மலிக்குல் முஅல்லம் அந்த அபராதத் தொகையை உச்சரித்தவுடனே லூயீ இடிந்து போயினார். ஒரு கோடி பிராங்க் எனறால், என்ன இலேசான தொகையா? அந்தக் கி.பி 13-ஆம் நூற்றாண்டில் அந்தத் தொகை சமார் 60 லக்ஷம் ரூபாயாக விளங்கியது.
ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் இன்றைய (1949 ஸெப்டம்பருக்கு முந்தைய) ரூபாயைப்போல் உத்தேசம் நாலரை அல்லது 5 மடங்கு அதிகமாக மதிப்புப் பெற்றிருந்தபடியால், இந்த நூற்றாண்டின் கணக்குப்படி பார்த்தால், முஅல்லம் விதித்த அபராதத் தொகையைச் சுமார் இரண்டரை கோடி ரூபாயாக மதிப்பிடலாம். எனவே, அம் மாபெரும் ஈட்டுக் கிரயத்தைக் கேட்டதும், லூயீ கல்லாய்ச் சமைந்ததில் வியப்பொன்றுமில்லை.
“நன்றாய் யோசித்துப் பதில் சொல்லும். நீர் இங்கிருந்து விடுதலை பெற்று உம்முடைய ஊருக்குத் திரும்பிப் போய்ப் பத்திரமாகச் சேரவேண்டுமென்றால், நாம் குறிப்பிடுகிற அந்த ஒரு கோடி பிராங்க்கைச் செலுத்தியே ஆக வேண்டும்! இப்போதே அவசரமாய் ஒன்றும் சொல்ல வேண்டாம். தீரத் தெளிய யோசித்து, நாளைக்கு, அல்லது அதற்கடுத்த நாள், அல்லது இன்னம் சில தினங்கள் சென்று சொல்லும்!” என்று கூறிவிட்டு சுல்தான் எழுந்துவிட்டார்.
சபை அவ்வளவுடனே அன்று கலைந்தது.
அத்தாணி மண்டபத்தை விட்டு வெளயேறிய சுல்தான் முஅல்லம் நேரே கன்னியாந்தப்புரத்துள் தம் சிற்றன்னை குந்தியிருந்த மூலைக்குச் சென்று சேர்ந்தார். கணவரை இழந்த கடுஞ்சோகத்தால் இன்னமும் மிகமிக வாடிக்கொண்டிருந்த விதவை ஷஜருத்துர், சுல்தானின் கோலத்தில் தங் கண்முன்னே நின்ற மைந்தரை உற்று நோக்கினார். பழைய சம்பவங்களெல்லாம் உள்ளத்துள் மின் வெட்டும் வேகத்தில் ஓடின. ஷஜருத்துர் சிறு குழந்தையேபோல் தேம்பித் தேம்பி அழுதார்.
“அம்மா! ஏன் அழுகிறீர்கள்? வஜ்ஜிர நெஞ்சம் படைக்கப் பெற்ற தாங்கள் அழுவதைப் பார்த்தால், எனககும் அழுகை வருகிறதே! போனவற்றை சிந்திப்பதில் என்ன பயன் விளையப்போகிறது? மலையே கலங்கினாலும் சிறிதும் கலங்காத தாங்கள் ஏன் மனங் கலங்குகிறீர்கள்? தாங்கள் இருக்கிற வரையில் நமக்கு என்ன சங்கடம் ஏற்படப் போகிறது? பொல்லாத வேளைகளெல்லாம் முன்னமே கடந்து சென்றுவிடவில்லையா?”
“துரான்! நான் சென்றுபோனவற்றை நினைந்து கண்ணீர் விடவில்லை. ஆனால், உம்மைப் பற்றியும், உம்முடைய எதிர்காலத்தைப் பற்றியுமே நான் சதா சிந்தாகுலியாய்க் கவலுறுகிறேன்,”என்று கண்களை முன்றானையால் மூடித் துடைத்துக் கொண்டே ஷஜருத்துர் பதிலிறுத்தார்.
“என்னைப் பற்றியும், என் எதிர்காலத்தைப் பற்றியுமா?”
“ஆம். நீர் வியப்படைகிறீர். மைந்தரே! உம்முடைய பழக்க வழக்கங்களில் சில நாட்களாக நான் பெரிய மாறுதலைக் காண்கின்றேன். இதுவரை நீர் என்னுடைய வார்த்தைகளைத் தட்டாமலே நடந்து வந்திருந்த போதினும், சமீபகாலமாக நீர் சில விபரீதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறீர் என்பதை நான் மிகவும் துயரத்துடனே கேள்வியுறுகிறேன்.”
தூக்கத்திலிருந்து அரண்டு விழித்தவனைப் போல் சுல்தான் திருதிரு வென்று விழித்தார்.
“நானென்ன விபரீதங்களில் இறங்கிவிட்டேனம்மா? ஏன் மூடிமூடிப் பேசுகிறீர்கள்? என்மீது தாங்கள் கற்பிக்கும் குற்றங்கள் என்ன என்பதைத் திறந்தே கூறிவிடலாமே!”
துக்கங் காத்துக் கொண்டும், கறுப்பாடை அணிந்து கொண்டும் முகம் வீங்கிப்போயிருந்த ஷஜருத்துர்ரின் தோற்றம் பால்போல் வெளுத்துப் போய்விட்டது. தாழ்ந்த தொனியில், தெளிவான வார்த்தைகளால் அவர் பேச ஆரம்பித்தார்: “துரான்! இன்று இந்த ஸல்தனத்துக்கு நீரே ஏக சக்ராதிபதியாகப் பட்டமேறி இருந்தாலும், நீர் எந்த ஏணியின் பழுக்களை உபயோகித்து அப் பதவிக்கு உயர்ந்தீரோ, அதே ஏணியை உதைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறீர். எவருடைய உதவியும், ஒத்தாசையும் தியாகமும் இல்லாமற் போயிருந்தால் நாமெல்லாரும் இதுபோது இருக்கிற இடம் தெரியாமல் பறந்துபோயிருப்போமோ, அத்தகைய தியாகிகளை நீர் திரஸ்கரிப்பதுடன், வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறீர். எத்தகைய நயவஞ்சக மூர்க்கர்கள் இந்த ராஜ்ஜியத்தைக் கபடமாக அபகரிக்கத் திட்டமிட்டார்களோ, அத்தகைய மூர்க்க சிகாமணிகளுடன் நீர் உறவுகொள்ளத் துவக்கியிருக்கிறீர். பகை நட்டலும், நட்புப் பிரிதலும் அரசன் கெடுவது காட்டுங் குறி என்பதை நீர் அறீயீரா?—என்ன துரான்! நான் சொல்வது விளங்குகிறதா?”
“அம்மா! தாங்கள் எதைக் குறிப்பிட்டுக் கூறுகிறீர்கள் என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். இதுபோது சுல்தானாக இந்தச் சிறு வயதிலேயே நான் பட்டம் ஏறிவிட்டதைக்கண்டு பொறாமை கொண்ட பஹ்ரீகள் தங்களிடம் என்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிச் சூழ்ச்சி செய்கிறார்கள். எவ்வளவோ நுணுக்கமாகச் சகலவற்றையும் ஆராய்வதில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள தாங்கள் அக் கபட நாடகதாரிகளான பஹ்ரீகளின் வலையில் விழுவதைக்கண்டு, நான் பெரிதும் வருந்துகிறேன். என் தந்தையார் தெரியாத்தனமாய்த் தம்முடைய புதிய மம்லுக்குகளாகிய பஹ்ரீகள்மீது ஏதோ மோகங்கொண்டு மயங்கிவிட்டாரென்றால், தாங்களும் அதேமாதிரி சிந்தை குலைகிறீர்களே! புர்ஜீகளின் மாணிக்கமான அமீர் தாவூதிடம் வளர்ந்த தாங்கள் கூடவா அவர்களுக்கு விரோதமாக இருக்க வேண்டும்? எல்லாம் விதியின் விளையாட்டம்மா!”
“துரான்! நீர் எதை ‘விதியின் விளையாட்’டென்று அழைக்கின்றீர் என்பது எனக்கே புரியவில்லை. உயர், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் பொருட்படுத்தாமல் உமக்காக வென்றே இந்த ஸல்தனத்தை அந்த மகா நெருக்கடியான பொல்லாத வேளையில் காத்துத் தந்த பஹ்ரீகள்மாட்டு நீர் நன்றி கொன்ற தன்மையாய் நடந்துகொள்வது விதியின் சதியா? அல்லது, இவ்வாறெல்லாம் தவறான வழியில் கண்மூடித்தனமாய் நீர் இழிந்து நடந்துகொள்வது பேராபத்தென்று நான் எச்சரிக்கை விடுப்பது விதியின் விளையாட்டா? ஜாஹிர் ருக்னுத்தீன் மட்டும் அப்போது இல்லாமற் போயிருப்பின், அல்லது கபடத்தனமாக நடந்திருப்பின், என்ன அவகதி நேர்ந்திருக்கும் என்பதை யாரே கூறமுடியும், துரான்?”
“அம்மா! அந்த அவலக்ஷணம் பிடித்த ஒற்றைக் கண்ணனைப் பற்றி மீண்டும் என்னிடம் பேசாதீர்கள். அவன் ஜால வித்தை போல் நடித்து வந்த, நடித்து வருகின்ற அத்தனை கபட நாடங்களும் இந்த ஸல்தனத்தை அவனே கைப்பற்றிக் கொள்ளுதற்கல்லவா? அவன் தன்னை மிஸ்ரின் சுல்தானாக உயர்த்திக் கொள்வதற்காகவே மகா சாதுரியமான சித்தத்துடன் மிகவும் பரம யோக்கியனைப் போலவும், ராஜ விசவாசம் மிக்கவனைப் போலவும் போலியாக நடித்துத் திரிகிறான். வெளுத்ததெல்லாம் பாலாகி விடுமா, அம்மா? முன்னம் ஒரு முறைக்கூடத் தாங்கள் அவனைப்பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறி, நாமனைவரும் அவனுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருகக வேண்டுமென்று உபதேசித்தீர்கள். அப்போது நான் என்னவோவென்று சாதாரணமாக நினைத்தேன். ஆனால், பின்னே போகப்போகத்தான் உண்மை வெளியாகின்றது! தயை கூர்ந்து இனிமேல் அவனைப்பற்றி ஒன்றும் என்னிடம் உபதேசிக்காதீர்கள். அவனைச் சிறுகச்சிறுக அடிமட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு நான் திட்டமிட்டு வருகிறேன். தாங்களும் தந்தையாரும் அந்தத் தேளுக்கு நிறைய அதிகாரத்தைக் கொடுத்துவிட்டீர்கள். இதுபோது நானல்லவோ அவஸ்தைப்படுகிறேன்?”
ஷஜருத்துர்ருக்குப் பிரமாதமான ஆத்திரம் பொங்கிவிட்டது. “‘இன்னம் கெடுவேன்! என்ன பந்தயம்?’ என்று நீர் பேசுகிறீர். புர்ஜீகளின் நயவஞ்சக விஷபோதனை உமது மூளையில் முகடு முட்டிப்போயிருக்கிறது. நீர் இனியும் புர்ஜீகளுக்குச் செவி சாய்க்க ஆரம்பித்தீரானால், உம்முடைய புதைகுழியை நீரே தோண்டிக் கொண்டதாகத்தான் போய் முடியும்! செய்ந்நன்றி கொல்லாதீர் என்றுதான் நான் மீட்டும் உமக்கு உற்ற தாயாய் உபதேசிக்கிறேன். என் சொல்லை நீர் தட்டி நடந்தால், நிச்சயம் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்.”
“எனக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டால் அல்லவோ நான் பிறருடைய உபதேசங்களைக் கேட்டு நடப்பேன்? பஹ்ரீகள் பரம அயோக்கியர்கள் என்பதை எனக்கு புர்ஜீகள் உபதேசித்துத்தானா தெரியவேண்டும்? நான் தான் எல்லாவற்றையும் நேரிலேயே காண்கின்றேனே!”
|
“எவற்றைக் காண்கின்றீர்? உமக்காகவென்றே, நீர் ஈங்கில்லாத மகா நெருக்கடியான நேரத்திலே உள்ளத் தூய்மையுடன் உமக்காக ராஜ விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த பஹ்ரீ சேனாதிபதியை நீர் ஜால வித்தைக்காரனென்றும் கபட நாடக வேஷதாரியென்றும் அழைக்கிறீரே, அதை எந்தக் குருட்டு கண்ணனேனும் அல்லது சித்த பிரேமை உள்ளவனும்கூட ஏற்பானா? உம் தந்தை மரணமடைந்ததை ஒரு புர்ஜீ மம்லூக்கேனும் தப்பித் தவறி சிறிதாவது அறிந்திருப்பானேயானால், இன்று ஐயூபி ஆட்சியா இங்கு நடைபெறும்? புர்ஜீகளின் மம்லூக் ஸல்தனத் அல்லவோ நிலை நிறுத்தப்பட்டிருக்கும்! அப்படியிருக்க, நீர் எல்லாவற்றுக்கும் மாற்றமாக, ‘கேட்பார் பேச்சைக்’கேட்டு, உணவூட்டிய கையை வெடுக்கென்று கடிக்க ஆரம்பித்துவிட்டீர்! நீர் பஹ்ரீகளை நம்பாவிட்டால், பாதகமில்லை. ஆனால், நம்முடைய விரோதிகளாகிய புர்ஜீகளுடன் கூடிக் குலவுவதும், கலந்து உறவாடுவதும் அறவே கூடாத காரியம் என்பதை நான் திரும்ப திரும்பச் சொல்லுகிறேன். நான் அமீர் தாவூதீன் உதவியால்தான் இந்த உன்னத ஸ்தானத்துக்கு உயர்ந்தேன் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஆனால், எல்லா புர்ஜீகளும் அவரைப் போன்ற பண்பா படைக்கப்பெற்றிருக்கிறார்கள்? அல்லது தாவூதீன் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அந்தத் துரோகிகளை நேசிப்பதா? தங்கக் கத்தி என்றால் வயிற்றிலா குத்திக் கொள்வது?”
“அம்மா! யார் துரோகிகள்? புர்ஜீகளா, பஹ்ரீகளா? தாங்கள் ஏதோ தப்பா அபிப்பிராயத்தில் இருந்துகொண்டு, அந்த நயவஞ்சக ருக்னுத்தீனின் ஏமாற்று வித்தைகளுக்கு இரையாகி, ஒரு பாபமும் அறியாத புர்ஜீகளைத் துரோகிகளென்று கூட நாமமிட்டு அழைக்கத் துவக்கி விட்டீர்கள். அவர்கள் என்ன துரோகம் இழைத்து விட்டார்கள்? என்ன சூழ்ச்சி செய்தார்கள்? என் தந்தையார் முரட்டுத்தனமாக எல்லா அமீர்களையும் கொன்று விட்டாரென்பதற்காக வருந்தி வருந்திப் பரிந்துப் பேசிய தாங்களா இன்று அதே வாய் கொண்டு அந்த இனத்தவர் அனைவரையும் துரோகிகள் என்று அழைக்கின்றீர்கள்? என் தந்தையார் மட்டுமே இந்த விஷயத்தில் விவேகமில்லாமல் நடந்துகொண்டாரென்று நான் இதுவரை நினைத்திருநதேன். ஆனால், இப்போது பார்த்தால், அவருடைய அத்தனை தீக்குணங்களையும் தங்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார் என்றே தெரிகிறது. அம்மா! ஆண்டவனுக்காகவாவது தாங்கள் மனந் திரும்புங்கள்! வெறுங் காலனைக் கண்டு நன்னீரருவி என்று நம்பி விடாதீர்கள். இதுபோது பஹ்ரீகளுக்குப் போதிய பலம் இல்லாமையால் அவர்கள் மிகவும் நல்லவர்களைப் போலவும், ராஜபக்தி விசுவாசமே உருவானவர்களைப் போலவும் வேஷமிட்டுத் திரிகிறார்கள். ஆனால், இன்னம் சில நாட்களுக்குள் அவர்கள் பலம் பெற்று விட்டால், என்ன செய்வார்கள் தெரியுமா? அதே ருக்னுத்தீன் இந்த ஸல்தனத்தின் சிங்காதனத்தில் ஏறினாலும் ஏறிவிடுவான்!”
“தூரான்! சிறு குழந்தைபோல் ஏதேதோ பிதற்றகிறீரே! நீர் இன்னமும் சிறுபிள்ளைத் தனமாகவே இருந்து வந்தால், எப்போதுதான் சுல்தானுக்குரிய பெரிய லக்ஷணங்களை முற்றும் பெற்றுக் கொள்ளப் போகிறீர்? உம்முடைய பெரிய தந்தை அபூபக்கர் ஆதில் எவர் கையில் சிக்கிப் பதுமையாகிப் போய், இறுதியிலே உயிரையும் இழந்தாரோ, அவர் கையிலே இப்போது நீர் சிக்கிக்கொண்டிருக்கிறீர். ஆனால், ஆண்டவனை உம்மைக் காப்பாற்ற வேண்டும்.”
“அம்மா! ஏன் இந்த விபரீதப் பேச்செல்லாம் பேசுகிறீர்கள்? புர்ஜீ வம்சத்து அமீர்கள் செய்த சூழ்ச்சியால்தான் என் பெரிய தந்தை உயிரிழந்தாரென்று தாங்கள் சொல்வதைப் பார்த்தால், விசித்திரமாய் இருக்கிறதே! தங்களை உப்பிட்டு வளர்த்த அமீர் தாவூத் பின் மூஸாவுங்கூட அத்தகைய சூழ்ச்சிக்காரரென்றா தாங்கள் கூறகின்றீர்கள்?”
“துரான்! நீர் இன்னம் அறிவு விசாலம் படைக்கப்பெறவில்லை. அமீர் தாவூதீன் நடக்கையே ஒரு தனியான விஷயமாகும். நீர் அவரைப்பற்றிக் கொஞ்சம் மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர். நானோ முற்ற முற்ற அவர் இல்லத்தில் அல்லுபகல் அனவரதமும் பல வருடங்களைக் கழித்திருக்கிறேன். உமக்கு அவரைப் பற்றி எவ்வளவு தெரியுமோ, அதைவிட ஆயிரம் மடங்கு – பத்தாயிரம் பங்கு – ஏன், இலக்ஷம் மடங்குகூட எனக்குத் தெரியும். அவர் அபூபக்கரை வீழ்த்துவதற்காகச் சூழ்ச்சி செய்யவில்லை. ஆனால், சுல்தான் காமில் காலஞ்சென்ற பின் இந்த ஸல்தனத்தை ஏற்று நடத்தக்கூடிய யோக்யதை உம் தந்தை ஒருவருக்கு மட்டுமே உண்டு என்பதற்காகத்தான் பாடுபட்டார். அதற்காகவும் அவர் சூழ்ச்சி செய்ய வில்லை. பேசாமல் மூளையில் முடங்கிக்கொண்டு எப்போதும் ஹுக்கா புகையைச் சுவைத்துக் கொண்டும், எனக்குக் கதைகள் சொல்லிக் கொண்டும் காலங்கழித்தார். வாஸ்தவத்திலேயே அவர் கூறிய தீர்க்க தரிசனங்கள்தாம் பலித்தன; இன்று வரை பலித்தும் வருகின்றன. சுத்த உதவாக் கரையான அபூபக்கர் மேலும் நீடித்திருப்பாரேயானால், இந்த மிஸ்ரில் ஐயூபி ஆட்சி அஸ்தமித்து விடுமே என்னும் கவலையால்தான் உங்கள் சந்ததியார்களின் நலத்துக்காகப் பாடுபட்டார். அபூபக்ரிடமிருந்து தாம் ஸல்தனத்தைப் பிடுங்கிக்கொள்ள வேண்டுமென்றோ, தம் சந்ததியார்களுக்கு இந்த ராஜ்ஜியத்தை வழங்கவேண்டுமென்றோ அவர் சூழ்ச்சி செய்ததில்லை.
“ஆனால், இன்று நீர் உறவு கொண்டாடுகிற, அந்த அமீர் தாவூதீன் வம்சத்தைச் சேர்ந்த புர்ஜீகள் இருக்கிறார்களே, அவர்களை உம்மைமட்டும் வீழத்துவதற்கு விரும்பவில்லை. ஆயின், இந்த ஸல்தனத்தையே தங்கள் சொந்தச் சொத்தாக ஆக்கிக்கொள்வதற்கும் சதி செய்து வருகிறார்கள். வெளுத்ததெல்லாம் பாலென்று நான் நம்புவதாக அல்லவோ நீர் கூறுகிறீர்! அப்படி ஏமாறுபவர் நீரே என்று நான் கூறுகிறேன். பஹ்ரீகளின் ராஜ விசுவாசம் கானல் நீரென்றும், அதை நான் நிஜ நீரென்றும் நம்பி மோசம் போகிறேன் என்றுமல்லவோ நீர் சொல்லுகிறீர்! அவ்விதமாகக் கானல் நீரில் கைந்நனைக்க விரும்புகிறவர் நீராகவே இருக்கின்றீர் என்று நான் சொல்லுகிறேன். அமீர் தாவூதீன் உப்பைத் தின்றுவிட்டு அவர் இனம் முழுமைக்குமே நான் துரோகம் நினைப்பதாக வல்லவோ நீர் செப்புகிறீர்! உண்மை அதுவன்று. ருக்னுத்தீன் இட்ட பிச்சையைப் பெற்று இன்று சுல்தானாக மிளிரும் நீர் அவ்வுபகாரியின் கழுத்துக்கெதிரிலே கத்தியை நீட்டுகிறீரென்று நான் செப்புகிறேன். பஹ்ரீகளல்லவோ எனக்கு விஷபோதனை புரிவதாக நீர் கருதுகிறீர்! ஆனால், புர்ஜீகளே உமக்கு விஷமிட்டு விட்டார்களென்றுதான் நான் கருதுகிறேன்.
“உமது தந்தையும் நானும் விவேகம் சிறிதுமின்றி முட்டாட்டனமாக பஹ்ரீகளென்னும் தலைமாட்டுக் கொள்ளிகளைச் சிருஷ்டித்து விட்டு விட்டதாகவல்லவோ நீர் வாதாடுகிறீர்! ஆனால், பஹ்ரீகள் கொள்ளிகளல்லரென்றும், புர்ஜீகளே நாகப் பாம்பினுங் கொடிய விஷமுள்ள பொல்லாத ஜந்துக்களென்றும் நான் வாதாடுகிறேன். பஹ்ரீகள் குடரைப்பீறிக் காட்டியிருந்தும், அதனை நீர் குறளி வித்தையென்றே கூறுகிறீரே, அதைக் கண்டு நான் நகைக்கிறேன். புர்ஜீகளுக்கு அக்கிரமமான துரோகம் புரிந்துவிட்டேனென்று நீர் குற்றஞ்சாட்டுகின்றீர். ஆனால், பஹ்ரீகளுக்கு நீர் பெருந் துரோகம் இழைத்து வருகின்றீர் என்றுதான் நான் உம்மீது குற்றஞ்சாட்டுகின்றேன். அன்று இந்த புர்ஜீகளுக்காக உம் தந்தையிடம் வக்காலத்துப் பேசிய நானே எப்படி இன்று இப்படி விபரீத புத்தியுடன் மாறிப்பேசுகிறேன் என்றல்லவோ நீர் அதிசயிக்கிறீர்! ஆனால், உங்கள் வம்சத்தின் பாதுகாவலுக்காக உமது தந்தை சிருஷ்டித்த பஹ்ரீ மம்லூக்குகளையும் ஹல்காக்களையும் நீர் தகர்க்க முற்பட்டிருப்பதைக் கண்டு நான் அதிசயிக்கிறேன்.
“தூரான்! நான் பிரசங்கம் புரிகிறேனென்று நீர் நினைக்கிறீர். இல்லை, இல்லை; முக்காலுமில்லை. உம்முடைய மூடிக்கிடக்கும் கண்கள் அகல விழிப்படைய வேண்டுமென்னும் ஒரே நோக்குடனே தான் நான் இவ்வளவும் சொல்லுகிறேன். உமக்குப் பகுத்தறிவு இல்லை என்பதற்காகவோ, நான் சொல்லுகிற அனைத்தையும் நீர் கேட்டுத்தான ஆக வேண்டும் என்பதற்காகவோ இன்று இந் நெடிய பிரசங்கம் புரியவில்லை. அடிக்கடி புர்ஜீ மம்லூக்குகளின் விஷமிகளான சில தலைவர்கள் உம்மிடம் திருட்டுத்தனமாகவும், இரகசியமாகவும், நள்ளிரவு வேளைகளிலும், அரண்மனைத் தோட்டங்களிலும் ஏதேதோ பேசிவருகிறார்கள் என்பதை நான் கவனித்தே வருகிறேன். அவர்கள் உம்மிடம் பேசுவதைப் பற்றியோ, அல்லது நீரும் அவர்களுடன் கூடிக் குலவுவதைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஆனால், அவர்கள் விரித்துள்ள வலையில் நீர் விழுந்து சிக்கி, பஹ்ரீகளையே ஒழிப்பதென்று கூடத் துணிந்துவிட்டீர் என்பதை நான் மிகவும் வருத்தத்துடன் கேள்விப்படுகிறேன். கேள்விப்படுவதுடன், உமது நடவடிக்கைகளினூடே கண்டுகொள்கிறேன்.
“தூரான்! வேண்டாம், வேண்டாம்! நம்மைப் படைத்துக் காத்து ரஷிக்கும் ஆணடவன்மீது ஆணையாகச் சொல்லுகிறேன்: வீணே பஹ்ரீகளின் கோபத்துக்கு ஆளாகாதீர்! செய்ந்நன்றி கொன்றீர் என்னும் பழிச்சொல்லுக்கு இலக்காகாதீர்! நீர் என் வயிற்றில் பிறக்காவிட்டாலும், இந்த என் உபதேசங்களை உமது பெற்ற அன்னையின் பேருபதேசங்களாகவே கருதக் கடவீர்!”
“அம்மா! நான் இன்றுவரையில் தங்களுடைய உபதேசங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்று வந்தேனெனினும், மம்லூக்குகளைப் பற்றித் தாங்கள் கூறுகின்றவற்றை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது அங்கீகரிக்கவோ முடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். தாங்கள் கூறுகிறபடி நான் புர்ஜீகளால் விஷமிடப்பட்டதால் இப்படிப் பிதற்றவில்லை. ஆனால், நானே சகல உண்மைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்துதான் இம் முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் இதுவரை தங்களின் எந்த அபிப்பிராயத்துக்கும் மாற்றமான அபிப்பிராயம் கொண்டது இல்லையென்றாலும், தற்போதைய பிரபலமான பிரச்சனையில் தங்களுக்கு நேர்மாற்றமான கொள்கையையே கொண்டிருக்கிறேன். இது பேசித் தீரக்கூடிய பிரச்சினையேயன்று. காலஞ்செல்லச் செல்லத் தாங்களே உண்மையைக் கண்டுகொள்ளப் போகிறீர்கள். அப்போதுதான், என் தற்போதைய விவேகத்தினை மெச்சிப் புகழப் போகிறீர்கள்.
“என் சிற்றன்னையாகிய தாங்கள் இதுவரை எப்போதாவது முற்றுந் தவறான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்ததுண்டா? என்று கேட்டால், உண்டு என்றுதான் என் மனச்சாட்சி பலமாய்ச் சொல்லுகிறது. அந்த ஒரே தவறும், பஹ்ரீ மம்லூக்குகளைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கிற ஒருதலைப் பட்சமான தீர்ப்புத்தான் ஆகும். தங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. எப்படிப்பட்டவரின் மூளையையும் குழப்பிவிடத்தக்க அவ்வளவு குழப்பமான நிலைமையை ஆண்டவன் தங்களுக்கு உண்டு பண்ணிவிட்டமையாலும், அதுபோதெல்லாம், ஜாஹிர் ருக்னுத்தீன் தங்களோடேயே இருந்து கொண்டு தன் கபடநாடகத்தை முற்றும் திறம்பட ஒழுங்காக நடித்து வந்தமையாலும், தாங்கள் பஹ்ரீகளின்மீது மட்டற்ற வாஞ்சை கொண்டு விட்டீர்கள்! எல்லாம் அந்த அயோக்கிய பஹ்ரீயால் வந்த வினையே. அவன் எவ்வளவு வஞ்சகமாகத் தங்களை ஏமாற்றிவருகிறான்! அவனைத் தாங்கள் நம்முடைய கொலைகாரனென்று கொள்வதற்கு மாறாக நம் அனைவரையும் ரஷிக்க வந்திருக்கிற பக்ஷமுள்ள அமரனென்று நம்புகிறீர்களே! என்ன உலகம்! என்ன உலகம்! பொய்வேஷத்தைக் கண்டு தாங்களே கூட ஏமாந்து போனீர்களே!”
“தூரான்! நீர் எதைப் பொய் வேஷமென்று அழைக்கீறீர்? இன்றைக்குங்கூட ஐயூபிகளுக்காகத் தம் உடலின் இறுதித் துளி உதிரத்தையும் சிந்தி எல்லாவிதத் தியாகங்களையும் புரியத் தயாராயிருக்கிற பஹ்ரீகள் பொய் வேஷக்காரர்களா? அல்லது இந்த ஸல்தனத்தை அப்படியே கவளீகரம் செய்துவிடுவதற்காகக் கங்கணங் கட்டி நிற்கிற புர்ஜீகள் பொய் வேஷக்காரர்களா? தூரான்! நீர் வீணே நம்பி மோசம் போகாதீர். அந்தக் கபட சித்தம் படைத்த துன்மார்க்கர்களான புர்ஜீகளுடன் நேயம் பூணாதீர்! என் இறுதி எச்சரிக்கை இதுதான். என் பேச்சை நீர் தட்டிவிடுவீரேல், இந்த ஸல்தனத்தை உமக்காகச் சம்பாதித்துக் கொடுத்த அதே பஹ்ரீகள் உம்மிடமிருந்து பிடுங்கிவடுவார்கள்.”
“அதைத்தான் நானும் சொல்லுகிறேன். பஹ்ரீகள் இந்த ஸல்தனத்தை என்னிடமிருந்து அபகரித்து விடுவார்கள் என்று தாங்கள் சொல்வது உண்மையே. ஆனால், புர்ஜீகள் கவளீகரம் செய்வார்களென்று தாங்கள் கூறுவதுதான் விவேகமற்ற கூற்று. பஹ்ரீகள் தங்கள் சதியில் வெற்றி பெறக்கூடாது எனபதற்காகவே அவர்களுடைய சக்தியை ஒட்ட நறுக்கிவருகிறேன். ஒரு பாபமும் அறியாத புர்ஜீகள்மீது தாங்கள் வீணே கொண்டிருக்கிற சந்தேகத்தை இக்கணமே விட்டொழியங்கள். பஹ்ரீகள் குடரைப் பீறிக் காட்டுவதை நான் குறளி வித்தையென்று கருதுவதாகத் தாங்கள் கூறுகின்றீர்கள். நான் அப்படிக் கருதவில்லை. ஆனால், அவர்கள் விரிக்கிற மாய வலையில் தாங்கள் கண்மூடித்தனமாக வீழ்கிறீர்களே என்றுதான் கவலைப்படுகிறேன்.”
அடுத்து நடந்த உரையாடல்கள் இன்னம் விபரீத மிக்கனவாகவும், ஒருவரை மற்றொருவர் தாக்கிப் பேசுவதாகவும் போய் முடிந்தனவேயன்றி, அவர்களுக்குள்ளே சமரசம் எதையும் எட்ட முடியவில்லை. பஹ்ரீகளைப் பற்றியும், புர்ஜீகளைப் பற்றியும் ஷஜருத்துர்ரும் முஅல்லமும் முறையே கொண்டிருந்த அபிப்ராய பேதங்கள் அப்படியப்படியே இருந்ததுடன் அவரவரும் தத்தம் எதிர்க்கட்சியைப் பற்றிப் பலப்பலவாறாக அவதூறு பேசவும் ஆரம்பித்துவிட்டனர். இறுதியாக ஷஜருத்துர் பேசிய கடுமையான எச்சரிக்கைச் சொற்களைக் கேட்டதும், சுல்தான் முஅல்லம் பெருங்கோபம் கொண்டுவிட்டார்.
“போதும் நிறுத்துங்கள்! இந்த ஸல்தனத்தைத் தாங்களும் பஹ்ரீகளும் காப்பாற்றிவிட்ட பெருமையைப்பற்றி இனியும் பிரமாதமாக என்னிடம் அளக்க வேணடாம். இந்த விஷயத்தில் நீங்கள் இனிமேல் என்னிடம் ஒன்றும் பேசத் தேவையில்லை. இப்போது நானேதான் சுல்தான். இனி என் சொற்படியே தான் இங்கு எதுவும் நடக்க வேண்டும்! என் ஸல்தனத்தை எனக்குக் காப்பாற்றிக் கொள்ள வழி தெரியும். நீங்களும் உங்கள் பஹ்ரீகளும் எக்கேடாவது கெட்டுப் போங்கள். ஆனால், சகல மன்பதையின் நன்மைக்காகவும் இந்த ஸல்தனத்தின் மேன்மைக்காகவும் நான் எடுக்கிற எந்த நடவடிக்கையிலும் எவர் தலையிடுவதாய் இருந்தாலும், நான் இனிக் கடுகளவும் இடங்கொடுக்க மாட்டேன்!” என்று ராஜ அகங்காரத்துடன் தொண்டைக் கிழியக் கத்திவிட்டு, முஅல்லம் விர்ரென்று வெளியே போய்விட்டார்.
இச்சிறு சொற்களைக் கேட்ட ஷஜருத்துர் இடியேறுண்ட நாகம்போலே இடிந்துபோயினார்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<முந்தையது>> <<அடுத்தது>>