ரஜப் மாத 3-ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهَ وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّاَ بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

ஆண்டவனருளுக்குரிய அரிய முஸ்லிம்காள்! நம் மானிட கோடிகளின் ஈடேற்றத்துக்காகப் பல நலன்களையும் அளித்தது மல்லாமல், தன் திருநபியையும் (ஸல்) தனது சன்னிதானத்துக் கழைத்து, நமக்காகப் பல நல்லருட் கொடைகளையும் பாக்கியங்களையும் அளித்தருளிய அல்லாஹுத் தஆலாவைப் போற்றிப் புகழ்வோமாக. அவனுடைய அருமை நேசரும், தமது அவதாரத்தினால் உம்மத்துகளாகிய நம்மெல்லோருக்கும் அளவற்ற நலனிழைத்த நன்னபியுமான நம் பெருமானாரவர்களை (ஸல்) அல்லும் பகலும் அனவரதமும் போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்துக் கூறக்கடவோமாக.

அன்பர்காள்! இதுவோ, கண்ணியமிக்க புண்ணிய ரஜப் மாதமாகும்; எனவே, இம்மாதத்தில் இதற்குரிய சிறப்போடு நாம் நடந்து கொள்ளல் வேண்டும். இதுகாலை நம் நபிகள் நாதர் (ஸல்) மீது அதிகமான விசுவாசம் வைத்து, அவர்களின் சத்திய போதனைப்படி சன்மார்க்கத்தில் வழுவற ஒழுகிக் கொள்ளக் கடவோமாக. நாம் ஆத்ம பரிசுத்தம் பெற இம் மாதம் ஒரு நல்ல சற்போதமா யமைந்திருக்கிறது. எவ்வாறெனின், இம்மாதத்தின் 27-ஆவது இரவில்தான் நபிகள் பெருமானார் (ஸல்) ஆலமெ மலக்கூத்துக்கு மிஃராஜ் சென்று அல்லாஹ்வின் திருச் சன்னிதானத்தில் தம் உம்மத்தோருக்காகப் பல நலன்களையும் பெற்றுக்கொண்டு வந்தர்கள் என்று நம் மார்க்க கிரந்தங்கள் சான்று கூறுகின்றன. நமது திரு வேதமாகிய குர்ஆன் ஷரீபம் இதைப்பற்றி, “தன்னுடைய அடியாரை ஓரிரவில் பரிசுத்தப் பள்ளியிலிருந்து-அதைச் சுற்றி யாம் அபிவிருத்தி செய்துள்ள-நெடுந்தூரப் பள்ளியின் பக்கல், இவருக்கு எம்முடைய அடையாளங்களைக் காண்பிக்கும் பொருட்டு நடாத்திவைத்த அல்லாஹ்வின் நாமம் தூய்மை யடைவதாக!” என்று சாக்ஷியம் கூறுகின்றது.

இவ்விஷயத்தின் மெய்யான விவரத்தைப் பற்றியும், நபிகள் நாயகம் (ஸல்) எவ்வாறு இப்பூவுலகினின்று அந்த ஆலமெ மலக்கூத்துக்குச் சென்று ஒரே இரவில் திரும்பிவந்தார்க ளென்பதைப் பற்றியும் பற்பல விதமான மக்கள பற்பல விதமாகச் சந்தேகப்பட்டுக் குதர்க்கம் புரிந்து வருகின்றனர். இஃது அன்னாரின் சூக்ஷும யுக்தியல்லாத ஸ்தூல புத்தியையே காட்டுகின்றது. இந்த மெய்யான சம்பவத்தைப் பற்றி உண்மை மூஃமின்கள் சந்தேகங் கொள்ளார்கள். நபிகள் பிரானின் (ஸல்) மிஃராஜ் நடந்த மறுநாட் காலையில் இச்சம்பவத்தை யாதோர் ஆக்ஷேபமுமின்றி மனச் சம்மதத்தோடு ஏற்றுக்கொண்டதால் சித்தீக் (உண்மையாளர்) என்ற காரணப் பெயர் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களைப் போலவே நாமெல்லாரும் அதை அழுத்தமாய் மெய்யென்றே நம்பவேண்டும். இந்த மிஃராஜின் பெருமையைப் பற்றிக் கூறுவதினூடே அச்சம்பவம் நடந்த விவரத்தை இங்குச் சற்று விவரிக்கப் புகுவது நன்றாகும்.

ஹிஜ்ரத்துக்கு ஓராண்டு முன்னர் நபிகள் பெருமானின் (ஸல்) 52-ஆவது வயதில் ரஜப் மாதம் பிறை 27-ஆவது இரவன்று வழக்கம்போல மஸ்ஜிதெ ஹராமில் (கஃபாவில்) சயனித்திருந்தார்கள். அன்றிரவு அமாவாசையாக இருந்தும், வானம் பிரகாசமாகவே காணப்பட்டது. அதுகாலை ஜிப்ரீல் (அலை) என்னும் வானவத் தூதர் நபி பிரானிடம் விஜயம் செய்து, ஆண்டவன் ஆணைப்படி அல்லாஹ்வின் திருச் சன்னிதானத்துக்கு நபிகள் பிரானை (ஸல்) அழைத்தார்கள். அதற்கு நபீயுல்லாஹ் சம்மதித்தவுடன் மின்னலைவிட மிக வேகமாய் வான மண்டலத்தில் பறக்கக்கூடிய புராக் என்னும் வாகனம் ஆஜிராயிற்று. அது குதிரையைவிடச் சிறியதும் கோவேறு கழுதையைவிடச் சற்றுப் பெரியதும் பார்க்க அழகானதுமான ஒரு நவீனப் பிராணியாய்க் காணப்பட்டது. அதன்மீது நபிகள் பெருமானார் (ஸல்) ஆரோகணிக்கவே, ஒரு சிறு நொடிக்குள் வானவருடன் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் மக்காவின் பரிசுத்தப் பள்ளிவாயிலிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவான நெடுந்தூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாயிலைப் போய் அடைந்தார்கள். அங்கு அவ்வாகனம் கட்டிவைக்கப்பட்டது.

அதுகாலை நபிகள் பிரானிடம் (ஸல்) சாராயப் பாத்திரமொன்றும், பால் பாத்திரமொன்றும் அளிக்கப்பட்டன. ஆனால், நபிகள் பிரான் (ஸல்) பாலை மாத்திரம் விருப்பத்தோடு எடுத்துக் கொண்டனர்; மதுவை விட்டுப் பாலைப் பருகியதால் நபியின் உம்மத்தார் “தீமையைத் திரஸ்கரித்து நன்மையையே அங்கீகரிப்பார்கள்” என்று வானுலகோர்களால் அறிவிக்கப்பட்டது. நபிகள் பிரான் (ஸல்) அந்தப் பரிசுத்த ஆலயத்தைத் தரிசித்துத் தொழுதுவிட்டு, பண்டைய நபிமார்களின் ஆன்மாக்களையும் தரிசித்துக் கொண்டு, முன்வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வழிகாட்ட, ஏழுவானங்களையுங் கடந்து மிகவிரைவாய்ப் பிரயாணஞ் சென்றார்கள்.

ஒவ்வொரு வானமண்டலத்திலும் பல நபிமார்களைச் சந்தித்து நேசம்பூண்டு தெய்விகப் பரம ரஹஸ்யங்கள் பலவற்றையும் தெரிந்து கொண்டார்கள். நபிகள் பிரான் (ஸல்) வான மண்டலத்தில் கண்டவர்களுள் ஆதம், நூஹ், இப்ராஹீம், இத்ரீஸ், மூஸா, ஈஸா (அலை) முதலிய பலரும் இருந்தனர். அங்கெல்லாம் எண்ணற்ற வானவர்களால் குதூகலத்தோடு நபிகட்டிலகம் நல்வரவேற்கப்பட்டார்கள். அவ்விடங்களிலெல்லாம் உலகில் அல்லாஹ்வுக் கஞ்சி வணங்கும் உண்மை முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்போகும் சுவர்க்கானந்த இன்பலோகத்தையும் தீயோர்க்கும் காபிர்களுக்கும் கிடைக்கப்போகும் நரகலோக வேதனையின் தன்மைகளையும் ஐயமறக் கண்ணாரக் கண்டறிந்தார்கள். அங்கு அர்ஷ், குர்ஸீ என்னும் பரலோகப் பொருள்களையும் கண்கூடாகக் கண்டார்கள்.

அங்கிருந்து ஜிப்ரீலால் (அலை) நபிகள் பெருமானார் (ஸல்) “ஸித்ரத்துல் முன்தஹா” என்னும் எல்லைக் கடைக்கோடி இலந்தை விருஷம் நிற்கும் ஸ்தலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த ஞான எல்லைக்கப்பால் தமக்குச் செல்லச் சக்தியில்லையென்று ஜிப்ரீல் (அலை) அங்ஙனே திரும்பி விட்டார். அதன்பின்பு நம் வள்ளல் ரசூலவர்கள் ஏக நாயகனான அல்லாஹ்வின் திருச் சன்னிதானத்தை யடைந்தார்கள்.

அத் தரிசனத்தில்தான் நம் நபிகள் நாதர் (ஸல்) வேறு எவரது கண்ணும் காணமுடியாத, எவரது ஹிருதயமும் சிந்திக்கவும் முடியாத தெய்விகத் தன்மையை யெல்லாம் கண்ணாரக் கண்டார்கள். அங்கு அல்லாஹுத் தஆலாவின் பேரருளையும் பெரிய ஞானக் கருவூலத்தையும் கிரஹிப்பதற்காக நபிகள் பெருமானின் (ஸல்) ஹிருதய கமலமும் அதிகம் விசாலமாக்கப்பட்டது. எனவே, மானிட வர்க்கத்தார் இத்தரணியில் பக்தி பூண்டு ஏக இறைவனாகிய தன்னையே சிரவணக்கம் புரிதற்குவேண்டிய பல இரகசியங்களையும் நபீயுல்லாஹ்வின் உம்மத்துகளின்மீது விதியாக்கி வைத்தான். “உம்மைப் பின்பற்றியவர்க்குத் தொழுகையைக் கொண்டு கட்டளையிடுவீராக!” என்பது குர்ஆன். எனவே, நம் நபிகள் நாயகம் (ஸல்) இந்த மிஃராஜென்னும் பரமபத யாத்திரையால் அளவற்ற தெய்வ கடாக்ஷத்தைப் பெற்றுத் தம் உம்மத்தார்க்கு அளித்துள்ளார்கள். இதுவே மிஃராஜின் சுருக்கமான சங்கிரஹமாகும்.

அன்பர்காள்! இத் தெய்விக சம்பவத்தை உண்மையாக ஏற்றுக்கொள்ளக் கடவீர்கள். அதனுடன் நபிகள் பெருமான்மீது அதிகம் கண்ணியமான விசுவாசம் பூண்டு, அவர்களுடைய போதனைகளையும் நல்லொழுக்க நற்குணங்களையும் சதா சர்வகாலமும் பின்பற்றி நடந்து, அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றுக்கொள்ளக் கடவீர்களாக. இதனால் ஆண்டவனுடைய பேரருளும், நபிகள் திலகத்தின் (ஸல்) இறுதிக்கால ஷஃபாஅத்தும் நிச்சயமாக நுமக்குக் கிடைக்கும். எனவே, எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நம் மனைவர்க்கும் சகல சாதனத்தையும் போக பாக்கியங்களையும் தந்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

Image courtesy: Isra Miraj by Ayib

سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment