اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَ نَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கவேண்டு மென்பதை எனக்குஞ் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
சிருஷ்டிக்கப்பட்டுள்ள இச் சிருஷ்டியுலகத்தை அழிக்கவும் ஆக்கவும் எல்லா வல்லமை வாய்ந்த அல்லாஹுத் தஆலாவை நாம் அல்லும் பகலும் போற்றிப் புகழ்வோமாக. அவனுடைய திருத்தூதரும் நம்முடைய சன்மார்க்க சற்குருவுமாகிய முஹம்மத் (ஸல்) நபிகள் நாயகத்தின்மீது ஆசிமொழியும் அனந்தம் கூறுவோமாக. அதன் பின்பு அறிந்துகொள்வீர்களாக: “எவன் தன் ஆத்மாவின் அந்தரங்கத் தன்மையை யறிந்துகொண்டானோ, அவனே தன் ரக்ஷகனின் முழுத் தத்துவத்தையும் அறிந்துகொண்டவனாவான்.”
எனவே, நம் ஆத்மா எனப்படுவது, இவ்வுலகத்திலேயே ஆண்டவனது அனுக்ரஹம் பெற்றுச் சகலவிதமான காரியங்களையும் இப் பஞ்சபூத உடம்பிலிருந்து சர்வசாதாரணமாய்ச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற ஒருவகை விசித்திர சத்தியாயிருக்கிறது. இது மானிட சரீரத்துடன் ஒரு சிறிது காலத்துக்கு மட்டுமே தான் பிணைக்கப்பட்டிருக்கும்.
ஆத்மா வென்பது நந்தேகத்துள்ளிருந்துகொண்டு, அதன் மூலமாய் இச்சரீர உறுப்புக்களையெல்லாம் அசைத்துச் சகல காரியங்களையும் புரிவிக்கும் காலத்தைத்தான் வாழ்க்கைநாள் என்றும் ஜீவியம் என்றும் கூறுகின்றோம்.
இந்த வாழ்க்கை நாளில் ஆத்மாவின் பலத்தையும் அவயவாதிகளின் உதவியையுங் கொண்டும், இவ்விரண்டையும் ஆட்சி புரியுமாறு இச்சரீரத்துள் அமைக்கப்பட்டுள்ள பகுத்தறிவின் சக்தியைக் கொண்டும், இவை யாவும் சேர்ந்த மனிதன் தன்னையும் தன்னைச் சார்ந்தவைகளையும் உற்பத்திசெய்த கர்த்தன் யார் என்பதைத் தெரிந்து கொள்வான் வேண்டி அந்தப் பரமாத்மா காட்டித் தந்துள்ள செவ்விய மார்க்கத்தின் படியே நடந்தொழுகுவதுதான் ஆண்டவனையும் தன்னையும், இவ்விரண்டன் அந்தரங்கச் சம்பந்தத்தையும் தெரிந்து கொள்வதற்குரிய சன்மார்க்கமாகும்.
இந்த மார்க்கமே நம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவாகிய அவ்வுயரிய கர்த்தனுடன் நெருக்கிவைத்தற்குரிய நன்மார்க்கமுமாகும். இதனை ஞான மென்றேனும் சன்மார்க்க மென்றேனும் கூறிக் கொள்ளுங்கள். ஆனால், எப்படியும் ஆண்டவன் நம் சரீரத்துள்ளுள்ள ஆத்மாவுக்கு இந்த வேலையைத்தான் கற்பித்துள்ளான். இந்தப் பாதையில் சத்தியம் இன்னது, அசத்தியம் இன்னது, சன்மார்க்கம் இன்னது, துன்மார்க்கம் இன்னது, சாதகம் பாதகம் இன்ன இன்னவை, நன்மை தின்மை இன்ன இன்னவை யென்பதை அவனே பாகுபாடு செய்தும் கொடுத்துள்ளான். எனவே, இவற்றின் நடுநிலை கண்டொழுகுவதே “ஸிராத்துல் முஸ்தகீம்” என்று சொல்லப்படுகின்றது.
ஏ நண்பர்காள்! இப்பிரபஞ்ச முழுதையும் சிருஷ்டித்துள்ள ஆண்டவன் தன்னுடைய திருத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாய் இப்பிற்கால மானிட கோடிகளின் விசிராந்திக்கென்று ஒரு சத்திய சன்மார்க்கத்தையளித்துள்ளான். இந்த நல்வழியே “இஸ்லாம்” எனப்படுவது.
இந்த நல்வழியே மற்றெல்லாவற்றைக் காட்டினும் மிக மிக இலேசானதும், பரத்தில் மோக்ஷத்தையளிக்கக் கூடியதும் பிறகு ஆண்டவன் சன்னிதானத்தில் அடியார்களைச் சேர்ப்பிக்கக் கூடியதும் ஆகும். இதனினும் சிறந்ததொரு சத்திய சன்மார்க்கம் இவ்வுலகினில் இல்லையே இல்லை.
“உண்மையான மார்க்கம் ஆண்டவனிடத்தில் இஸ்லாமாகத்தான் – (இறைவனுக்குச் சிரஞ்சாய்க்கும் சாந்தி மார்க்கமாகத்தான்) இருக்கிறது”
“இதுவே ஆண்டவனுக்கு அஞ்சி நடப்பவர்களுக்குப் பரிபூரண சன்மார்க்கமாகும்”
“எவனேனும் இஸ்லாமல்லாத வேறு மதத்தை அபேக்ஷிப்பானாயின், அவனிடமிருந்து அஃது அங்கீகரிக்கப்பட மாட்டாது”
என்றெல்லாம் ஆண்டவன் தன் திரு வேதத்தின்கண் கூறியுள்ளான். இந்த மார்க்கத்தை மாந்தருக்குப் போதித்த உண்மைச் சத்திய நபிமஹானின் (ஸல்) வாழ்க்கைத் தினசரியே யாவர்க்கும் ஒரு படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கின்றது. எல்லோரும் இவ்வாறுதான் ஒழுக வேண்டுமென்று தமதனுஷ்டான மூலமாகவே உலகத்தினருக்குக் காண்பித்துச் சென்றார்கள். இதைப்பற்றி ஆண்டவனும் தன் திருவேதத்தில், “உங்களுக்கு அல்லாஹ்வின் திருத் தூதரிடத்தில் ஓர் அழகிய முன்மாதிரி உண்டாயிருக்கின்றது,” என்று போதித்துள்ளான். எனவே, இந்தச் செவ்விய சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்போன்தான் இகத்திலும் பரத்திலும் பாரமார்த்திக மேன்மையைப் பெற்றுய்வான்.
அன்பீர்! நம மூதாதைகளும் பண்டை மேதாவிகளும் இந்த நபிபெருமானின் அடிச்சுவட்டு மார்க்கத்தைச் செவ்வனே பின்பற்றித்தான் மேன்மையுற்றார்கள். ஆதலின், நீங்களும் அந்தச் சன்மார்க்கத்தையே முற்றும் பின்பற்றுவீர்களாக. அவர்கள் ஆண்டவனது குர்ஆனிலுள்ள போதனைகளையே நிறுவித் தமது அனுஷ்டான மூலமாய்க் கற்பித்துச் சென்றார்கள். இம்மார்க்கமே இக பர சுகசாதனத்துக்கும் இயற்கை செயற்கைக்கும் முற்றும் ஒத்துவரும் வண்ணம் இறைவனால் மிக இலேசாக அமைத்தருளப்பட் டுள்ளது. எனவே, எவனேனும் இம் மார்க்க வரம்பை மீறி மனங்கொண்டதே மாளிகையென்று நடப்பானாயின், அவன் இகத்திலும் பரத்திலும் எந்த விதமான பாரமார்த்திகப் பரிபக்குவத்தையேனும் சுகசாந்தியையேனும் நன்மையையேனும் ஒருசிறிதும் பெற்றுக் கொள்ள மாட்டானென்பது திண்ணமேயாம்.
இந்தப் பரிசுத்த மார்க்கம் மானிடர்களின் இலௌகிக வாழ்க்கைக்குத் தகுந்தவாறே அமைக்கப்பட் டுள்ளது. உலக சம்பாத்தியம் ஜீவனாம்சம் இல்லறச் சுகம் யாவற்றையும் அனுபவித்துக் கொண்டே இஸ்லாத்தின் பக்திமார்க்கத்திலே இருக்கலாம். பொருள் தேடுவதையேனும் வேறு சுகபோகங்களைப் பெறுவதையேனும் ஒரு சிறிதும் இது மறுக்காது. இவ்வனைத்தும் வணக்கத்தின் ஒரு லௌகிகப் பிரிவேயாகும்.
