கில்ர் (அலை) – 4

ஒரு சமயம் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் நாயகமவர்களை நோக்கிப் பின் கண்டவாறு வினவினார்கள்:-

“ஏ அல்லாஹ்வின் ரசூலே! என்னுடைய ஆன்மாவைத் தவிர்த்து, என்னிடமுள்ள எல்லா

வஸ்துக்களையும் விடத் தாங்களே என்னிடம் மிக்க பிரியமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்,” (என்று சொல்ல) நாயகம் (ஸல்) அவர்கள். “உம்முடைய ஆன்மாவை விடவும் நானே மேலானவனென்று நீர் கொள்ளும் வரை (நீர் பரிபூரண மூமினாய் ஆவது) இல்லை,” என்று கூறினார்கள். [அப்பொழுது உமர் (ரலி)], “தாங்கள் என்னிடம் என் ஆன்மாவை விட அதிகப் பிரியமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்,” என்றதைக் கேட்டதின்பின், நாயகமவர்கள், ”ஏ உமரே! இது சமயம்தான் நீர் பரிபூரணமாய் ஈமான் கொண்டவரானீர்,” எனத் திருவாய் மொழிந்தார்கள்.

மற்றொரு ஹதீதையும் கவனிப்பீர்களாக:-

“எந்த மனிதனிடத்தில் மூன்று (குணங்கள்) காணப்படுகின்றனவோ, அவன் அவைகளைக் கொண்டு ஈமானின் இன்பத்தைப் பெற்றுக்கொள்ளுவான். (அஃதாவது) அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் தவிர மற்றெல்லா வஸ்துக்களைக் காண இவர்களிருவரையுமே அதிகம் நேசிப்பவன். ஒரு மனிதனை நேசிக்க வேண்டுமாயின், அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவன். குஃப்ரினின்று அல்லாஹ் ஒருவனை நீக்கியதன்பின் மறுபடியும் அந்தக் குஃப்ரிலேயே திரும்புவதை, அக்கினியில் போடப்படுவதை வெறுப்பதேபோல் வெறுப்பவன்.”

எனவே. ஏக பரம்பொருளாய ஆண்டவன் தன் திருமறையில், வேறெவருக்கும் பாத்தியமில்லாத அவனுக்கு மட்டும் நாம் செய்யவேண்டிய கடமைகளென்ன வென்பதையும், நபிகள் திலமகவர்களுக்கு நாம் செய்யவேண்டிய மரியாதைகளென்ன வென்பதையும், ஒரு மூஃமினானவன் மற்றொரு மூஃமினான சோதரனுக்குச் செய்யவேண்டிய நன்மைகளென்ன வென்பதையும் மிகத் தெளிவாய் ஓரிடத்திலல்லாது, பன்முறையும் பல விடங்களில் கூறியிருக்கின்றான். இதையெல்லாம் மற்றோரிடத்தில் சொல்லியிருக்கிறோம். எனினும், அவற்றினின்று சிலவற்றைப் பின்னே கவனிப்பீர்களாக:-

அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் வழிபட்டு, ஆண்டவனுக்கே பயந்து அவனுக்கு அடிபணிந்து நடக்கும் அவர்களே ஜெயம் பெற்றவர்களா யிருக்கிறார்கள்.” (குர்ஆன் 24:52)

நண்பர்காள்! நீங்கள் இங்குச் சிறிது கவனிக்கவேண்டும்; வழிபட்டு நடக்கவேண்டியது அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்குமே. ஆனால், பயந்து அஞ்சி நடக்கவேண்டியதும், தக்வா செய்யவேண்டியதும் ஏக பரம்பொருளாய அவ்வாண்டவன் பாத்தியதையே என்பதை நீங்கள் மறந்து விடுவது கூடாது.

(முனாஃபிக்குகள்) அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் அன்னவர்களுக்குக் கொடுத்த ஒன்றைக் கொண்டு திருப்தியடைந்தவர்களாயிருப்பின், மேலும் அல்லாஹ்வே எங்களுக்குப் போதும், அல்லாஹ் தன்னுடைய அருளினாலும் அவனுடைய ரசூலும் (இன்னமும்) நமக்குக் கொடுப்பார்கள்; நிச்சயமாகவே நாம் ஆண்டவனளவிலேயே தேவையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று சொல்வார்களாயின் (நன்றாயிருந்திருக்கும்.)” (குர்ஆன் 9:59)

எனவே, கொடுப்பதும் அருள் செய்வதும் அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் தத்தமக்குரியவாறு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தேவைப்பட வேண்டியதும் வேண்டுதல் செய்யவேண்டியதும் அந்த ஆண்டவன் ஒருவன் பக்கமே என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

ரசூல் உங்களுக்குக் கொணர்ந்த ஒன்றை (ஏவலைப்) பற்றிக் கொள்ளுங்கள். செய்ய வேண்டாமென்று தடுத்த அந்த ஒன்றினின்றும் விலகி அப்புறமாய் இருந்துகொள்ளுங்கள்.” (குர்ஆன் 59:7)

ஆகையால், ஆண்டவனும் அவனுடைய ரசூலும் ”ஆகுமாக்கி” வைத்த அந்த விஷயமொன்றையே நாம் செய்வது ஹலாலாகும். இப்படியே அவர்களிருவரும் விலக்கியிருக்கின்ற விஷயங்களை நாம் செய்வது ஹராமாகும். ஆனால், தவக்கலென்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது ஆண்டவன் ஒருவனுக்கே சொந்தமாகும். இதனால்தான், “ஹஸ்புனல்லா ஹுவநிஃமல் வகீல்,” “வகாலூ ஹஸ்புனல்லாஹ்” என்பன போன்ற அனேக வாக்கியங்களில் ஆண்டவனை மாத்திரம்கூறி அவனுடன் வேறு யாரையும் சேர்த்துக் கூறாமல் காணக்கிடக்கின்றன. இதையொட்டிய மற்றொரு வாக்கியத்தையும் ஆண்டவன் பிறிதோரிடத்தில் பின் காணுமாறு கூறியிருக்கிறான்:-

ஏ நபீ! உமக்கும் உம்மைப் பின்தொடர்ந்த மூஃமினானவர்களுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாயிருக்கிறான்,” (குர்ஆன் 8:64)

மேலே காட்டியிருக்கும் ஆயத்துக்கு ஒரு சிலர் தவறுதலாய், “ஏ நபீ! உமக்கு ஆண்டவனும் உம்மைப் பின் தொடர்ந்திருக்கும் மூஃமினானவர்களும் போதுமானவர்களாயிருக்கிறார்கள்,” என்று கூறுகிறார்கள். இவ்வாறான கருத்தைக் கொள்ளாதவாறு ஆண்டவன நம்மைக் காப்பாற்றுவானாக. இக்காரணம் பற்றியேதான் ஹஜரத் இப்ராஹீம் கலீல் (அலை) அவர்களும், எம்பிரான் (ஸல்) அவர்களும் அடிக்கடி حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ (ஆண்டவன் நமக்குப் போதுமானவன்; மேலுமவன் பொறுப்பேற்றுக் கொள்வதில் அழகானவன்) என்ற இவ்வாக்கியத்தைக் கூறிக்கொண்டிருந்திருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றி இவ்வாறே கூறி இறைவனது இன்றியமையாத இன்பங்களைப் பெறுவோமாக!

இமாம் இப்னுதைமிய்யா எழுதியது முற்றிற்று.

(தொடரும்)

Image courtesy: names.org

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment