சென்னையில் பணிபுரிந்த காலத்தில், நோன்பு மாதம் ஒன்றின் மதியம். உயரதிகாரியின் எதிரே அமர்ந்து பணி குறித்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, மதிய நேர காஃபி வந்தது. எங்கள் இருவருக்கும் பரிமாறினார் சிப்பந்தி.

“எனக்கு வேண்டாம். நான் நோன்பு” என்றேன். உடனே என்னை நிமிர்ந்து பார்த்த உயரதிகாரி சிப்பந்தியிடம், “எனக்கும் வேண்டாம்” என்றார் அவரிடம். “ஏன் ஸார்?” என்று நான் சங்கடத்துடன் நெளிந்தேன்.

“நீங்கள் நாள் முழுக்க உண்ணாமல் இருக்கிறீர்கள். நான் அட்லீஸ்ட் உங்கள் எதிரில் காஃபி குடிக்காமலாவது இருக்க வேண்டும்” என்றார். அவருடன் அன்றைய எனது மீட்டிங் முடியும்வரை அவர் எதுவும் பருகவே இல்லை. உயர்தர இங்கிதவான் அவர். வேறு சில சக ஊழியர்கள், ரமலான் மாத நோன்பு தொடங்கியதும், “நோன்பு துறந்ததும் எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சுக் கட்டுவீங்களா?” என்று வேடிக்கை புரிவதும் நிகழ்வதுண்டு.

எது எப்படியிருப்பினும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் ‘ரம்ஜான், நோன்பு’ என்ற பதங்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. ‘முஸ்லிம்கள் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இருப்பார்கள். ஒரு மாதம் முழுவதும் நோன்பிருப்பார்கள்’ என்ற குறைந்தபட்ச புரிதலும் அவர்களிடம் உண்டு. அதற்கு அடுத்தபட்சமாக, அவர்கள் அறிந்திருப்பது நோன்புக் கஞ்சி. இணக்கம், ஓட்டு, நட்பு இப்படி ஏதேனும் காரணத்திற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முஸ்லிம்களுடன் கஞ்சி குடித்து நோன்பு துறக்கும் செய்திகள் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாகவே ஆகிவிட்டதால், முஸ்லிம்களின் சுற்றுவட்டாரத்தில் வசிக்காத மக்களிடம்கூட நோன்புக் கஞ்சி மிகப் பிரபலம். அதனால் ரமலான் நோன்பைப் பற்றி பொதுச் சமூகம் அறிந்திருக்கும் விஷயங்களும் நோன்புக் கஞ்சியைச் சுற்றி வளைத்து முடிந்து விடுகிறது.

அவ்வளவுதானா ரமலான்?

ரமலான் நோன்பும் அதன் பெருமைகளும் சட்ட திட்டங்களும் இஸ்லாமிய வாழ்வியலில் பல அத்தியாயங்கள் கொண்டவை. ஆனால் வெகு சுருக்கமாக அவற்றை மூன்று பத்திகளில் சொல்லிவிட முடியும். சொல்லப்போனால் அவற்றிற்குரிய குறிப்பை இறைவன் தனது வேத நூலான குர்ஆனில் மூன்றே வசனங்களில் சொல்லி முடித்துவிடுகிறான். குர்ஆனில் உள்ள இரண்டாம் அத்தியாயத்தின் 183, 184, 185 வசனங்கள்தாம் அவை. அவற்றை வாசித்தாலே போதுமான விளக்கம் கிடைத்துவிடும். அதைப் பார்ப்போம். அதற்குமுன் இஸ்லாத்தின் கடமைகளை முன்னறிமுகம் செய்துகொள்வோம்.

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. ஏக இறைவனே வழிபடத்தக்க கடவுளென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறுதித் தூதரென்றும் நம்பி ஏற்று சாட்சியுரைப்பது கலிமா எனும் முதல் கடமை. அதையடுத்து தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ். இவற்றுள் ஸகாத் எனப்படும் வரித்தொகையும் மக்காவிற்குச் சென்று ஹஜ் நிறைவேற்றுவதும் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவு வசதி படைத்தவர்களுக்கே கடமையாகிறது. ஆனால் ஐவேளை தொழுகையும் ரமலான் மாதத்து நோன்பும் மட்டும் ஏழை, பணக்காரன் பேதமின்றி முஸ்லிமானவர் அனைவர்மீதும் கடமை. கட்டாயக் கடமை.கடமை சரி. எனினும் பொத்தானை அமுக்கியதும் இயங்கும் இயந்திரத்தைப்போல் ஒரு மனிதனால் இயங்க முடியுமா, கடமை தவறிவிட மாட்டானா, அதற்கு அவனுக்குச் சலுகை இல்லையா, பரிகாரம் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றனவல்லவா? விடை உண்டு. இனிய மார்க்கமான இஸ்லாத்தில் அவற்றுக்கான வழிவகைகள் உண்டு. அவற்றையும் பார்ப்போம். அதன் அடிப்படை விதி, “தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை” என்று இறைவன் குர்ஆனில் அளித்துள்ள வாக்குறுதி. அதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

மேலும் தொடரும்முன் சிறு உபவிளக்கம் ஒன்று. அது வாசகர்களுக்கு எப்பொழுதுமே உதவக்கூடும். மேலே நபி என்ற சொல்லுக்குப் பக்கத்தில் அடைகுறிக்குள் ‘ஸல்’ என்று இருக்கிறதல்லவா? முஹம்மது நபியின் பெயரைக் குறிப்பிடும்போது, ‘அல்லாஹ் அவருக்கு நல்லருளும் நற்சாந்தியும் அளிப்பானாக’ என்று வாழ்த்திப் பிரார்த்திக்க வேண்டியது இஸ்லாமிய மரபு. அதன் அரபு மூலமான ’ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்பதன் சுருக்கமே ‘ஸல்’. முஸ்லிம்கள் இவ்விதமே விரிவாக உரைப்பர், வாசிப்பர்.

மூன்றாவது கடமையாக அமைந்துள்ள நோன்பு நோற்பதற்குரிய மாதமாக இறைவன் அறிவித்த மாதம்தான் ரமலான். சந்திர ஆண்டின் அடிப்படையில் அமைந்தவை இஸ்லாமியர்களின் மாதமும் நாள்களும். அதில் ரமலான் ஒன்பதாவது மாதம். நோன்புக்குரிய மாதம் என்று இறைவன் முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும் முன்னரே, இஸ்லாமிய வரலாற்றில் இம்மாதத்திற்குச் சிறப்பான இடம் பதிவாகியிருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு, வானவர் மூலமாக குர்ஆனின் வேத வசனங்கள் முதன் முதலாக இறங்கத் தொடங்கியது இந்த ரமலான் மாதத்தில்தான். மட்டுமின்றி, இந்த மாதத்திற்கு என்று இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ள சிறப்பம்சங்கள், இம்மாதத்தில் புரியப்படும் நல்லறங்களுக்கு அளிக்கப்படும் வெகுமதியின் மடங்குகள், நோன்பாளிகளுக்கு என்றே இறைவன் சித்தப்படுத்தி வைத்திருக்கும் சிறப்புகள் என்று நபியவர்கள் அறிவித்துள்ளவையும் ஏராளம். அவற்றையெல்லாம் அறிய வந்த இஸ்லாமியச் சமூகத்திற்கு இம்மாதம் ஒப்பற்ற உன்னத மாதமாகவே ஆகிவிட்டது.

இறைவன் நோன்பை கடமையாக்கி குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான் அல்லவா? அதில் முதலாவது, ‘ஓரிறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (நோன்பு நோற்பதால் இறைபக்தி மேலோங்கி, பாவங்களிலிருந்து) உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்’. இரண்டாம் அத்தியாயத்தின் 183ம் வசனம் இது. அதாவது 2:183.

இதிலுள்ள முக்கியத் தகவல்கள், இந்த நோன்பு என்பது இப்பொழுது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவரைப் பின்பற்றும் உங்களுக்குப் புதிதாக அருளப்பட்ட ஒன்றல்ல. இதற்குமுன் வந்திருந்த இறைத்தூதர்களுக்கும் அவர்களுடைய சமூகங்களுக்கும்கூட அது விதியாக்கப்பட்டிருந்ததுதான். ஏன் நோன்பு விதியாக்கப்படுகிறது என்றால், அதைக்கொண்டு உங்களது இறைபக்தியும் அச்சமும் மேலோங்கும், பாவங்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அறிவித்துவிட்டான் இறைவன்.

நோன்பின் மூலக்கரு இதுவே. உண்ணாமல், பருகாமல் நோன்பிருக்கும் ஒருவர் ஊர், உலகத்தின் பார்வைக்கு அவ்விதம் செய்து காட்டுவது எளிது. ஆனால் தனிமையில் இருக்கும்போதும் அந்த இறைவனுக்கு அஞ்சி, அவனுடைய உவப்பிற்காக மட்டுமே தனது பசியையும் தாகத்தையும் கட்டுப்படுத்திக்கொள்கிறார் அல்லவா, அங்கிருந்தே அவரது இறையச்சமும் தற்காப்புப் பயிற்சியும் தொடங்கிவிடுகின்றன.

நோன்பை கடமையாக்கி, இயலாதவர்களுக்கு இறைவன் சலுகையையும் பரிகாரத்தையும் அறிவிக்கும் வசனம் அடுத்த இரண்டு.

‘சில குறிப்பிட்ட நாள்களில் (நோன்பிருப்பது கடமையாகும்). ஆனால், (குறிப்பிட்ட அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய், பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலுவிழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்தனைதான் அதிகம் கொடுத்தாலும் – (ரமலான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் – நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும்.

ரமலான் மாதம், மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றச் சிறப்பிற்குரிய மாதமாகும். ஆகவே, உங்களில் அம்மாதத்தை அடைபவர், அம்மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும். எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (நோய், பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதான முறையை விரும்புகின்றானேயன்றி, உங்களுக்கு இடரளிக்கும் முறையையன்று. இச்சலுகை, (ரமலானில் விடுபட்ட) நாட்களை நிறைவு செய்ய வாய்ப்பளித்ததற்கும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்கும் அல்லாஹ்வின் மேன்மையை நீங்கள் போற்றி, நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.’ (2:184-185)

இக்கடமையான நோன்புகளை ரமலான் மாதத்தில் நோற்பதே சிறப்பு; அதில்தான் பெரும் நன்மை என்பதை அறிவிக்கும் இறைவன், நோயாளிகள், பயணிகள், மாதவிடாயிலுள்ளவர்கள் போன்றோருக்கான வழிவகைகளைத் தெரிவிக்கிறான். அவர்களுக்கான சலுகைகளை அறிவிக்கின்றான். இக்கட்டில் உள்ள அவர்கள் அது முடிந்ததும் பின்னாட்களில் விடுபட்ட நோன்பை நோற்று பூர்த்தி செய்துவிட வேண்டும். நோன்பு நோற்பதற்கு வலுவே அற்றவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவு அளிக்க வேண்டும். கூடுதலாக அளிக்க முடிந்தால் அதிக நன்மை. அவ்வளவே!

இருள் பிரியும் வைகறையில் உணவுக்கான (சஹ்ரு) அவகாச நேரம் முடிவுக்கு வரும்போது, நோன்பின் நாள் தொடங்குகிறது. உணவுக் குழாய்க்குப் பூட்டு போட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன், அன்று மாலை சூரியன் மறையும் வரை உணவு, நீர், தாம்பத்திய உறவு ஆகியனவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதுவே நோன்பின் விதி. ஆச்சா? சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்க உண்ணப்படும் உணவு இஃப்தார் எனப்படுகிறது. மிடறு நீரும் பேரீச்சம்பழமும் இஃப்தாரே. அவையன்றி, இடம்பெறுவதே அந்தந்த நாட்டு மக்களின் பாரம்பரிய உணவு வகைகள். அவ்வகையில் அழியாப் புகழுடன் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்ட தமிழக உணவுதான் ‘நோன்புக் கஞ்சி’.

நோன்பு திறந்தபின் உண்பதும் பருகுவதும் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் சஹ்ருவில் அடுத்த நோன்பு. இப்படியாகக் கழிவதே முஸ்லிம்களின் ரமலான் மாதமும் அதன் நோன்பும். நோன்பில் கடைப்பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நபியவர்கள் விவரித்திருந்தாலும் கீழ்காணும் கட்டளை சுருக்கமானது. ஆழ்ந்த பொருள் கொண்டது. முஸ்லிம் சமூகம் தன்னை முன்மாதிரிச் சமூகமாக அமைத்துக்கொள்ளும் மூலப்பொருளை உள்ளடக்கியது. “யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.”

தவிர, இம்மாதத்தின் இரவுகளில் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை அதிகப்படியான வழிபாடாக நடைபெறுகிறது. ரமலான் வேதம் அருளப்பெற்ற மாதம் என்று பார்த்தோமில்லையா? அதனால் முஸ்லிம்கள் இம்மாதத்தில் அத்தொழுகையில் குர்ஆனை அதிகம் ஓதி, அல்லது முழுவதுமாக ஓதி வழிபடுவது மரபாகியுள்ளது. உலக ஆசாபாசங்களால் அலைகழிக்கப்பட்டு, கவனமும் நோக்கமும் திசை தப்பிவிடும் முஸ்லிம்களுக்கு ஆன்ம பலத்தையும் இறையச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும் மாதமான ரமலான், கிடைக்க இருக்கும் மாபெரும் வெகுமதிகளின் பொருட்டு தங்களது பொருட் செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் மன விசாலத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. விளைவு கரை புரளும் தானதர்மங்கள்.

எண்ணங்களையும் வழிபாட்டையும் இறைவன் அறிவுறுத்தியபடி அமைத்துக்கொண்டு நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் நோன்பின் நோக்கமான இறையச்சத்தை ஈட்டுகிறார்கள். புத்துணர்வு பெற்ற சமூகமாக மீதமுள்ள பதினொரு மாதங்களையும் எதிர்கொள்ளும் சக்தி பெறுகிறார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் மெனக்கெடுவது இதற்கே!

-நூருத்தீன்

news18.காம் -இல் மே 1, 2020 வெளியான கட்டுரை


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment