மது இணையதளம் தாருல்இஸ்லாம்.காம் அர்த்தமுள்ள வகையில் உருப்பெற்றதில் அண்ணன் நீடூர் அய்யூபிற்கு பெரும் பங்கு இருக்கிறது. மீண்டும் அவரை நேரில் சந்திக்கும்போது இதைக் குறிப்பிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இனி வழியில்லை.

அவர் நேற்று, ஜுலை 29, பேங்காக்கில் இறந்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்குமுன், நான் இந்தியா சென்றிருந்தபோது, வயதில் மூத்த அவர் தாமே என்னை வந்து சந்தித்தார். அதற்குமுன் இருவரும் போனில் உரையாடிப் பழக்கம். அதுவும்கூட அவரே என்னைத் தேடிக் கண்டுபிடித்ததுதான். அவருடைய மனைவியின் ஊர் நாச்சியார்கோயில். அவ்வகையில் என் பாட்டனார் பா. தாவூத்ஷாவைப் பற்றியும் தாருல் இஸ்லாம்  பற்றியும் அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. எழுதுவது, பத்திரிகை நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது என்று ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு, ‘அட இப்படி ஒருவர் இருந்தாரா? இக் காலத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமே’ என்ற தன்னார்வத்தில் அ.மா. சாமியுடன் இணைந்து அவர் வெளியிட்ட புத்தம்தான் ‘இஸ்லாமியப் பெரியார் பா. தாவூத்ஷா’. நானே முயன்றிருந்தால்கூட அந்த அளவிற்கு அலைந்து, திரிந்து தகவல்களைச் சேகரித்திருப்பேனா என்று தெரியாது, பல தகவல்களைத் திரட்டி தம் சொந்தக் காசைப் போட்டு அண்ணன் அந்த நூலை வெளியிட்டார்.

துப்பு துலக்குபவைரப்போல் ‘பா. தாவின் உறவினர்களைப் பிடி’ என்று அவர் ஒவ்வொருவராகத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டேவந்து, பொடிப் பேரன் இருக்கிறானாமே என்று என்னையும் என் நம்பரையும் கண்டுபிடித்து விட்டார். ஒருநாள் காலை, அமெரிக்காவில் என் ஃபோன் ஒலித்து. அ.மா. சாமி என்னிடம் பேசி, விபரங்கள் கூற எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து, ‘இஸ்லாமியப் பெரியார் பா. தாவூத்ஷா’ என்ற நூல் மட்டுமல்லாது ‘தாவூத் சா இலக்கியம்’ என்ற தலைப்பில் அ.மா. சாமி எழுதிய நூலையும் அண்ணனின் நவமணி பதிப்பகம் வெளியிட்டது.

பா. தாவின் மீதும் தாருல் இஸ்லாத்தின் மீதும் இந்தளவு அபிமானத்துடன் இவர்கள் செயல்படும்போது நான் எதையும் செய்யாமல் இருக்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி மேம்பட்டுப்போய், அதன் விளைவாக, ஏதோ பெயருக்கு blog போல் உருவாக்கி வைத்திருந்த தளத்தை செப்பனிட்டு, அதுதான் இப்பொழுதுள்ள www.darulislamfamily.com பா. தாவின் ஆக்கங்களை இணையத்தில் சேகரிக்க வேண்டும் என்ற என் நோக்கத்திற்கு அவரது உழைப்பில் வெளியான நூல் வெகு நிச்சயமாக எனக்கு ஒரு வினையூக்கி.

அண்ணன் மு. அய்யூப் அடிப்படையில் வியாபாரி. காலங்காலமாக பேங்காக்கில் மாணிக்கக் கல் விற்பனைதான் அவரது தொழில். அத்துறையில் பெற்ற தேர்ச்சியில் மாணிக்கக் கல்லைப் பற்றிப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். மட்டுமின்றி மணிகள் பற்றிய ஆய்வு நூலுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் அளித்துள்ளது.

நேரில், உற்சாகமாகவும் கலகலப்பாகவும் ஏதோ நெடுநாள் பழக்கம் போலவும் அவ்வளவு இயல்பாகப் பழகினார் அண்ணன் அய்யூப். பிறகு என் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அண்ணன் அய்யூப் நீடூரிலும் மயிலாடுதுறையிலும் நிகழ்த்தும் சமூக சேவைகள், தொண்டுகள் பற்றி அறிந்தேன். பரோபகார குணம் அவரிடம் நிறைந்து இருந்திருக்கிறது. அவற்றை அவரது நல்லமல்களாக ஏற்றுக்கொள்ள அல்லாஹ் போதுமானவன்.

எங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு ஓரிருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். மீண்டும் அவரை நேரில் சந்திக்கும் ஆர்வமும் சில திட்டங்களும் இருந்தன. ஆனால் இறைவனின் நாட்டம் வேறுவிதமாக அமைந்துவிட்டது. அவரது மறைவு பெரும் துக்கத்தை ஏற்படுத்துகிறது.

“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் மீள்வோம்.”

மரணம் நமக்கு வெகு அருகில் உள்ளதை அறிவோம். அது வெகு யதார்த்தமான நிகழ்விலும் கூட வந்து நம்மை ஆட்கொள்ளும் என்பதற்கு இவரது மரணம் ஓர் உதாரணம். விருந்துணவின்போது இறைச்சியின் எலும்புத் துகள் தொண்டையில் சிக்கி, பெரும் சிக்கலுடன் அதை எடுத்திருக்கிறார். அது ஏற்படுத்திய புண் புரையோடி, தீவிரமடைந்து, கோமாவில் தள்ளி மரணம் ஏற்பட்டிருக்கிறது.

அல்லாஹ் அவரது குடும்பத்தினருக்கு அழகியப் பொறுமையை அளிப்பானாக. அவரது பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து, அவரது மண்ணறையை விசாலமாக்கி, மறுமையில் நற்கூலியை அதிகப்படுத்துவானாக.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment