வந்த சனமெல்லாம் குந்தணும்

டையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.

இதென்ன புது வியாபாரம் என்று வாயையும் மூக்கையும் கையால் பொத்திக்கொண்டு விபரங்களை நோண்டினால் தகவல்கள் ஆச்சரியம். சங்கோஜத்தை சற்று ஒதுக்கிவிட்டு நம் தினசரிக் கடனின் பின்னணி, அதற்கான உடல் இயங்குமுறையின் நுட்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.

பெரும்பாலானவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை உண்டு. உணவுப் பழக்கம், பயணம் போன்றவை அப்பிரச்சினையின் காரணங்களுள் சில. வேறு சிலருக்கோ ஏதாவது திடீர் பிரச்சினை, அச்சம், தேர்வு, ஜிஎஸ்டி உபரிச் செலவு என்றாகும்போது வயிற்றைக் கலக்கி, சில பல முறை கழிவறைக்கு சென்று வந்தால்தான் ஆசுவாசப்படுகிறது.

மூளையும் மனச் சிந்தனையும் நம் குடல் செயல்பாட்டுடன் தொடர்புடையவை. சிக்கலோ, லக லக லக என்று கலக்கலோ, அதற்கெல்லாம் அவையும் ஒரு காரணம். சில மருத்துவர்கள் அந்த மன உந்துதலை இரண்டாம் மூளை என்கிறார்கள். எப்படி? உடலின் நரம்பு மண்டலம் ANS எனப்படும் autonomic nervous system. அதன் உட்பிரிவு ENS – enteric nervous system. இந்த ENSதான் நமது தன்னிச்சை இயக்கமான சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம் போன்றவற்றை கவனித்துக்கொள்கிறது. மட்டுமல்லாது, இரைப்பை செயல்பாடும் இதனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்படி கழிவுக் கடன் மூளையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் நான்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியம் என்கிறார்கள். உணவு, உடற்பயிற்சி, மனச்சுமையைக் குறைத்து அதைத் தளர்வாக வைத்துக்கொள்வது, கடன் கழிக்கக் குந்துவது. மற்றதெல்லாம் ஓரளவு நமக்குத் தானாகப் புரியும் என்றாலும் நான்காவதாக உள்ளதே ‘குந்துதல்’ அது மூளையைக் குடையவில்லை?

மனிதனின் இயற்கையான உடல் வடிவமைப்பே குந்துவதுதான். உலகில் அவன் தோன்றிய நாளாய் காடு, தோப்பு, வயல்வெளி, ஆற்றங்கரை என்று அலைந்து திரிந்து கக்கூஸ் பேஸினை கண்டுபிடித்த காலம் வரை, குந்துதல் மட்டுமே குடல் கழிவை வெளியேற்றுவதற்கான முறையாக அவனுக்கு இருந்தது. அது ஒரு வழியாக, நாற்காலிபோல் அமர்வதற்கான ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ கண்டுபிடிப்பாக மாறி, அது இந்தியா போன்ற நாடுகளில் மெதுமெதுவே பரவி, இன்று கிராமங்களில் புதிதாகக் கட்டப்படும் வீடுகளிலும்கூட ஸிட்அவுட் டாய்லெட்தான். நல்லதுதானே? முட்டிதேய்ந்த தலைமுறையாகிவிட்ட இக்கால மக்களுக்கு எப்பேற்பட்ட சௌகரியம் அது என்று தானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் ‘பின்’விளைவு இப்பொழுதுதான் மெதுவே வெளிவருகிறது.

மலக்குடலில் இயற்கையாகவே ஒரு முடிச்சு அமைந்துள்ளது.

அந்த முடிச்சைப்போடும் தசை Puborectalis muscle. கழிவறைக்குச் சென்று வெளியேற்றும்வரை அதுதான் கழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இல்லையெனில் நடக்கும்போது, நிற்கும்போது அசந்தர்ப்பமாகி மனித ஜாதி மிருக ஜாதியாகிவிடும்.

இந்த முடிச்சு, குந்தும்போது முழுமையான முறையில் தளர்கிறது.

அரசியல் தலைவர்கள் வரும்போது பாதையை சீராக்கி, நேராக்கி, கார்கள் பயணிக்க எளிதாக்கி வைப்பார்களே அதைப்போல் குடலிலிருந்து கழிவு வெளியேறும் பாதையை இத் தளர்வு நேராக்கி, கழிவு முற்றிலும் முழுமையாக வெளியேற வழியமைத்து விடுகிறது. இறைவன் வடிவமைத்துள்ள துல்லிய டிசைன் இது.

ஆனால், அமரும்போது இந்த முடிச்சு லேசாக மட்டுமே தளர்கிறது. முழுமையாகத் தளர்வதில்லை.

அதனால் என்னவாகிறது என்றால் டிரஃபிக் ஜாமில் மாட்டிய பொதுஜனம்போல், கழிவு முழுமையான முறையில் குடலிலிருந்து காலியாவதில்லை. இதன் விளைவுதான் நாளாவட்டத்தில் மலச்சிக்கல், மூலம், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீர் தொற்று போன்ற நோய்களுக்குக் காரணமாகிவிடுகிறது. பெருங்குடலுக்குள் தங்கிவிடும் கழிவுகள் அதன் புற்றுநோய்க்கான காரணத்தில் முக்கியமான ஒன்று என்பதை அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Colon cancer (Colorectal cancer) எனப்படும் இந்நோய் உயிர்கொல்லி வகை.

இவற்றையெல்லாம் கண்டறிந்த ஓர் அமெரிக்க நிறுவனம் இப் பிரச்சினைக்கு என்ன வழி சொல்லி டாலராக்கலாம் என்று யோசித்ததன் முடிவுதான் குந்துமணை.

மேலை நாடுகளில் தரைமட்ட கக்கூஸ் வழக்கொழிந்துவிட்டது. நவீன கக்கூஸ் உட்காருவதற்குத்தான் லாயக்கு. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் ப்ளாஸ்டிக்கில் அழகிய குந்துமணையை உருவாக்கி, ‘இந்தா இதில் காலைத் தூக்கி வைத்துக்கொள். அமர்ந்தாலும் குந்துவதைப்போல் உன் கால்கள் உயர்ந்துவிடும். ஜோலி இனி ஜாலி’ என்று விளம்பரப்படுத்தி அதன் விலை 25 டாலராம். சுமார் ரூ. 1600.

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பி நம்பியே பேஸ்ட், உணவு, உடை, உப்பு, விதை, மருந்து என்று ஒன்றுவிடாமல் அனைத்திலும் கண்ணை மூடி அவனைப் பின்பற்றுவது உலக நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது. இப்பொழுது அவனே பின் விளைவுகளையும் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் காசாக்க முனையும்போதாவது சற்று மாற்றி யோசித்தல் நலம். இந்த குந்துமணை இந்திய சந்தைக்கு வருவதற்குமுன் முக்காலி, மரத்தாலான வேறு ஸ்டூல் இருந்தால் எடுத்துச் சென்று கழிவறையில் வைத்துக்கொள்ளுங்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள், நோயாளிகளின் தேவைக்காக மட்டும் ஒரு நவீன கழிவறையை வைத்துக்கொண்டு மற்றவற்றை பழைய பாம்பே ஸ்டைலுக்கே மாற்றிவிடுவது நல்லது.

மற்றோர் உபாயமும் உள்ளது. உயரத்திற்கு அஞ்சும் Acrophobia நோய் இல்லாதவர்கள் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் ஸீட்டில் ஏறி குந்திக்கொள்ளலாம். ஆனால் வழுக்கி விழுந்தால் பெரும் கஷ்டம் – வந்து தூக்கிவிடுபவர்களுக்கு.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-இல்  23 ஜுலை 2017 இதழில் வெளியான கட்டுரை

முக்கியக் குறிப்பு:

கட்டுரையின் கடைசிப் பத்தி முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அது தெர்மோகோல் மந்திரியின் செயல் போல் அல்லாது ஸீரியஸ் தொணியில் அமைந்துவிட்டது என்பதை  இந்நேரம்.காம்-இல் வாசகரின் பின்னூட்டம் மூலம் அறிந்தேன். Acrophobia இல்லாவிட்டாலும் போகட்டும், தப்பித் தவறி டாய்லெட் ஸீட்டில் ஏறி  உட்கார்ந்து விடாதீர்கள். அது ஆபத்து!


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment