குற்றம் வேறு நிறம்!

by நூருத்தீன்

ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். “உள்ளே விட முடியாது” என்று அவர்களை மக்காவிற்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தினார்கள் மக்கத்துக் குரைஷிகள். “புனித ஆலயம் கஅபாவில் வழிபாடு தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை“ என்று சொல்லிப்பார்க்க, அதற்கெல்லாம் குரைஷிகள் மசியவில்லை. “எப்படியாவது பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்த குரைஷித் தூதுவர்களை அனுப்பிவைத்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவராக இறுதியில் உர்வா இப்னு மஸ்ஊத் அத்-தகஃபி என்பவர் வந்தார். அச்சமயம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. வந்தார்; பேசினார். அப்பொழுதும் உடன்பாடு ஏற்படவில்லை. திரும்பி விட்டார்.

உர்வா இப்னு மஸ்ஊத் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர். பல நாடுகளில் பயணித்து, பழகி அவருக்குப் பரந்த அனுபவம். அவர் குரைஷிகளிடம் திரும்பியவுடன் தெரிவித்த சில விஷயங்கள் அற்புதமான அனுமானம்.

“என்னருமை மக்களே! கவனமாய்க் கேளுங்கள். நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி எனப் பல மன்னர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், இந்த முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் சேவகர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப்படுத்துவதை நான் பார்த்ததே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவரை அவர்கள் நேருக்கு நேர்கூட கூர்ந்து பார்ப்பதில்லை; அந்தளவு அவர் மீது அவர்களுக்குக் கண்ணியம்.”

தோழர்கள் நபியவர்களிடம் கொண்டிருந்த அன்பும் வரலாறு அதுவரை கண்டிராத நிகழ்வு. பேசும்போதெல்லாம், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று குறிப்பிடுவது வழக்கம். அது வெற்றுப் பேச்சு, சம்பிரதாயம், பாசாங்கு போலன்றி நபியவர்களுக்காக சொத்து, சுகம், உடல், உயிர் என அனைத்தும் துச்சமாக, மன உவப்புடன் அவர்கள் வாழ்ந்து மறைந்தது நிஜம். அன்றல்ல, இன்றல்ல, எக்காலத்திலும் முஸ்லிம்களுக்கு இது ஓர் அடிப்படை இலக்கணம்.

உர்வா முஸ்லிகளிடமிருந்து குரைஷிகளிடம் திரும்பியபின் இதர நிகழ்வுகள் நடைபெற்று, ஹுதைபிய்யா உடன்படிக்கை உருவாகியது. முஸ்லிம்கள் மதீனா திரும்பி, அதன்பின் குரைஷிகள் தாங்களே புத்திகெட்டுப்போய் தங்களது உடன்பாட்டை மீறி, களேபரமாகி ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அமைதியாக கம்பீரத்துடன் நுழைந்தனர் முஸ்லிம்கள். பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் குரைஷிகள். அன்றொரு வினோதம் நிகழ்ந்தது. நபியவர்களின் அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அந்நகர மக்களுக்கு உலக வரலாற்றுப் புகழ் மிக்க மன்னிப்புச் செய்தியை அறிவித்தார்.

“எவரெல்லாம் ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதர்’ என்று சாட்சி பகர்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்.”

அளவில்லாத துன்பத்திற்கு ஆளாகி, தாக்குதலுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காகி, அன்றொரு நாள் மாளாத் துயருடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த நபியவர்களும் தோழர்களும் இன்று குரைஷிகளைப் பழிதீர்ப்பதற்கான ஆயிரம் காரணங்களும் முகாந்திரமும் வலிமையும் இருந்தும் நபியவர்களால் மேற்படி அறிவிப்பு செய்யப்பட்டது. மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘இதற்குமுன் யார் என்ன தீங்கு செய்திருந்தாலும் மன்னிப்பா? காண்பதென்ன கனவா, நனவா?’

தீயவர்களையும் கொடியவர்களையும் மன்னித்து அரவணைத்த நிகழ்வு அன்று நடந்தேறியது. உலக வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நிகழ்விலும் விதிவிலக்கு இருந்தது. அது ஒன்பது பெயர்கள் கொண்ட பட்டியல்.

‘அவர்கள் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கினாலும் சரி, அதற்குள் நுழைந்துகொண்டாலும் சரி, அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என்று கட்டளையிடப்பட்டது. கஅபாவின் திரையைப் பிடித்துவிட்டால் அது கடைசி சரணடைவு என்பது முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் என்று அனைத்துத் தரப்பினிரடமும் அன்று நிலவி வந்த பொது நியதி. ஆயினும் அந்த ஒன்பது பேருக்கு மட்டும் பொது மன்னிப்பில் பங்கு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள் நபியவர்கள்.

யார் அவர்கள்?

  • அப்துல் உஸ்ஸா இப்னு ஃகதல்
  • அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ ஸரஹ்
  • இக்ரிமா இப்னு அபூஜஹ்ல்
  • ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப்
  • மிக்யாஸ் இப்னு ஸபாபா
  • ஹபார் இப்னு அல் அஸ்வத்
  • அப்துல் உஸ்ஸா இப்னு ஃகதலின் இரண்டு அடிமைப் பாடகிகள்
  • அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை

இவர்கள் தவிர வேறு சிலரும் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டனர். ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவைக் கொலை செய்த வஹ்ஷி; அதற்கு மூலகாரணமாகவும் ஹம்ஸாவின் உடலை சின்னாபின்னப்படுத்தியவளுமான அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா; கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர்.

மேற்சொன்ன ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட குற்றங்கள் முக்கியக் காரணமாக அமைந்திருந்தன. பெருமைக்குரிய அந்நாளிலும், ‘பட்டியலில் இடம்பிடித்தே தீருவேன்’ எனும் அளவு கொடூரம் புரிந்திருந்த அவர்களுள் பெரும்பான்மையானவர்களும் தப்பித்துக் கொண்டார்கள்; உயிர் பிழைத்தனர். எப்படி? தம் தவறை உணர்ந்தார்கள். அறிவிப்பாளரின் முதல் வாக்கியத்தை செயல்படுத்தினார்கள் – ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதர்’.

மக்கா வெற்றி நிகழ்வுக்கு முன்னரே அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். புலம் பெயர்ந்து மதீனா வந்திருந்தார். ஆனால், சில காலத்திற்குப்பின் இஸ்லாத்தைத் துறந்து மக்காவிற்குத் திரும்பிவிட்டார். இப்பொழுது பட்டியலில் தம் பெயரைக்கண்டதும் தம்முடைய தவறு அவருக்கு முழு அளவில் புரிந்தது. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுவை அணுகி திருந்திய தன் எண்ணத்தை வெளியிட அவரை நபியவர்களிடம் அழைத்துவந்து சிபாரிசு செய்தார் உஸ்மான். மீண்டும் இஸ்லாத்தினுள் நுழைந்த அப்துல்லாஹ் இப்னு ஸஅதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினார்கள் நபியவர்கள்.

அல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்கும் மிகக்கொடிய எதிரியாகத் திகழ்ந்து பத்ருப் போரில் கொல்லப்பட்டான் அபூஜஹ்லு. அவனுக்கு வலக்கரமாய்த் திகழ்ந்தது அவன் மகன் இக்ரிமா. முஸ்லிம்களைத் துன்புறுத்துவதில் முன்னணியில் இருந்த இக்ரிமா, பத்ருக்குப் பிறகான உஹது, அகழி யுத்தத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராய்ப் புரிந்த தீமைகள் ஏராளம். அதெல்லாம் அப்பொழுது என்றால், இப்பொழுது அமைதியாய் மக்காவினுள் நுழைந்த முஸ்லிம் படைகளுக்கு வழிவிட்டு குரைஷிகள் ஒதுங்கி நிற்க, அந்நிலையிலும் புனித மக்கா நகரினுள்ளேயே முஸ்லிம் படைகளுக்கு எதிராய் சிறுகுழுவொன்றுடன் இக்ரிமா ஆயுதம் ஏந்த, அந்த எதிர்ப்பை முறியடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார் காலீத் பின் வலீத் (ரலி). இனி அவ்வளவுதான் என்ற நிலையில் யமன் நாட்டிற்கு தப்பிவிடும் நோக்கத்துடன் இக்ரிமா மக்காவைவிட்டு வெளியேறிவிட, நபியவர்களிடம் வந்து பரிந்துபேசினார் இக்ரிமாவின் மனைவி உம்மு ஹகீம். மனத்தின் எங்கோ ஒரு மூலையில் அவருக்கு இன்னமும் தம் கணவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏற்றுக்கொண்டு இக்ரிமாவுக்கும் மன்னிப்பு வழங்கினார்கள் நபியவர்கள். செங்கடல் கடக்கத் தயாராக இருந்த இக்ரிமாவை அழைத்து வந்தார் உம்மு ஹகீம். பின்னர் இஸ்லாத்தை ஏற்ற இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், இஸ்லாமிய வரலாற்றின் சுகந்த அத்தியாயங்களில் பதிந்துபோனது தனி வரலாறு.

நபியவர்களின் மருமகன் அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ வெகுகாலம் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தவர். நபியவர்களின் மகளும் தம் மனைவியுமான ஸைனப் ரலியல்லாஹு அன்ஹாவை நபியவர்களின் ஆலோசனையின்படி தகுந்த துணையுடன் பத்திரமாக மதீனாவுக்கு வழியனுப்பிவைத்தார். அதைத் தெரிந்துகொண்ட குரைஷிகள் சிலர் அதைத் தடுக்க விரைந்தனர். அவர்களுள் ஹப்பார் இப்னு அல்-அஸ்வத் என்பவன்தான் முதலில் அவர்களை எட்டினான். தனது ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். அது நேராய் ஸைனப் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் அம்பாரியைச் சென்று தாக்கியது. அப்போது சூலியாக இருந்தார் ஸைனப். அந்த அதிர்ச்சியில் கருச்சிதைவுற்று விட்டது. மற்றொரு குறிப்பு ஹப்பார், ஸைனபின் ஒட்டகத்தை மிரட்டி விரட்ட அதனால் அம்பாரியிலிருந்து தடுமாறி விழுந்த ஸைனபுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அந்த ஹப்பாரின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றது. அதை அறிந்த ஹப்பார் மக்காவிலிருந்து தப்பி ஓடி, பிறகு சிலகாலம் கழித்து இஸ்லாத்தை ஏற்க, அவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.

இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பெண்கள். இந்தப் பெண்கள் பாடகிகள். குற்றம் அதுவன்று, அவர்களது பாடல்! அனைத்தும் நபியவர்களையும் முஸ்லிம்களையும் குறித்துப் புனையப்பட்ட ஆபாசப் பாடல்கள். பட்டியலில் இடம்பெற்றுவிட்ட இவ்விருவருள் ஒரு பெண் தம் குற்றம் உணர்ந்து, திருந்தி, இஸ்லாத்தை ஏற்க, அவர் மன்னிக்கப்பட்டார். அதேபோல் அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான சாரா எனும் அடிமைப்பெண்ணும் மன்னிக்கப்பட்டார். கவிஞர் கஅப் இப்னு ஜுஹைர், ஹிந்த் பின்த் உத்பா ஆகியோரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள, அவர்களும் மன்னிக்கப்பட்டனர்.

வஹ்ஷி மக்காவைவிட்டு தப்பித்து ஓடி, பின்னர் மதீனாவிற்குவந்து நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தினுள் நுழைந்தார்; மன்னிக்கப்பட்டார்.

ஆனால், இறுதிவரை தம் தவற்றை உணர்ந்து திருந்தாத நால்வர் அன்றைய நாள் கொல்லப்பட்டனர்.

அப்துல் உஸ்ஸா இப்னு ஃகதல் முன்னர் முஸ்லிமாக இருந்தவன்தான். அப்பொழுது நல்லவனாகவும் இருந்துள்ளான். ஸகாத் வரி வசூலிக்க அவனையும் அன்ஸாரித் தோழர் ஒருவரையும் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள். அவர்களும் அவர்களுடன் அன்ஸாரித் தோழரின் அடிமையும் சேர்ந்து பயணம் சென்றிருந்தார்கள். அப்பொழுது அற்ப விஷயமொன்றில் வாக்குவாதம் ஏற்பட்டு, வெறியில் அந்த அடிமையைக் கொன்றுவிட்டான் இப்னு ஃகதல். ‘அட! மடத்தனமான கோபத்தில் இப்படி ஆகிவிட்டதே’ என்று வருந்தி நபியவர்களிடம் வந்து பரிகாரம் தேடியிருக்கலாம். விபரீத புத்தி அடங்க மறுத்துவிட, இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டான்.

முஸ்லிம்கள் மக்காவை வெற்றிகொண்ட அந்நாளில், கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான் இப்னு ஃகதல். அடைக்கலம் அத்திரையில் கிடைத்துவிடும் என்ற அசட்டு நம்பிக்கை. தோழர் ஒருவர் நபியவர்களிடம் வந்து “அவனை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“அவனைக் கொன்று விடவேண்டியதுதான்” என்றார்கள் முஹம்மது நபி (ஸல்). அவனைக் கொன்றார் அத்தோழர். அவனுடைய அடிமைப் பெண்கள் இருவருள் தம் தவற்றை உணர்ந்து திருந்தாமல் இருந்த ஒருத்தியும் கொல்லப்பட்டாள்.

ஹாரிஸ் இப்னு நுஃபைல் மக்காவில் நபியவர்களை அதிகமான துன்பத்திற்கு உள்ளாக்கியவன். மக்காவை முஸ்லிம்கள் வென்ற அத்தருணத்திலாவது உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம். இவனை அலீ ரலியல்லாஹு அன்ஹு கொன்றார்கள்.

மிக்யாஸ் இப்னு ஸபாபாவும் முன்னர் இஸ்லாத்தை ஏற்றிருந்தவன். அவனுடைய சகோதரன் ஹிஷாமை அன்ஸாரி ஒருவர் தவறுதலாய்க் கொன்றுவிட்டார். கொலைக்குப் பகரமாய் ஈட்டுத்தொகையை ஏற்றுக்கொள்ள நபியவர்களிடம் ஒப்புதல் தெரிவித்தவன், பின்னர் நயவஞ்சகமாய் அந்த அன்ஸாரியைக் கொன்றுவிட்டு மக்காவிற்கு ஓடிவந்து இஸ்லாத்தைவிட்டு வெளியேறினான். நுபைலா இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மிக்யாஸைக் கொன்றார்.

நபியவர்களின் வரலாற்றில் மன்னிப்பிற்கான சான்றுகள் ஏராளம். போலவே, தண்டனைக்குத் தப்பாத குற்றங்களும் நிதர்சனம். அவையெல்லாம் தனி அத்தியாயங்கள். விஷயம் யாதெனில் குற்றம் அனைத்தும் ஒரே நிறமல்ல. இஸ்லாம் பகரும் ‘சாந்தியும் சமாதானமும்’ என்பது அல்லாஹ்வின்மீதும் அவன் நபியின் மீதும் குர்ஆனின் மீதும் வக்கிரமாய், ஆபாசமாய் எதை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம் என்பதற்கான அனுமதிச் சீட்டு அல்ல; கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒட்டுமொத்த முஸ்லிம்களைத் தீயவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் கருத்துருவாக்கம் செய்வதற்காக முழுமையாகத் திறந்துவிடப்பட்ட பாதைகள் அல்ல. அதேபோல்,

இஸ்லாமிய சட்டத்தில் அநீதிக்கு எதிர்வினை என்பதும் நீதிக்கு அப்பாற்பட்டதல்ல; அநீதி இழைப்பதல்ல!

– நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 11 டிசம்பர் 2012 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment