நோ என்ட்ரியில் சைக்கிளில் சென்ற நடிகர் விக்ரமைத் தடுத்து நிறுத்தினார் போலீஸ்காரர். “மன்னிக்கவும். இது நோ என்ட்ரி. உங்களது அடையாள அட்டையைத் தாருங்கள். உங்களுக்கு அபராதம் எழுதித் தர வேண்டும்.”

“என்னாது? எனக்கு ஃபைனா? அடையாள அட்டையா? நான் யாரெனத் தெரியாதா? அந்நியனைப் பார்க்காத அளவிற்கு அன்னியனா நீ?”

“நேற்றுகூட டிவில அய்யங்காரு வீட்டு அழகைப் பார்த்தேன். என் மகனுக்கு விஜய்னா எனக்கு உங்க படம்தான் லைக். உங்க கிட்டே வெரைட்டி இருக்கு ஸார். போகட்டும். டூட்டியைப் பார்ப்போம். உங்க ஐடியைக் காட்டுங்க.”

சினிமாவாக இருந்தால் போட்டுச் சாத்தியிருக்கலாம். இயலாமையில் கோபம் அதிகமாகி, விக்ரம் கன்னாபின்னாவென்று போலீஸைப் பார்த்துக் கத்த, அவரைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சைக்கிளுடன் அழைத்துச் சென்று இரண்டு கைகளிலும் இரண்டு சம்மன்கள் அளித்தார் போலீஸ்காரர்.

ஒன்று நோ என்ட்ரியில் சைக்கிளில் சென்றதற்கு, அடுத்தது கடமையைச் செய்யவிருந்த போலீஸிடம் முறையற்ற நடத்தை. கொடுத்து, “நாளைக்குக் கோர்ட்டுக்கு வந்து உங்க பஞ்சாயத்தைச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டார்.

இந்தச் செய்தியைப் பேப்பரில் படித்தால் உடனே உங்கள் கண் காலண்டரைத்தானே மேயும். இன்று ஏப்ரல் 1? அல்லது செய்தியாளருக்குக் கிறுக்கு என்று சர்வ நிச்சயமாகத் தோன்றும்.

என்ன செய்ய? நம் இந்தியத் திருநாட்டின் மெய்நிலை அப்படி. பெரும் ஸ்டார்கள் எதற்கு? நோ என்ட்ரியில் செல்பவர் பவர் ஸ்டாராக இருந்தாலே போதாது? ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டு அனுப்பிவிடுவார்களா இல்லையா?

அலெக் பால்ட்வின் (Alec Baldwin) என்பவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு நடிப்பில் சிறப்பு. மிகவும் பிரபலமான விஐபி. இவர் கடந்த 13.5.2014 தேதியன்று காலை பத்தேகால் மணிக்கு, நியூயார்க் நகரிலுள்ள ஒருவழிச் சாலையில் எதிர்த்திசையில் சைக்கிளில் சென்றுவிட்டார். மடக்கிய போலீஸ் அவரிடம் ஃபோட்டோ ஐடியைக் கேட்டிருக்கிறார். அபராதம் எழுதித் தர அவருக்கு அதன் விபரங்கள் வேண்டும். ஆனால், கோபப்பட்டுக் கத்திய அலெக் பால்ட்வின்னுக்குத்தான் மேற்சொன்னவை நிகழ்ந்துள்ளன. இப்பொழுது அலெக் பால்ட்வின் கையில் இரண்டு சம்மன்கள். ஜுலை 24ஆந் தேதி, மென்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டுதல், போதை மருந்து சமாச்சாரம், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை எட்டும்முன் சாராயம் போன்ற குற்றங்களுக்காகப் பெரும்பெரும் பிரபலங்கள் கைதாவது அமெரிக்காவில் சகஜம். இன்னும் சொல்லப்போனால், ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலேயே, 2001ஆம் ஆண்டு அவருடைய மகள்கள் ஜென்னாவும் பார்பராவும் ‘குடி’ப் பிரச்சினைகளுக்காகக் கைது செய்யப்பட்டு அப்பொழுது அது அமெரிக்கப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி.

“அப்போ அவ்ளோ உத்தம சிகாமணியா அமேரிக்கா? ஊர், உலகமெல்லாம் அதப்பத்தி என்னென்னவோ தப்புத்தப்பா சொல்றாங்களேய்யா?“ என்று புருவம் உயர்ந்தால் அது ஆட்சேபணையற்ற நியாயமான வியப்புதான். ஆனால் அதைப் புரிந்துகொள்வது எளிது. ‘ஊருக்கு ஒரு நியாயம். உலகுக்கு ஒரு நியாயம்.’ இங்கு ஊர் என்பதை அமெரிக்கா என்று திருத்திப் படித்துக் கொள்ளவும்.

இவற்றையெல்லாம் படிக்கும்போது இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு இந்தியாவே வெகுண்டெழுந்த செய்தி நினைவிற்கு வருகிறதா? என் கடன் பணி செய்துக் கிடப்பதே என்று சட்டப்படி தன் வேலையைச் செய்தது போலீஸ். குற்றச்சாட்டு பொய்யா, மெய்யா என்பது பஞ்சாயத்துக்குரிய விஷயம். ஆனால் கைது நிகழ்வு நிறம் மாறி எவ்வளவு களேபரம்?

இங்குள்ள நுண்ணிய முரண் ஒரு பெரும் விசேஷம்.

பிரபலங்களின் செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் தன் சட்டத்தை எந்தளவு வேண்டுமானாலும் கோணல்மாணலாகத் திருப்பிக் கொள்ளும் இந்தியா, அமெரிக்காவில் சட்டப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்விற்கு (சொல்லப்போனால் குறிப்பிட்ட இந்த தேவயானி கைது நிகழ்விற்கு) உரத்துக் கத்தி முஷ்டி உயர்த்தி நின்றது. தன் நாட்டினுள் சட்ட நடவடிக்கைகளில் பட்சமின்றி ஒழுங்கு பேணும் அமெரிக்காவோ, தன் நாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியவுடனேயே தொடையும் புஜமும் தட்டி முறுக்கி நிற்கும் பயில்வான்.

இதே அலெக் பால்ட்வின் இந்தியாவுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வந்து, சென்னையின் ஒருவழிச் சாலையில் வாகனம் ஓட்டிச் சென்று, கடமை கண்ணாயிரமான கான்ஸ்டபிள் ஒருவரால் கைது செய்யப்பட்டு, சம்மனும் அளித்திருந்தால் என்னவாகியிருக்கும்?

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 21 மே 2014 அன்று வெளியானது

Related Articles

Leave a Comment