இஸ்லாமார்க்கம் ஒன்றிலேதான் நீங்கள் உண்பதும் பருகுவதும், படுப்பதும் எழுவதும், ஜீவனோபாயம் புரிவதும், மனைவி மக்களின்பால் விசுவாசம் பூண்டு அன்னாரைப் போஷிப்பதும், சுற்றந் தழுவுவதம், சினேகப்பான்மை கொள்வதும், பிற ஜனங்களைச் சன்மார்க்கத்தில் அழைப்பதும், மற்றும் இத்தகைய நற்காரியங்கள் யாவும் இபாதத்தாக – (ஆண்டவனுக்கு வழிபடுவதாக) ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. இந்த இஸ்லாத்தின் போதனையெல்லாம் ஜீவாத்ம வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் செயற்கைக்கும் முழுதும் ஒத்தே அமைந்திருக்கின்றன. இத்துணைமட்டும் பெரிய பிரயோஜனகரமானதாகவும் இலேசானதாகவுமிருந்தும், இதனை எடுத்தனுஷ்டியாமல் இக்கால சில மாந்தர்கள் இருந்து வருவதுதான் மிகவும் வருந்தக்கூடியதாய் இருக்கின்றது.
“நீர் நுமது வதனத்தை மதத்திற்காகச் சரியான நிலையிலே நேர்மையாய் நிலைபெறுத்தக் கடவீர்; – (அதுதான்) அவன் எதன்மீது மனிதர்களை உண்டுபண்ணியிருக்கிறானோ, அப்படிப்பட்ட, அல்லாஹ்வினால் உண்டு பண்ணப்பட்ட இயற்கை; அல்லாஹ்வின் சிருஷ்டியிலே மாற்றமில்லை” – குர்ஆன்.
ஆதலின், அன்பர்காள்! நீங்க ளெல்லீரும் குர்ஆன் ஹதீதின் சற்போதனைப்படியே நடந்து, மேன்மையுறுவதுடன் உங்கள் மக்களையும் மனைவியரையும், மற்றுமுள்ள இனபந்து சுற்றத்தார் சினேகிதர் அன்னியர் முதலிய யாவர்களையும் ஆண்டவன் போதித்துள்ள சன்மார்க்கத்தின் பக்கல் அழைக்கக் கடவீர்கள்.
“ஜனங்களைச் சன்மார்க்கத்தின் பக்கல் அழைப்பற்கும் நன்மையைக் கொண்டு ஏவுவதற்கும் தீமையினின்று விலக்குவதற்கும் உங்களுள் ஒரு வர்க்கத்தார் அவசியம் முன்வருதல் வேண்டும்.”
அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பாமரர்கட்குப் போதிப்பதில் எத்தகைய துன்பம் நேரிட்டபோதினும், அதை மிக்க பொறுமையுடன் சகித்துக் கொண்டு உழைத்து வருதல் வேண்டும். நம் நாட்டின் பாமரர்களுக்கிடையே மலிந்துபோயுள்ள அனாசார ஆகாத கொடிய வழக்கங்களையெல்லாம் நீக்கி, அன்னாருக்கு நன்மார்க்கத்தின் நியதிகளைப் போதிப்பீர்களாக.
பெண்பாலருக்கிடையே காணப்படும் அஞ்ஞானம், மூடநம்பிக்கை, துன்மார்க்கம் யாவற்றையும் நீக்கி, அன்னாருக்கும் இஸ்லாத்தின் சற்போதனைகளைப் புகட்டிவைப்பீர்களாக. பெண்களுலகம் முன்னுக்கு வாராதமட்டில் ஆணுலகம் உருப்படப் போவதில்லை.
உங்கள் சிறுவர் சிறுமியர்களையும் மதக் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு அனுப்பி மார்க்கக் கட்டளைகளைக் கற்பிப்பீர்களாக. நீங்களும் பரிசுத்தமடைந்து, பிறரையும் பரிசுத்தப்படுத்த முயலுங்கள். இதுவே ஆண்டவன் உங்கள் ஒவ்வொருவர் மீதும் இட்டுள்ள கட்டளையாகும். ஆகவே, ஆண்டவன் நம்மை இத்தகைய சன்மார்க்கத்தில் உழைப்பதற்காக வலிமையையும் திறனையும் அளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،
<<முந்தையது>> <<அடுத்தது>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License