (ரலி) பஸ்ராவின் ஆளுநராக அமர்த்தப்பட்டிருந்தார். அவருக்கோ பதவியின்மீது ஏக வெறுப்பு. ஹஜ் முடிந்து பஸரா நகருக்குத் திரும்ப நேர்ந்தபோது வழியில் மதீனா வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உத்பா.
”தாங்கள் தயவு செய்து என்னை வேலையிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.
வியப்புடன் பார்த்த உமர், ”அதெல்லாம் முடியாது. ஊருக்குத் திரும்பிப் போய் தங்கள் வேலையைத் தொடருங்கள்” என்றார்.
வற்புறுத்தினார் உத்பா; அதைவிட வற்புறுத்தினார் உமர்.
கெஞ்சினார் ஆளுநர்; கட்டளையிட்டார் கலீஃபா. அதற்குமேல் மீற முடியாது. அது அரச கட்டளை. மிகவும் வருத்தத்துடன் வேலைக்குத் திரும்பினார் ஆளுநர்.
பதவியைப் பிடிப்பதற்கும் பிடித்தபின் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து விடுபவர்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, அவர்களது போக்கு பெரும் விசித்திரம்! என்ன செய்வது?
அது ஓர் அழகிய பொற்காலம்.
(ஒளிரும்)
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 01-15, பிப்ரவரி 2013
<<முகப்பு>>